மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திரைத்தொண்டர் - 21

திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம்
பிரீமியம் ஸ்டோரி
News
திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் ( திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் )

அமரர் பஞ்சு அருணாசலம்

திரைத்தொண்டர் - 21

திரைப்பட எழுத்தாளர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம், `திரைத்தொண்டர்’ தொடர் மூலமாக தன் அனுபவங்களைப் பகிர்ந்துவந்தார். திடீரென நிகழ்ந்த அவரின் மரணம், நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரின் ஆன்மா சாந்தியடைய, விகடன் பிரார்த்திக்கிறான். ‘வாராவாரம் நம்மகிட்ட பேசிட்டு இருந்த ஒருத்தர் திடீர்னு பேசுறதை நிறுத்திட்டா எப்படி இருக்குமோ, அப்படி இருக்கு அவரின் மரணம்!’ பல வாசகர்கள் இப்படிப் பல்வேறு வார்த்தைகளில் தங்களின் வருத்தங்களைப் பகிர்ந்துகொண்டனர். அவற்றின் மூலம் இந்தத் தொடர் வாசகர்களிடம் எந்த அளவுக்குச் சென்று சேர்ந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. பஞ்சு அருணாசலம் அவர்கள் ஏற்கெனவே பகிர்ந்த தகவல்கள், தொகுக்கப்பட்டு ‘திரைத்தொண்டர்’ தொடர் தொடரும்.

- ஆசிரியர்


திரைத்தொண்டர் - 21

‘சகலகலா வல்லவன்’ ஸ்கிரிப்ட்டைச் சொன்னதுமே, இளையராஜா ட்யூன் போட்டு பாடல்களைப் பதிவுசெய்து விட்டார். ‘கட்ட வண்டி கட்ட வண்டி...’, `இளமை இதோ இதோ...’, `நேத்து ராத்திரி யம்மா...’, `நிலா காயுது...’ என அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் மாஸான பாடல்களைத் தந்தார். இன்னொரு பக்கம் கமல் சாருடன் அம்பிகா, ரவீந்தர், வி.கே.ஆர்., தேங்காய் சீனிவான் என ஏகப்பட்ட ஆர்ட்டிஸ்ட்களை ஃபிக்ஸ்செய்து ஷூட்டிங்கைத் தொடங்கினோம். க்ளைமாக்ஸை மட்டும் முடிவுபண்ணாமல் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. கமர்ஷியல் படம் என்பதால், சண்டைக்காட்சியுடன் முடிவதுபோல ஒரு க்ளைமாக்ஸ் சொல்லியிருந்தேன்.

‘நீங்க சொல்ற க்ளைமாக்ஸ் நல்லாயிருக்கு. ஆனா, ‘முரட்டுக்காளை’ அளவுக்கு க்ளைமாக்ஸை மக்கள் எதிர்பார்ப்பாங்களே. அந்த மாதிரி ஏதாவது வேணுமே’ என்றார் சரவணன் சார். ‘நான் யோசிக்கிறேன் சார்’ எனச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஆனால், ‘முரட்டுக்காளை’ படத்தில் க்ளைமாக்ஸை ரயிலில் வைத்தோம். இதைக் கப்பலில் வைப்பதா? கதையை எப்படி கப்பலுடன் லிங்க் பண்ணுவது?’ - இப்படி எனக்குள் நிறையக் கேள்விகள். எனக்கு எதுவுமே தோணவில்லை. ‘சார்... நான் எவ்வளவோ யோசிச்சேன். இந்தக் கதையில வெளியே போய் க்ளைமாக்ஸ் பண்ண வழியே இல்லை. நான் எழுதின க்ளைமாக்ஸையே வெச்சுடுங்க. ஆனா ஒரு மாற்றம், அந்த வீட்டுல நெருப்பு எரியுது...அதுல சண்டைக்காட்சி. நிச்சயமா நல்லா வரும்’ என்றேன்.

‘செட்டுல நெருப்பு வைக்கணுமே’ என, முத்துராமன் சார் மட்டும் கொஞ்சம் யோசித்தார். பிறகு அவரும் ஓ.கே சொல்லிவிட்டார். சரவணன் சாருக்கும் திருப்தி. ஜூடோ ரத்னம் மாஸ்டர் சண்டைக்காட்சிகளை அமைத்தார். ‘நெருப்புல பண்றது ரொம்ப ரிஸ்க் சார். டூப் போட்டுக்கலாம்’ என முத்துராமன் சொன்னதை, கமல் சார் ஏற்றுக்கொள்ளவே இல்லை. டூப் போடாமல் அவரே நடித்தார்.

திகுதிகுவெனத் தீ பரவும்போது, கமல் அங்கு இருந்து ஜம்ப் பண்ணி வெளியே ஓடி வரவேண்டும். இது க்ளைமாக்ஸ் காட்சி. ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததைவிட தீ வேகமாகப் பரவ, செட்டில் இருந்த அனைவரும் ‘கமல்... கமல்...’ எனப் பதறி கத்த, கமல் சுதாரித்துக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் திட்டமிட்டதைவிட முன்னதாகவே குதித்துத் தப்பிவந்தார். இல்லை என்றால், அன்று நிச்சயமாக ஏதாவது விபத்து நடந்திருக்கும். அந்தப் படத்தின் படப்பிடிப்பு அப்படி பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடந்து முடிந்தது.

அப்போது எல்லாம் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே புரொஜக்‌ஷன் போட்டுக் காட்டுவோம். வேறு சில தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என பெரும்பாலும் எங்களின் நண்பர்கள்தான் படம் பார்ப்பார்கள். அவர்களில் பலருக்கு படம் திருப்தியாக இல்லை. சிலர் நேரடியாகவே அதை என்னிடம் சொன்னார்கள். பலர், மறைமுகமாக பல்வேறு நபர்களிடம் தங்களின் விமர்சனத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

அதில் சிலர் கமல் சாரிடம்கூட, ‘ஏம்பா... கஷ்டப்பட்டு வளர்ந்துவர்ற நேரத்துல இப்படிப்போய் ஒரு மோசமான படத்துல நடிச்சிருக்க’ எனச் சொல்லி அவரை அப்செட் செய்ய முயற்சிசெய்தார்கள் எனக் கேள்விப்பட்டேன். காரணம், அந்தப் படத்தில் வழக்கத்தைவிட கிளாமர் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். நாங்களாக எதுவும் திட்டமிட்டு பண்ணவில்லை. ஆங்காங்கே இயல்பாக அதுவாகவே அமைந்துவிட்டது.

கவிஞர்கூட, ‘காமம், அசிங்கமான விஷயம் அல்ல. அதை அழகா ரசனையோடு சொன்னா, ஜனங்க நிச்சயமா  ரசிப்பாங்க’ என அடிக்கடி சொல்வார். ‘பாசமலர்’ படத்தில் அவர் எழுதிய ‘மலராத பெண்மை மலரும்... முன்பு விளங்காத உண்மை விளங்கும்’ என்ற பாடலைப் பிரித்துப்பார்த்தால் அது பச்சையான பொருள் தரும். தவிர, அதை ஒரு பெண் வேறு பாடுவாள். ஆனால், அதை அத்தனை பேரும் ரசித்தார்கள்; ரசிக்கிறார்கள். காரணம், அது இலக்கிய ரசனையோடு சொல்லப்பட்ட விதம்.

விரசத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காகவே படம் எடுப்பதுதான் தவறு. ஆனால், இந்தப் படம் அப்படி அல்ல. அதனால் நிச்சயமாக இந்தப் படத்தை மக்கள் ரசிப்பார்கள் என நம்பினேன். என்னைவிட சரவணன் சார் அதிக நம்பிக்கையுடன் இருந்தார்.

‘சகலகலா வல்லவன்’ படம் முக்கால்வாசி முடிந்த நிலையில், ரஜினி எனக்குத் தந்திருந்த கால்ஷீட் நெருங்கியது. நான் முன்னுக்கு வந்த பிறகு எழுதிய ரஜினி, கமல் படங்களின் கதைகள், பெரும்பாலும் அவர்களை மனதில்வைத்து எழுதியவையே. அப்படி ‘கழுகு’ படத்துக்கு அடுத்து ரஜினி தந்திருந்த கால்ஷீட்டில், வழக்கம்போல அவரை மனதில்வைத்து கமர்ஷியலாக ஒரு கதை எழுதலாம் என நினைத்தேன்.

திரைத்தொண்டர் - 21

அப்படி ‘அவருக்கு என்ன மாதிரியான கதை பண்ணலாம்?’ என பழைய விஷயங் களை, அனுபவங்களை அசை போடும்போது எப்போதோ நினைத்த கதைகள் நினைவுக்கு வந்தன. அப்படித்தான் ‘குட்டி’ கதையும் நினைவுக்கு வந்தது. அது என் ஆரம்பகால காரைக்குடி நாட்களில் எழுதிய கதை. அது, ‘பிறகு ஒரு நாவலாக டீட்டெயில் பண்ணி எழுதுவோம்’  என நினைத்து நான்கு பக்கங்களில் எழுதிய கதை. சினிமாவுக்கு வந்த பிறகு, அதை மறந்துபோனேன். அந்தக் கதை இதுதான்.

செட்டிநாட்டில் பெரும்பாலான செட்டியார்கள் ரங்கூன், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகளில் வட்டிக்கடைகள் நடத்துவார்கள். வட்டிக்கடை எனப் பெயர் தானே தவிர, பணம் சேர்த்துவைக்க, கடன் வாங்கிக்கொண்டு சிறுகச்சிறுக வட்டியுடன் கட்ட... எனக் கிட்டத் தட்ட அவை வங்கிகள்தான்.

செட்டியார்கள் இப்படி வெளி நாடுகளில் இருக்கும்போது ஆச்சி மார்கள் மட்டும் வீட்டில் தனியாக இருப்பார்கள். அவர்களுக்குத் துணையாக ஒரு சிறுமி உடன் இருப்பார். சமையல் வேலைக்கு, துணி துவைக்க, வீட்டைக் கூட்டிப்பெருக்க... என வீட்டு வேலைக்கு ஆட்கள் பலர் இருந்தாலும், அந்தச் சிறுமி, ஆச்சிமார்களுக்கு கூடமாட உதவிக்கு இருப்பார்.

செட்டிநாட்டு வீடுகள், பெரிய அரண்மனைகள்போல் பெரிதாக இருக்கும். சமையலறை, திண்ணையில் இருந்து இருநூறு முன்னூறு அடி தூரத்தில் இருக்கும். திண்ணையில் படுத்திருக்கும் ஆச்சிமார்களுக்குத் தாகம் எடுத்தால்கூட, அவ்வளவு தூரம் நடந்துபோய் பானையில் தண்ணீர் எடுத்துக் குடித்துவிட்டு வந்து படுத்துக்கொள்ளவேண்டும். அப்போது ‘குட்டி... தண்ணி கொண்டுவா!’ என துணைக்கு இருக்கும் அந்தச் சிறுமியிடம் சொன்னால், குடுகுடுவென ஓடிப்போய் தண்ணீர் கொண்டுவந்து கொடுப்பாள்.

படுத்து எழுந்ததும், ‘பாயைச் சுருட்டி வை’ என்றதும் அந்தப் பாப்பா பாயைச் சுருட்டிவைப்பாள். ‘காபி போட்டா வாங்கிட்டு வா’ என்பார்கள். அடுப்படியில் இருந்து காபி வாங்கி வருவாள். ‘துவைச்சுப் போட்ட துணிகளை எல்லாம் மடிச்சு வை’ என்பார்கள். மடித்துவைப்பாள். ‘நெல்லை எடுத்துக் காயப்போடு’, `ஊறுகாயை எடுத்து வெயில்ல வை’ என்பார்கள்... செய்வாள். தெருவில் மாம்பழம், பன நுங்கு விற்றால், ‘குட்டி... நாலணா எடுத்துட்டு வா’ என்பார்கள். இப்படி நம்பிக்கை வந்த பிறகு, பெட்டி சாவிகளைக்கூட அவளிடம் கொடுத்துவைப்பார்கள். அந்தச் சிறுமி, அப்பச்சிக்கு என்ன பிடிக்கும், ஆச்சிக்கு என்ன பிடிக்கும் எனத் தெரிந்துவைத்திருப்பாள். ‘அண்ணே... பெரியண்ணி சாப்பிட வந்துட்டாங்க. ரெண்டு தோசை முறுகலா போடுங்க!’ என சமையற்காரரை அதட்டுவாள். இப்படிப் பழகி, கடைசியில் அந்தப் பாப்பா வீட்டில் ஆல் இன் ஆலாக வலம் வருவாள்.

அவளின் குடும்பம் ஏழ்மையான விவசாயக் குடும்பமாக இருக்கும். அவளின் அப்பா வயலில் வேலைசெய்பவராகவோ, அம்மா மாடுகளைப் பார்த்துக்கொள்பவராகவோ இருப்பார்கள். இவர்களைப் போன்ற ஏழ்மையான குடும்பப் பின்னணி உள்ள வீட்டுச் சிறுமிகளைத்தான் செட்டி வீட்டு ஆச்சிமார்களுக்குத் துணையாக அனுப்புவார்கள். அந்தச் சிறுமிகளும் செட்டியார் வீடுகளிலேயே தங்கியிருந்து வேலைசெய்வார்கள்.

இப்படி இருக்கும் பெண், பருவம் அடைந்து விட்டால் உடனடியாக அவளின் பெற்றோரை அழைத்து, செய்யவேண்டிய சடங்குகளைச் செய்து, தலைக்குத் தண்ணீர் ஊற்றி, பட்டுப் புடவை, நூறு அல்லது ஐந்நூறு என பணம் வைத்து, ‘நல்லபடியா கல்யாணம் பண்ணிவைங்க. கல்யாணத்துக்குச் சொல்லி அனுப்புங்க. நாங்க வர்றோம். அப்ப என்ன உதவி பண்ணணுமோ பண்றோம்’ எனச் சொல்லி, பெற்றோருடன் சொந்த வீட்டுக்கு அனுப்பிவைப்பார்கள். அந்தப் பெண் ஏதோ பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்குச் செல்வதுபோல அழுதுகொண்டே போவாள்.

அப்போது அது எனக்கு விசித்திரமாக இருக்கும். இப்படி வீட்டில் வேலைசெய்யும் சிறுமிகளைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். ‘செட்டிநாட்டு வீடுகளில் இப்படி சகல வசதி வாய்ப்புகளோடும் செல்வாக்கோடும் இருந்த அந்தச் சிறுமியை, ஏழ்மையான நிலையில் இருக்கும் தன் சொந்த வீட்டுக்கு திடீரென அனுப்பினால், எப்படி அந்த வீட்டோடு அவள் ஒட்டுவாள்? சொந்த வீட்டுப் பழக்கவழக்கங்களே அவளுக்குப் புதிதாக இருக்குமே! பிறகு அவள் ஓர் ஏழையைக் கல்யாணம் செய்துகொள்ளும்போது, அவள் மனம் என்ன பாடுபடும்?’ - இப்படி நான் யோசிக்க யோசிக்க அந்த எண்ணங்களே என்னை வேறு எங்கெங்கோ அழைத்துச்சென்றன. அதுவே எனக்குள் ஒரு கதையாக மாறியது. அதுதான் எழுதியிருந்த ‘குட்டி’ கதை.

‘இந்தக் கதையை ரஜினி சாருக்குப் பண்ணினால் என்ன?’ எனத் தோன்றியது. ‘நிறைய கமர்ஷியல் படங்கள் பண்ணிட்டிருக்கும் ரஜினி, இதில் நடித்தால் வித்தியாசமா இருக்கும். இந்தக் கதை, பெண்களுக்கு நிச்சயமாப் பிடிக்கும். ஆனால், ஆண்களுக்குப் பிடிக்குமா? தவிர, சிறுமிகளை வீட்டோடு வேலைக்கு வைத்துக்கொள்ளும் பழக்கம் செட்டிநாட்டில் மட்டும்தான் இருக்கு. தமிழகத்தின் மற்ற ஏரியாக்களுக்கு இந்தப் பழக்கம் பற்றி தெரியாது. அப்ப இந்த கான்செப்ட்டை எடுத்து கதை பண்ணினா அதை தமிழ்நாடு முழுக்கப் புரிஞ்சுப்பாங்களா?’- இப்படி நிறையச் சந்தேகங்கள்.

‘கதையை யாரையும் மனசுல வெச்சு எழுத வேண்டாம். முதல்ல முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதி முடிச்சுடுவோம்’ என நினைத்து, நான் சந்தித்த மனிதர்கள் சம்பவங்களின் அடிப்படையில் கற்பனையையும் கலந்து அந்தக் கதைக்கு திரைக்கதை ட்ரீட்மென்ட் எழுதி முடித்தேன். ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படம்கூட ரஜினியின் பாணியில் இருந்து விலகிவந்த படம்தான். ஆனால், அந்த ஸ்கிரிப்ட் அவருக்கும் பிடித்திருந்தது ரசிகர்களும் ஏற்றுக்கொண்டார்கள். இந்தக் கதையும் அவருக்கு நிச்சயம் பிடிக்கும்’ என நம்பினேன்.

ஆனால், ‘என்ன சார், இதுல எனக்கு வேலை ரொம்ப கம்மியா இருக்கு. என் ஸ்டைலுக்குப் பண்ணுங்க’ என ரஜினி சார் சொல்லிவிடுவாரா என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால், அவருக்கு கதை ரொம்பப் பிடித்துவிட்டது. முத்துராமன் சாரைக் கேட்கவே வேண்டாம். அவருக்கு எப்போதும் சென்டிமென்ட் ரொம்பப் பிடிக்கும். அதனால் அவரைப் பொறுத்தவரை டபுள் ஓ.கே.

இப்படித்தான் ‘எங்கேயோ கேட்டகுரல்’ கதை அமைந்தது. ரஜினி சார், ராதா, அம்பிகா ஆகிய மூன்று பேர்கள்தான் கதையின் நாயகர்கள். கிராமத்துக் கதை என்றதும் சிலர், ‘பொள்ளாச்சிக்குப் போகலாம்’ என்றார்கள். ‘எளிமையான கதை. அதனால் சென்னைக்குப் பக்கத்திலேயே எடுத்துவிடலாம்’ என முடிவுசெய்து பக்கத்தில் ஒரு சின்னக் கிராமத்தில் ஷூட் பண்ணினோம். ரஜினி சார் அப்போது கேளம்பாக்கத்தில் இடம் வாங்கிப் போட்டிருந்தார். (அந்த இடத்தில்தான் தற்போது பண்ணை வீடு கட்டியிருக்கிறார்) அந்த இடத்தில்தான் ‘பட்டுவண்ணச் சேலைக்காரி...’ பாட்டை எடுத்தோம். படத்தில் ஃபைட் கிடையாது; ஆடம்பர செட்கள் கிடையாது. கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் மலையாளப் படங்களைப்போல எனச் சொல்லலாம். வெறும் 40 நாட்களில் மொத்தப் படத்தையும் முடித்துவிட்டோம்.

‘நாங்க இப்படி ஒரு படம் பண்ணியிருக்கோம். இஷ்டம் இருந்தா வாங்குங்க’ எனச் சொல்லி, என் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டினேன். எல்லா டிஸ்ட்ரி பியூட்டர்களுக்கும் படம் பிடித்திருந்தது. ஆனால், அவுட்ரேட்டா, டிஸ்ட்ரிபியூஷனா என்ன டேர்ம்ஸில் வாங்குவது என்ற குழப்பம்? ‘டிஸ்ட்ரிபியூஷன் பண்ணிக்கலாம். எனக்கு வர்றது வரட்டும். தைரியம் இருந்தா வாங்குங்க. நீங்க ரிஸ்க் எடுக்க வேணாம்’ என்றேன். காரணம், ‘சின்ன பட்ஜெட். எப்படி இருந்தாலும் லாபம் வரும் என்ற தைரியம் எனக்கு இருந்தது.

வழக்கமாக, ரஜினி சார் ரிலீஸ் தேதி சொல்லித்தான் கால்ஷீட்டே கொடுப்பார். அப்படி சுதந்திர தின ரிலீஸ் என முடிவுசெய்து ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்தை எடுத்து முடித்திருந்தோம். ஆனால், முன்னதாக ரிலீஸ் ஆகியிருக்கவேண்டிய ‘சகலகலா வல்லவன்’ சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் தள்ளிக்கொண்டே வந்தது. வழக்கமாக ஏவி.எம்-மில் விடுமுறை நாட்களாகப் பார்த்து ரிலீஸ் செய்வார்கள். தவிர, அவர்களுக்கு என சில தியேட்டர்கள் அமைய வேண்டும் என நினைப்பார்கள். அதனால் காத்திருந்து பண்ணுவது அவர்கள் வழக்கம். அப்படி ‘சகலகலா வல்லவன்’ படமும் சுதந்திர தின ரிலீஸ் என்று அறிவித்துவிட்டார்கள். எங்களுக்கு தர்மசங்கடம். ஏனெனில், இரண்டுமே எங்கள் யூனிட் படம். அப்படி இருக்கையில் ஒரே நாளில் வந்தால் ஒன்றின் வசூல் மற்றொன்றைப் பாதிக்குமோ என்ற தயக்கம்.

`சகலகலா வல்லவன்’ படத்துக்காக ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்தைத் தள்ளிவைத்தாலும், ரஜினி சார் தவறாக நினைக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், இது ஏற்கெனவே ரிலீஸ் தேதி சொல்லித் தொடங்கப்பட்ட படம். நான் எழுதிய படமாக இருந்தாலும் ‘சகலகலா வல்லவன்’ படத்தைத் தள்ளிவைக்கச் சொல்ல எனக்கு உரிமை இல்லை. சரவணன் சாரிடம் நேரடியாகப் பேசினேன். ‘நாங்க பூஜை போடும்போதே ரிலீஸ் தேதி ஃபிக்ஸ் பண்ணி, சரியா அதே தேதியில் ரிலீஸ் பண்ண வர்றோம். ஒரே டைரக்டர், ஒரே ரைட்டர். ரெண்டும் ஒரே நாள்ல ரிலீஸானா... யோசனையா இருக்கே சார்’ என்றேன். அவர் ஏதாவது முடிவுசொல்வார் என எதிர்பார்த்தேன்.

திரைத்தொண்டர் - 21‘பஞ்சு, நான் உங்க படத்தைப் பார்த்துட்டேன். அது ஒட்டுமொத்தமா வித்தியாசமான படம்.

100 சதவிகிதம் உங்க படத்துக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் உறுதி. இது கம்ப்ளீட் மாஸ் மசாலா. இதுவும் நல்லா போகும்; அதுவும் நல்லா போகும். அவ்வளவு ஏன் ஒரே நாள்ல வந்த ஏழெட்டு படங்கள் எல்லாம் நல்லா போயிருக்கே. ஒரே நாள்ல ரிலீஸ் ஆன சிவாஜி சார், எம்.ஜி.ஆர் சார் படங்கள் சில்வர் ஜூப்ளி ஆகியிருக்கே. அதனால, நீங்க கவலைப்படாதீங்க. தைரியமா ரிலீஸ் பண்ணுங்க’ என்றார்.

‘ஓ.கே’ என நினைத்துக்கொண்டு, இரண்டையும் 14.8.1982 அன்று ஒன்றாக ரிலீஸ் பண்ணினோம். இரண்டு படங்களும் நன்றாக ஓடின. நுணுக்கமாகப் பார்த்தீர்கள் என்றால், ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்தைவிட ‘சகலகலா வல்லவன்’ வசூல் அதிகம். காரணம், இது சென்டிமென்ட்; அது மாஸ் மசாலா. ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்துக்கு நிறைய விருதுகள் வந்தன. இதை அந்த வருடத்தின் சிறந்த படமாக தமிழக அரசு தேர்ந்தெடுத்தது. சிறந்த தயாரிப்பாளராக எனக்கும், சிறந்த நடிகராக ரஜினிக்கும், சிறந்த இயக்குநராக முத்துராமன் சாருக்கும்... இப்படி பல விருதுகளை வாங்கியது. அப்படி ஒரே நாளில் ரிலீஸான எங்களின் இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றிபெற்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

- தொண்டு தொடரும்...