
“எந்தப் படமாக இருந்தால் என்ன?''

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பகவதி பெருமாள் என்கிற ‘பக்ஸ்’, இயக்குநராக ஸ்கிரிப்டைச் செதுக்கிக்கொண்டே, ஒரு குறும்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்ததைப் பார்த்து, அவரைத் தொடர்புகொண்டேன்.
‘‘ஏகப்பட்ட வேலை பார்க்கிறீங்களே... யார் சார் நீங்க?’’
“நாகர்கோவில் பக்கத்துல திங்கள்சந்தைதான் எங்கள் சொந்த ஊர். 1996-ல் சென்னைக்கு வந்து எம்.ஐ.டி-யில் இன்ஜினீயரிங் படிச்சு முடிச்சுட்டு வேலைக்குப் போகப் பிடிக்காம சினிமா ஆர்வத்தால் கன்னட டைரக்டர் கார்த்திக் ரகுநாத்கிட்ட அசிஸ்டென்டாகச் சேர்ந்தேன். ‘காக்க காக்க’ படத்தில் கௌதம் மேனனுக்கு உதவி இயக்குநராகப் பணிபுரிஞ்சேன். அப்படியே நடிக்கவும் வந்தாச்சு. இப்போ இயக்குநராக என் முதல் படத்துக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.
“கூடப்பொறந்தவங்க எல்லோரும் படிச்சு ஆளுக்கொரு வேலையில் செட்டில் ஆகிட்டாங்க. நான் மட்டும் சினிமாவில் நுழைஞ்சதால் ஆரம்பத்தில் எதிர்ப்புகள் பலமா இருந்துச்சு. நாலு பசங்க இருக்கிற வீட்டில் மத்த எல்லோரும் வேலைக்குப் போகும்போது ஒருத்தன் மட்டும் இப்படி சினிமாவுக்குப் போறேன்னு சொன்னா வழக்கமாக எல்லா வீட்டுலேயும் நடக்கிறதுதானே? அதுக்குப் பிறகு கன்னட சினிமாவில் பணி புரிஞ்சதைப் பார்த்துட்டு ‘இவனுக்குள்ளேயும் ஏதோ இருந்திருக்கு பாரேன்...’னு என் மேல நம்பிக்கை வைக்க ஆரம்பிச்சுட்டாங்க.”
“ ‘ச்ச’ குறும்படத்தில் மூளை வளர்ச்சியற்றவராக நடித்தது பற்றி?”
“அந்தக் குறும்படத்தின் இயக்குனர் கார்த்திக் ஸ்ரீனிவாசன், 35 வயது உள்ள ஒருவர் மூணு, நாலு வயசுப்பையனிடம் இருக்கும் அளவுக்கு மூளை வளர்ச்சியோட இருக்கார்னு சொன்னதும் டவுசர், பனியன், ஒருவார தாடி கெட்-அப்பிலேயே 90 சதவிகித தோற்றத்தைக் கொண்டு வந்தாச்சு. மீதம் 10 சதவிகிதத்தை யதார்த்தத்தைச் சிதைக்காம, ஓவர் ஆக்டிங் பண்ணாம நடிச்சாலே போதும். அதைத் திறம்படப் பண்ணியிருக்கேன்னு நினைக்கிறேன்.”
“வழக்கமாக எல்லோரும் குறும்படத்திலிருந்து வெள்ளித்திரைக்குப் போவாங்க. நீங்க அப்படியே ‘உல்டா’வா?”
“எந்த மீடியமா இருந்தா என்ன? நல்ல கேரக்டர், நல்ல கதை கிடைச்சதுக்கு அப்புறம் நடிக்கலைனாதான் தப்பு. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படம் முடிஞ்சதுக்கு அப்புறம் குறும்படங்களில் நடிக்க நிறையப் பேர் கூப்பிட்டாலும் நல்ல கேரக்டர்ங்கிறதாலதான் இதைத் தேர்ந்தெடுத்தேன். ஒவ்வொரு படத்திலேயும் கதாபாத்திரம் நமக்கு சவாலானதா இருக்கணும். இந்த மாதிரியான கேரக்டர்கள் சினிமாவில் கூட கிடைக்குமானு தெரியாது.”

“நீங்கள் படம் எடுத்தால் அது எந்த மாதிரிப் படமாக இருக்கும்?”
“அட்வென்ச்சர், த்ரில்லர், ஆக்ஷன் கலந்த கதையாக இருக்கும். என் படம் எந்தக் கருத்தையாவது அழுத்தமாகச் சொல்லும் விதமாகவும் இருக்கும்.”
“நீங்க சினிமாவில் காமெடியன் எனப் பெயரெடுத்த பின்பு ரசிகர்கள் உங்களிடம் எதிர்ப்பார்ப்பது காமெடியாகத்தானே இருக்கும். அது படத்தில் இல்லைனா உங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதா?”
“என்னோட படத்தின் டீசர், ட்ரெய்லர் முதற்கொண்டு என்னோட படம் எப்படிப்பட்டதுனு தெளிவாச் சொல்லிடும். எனக்கு அடையாளமாக்கப்பட்ட இந்த ஹியூமர் இமேஜ் நான் ஒரு த்ரில்லர் மூவி பண்ணப்போறேன்னு சொல்லும்போது தயாரிப்பாளர் கிடைக்கிறது வேணும்னா பாதிக்கும்னு சொல்லலாம்.”
“இப்போ சொல்லுங்க.. நீங்க காமெடி பீஸா? இல்லை சீரியஸான ஆளா?”
“நண்பர்கள் வட்டத்தில் நான் கலகலப்பான ஆளுதான். ஆனா எப்போ பார்த்தாலும் கெக்கெபிக்கேன்னு சிரிச்சுட்டே இருக்கிற டைப் கிடையாது. இன்னொரு பக்கம் எதையாவது யோசிச்சுட்டே இருக்கிற சீரியஸ் ஆள். இப்படித்தான்னு என்னை எடை போட முடியாது.”
“உங்களின் ட்ரேட்மார்க்கான கண்ணை உருட்டி முழிக்கிறது பற்றி..?”
“படத்தில் என்னோட ஷாக்கிங் முழி அதிகமாகப் பேசப்பட்டாலும் உணர்ச்சிகளைக் காட்டும்போது தானாகவே வந்த எக்ஸ்பிரஷன் அது. சீன் போய்க்கிட்டு இருக்கும்போதே அனிச்சையாக அந்த முழிப்பு வந்தது. யதார்த்தமாக அமைஞ்ச அதை நடிப்புன்னே நான் சொல்ல மாட்டேன்.”
“சினிமாவைத் தாண்டி எதிலாவது ஆர்வம்...?”
“பயணம் செய்வது பிடிக்கும். இப்போ அதற்கு அதிகமாக நேரம் இல்லைனாலும் இன்னும் கொஞ்சநாளில் ஒரு நல்ல படத்தை முடிச்சுட்டு அப்புறம் நல்லா சுத்துற திட்டம் இருக்கு!”
- விக்கி