
வில்லன்கள் சொல்றாங்க!
தல-தளபதி பற்றி ஊரே பேசிக்கிட்டு இருக்காங்க. சரி நம்ம அக்கட தேசத்து வில்லன்கள் இந்த இரு ஜாம்பவான்கள் பற்றி என்னெவெல்லாம் சொல்லியிருக்காங்க? இதோ ஒரு சின்னக் கொசுவத்திச்சுருள்.

அபிமன்யூ சிங் (வேலாயுதம், தலைவா)
‘‘விஜய் நல்ல நண்பர். நாங்க ரெண்டு பேரும் நிறைய ஜோக்ஸ் பகிர்ந்துப்போம். ரெண்டாவது படமும் அவருக்கு வில்லனா நடிச்சிருக்கேன். என்னை மாதிரியே அவரும் ரொம்ப எளிமையான மனிதர்.’’

நீல் நித்தின் முகேஷ் (கத்தி)
‘‘விஜய் யதார்த்தமான, பணிவான, அதே சமயம் நேர்மையான மனிதர். அவருக்கு இருக்கிற ரசிகர்களுக்கு அவர் எவ்வளவோ கெத்தா இருக்கலாம். ஆனால் வெளியில் அவ்வளவு உதவிகரமா, அமைதியான நபரா இருந்தார். எனக்குத் தமிழ் கற்றுக்கொடுத்ததும் அவர்தான். மொழி தெரியாத எனக்கு நடிக்க அவ்வளவு உறுதுணையா இருந்தார்.’’

வித்யூத் ஜம்வால் (பில்லா 2, துப்பாக்கி)
‘‘அஜீத் செம சார்மிங் மற்றும் ஸ்மார்ட் மனிதர். விஜய் கொஞ்சம் கூச்ச சுபாவி. ஆனால் பழகிவிட்டால் நல்ல நண்பர். இவர்கள் இருவருமே சூப்பர் ஸ்டார்கள்தான்.’’

பிரதீப் ராவத் (ஜில்லா, வீரம்)
‘‘விஜய் மிகவும் அமைதியான , பணிவான மனிதர். அவரிடம் அந்தக் கர்வம் கொஞ்சம்கூட இருக்காது. வினோத் கண்ணா, தர்மேந்திராவுக்குப் பிறகு மிகவும் அழகான மனிதர் என்றால் அது அஜீத்தான். இப்போது இருக்கும் நடிகர்களுடன் ஒப்பிட வேண்டுமானால் சல்மான் கானுடன் ஒப்பிடுவேன். அஜீத் அவ்வளவு ஹேண்ட்சம் மற்றும் பழகுவதற்கு மிக நல்ல மனிதர். இவர்கள் இருவருமே என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டனர். எனக்கு இப்படி ஒரு புகழ் கிடைத்தால் என்னால் இவ்வளவு பணிவான மனிதராக இருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.’’

ராகுல் தேவ் (வேதாளம்)
‘‘சூப்பர் ஸ்டார் லெவலில் இருந்துகொண்டு ஒரு மனிதர் லைட்பாய் முதல் மொத்த பட டீமுக்கும் பிரியாணியும், பொங்கலும் சமைத்துத் தர முடியும் என்றால் அந்த மனிதரின் பணிவையும், நட்பு உணர்வையும் என்னவென்று சொல்ல. தன் வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த மனிதராக எனக்கு அவர் மீது இன்னும் மதிப்பு அதிகம். எளிமையான இனிமையான மனிதர்.’’

கபிர் துஹான் சிங் (வேதாளம்)
அஜித் எனக்கு மூத்த சகோதரர் போல. அவருக்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்த்தைக் கொஞ்சமும் காட்டாமல் தன்னுடன் நடிக்கும் நடிகர்களை நண்பர்கள் போலவும், குடும்ப உறுப்பினர்கள் போலவும் நடத்தக் கூடியவர். உடன் நடிக்கும் நடிகர்கள் மட்டும் அல்ல, செட்டில் இருக்கும் அனைவருடனும் அவ்வளவு நட்பாக, பணிவாகப் பழகுவார்கள்.’’
மொத்தத்தில் இந்த இரு நடிகர்களையும் பார்த்து இந்த வில்லன்கள் சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருப்பது ஒன்றுதான். ‘அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவர்களே!’
-ஷாலினி நியூட்டன்