மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 54

கலைடாஸ்கோப் - 54
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 54

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 54

சூப்பர் ஷேடோஸ்

எல்லோருக்குள்ளும் ஒரு ஹீரோ இருக்கிறான். வழக்கமான சமூக அநீதிகளைக் கண்டு ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் உள்ளுக்குள் கொதிக்கிறோம். அந்தக் கொதிப்பில் வெந்து தணிவது அந்த ஹீரோதான். இப்படி நிஜத்தில் தங்களால் முடியாததை கதையில், காமிக்ஸில், திரைப்படங்களில் ஹீரோக்கள் செய்யும்போது உள்ளுக்குள் குஷியாகிறோம். அதிலும் சூப்பர் ஹீரோக்கள் என்றால், கிரகம்விட்டு கிரகம் போய்க்கூட தீயவர்களை அழித்து, நன்மையை நிலைநாட்டுகிறார்கள். சூப்பர் ஹீரோக்கள் என்பவர்கள் நமது ஆல்டர் ஈகோக்கள்.

இன்றைய மீடியா யுகத்தில், குழந்தைகள்கூட தங்களை சூப்பர் ஹீரோக்களாகக் கற்பனை செய்துகொள் கிறார்கள். இது நல்லதா... கெட்டதா என்பதை ஆய்வாளர்களிடம் விட்டுவிடலாம். ஒரு ஆர்ட்டிஸ்ட்டாக இதை அட்டகாச ஓவியங்களாகப் பதிவுசெய்கிறார் அமெரிக்க ஓவியர் ஜேசன் ராட்லிஃப் (jason Ratliff).

இவருடைய ஓவியங்களில் குழந்தைகள் கைகளில் பொம்மைகள், பூனைகள், விளையாட்டுப் பொருட்கள் என, தங்களின் இயல்பான உலகில் இருந்தாலும், அவர்களின் கற்பனை உலகில் சூப்பர் ஹீரோக்களாக இருப்பதை நிழல்களாக வரைந்திருக்கும் ஜேசனின் ஓவியங்கள் கலர்ஃபுல் கற்பனைகள்.

`நிழல்களை வண்ணமயமாக வரைவது எனக்குப் பிடிக்கும். இந்த சூப்பர் ஷேடோஸ் வரிசை ஓவியங்களை நான் மிகவும் பாசிட்டிவ் சிந்தனையுடன்தான் வரைந்திருக்கிறேன். குழந்தைகள் அவர்களுடைய கனவு உலகத்தில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். அவர்களுடைய கனவுகளுக்கு நான் உருவம் கொடுக்கிறேன். சூப்பர் ஹீரோக்கள் என்பது, அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளின் உருவம் என்றுதான் எடுத்துக்கொள்கிறேன்’ என்றார் ஒரு நேர்காணலில். குழந்தைகளுக்கு, நிழலுடன் நிஜத்தையும் சொல்லிக்கொடுக்க வேண்டும் என எனக்குத் தோன்றுகிறது.

கலைடாஸ்கோப் - 54

பிம்பம்

அத்வைத், கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்துச் சிரித்தான்... அதுவும் சிரித்தது.

“நீ என் பிம்பம். உன்னிடம் மறைப்பதற்கு என்ன இருக்கிறது?” என்றான்.

“சொல்” என்றது பிம்பம்.

அத்வைத் திடுக்கிட்டபடி கண்ணாடியைப் பார்த்தான்.

“என்ன பார்க்கிறாய்? உன்னைப் பிரதிபலிப்பதுதான் என் வேலை என நினைத்தாயா! இந்த ஃப்ரேமுக்குள் வரும்போது மட்டும்தான் உன்னை அப்படியே பிரதிபலிக்கிறேன். நீ அந்தப் பக்கம் நகர்ந்த பிறகு எனக்கு என தனி வாழ்க்கை இருக்கிறது” என்றது பிம்பம்.

அத்வைதுக்கு முதலில் ஏற்பட்ட ஆச்சர்யம் விலகி, ஆசுவாசம் பரவியது.

“கார், வீடு என தேவைக்கு அதிகமாகவே கடன் வாங்கிவிட்டேன். 50 லட்சம் கடன். வட்டிக்காரர்கள் துரத்துகிறார்கள். எப்படித் தப்பிப்பது எனத் தெரியவில்லை” என்றான் அத்வைத்.

“வழி இருக்கிறது. நீ இங்கே கண்ணாடிக்குள் வந்துவிடு” என அத்வைதின் கையைப் பிடித்து இழுத்தது அவன் பிம்பம். அத்வைத் திரவத்தைக் கிழித்துக்கொண்டு நுழைவதுபோல கண்ணாடியின் உள்ளே சென்று விழுந்து எழுந்தான். பக்கத்தில் அவன் பிம்பம் சிரித்துக்கொண்டே நின்றது.

“இப்படி கண்ணாடிக்குள் நுழைய முடியுமா?” என்று ஆச்சர்யப்பட்டான் அத்வைத்.

“என்னால் முடியும். நான் உன்னைத் தொட்டு இழுத்ததால்தான் உன்னாலும் வர முடிந்தது” எனப் புன்னகைத்தது அவன் பிம்பம். பிம்ப உலகத்தை ஆச்சர்யமாகப் பார்த்தான் அத்வைத். உண்மையான உலகம்போலவே இருந்தது.

சட்டென தூ…ரத்தில் வட்டிக்காரர்கள், இல்லை… வட்டிக்காரர்களின் பிம்பங்கள் வருவதைக் கவனித்தான்.

அத்வைத் அவனுடைய பிம்பத்தைத் திரும்பிப் பார்த்தான்.

கலைடாஸ்கோப் - 54

அவன் பிம்பம், கண்ணாடியைக் கிழித்துக்கொண்டு மறுபக்கம் குதித்து நின்றது.

“மன்னித்துவிடு நண்பா. அந்தப் பிம்ப உலகில் எனக்கு ஒரு கோடி கடன் இருக்கிறது” என்றது!

கலைடாஸ்கோப் - 54

லவுட் ஸ்பீக்கர்

80-களின் கிராமங்களில் வளர்ந்தவர்கள் என்றால், காலையிலும் மாலையிலும் பக்கத்துக் கோயில்களில் போடும் பாடல்கள் உங்கள் வாழ்க்கையின் ஞாபகங்களில் ஒன்றாகக் கலந்துபோயிருக்கும். எஸ்.பி.பி யார் என்றே தெரியாத வயதிலும் `ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல...' கடந்து வந்திருப்பீர்கள்.

எல்.ஆர்.ஈஸ்வரியைத் தெரியாதபோதும் `கற்பூர நாயகியே கனகவல்லி...' காதுகளில் நிறைந்திருக்கும்.

டி.எம்.எஸ்-ஸை அறியாத வயதிலும் `மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்...' என்பது தூரத்தில் ஒலிப்பதைக் கேட்டிருப்பீர்கள். அந்திவேளைகளில் தெருக்களிலோ முற்றங்களிலோ நீங்கள் கண்ணாமூச்சியோ, பாண்டியோ விளையாடிக்கொண்டி ருந்தபோது இந்தப் பாடல்கள் பின்னணியாக ஒலித்திருக்கும்.

இந்தப் பாடல்களை அன்று ஒலிபரப்புவது கோன் வடிவில் இருந்த லவுட் ஸ்பீக்கர்கள் என்பது, ஞாபகம் இருக்கிறதா? அதன் வடிவமே இன்று வின்டேஜ் ஆர்ட்போல ஆகிவிட்டது. பெரும்பாலும் கோயில் மண்டபத் தூண்களிலோ, கம்பங்களின் உயரத்திலோ கட்டிவைத்திருப்பதை அண்ணாந்து பார்த்திருப்போம். கோயில்களில் கண்ணுக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் இந்த லவுட் ஸ்பீக்கர்கள் கைக்கு எட்டுவது கல்யாண விடுகளில்தான். அன்று முழுவதும் ரேடியோ செட்காரர்களுக்கு, கல்யாண வீடுகளில் சிறுவர்களின் பிரத்யேகக் கவனிப்பு இருக்கும். ரேடியோ செட் அண்ணன்களுக்கு, சம்பளம் இல்லாத ஏவலாளர்களாகப் பாய்ந்து பணிசெய்வோம். `தம்பி... அந்த கேசட்டை எடு!' என்றால் நான்கு பேர் பாய்வார்கள். அந்த செட்காரர்களுடன் சில லவுட் ஸ்பீக்கர்களும் வந்து இறங்கும். கோன் வடிவில் உள்ளே இரும்பு நாக்குபோல இருக்கும் குழல் என்று அதன் வடிவம் விசித்திரமான கவர்ச்சியோடு இருக்கும். அந்தக் கோனுக்கு உள்ளேயே `தானம் ஒலி-ஒளி அமைப்பு' மாதிரி செட்காரர்களின் கம்பெனிப் பெயரை எழுதியிருப்பார்கள். கோயிலிலும் கல்யாண வீடுகளிலும் கவரும் இந்த லவுட் ஸ்பீக்கர்கள், தேர்தல் காலத்தில் கர்ணகொடூரமாகத் தோன்றியது ஏன் என்பது அந்தச் சின்ன வயதில் புரிந்தது இல்லை.
இந்த லவுட் ஸ்பீக்கர்கள், பிற்காலத்தில் அவுடேட்டட் ஆகி, இன்று உபயோகத்தில் குறைவாகவே உள்ளன. ஒலி மாசு போன்ற காரணங்களைச் சொல்லி, சில இடங்களில் தடையும் இருப்பதுபோல.

எப்படியோ நமது ஞாபகங்களின் ஆழங்களில் அது இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது!

கலைடாஸ்கோப் - 54

ஹேங்கர்

நகரத்தில் சில காக்கைக் கூடுகளைக் கவனித்தால் சுள்ளிகளுடன் அலுமினிய ஷர்ட் ஹேங்கர்களும் இருப்பதைக் கவனிக்கலாம். ஏதாவது மொட்டைமாடியில் இருந்து `ஆட்டை’யைப் போட்டதாக இருக்கலாம். இந்த ஹேங்கர் ஐடியாவையே நாம் அமெரிக்காவில் இருந்து `ஆட்டை’யைப் போட்டதுதானே!

ஆம், `ஹேங்கர் கண்டுபிடித்தது அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி தாமஸ் ஜெஃபெர்சன்' (Thomas Jefferson) எனச் சொல்கிறார்கள். 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெஃபெர்சனுக்கு அரசியலில் மட்டும் அல்லாமல், அறிவியலிலும் ஆர்வம் இருந்தது. நம் ஊர் அரசியல்வாதிகள்போல நாற்காலிகளைக் கைப்பற்றுவதிலேயே குறியாக இல்லாமல், மரக்கலப்பையில் இருந்து நாற்காலிகள் வரை வடிவமைப்பதிலும் ஆர்வம்கொண்டவர்.

ஜெஃபெர்சன் வடிவமைத்தது, மரத்தினால் செய்த ஹேங்கர்கள். வொயர் போன்ற கம்பிகளை முக்கோண வடிவத்தில் மடக்கி முடிச்சிட்டு, கொக்கிகளை உருவாக்கி கிட்டத்தட்ட நாம் இன்று உபயோகிக்கும் பிரபலமான கம்பி ஹேங்கர்களைப் போன்று வடிவமைத்தவர் ஆல்பெர்ட் ஜெ.பார்க்ஹவுஸ் (Albert J. Parkhouse). 20-ம் நூற்றாண்டின் பாதி வரை அமெரிக்காவில் கருக்கலைப்புக்குத் தடை செய்யப்பட்டிருந்தபோது சட்டவிரோதமான  கருக்கலைப்புகளுக்கு இந்த வொயர் ஹேங்கர்களும் பயன்படுத்தப்பட்டன என்பதும், ஹேங்கரை இதற்குப் பயன்படுத்தக் கூடாது என்பதற்கு விழிப்புஉணர்வுப் பிரசாரங்கள்கூடப் பண்ணப்பட்டது என்பதும் அதிர்ச்சித் தகவல்.

பிளாஸ்டிக்கில் தட்டையாக இருக்கும் ஹேங்கர்களை வடிவமைத்தது, அமெரிக்காவின் பிரபல பிசினஸ் வுமன் ஜாய் மேங்கனோ (joy mangano). இந்த ஹேங்கர் வடிவம், உலகம் முழுக்க வேகமாகப் பிரபலமாகி, இன்று கம்பி ஹேங்கர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. கடந்த வருடம் ஜெனிஃபர் லாரன்ஸ் நடிப்பில் ஜாய் மேங்கனோவின் வாழ்க்கை, திரைப்படமாக வந்தது. ஒரு ஹேங்கருக்கு பின்னால் ஹேங்க்ஓவர் வரவைக்கும் இவ்வளவு கதைகள் இருப்பது நானோ ஹிஸ்டரி ஆச்சர்யம்.

கலைடாஸ்கோப் - 54

யமகம்

அருணகிரிநாதர் எழுதிய `கந்தர் அந்தாதி', `யமக அந்தாதி' வகையைச் சேர்ந்த பாடல். யமகம் என்றால், பாடலின் முதல் வார்த்தையே நான்கு வரிகளிலும் திரும்பத் திரும்ப வரும். ஆனால், அர்த்தங்கள் வெவ்வேறாக இருக்கும். அந்தாதி என்பது, ஒரு பாடலின் முடிவில் வரும் வார்த்தை அடுத்த பாடலின் தொடக்கமாக அமையும். இன்று தமிழே ஒழுங்காக எழுதவராத ஒரு தலைமுறையாக வளர்ந்து நிற்கிறோம். `கந்தர் அந்தாதி' மாதிரியான ஒன்றே நமது மூத்தோர்களின் மொழி ஆளுமைக்கு உதாரணம். ஒரு ‘சாம்பிள்’ பாடல்.

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

படிக்கும்போது நாக்கு முடிச்சிட்டுக்கொள்கிறதா. ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களில் வரும் `யமகசீயா...' போன்ற Blind words என நினைத்துவிடாதீர்கள். வில்லிப்புத்தூராரே உரை கூற முடியாமல் திகைத்து நின்ற இந்தப் பாடலின் உத்தேசமான கருத்து, தாளத்தால் நடிக்கும் பரமசிவனும் பிரம்மாவும் தயிரை உண்டு, பாற்கடலையும் ஆதிசேஷனையும் பாயாகக்கொண்ட திருமாலும் வணங்கும் முதல்வனை! தெய்வயானை தாசனே! ஜனன மரணத்துக்கு இடமாய், எலும்பு முதலிய தாதுக்கள் நிறைந்த பொல்லாத இந்த உடலை, தீயில் வேகுங்கால், உன்னைத் துதிக்கும் என் புத்தியை உன் அடி இணைக்கு ஆட்படுத்த வேண்டும்.

பதவுரை, இணையத்தில் கிடைக்கிறது ஆர்வம் உள்ளவர்கள் தேடிப் படித்துக்கொள்ளுங்கள்.