மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திரைத்தொண்டர் - 20

திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம்
பிரீமியம் ஸ்டோரி
News
திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் ( திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் )

பஞ்சு அருணாசலம்

திரைத்தொண்டர் - 20

நான் தயாரித்த படங்கள், மற்றவர்கள் தயாரித்த படங்கள் என அப்போது நிறையப் படங்களுக்கு எழுதிக்கொண்டிருந்தேன். அவற்றில் பல படங்கள் சூப்பர் ஹிட்; சில படங்கள் சுமார் ரகம். இப்படியான என் பயணம், சினிமா வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சுவாரஸ்யமான அதே சமயம் கடுமையான அனுபவங்களையும் தந்தது. அவற்றில் உங்களுக்கும் எனக்கும் புரிதலை உண்டாக்கும் வகையிலான முக்கியமான சில சம்பவங்களை மட்டுமே நான் இங்கே சொல்லிவருகிறேன். அதனால் சில படங்கள், சில சம்பவங்கள் விடுபட்டிருக்கலாம்.

திரைத்தொண்டர் - 20

து, ‘தம்பிகளாக மட்டுமே இருக்கட்டும். தயாரிப்பாளர்களாகச் சேர்த்துக்கொள்ள வேண்டாம்’ என முடிவுசெய்து, என் சகோதரர்களை தயாரிப்புப் பணியில் இருந்து தள்ளிவைத்துவிட்டு, தொடர்ந்து பட வேலைகளில் இருந்த சமயம். அப்போது என் தம்பி சுப்பு, தனியாக படம் பண்ண வேண்டும் என நினைத்து, கமல் சாரிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறான். கமல் சார் எனக்கு போன் செய்து, ‘என்னங்க செட்டியாரே, தம்பி கால்ஷீட் கேட்கிறார். கொடுக்கவா?’ என்றார். அவன் உழைப்பை நாம ஏன் கெடுப்பானேன் என நினைத்து, ‘தாராளமா கொடுங்க கமல்’ என்றேன். அந்தப் படம்தான் ‘உல்லாசப்பறவைகள்’.

‘அதையும் நம் தலையில் கட்டிடுவானே!’ என பயந்து, படத் தயாரிப்பில் தலையிடாமல் ஒதுங்கி இருந்து கதை, வசனம், பாடல்கள் மட்டும் எழுதிக்கொடுத்தேன். நான் என்னதான் விலகி ஓடினாலும் பந்தம் விடாதே. அந்தப் படம் நல்ல விலைக்கு விற்றும் அவன் செய்த தவறுகளால் அதை ரிலீஸ் பண்ண முடியாமல் அவன் கஷ்டப்பட்டான். ‘சரி, என்ன பண்றது..!’ என நினைத்து நண்பர்களுடன் சேர்ந்து ரிஸ்க் எடுத்து இரண்டு ஏரியாக்களை நானே வாங்கி ரிலீஸ் செய்தேன். அதிலும் நஷ்டம்.

தற்கு இடையில் நானும் ராமச்சந்திரனும் சேர்ந்து நடத்திக்கொண்டிருந்த `ஃபிலிமாலயா' பத்திரிகையை என் இன்னொரு தம்பி லட்சுமணன் கவனித்துக்கொண்டிருந்தான். அங்கே அவனால் எனக்கு நிறையத் தர்மசங்கடங்கள். அதனால் அவனை பத்திரிகையில் இருந்து நானே நிறுத்தச் சொல்லிவிட்டேன். (நாங்கள் ஃபிலிமாலயா நடத்திய அனுபவத்தையும், அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும் பிறகு சொல்கிறேன்.)

அந்தச் சமயம் ‘சுப்புவுக்கு மட்டும் படம் பண்றீங்க. எனக்கும் பண்ணித்தாங்க’ என லட்சுமணனும் வந்தான். ‘ஏன் அந்தக் குறையையும் வைப்பானேன்’ என நினைத்து, அவனுக்கும் ஒரு புராஜெக்ட்டைத் தயார்செய்து கொடுத்தேன். அதுதான் ‘பூட்டாத பூட்டுக்கள்’.

அது ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ படங்கள் ரிலீஸ் ஆகி, இயக்குநர் மகேந்திரன் சார் பரபரப்பாக இருந்த நேரம். ‘தம்பி லட்சுமணனுக்கு ஒரு படம் பண்ணித்தாங்க சார்’ என அவரிடம் கேட்டேன். அவர் எழுத்தாளர் பொன்னீலனின் கதையை வாங்கி, திரைக்கதை அமைத்தார். இளையராஜா இசை, நான் பாடல்கள் எழுதினேன். அந்தப் படத்தை மகேந்திரன் சார் நன்றாகவே எடுத்திருந்தார். அந்தப் படமும் நல்ல விலைக்கு விற்றது. ஆனால், லட்சுமணன் செய்த குளறுபடிகளால் சுமார் மூன்றரை லட்சத்துக்கு மேல் ஃபைனாஸ்ஷியரிடம் நான் பொறுபேற்றுக் கொண்டு அந்தப் படத்தை நான் ரிலீஸ் செய்தேன்.

எப்போதும் புது முயற்சிகளில் ஈடுபடும்போது வெற்றியோ, தோல்வியோ பெரிய அளவில் வரும். நெகட்டிவ் ஸ்டோரியில் எப்பவும் இந்த டேஞ்சர் உண்டு. அந்தச் சமயத்தில் மகேந்திரன் சார் எடுத்த எல்லா படங்களுமே ஹிட். ஆனால், இந்தப் படம் சரியாகப் போகவில்லை. அவர் நன்றாக எடுத்திருந்தாலும் கதை என்னவோ ஜனங்களுக்குப் பிடிக்கவில்லை. அதிலும் எனக்கு நஷ்டம். ‘உடன்பிறந்தவங்க சரியில்லையா... நம்ம நேரம் சரியில்லையா? படம் ஹிட்டானாலும் நஷ்டம்... தோல்வியானாலும் நஷ்டம். அதுதான் நம் தலையெழுத்தோ!’ என நினைத்துக் கொண்டேன்.

‘ரஜினி, கமல் கால்ஷீட் கிடைச்சா, சொந்தப் படம் பண்ணுவோம். இல்லைன்னா, பிற கம்பெனிப் படங்களுக்கு எழுதித் தர்றது’ என நினைத்துக்கொண்டிருந்தேன். சினிமாவில் நீங்கள் படம் தயாரித்தால், தொடர்ந்து தயாரித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் கடன், வட்டி போன்றவற்றை அடைக்க, மீண்டும் ஒரு தயாரிப்பு... அதற்காக புதிதாக வாங்கிய கடனை வைத்து பழைய கடனை அடைப்பது... என ரொட்டேஷனில் இருக்கும். தவிர, புரொடக்‌ஷன் என ஆரம்பித்துவிட்டால், ஓர் அலுவலகத்தைத் தொடர்ந்து இயக்கவேண்டி வரும். அதில் வேலை செய்பவர்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும். அதுக்காகவாவது ஒரு படம் எடுக்கவேண்டிய சூழல் ஏற்படும். அப்படி ஆரம்பித்த படம்தான் ‘ருசிகண்ட பூனை.’ மலையாளத்தில் ஹிட்டான ஒரு படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிப் பண்ணினேன். சரிதா மெயின் கேரக்டர், மற்றவர்கள் புதியவர்கள். படம் சுமாராகப் போனது.

திரைத்தொண்டர் - 20

ப்போது ஆனந்த விகடனில் வெளிவந்த மகரிஷியின் கதை ‘நதியைத் தேடிவந்த கடல்’. ‘முள்ளும் மலரும்’ படத்தை எடுத்த வேணு செட்டியார் அதன் உரிமையை வாங்கி எடிட்டர் லெனினை இயக்குநராகப் போட்டு ‘நதியைத் தேடிவந்த கடல்’ என்ற பெயரிலேயே படமாக்கினார். அந்தப் படத்துக்கு நான் வசனம், கவிஞர் பாடல்கள் எழுதினார். இசை இளையராஜா.

‘பாரதிராஜாவின் கண்கள்’ எனச் சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ந்த ஒளிப்பதிவாளர் கண்ணன், அந்தப் படத்தில்தான் அறிமுகம். லெனின் சார் அந்தப் படத்தை அற்புதமாக இயக்கியிருந்தார். படம் சூப்பராக வந்திருந்தது. ஜெயலலிதா மேடம், சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி உள்பட பலர் நடித்திருந்தனர். அதுதான் ஜெயலலிதா மேடம் நடித்த கடைசிப் படம் என்பது கூடுதல் தகவல். நிறைய ஃப்ளாஷ்பேக்குகளுடன் மாடர்னாக எடுத்ததாலோ என்னவோ தெரியவில்லை, இந்தப் படத்தை மக்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை.

தற்கு இடையில் எனக்கு ரஜினி தந்திருந்த கால்ஷீட் நெருங்கியது. அவரை வைத்து வெவ்வேறுவிதமான படங்கள் பண்ணிவிட்டோம். இதில் வித்தியாசமாகப் பண்ணவேண்டும் என்று யோசனை. சாமியார்களின் பிளாக் மேஜிக் விஷயங்களையும் அவர்கள் அண்டர்கிரவுண்டில் பண்ணும் வேலைகளையும் வைத்து கதை பண்ணலாம் என முடிவுசெய்தேன். அந்தப் படம்தான் ‘கழுகு’. ‘முழுப்படமும் அவுட்டோரில் வித்தியாசமா பண்ணணும்’ என முடிவுசெய்து செங்கோட்டை, அதைச் சுற்றியுள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினோம். ஒரு பஸ்ஸையே விலைக்கு வாங்கி அதை மாற்றி அமைத்துப் பயன்படுத்தினோம். அந்தச் சமயத்தில் நான் எடுத்த படங்களில் அது பெரிய பட்ஜெட். முத்துராமன் சார் க்ளைமாக்ஸை இங்கிலீஷ் படம்போல எடுத்திருந்தார்.

அது சாமியார்களைப் பற்றி எந்தவிதமான நெகட்டிவ் விஷயங்களும் பத்திரிகைகளில் வராத நேரம். அந்தச் சமயத்தில் சாமியார்களைப் பற்றி நெகட்டிவாகக் காட்டியது பலருக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம் என நினைக்கிறேன். அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. ஆனால், நஷ்டம் இல்லை. சாமியார்களைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் ‘கழுகு’ வந்திருந்தால் ஒருவேளை ஹிட் அடித்திக்குமோ என்னவோ தெரியவில்லை.

ந்தச் சமயத்தில்தான் ‘நான் ருத்ரய்யாவோடு சேர்ந்து பண்றதா இருந்த ‘ராஜா என்னை மன்னித்துவிடு’ படத்தை மறந்துடுங்க செட்டியாரே. வழக்கம்போல நம்ம படத்துக்கான வேலைகளை ஆரம்பிச்சுடுங்க’ என்றார் கமல். அப்படித்தான் ‘எல்லாம் இன்பமயம்’ படம் ஆரம்பமானது. கமல் முதன்முதலில் பல்வேறுவிதமான கெட்டப்களில் நடித்தது அந்தப் படத்தில்தான். அதுதான் பின்நாட்களில் அவர் பண்ணின மிகச் சிறந்த படங்களுக்கான ஒத்திகை என்றே சொல்லலாம்.

திரைத்தொண்டர் - 20

முதலில் நான் அவருக்கு ஐந்து, ஆறு கேரக்டர்கள்தான் எழுதியிருந்தேன். ‘அந்த வக்கீல் கேரக்டர் யார் பண்றா, அந்தக் கன்னடக்காரரா யார் வர்றா?’ என கமலே கேட்டு கேட்டு, ‘அதையும் நானே பண்ணிடுறேன்’ என இரண்டு மூன்று வேஷங்களைச் சேர்த்துக்கொண்டார். இப்படி அதில் அவர் ஒன்பது வேடங்களில் நடித்தார். சிலோன் பாஷையில் பேசிய கேரக்டர்கூட அவர் ஐடியாதான். அதை அவரின் ‘தெனாலி’ படத்துக்கான டீஸர் என்றுகூடச் சொல்லலாம். ஒரு ஐயர், ஒரு கன்னடக்காரர், ஒரு பிராமின் வக்கீல் என ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒருவிதமான பாஷை, ஸ்லாங் என அவ்வளவு வித்தியாசம் காட்டி அருமையாகப் பண்ணியிருந்தார். படமும் நன்றாகப்போனது.

ப்போது ஒருநாள் ஏவி.எம்.சரவணன் சார் அழைத்தார். ‘பஞ்சு சார், ‘முரட்டுக்காளை’ பெருசா ஓடிடுச்சு. ரொம்ப சந்தோஷம். அடுத்து கமலை வெச்சுப் பண்றோம். இதையும் பெரிய வெற்றிப் படமா பண்ணிடணும்’ என்றார். ‘என்ன சார் இப்படிச் சொல்றீங்க. எங்க எல்லாருக்குமே அந்தப் பொறுப்பு இருக்கு சார்' என்றேன்.

‘கமல் சார் நடித்து எந்தப் படம் ரிலீஸானாலும் தியேட்டர் ஃபுல் ஆகிவிடும். ஆனால், அவங்க எல்லாருமே ஹை க்ளாஸா இருப்பாங்க. நீங்க தியேட்டருக்குப் போனீங்கன்னா, இரண்டே முக்கால் ரூபாய் டிக்கெட் அஞ்சு ரூபாய்க்கு பிளாக்ல வித்துட்டு இருப்பாங்க. ஆனால், எழுபத்தைஞ்சு பைசா டிக்கெட் ஈஸியா கிடைக்கும். அதனால, அந்த குறைந்த விலை டிக்கெட் ஆடியன்ஸும் புல் ஆகணும்கிறதை மனசுலவெச்சு எழுதுங்க சார்’ என்றார்.

சரவணன் சாரைப் பொறுத்தவரை, ஏவி.எம் படங்கள் மட்டும் அல்லாது மற்றவர்களின் படங்களின் பிசினஸ் என்ன என்ற விவரங்களை மிகத் துல்லியமாக ஆராய்வார். ஒரு படத்தை வெவ்வேறு ஊர்களில் மக்கள் எந்த அளவுக்கு ரசிக்கிறார்கள் எனக் கேட்டுத் தெரிந்துகொள்வார்.ஆனால், நான் அந்த அளவுக்கு ஆராய்ச்சிகள் செய்பவன் அல்ல. என்னைப் பொறுத்தவரை கமர்ஷியல் படங்கள் என்றால் எல்லோருக்கும் பிடித்ததுபோல படம் பண்ணுவது, அவ்வளவுதான். ஆனால், அதிலும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதை அவரிடம்தான் தெரிந்துகொண்டேன். அதை எப்படிப் பிரித்துப் பார்ப்பது என்பதை எனக்கு அவர்தான் புரியவைத்தார். உண்மையைச் சொன்னால் ஏ, பி, சி என்ற ஏரியா விஷயங்களை ஏவி.எம்-முக்குப் போய்தான் தெரிந்து கொண்டேன் எனச் சொல்லாம்.

மொத்தத்தில் சரவணன் சார் சொன்னதில் இருந்து நான் புரிந்துகொண்டது, ‘இந்தப் படத்தில் இறங்கி அடிக்கணும்’ அவ்வளவுதான். ஃபைட், காமெடி, சென்டிமென்ட் இருக்கணும். அவையும் ஏழை மக்களைக் கவரும்வகையிலும், அதேசமயம் கமல் சாரின் வழக்கமான ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரியும் இருக்கணும். என்ன பண்ணலாம்?’ - எனக்கு நிறைய யோசனைகள். அந்தச் சமயம் தோன்றியதுதான் அந்த லைன். அது பல பேர் தொட்ட விஷயம்தான். ஆனால், யார் தொட்டாலும் அதை அழகாகத் தொட்டால் அது நிச்சயம் வெற்றியடைந்திருக்கிறது என்பதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் கண்முன் வந்தன.

ஷேக்ஸ்பியர் எழுதிய ‘டேமிங் ஆஃப் தி ஸ்ரூவ்’ என்ற காவியத்தின் மையக்கருதான் அந்த லைன். ‘திமிர் பிடித்த ஒரு பெண்ணால் எப்படி மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஹீரோ அவளை எப்படித் திருத்துகிறான்’. இதுதான் அந்த ஒரிஜினல் கதையின் கரு. இதை அடிப்படையாக வைத்து பல படங்களை எடுத்திருக்கிறார்கள். முதலில் ஏ.டி.கிருஷ்ணசாமி அவர்கள் ‘அறிவாளி’ பண்ணினார். பிறகு, சக்தி கிருஷ்ணசாமி அவர்கள் ‘பெரிய இடத்துப் பெண்’ பண்ணினார். அதைத் தொடர்ந்து பி.மாதவன் அவர்கள் ‘பட்டிக்காடா பட்டணமா’ பண்ணினார். அடுத்து கே.பாலசந்தர் அவர்கள் ‘அனுபவி ராஜா அனுபவி’ பண்ணினார். அடுத்து ஜாவர் சீதாராமன் அவர்கள் எழுதி கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இயக்கிய ‘பணமா பாசமா’ படமும் இந்த லைன்தான். மல்லியம் ராஜகோபால் எழுதி இயக்கிய ‘சவாலே சமாளி’யும் கிட்டத்தட்ட இதே ஐடியாதான்.

இந்தப் படங்களின் அடிப்படை லைன் ஒன்றாக இருந்தாலும், ஒன்றின் சாயல் மற்றொன்றில் இல்லாமல் கதை, களம், காட்சிகளை மாற்றி மாற்றி ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், உலகம் தழுவிய சில நல்ல விஷயங்கள் எத்தனை முறை எடுத்தாலும் ஓடும். ஒவ்வொரு திறமையாளரும் அதை எப்படி எல்லாம் கையாண்டுள்ளனர் எனப் பார்த்தால், அந்த வித்தியாசம் உங்களுக்குத் தெரியும்.

திரைத்தொண்டர் - 20

‘அப்படி பெரிய பெரிய மேதைகள் பலரும் அந்தக் கருவை எடுத்துக்கொண்டு வெவ்வேறு விதமான பாணிகளில் படங்கள் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதே கருவை வைத்து நாம் வேறு ஒரு பாணியில் கதை சொன்னால் என்ன?’ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அந்தக் கேள்விக்கான விடையே ‘சகலகலா வல்லவன்’ படக் கதைக்கான விதை.

- தொண்டு தொடரும்...