உலகம் பலவிதம்
சினிமா
Published:Updated:

“தமிழ் சினிமா ரொம்பவே மாறிக்கிட்டு வருது!”

“தமிழ் சினிமா ரொம்பவே மாறிக்கிட்டு வருது!”
பிரீமியம் ஸ்டோரி
News
“தமிழ் சினிமா ரொம்பவே மாறிக்கிட்டு வருது!”

“தமிழ் சினிமா ரொம்பவே மாறிக்கிட்டு வருது!”

“தமிழ் சினிமா ரொம்பவே மாறிக்கிட்டு வருது!”

‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தில் அப்பாவி ஜமீனாய் அறிமுகமாகி, ‘ஜிகர்தண்டா’வில் ஜிப்ரீஷ் மொழி பேசி, தற்போது ‘ஜோக்கர்’ படத்தின் ஹீரோவாய் உயர்ந்திருக்கும் குரு சோமசுந்தரத்தை மடக்கிப் பிடித்துப் பேசியதில்...

‘‘ ‘ஜோக்கர்’ ஹீரோவானது எப்படி?’’

‘‘இயக்குநர் ராஜூ முருகன் தன்னோட படத்தில் ஒரு சின்ன கேரக்டர் ரோல் பண்ணத்தான் என்னைப் பார்க்க திருவண்ணாமலைக்கு வந்தார். ரெண்டு நாள் கழிச்சு நீங்க சென்னைக்கு வாங்கனு சொல்லி ஸ்க்ரிப்ட்டைக் கையில் கொடுத்துட்டு நீங்கதான் ஹீரோனு சொல்லிட்டார்.’’

‘‘ஹீரோவா நடிக்கிறப்போ பொறுப்பு உணர்வு அதிகம் இருக்கணும். அதை சுமையா கருதுனீங்களா?’’

‘‘சுமையா கருதினீங்களாங்கிற கேள்வியே கிடையாது. அதானே வேலை. ரொம்பப் பொறுப்பா ஃபீல் பண்ணேன். ஹீரோன்னதும் நாம இதை நல்லாப் பண்ணணும். எல்லோர்கூடவும் சேர்ந்து பண்ணணும்ங்கிற பொறுப்பு உணர்வு எனக்கு வந்துச்சு.’’

‘‘ஏன் இவ்ளோ இடைவெளி?’’

‘‘நான் சாப்பாடு எது கிடைச்சாலும் சாப்பிடுவேன். ட்ரெஸ் இருக்கிறதைப் போட்டுப்பேன். பிடிச்சது, பிடிக்காதது கிடையாது. ஆனா சினிமாவைப் பொறுத்தவரை செலக்டிவ்வா இருந்தேன். ஒரே மாதிரியான கேரக்டர்லாம் ஒப்புக்காம இருந்தேன். ‘ஆரண்ய காண்டம்’ நல்ல விசிட்டிங்கார்டா ஆனதாலேயும், நான் செலக்டிவ்வா படம் பண்றதாலேயும் இதுவரைக்கும் வாய்ப்புனு யார்கிட்டவும் போய் கேட்கலை. கதையம்சமாவும், என்னோட கேரக்டர் நல்லதாகவும் இருக்கிற மாதிரியான படங்களை நான் ஒப்புக்கிட்டேன். நான் நிறையப் படங்கள் பண்ணாததால ‘ஜோக்கர்’ வாய்ப்பு கிடைச்சப்போ ஃப்ரீயா இருந்தேன். அதனால என்னால் நல்லா வொர்க் பண்ண முடிஞ்சது.’’

‘‘நடிக்க வர்ற எல்லோருக்கும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறது, கமல்கூட நடிக்கிறதெல்லாம் கனவா இருக்கும். உங்களைப் பொறுத்தவரை இது நிறைவேறிடுச்சு. அந்த அனுபவங்கள்?’’

‘‘ரெண்டு இல்லை. மூணு விஷயம் நடந்துருச்சு பாஸ். மணிரத்னம் சார் இயக்கத்தில் ‘கடல்’, கமல் சார்கூட ‘தூங்காவனம்’, மூணாவதா கவுண்டமணி சார்கூட சேர்ந்து ‘49-ஓ’ படத்திலேயும் நடிச்சிட்டேன். இதுவே அதிசயமாதான் இருக்கு. இதுக்கெல்லாம் தியாகராஜன் குமாரராஜாவுக்குதான் நன்றி சொல்வேன்.’’

‘‘ஒவ்வொரு படத்திலேயும் முந்தையப் படத்துக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாம புதுசா வந்து நிற்கிறீங்களே... எப்படி?’’

‘‘அது எனக்கே இன்னும் புரியலை. நடிக்கும்போது முந்தைய கேரக்டர் சாயல் வந்திடக்கூடாதுங்கிறதுல கவனமா இருக்கேன். ஆனா மத்தபடி வேணும்னு எதுவும் பண்றதில்லை.’’

“தமிழ் சினிமா ரொம்பவே மாறிக்கிட்டு வருது!”

‘‘இதுவரைக்கும் கிடைச்ச பாராட்டில் பெஸ்ட்னு கருதுறது?’’

‘‘அது கொஞ்சம் காமெடியா இருந்தாலும் நான் காம்ப்ளிமென்ட்டாதான் பார்க்கிறேன். ‘ஜோக்கர்’ ஷூட்டிங்ல என்கிட்ட வந்து அவர்தான் டைரக்டரா, அவங்கதான் ஹீரோயினான்னு யாராவது விசாரிப்பாங்க. அப்படியே ஒருநாள் ஹீரோ வரலையா சார்னு என்கிட்டயே கேட்டாங்க. என்னைப்பார்த்தா, ஹீரோ மாதிரி தெரியலைங்கிறதை நான் பாராட்டாதான் பார்க்கிறேன். ஹீரோனா இப்படித்தான் இருப்பாங்கனு அவங்க மைண்ட்ல இருக்கிற பிம்பம் இல்லாம நான் இருந்ததால என்னை ஒரு கேரக்டராதான் பார்த்தாங்க. ஒரு ஹீரோவா பார்க்கலை.’’

‘‘சினிமாவில் நடிப்பதற்கு முன் கூத்துப்பட்டறையில் இருந்தீர்கள். அந்த அனுபவம் எப்படி?’’

‘‘நான் கூத்துப்பட்டறைக்கு 2002-ல் வந்தேன். 2011 வரைக்கும் அங்கே இருந்தேன். சொல்லப்போனா கூத்துப்பட்டறைக்கு வந்தபின் மனரீதியாவும் உடல் ரீதியாவும் எனக்குள்ளயே பல மாற்றங்களைப் பார்த்தேன். எல்லோருமா சேர்ந்து நிறைய நாடகங்கள் பண்ணோம். அதில் நான் இரண்டு நாடகங்கள்ல கதாநாயகனா நடிச்சேன். சென்னையின் எல்லா ஏரியாவிலேயும் நிறைய விழிப்பு உணர்வு வீதி நாடகங்களும் பண்ணிருக்கோம். ஆடியன்ஸ் பக்கத்தில் இருப்பாங்க. அந்த சிச்சுவேசன்ல நடிக்கும்போது சேலஞ்சிங்கா இருந்தது. இந்த மாதிரியான நாடக அனுபவம் எனக்கு நடிப்பைப் பற்றி நிறையப் புரிதலைக் கொடுத்தது.’’

‘‘நடிகர் தவிர்த்து தனிமனிதனா குரு சோமசுந்தரம் எப்படி?’’

‘‘எனக்கு சொந்த ஊர் மதுரை. அம்மாவோட சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம்கிறதால அங்கே சில வருசம் இருந்தேன். கிராமங்கள்ல மரங்கள் அதிகமா இருக்கிற இடங்கள்ல இருந்து பழகிருச்சு. அதனால எனக்கு சிட்டி புடிக்கலைனு இல்லை. சிட்டியில் இருக்கணும்கிற கட்டாயம் இல்லாததாலேயும், என்னோட பொண்ணு இங்கே திருவண்ணாமலையில் படிக்கிறதாலேயும் இங்கேயே இருந்துட்டேன்.’’

‘‘தமிழ் சினிமா உங்க பார்வையில் எப்படி இருக்கு?’’

‘‘தமிழ் சினிமா ரொம்பவே ஆரோக்கியமா இருக்கிறதா பார்க்கிறேன். ஏன்னா சோஷியல் மீடியாவினுடைய விழிப்பு உணர்வு கூடுனதில் இருந்து விமர்சனங்கள் பாசிட்டிவ்வா இருந்தாலும், நெகட்டிவ்வா இருந்தாலும் சினிமாவினர் ஏத்துக்குறாங்க. அந்த விமர்சனங்களைக் கவனத்தில் வெச்சுக்கிட்டு நிறைய வொர்க் பண்றாங்க. எல்லா ரீதியான படங்களும் வருகின்றன. தமிழ் சினிமா ரொம்பவே மாறிக்கிட்டு வருது!’’

-கருப்பு