
அமரர் பஞ்சு அருணாசலம்

`நீங்கதான் இளையராஜாவை அறிமுகப்படுத்தினீங்க. ரஜினி, கமலுக்கு அதிகப் படங்கள் எழுதியிருக்கீங்க. நிறையப் படங்கள் தயாரிச்சும் இருக்கீங்க. அப்படி இருக்கும்போது, கமல் சார், ரஜினி சார்னு ஏன் `சார்' சேர்த்துக்கிறீங்க?’ - இது, ‘திரைத்தொண்டர்’ தொடரைப் படிக்கும் பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி.
‘நமக்கு எவ்வளவுதான் ஒருவர் நெருக்கமாக இருந்தாலும் அவரைப் பொது இடங்களில்

அழைக்கும்போதோ, அவரைப் பற்றி பத்திரிகைகளில் பேசும்போதோ மரியாதையாக அழைக்க வேண்டும்’ என்பது கவிஞர் எனக்குச் சொல்லித்தந்த பாடம். அதற்கு, கவிஞர் அடிக்கடி ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்வார்.
டி.ஆர்.ரகுநாத், அன்று பிரபல இயக்குநர். இவர், எம்.ஜி.ஆரை அவரின் அறிமுகத்தில் இருந்து பார்த்துக்கொண்டு வந்ததால், அவரை ‘டேய் ராமச்சந்திரா...’ என்றுதான் உரிமையுடன் அழைப்பார். இருவரும் சேர்ந்து பல படங்கள் வேலை பார்த்ததால் அந்த உரிமை. அப்போது ரகுநாத், எம்.ஜி.ஆரை வைத்து ‘மதுரை வீரன்’ படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில், ‘ராமச்சந்திரா ரெடியா... ஷாட் போகலாமா?’ என்று கத்திக் கேட்பாராம்.
அப்போது எம்.ஜி.ஆர், நடிகராக மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றிருந்தார். அவர் தி.மு.க கட்சியிலும் வளர்ந்துவிட்டார். அவருக்கு என பெரிய பெயர் வந்துவிட்டது. அப்போது அவர் எங்கு இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு, வெளியூர்களில் இருந்து எல்லாம் ரசிகர்கள், அவரைப் பார்க்க வாடகைக்கு பஸ்களை எடுத்துக்கொண்டு அடிக்கடி வருவார்களாம்.
ஒருமுறை அப்படி ‘மதுரை வீரன்’ படப்பிடிப்பு சமயத்தில் எம்.ஜி.ஆரைப் பார்க்க வெளியூர்களில் இருந்து அவரின் ரசிகர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் அந்தச் சமயத்தில், ரகுநாத் சிகரெட் பிடித்தபடி, ‘என்னடா ஷாட் ரெடியா? அந்த ராமச்சந்திரன் என்னடா பண்றான்? வரச் சொல்லுடா அவனை’ என சத்தம்போட்டிருக்கிறார். அதற்கு அவரின் உதவி இயக்குநர் ஒருவர், ‘இப்ப வந்துடுவார் சார். ரசிகர்கள்கிட்ட பேசிட்டிருக்கார்’ எனச் சொல்லியிருக்கிறார். ‘அதெல்லாம் ஷாட் முடிச்சுட்டுப் போய் பேசலாம்னு சொல்லு. முதல்ல அவனை வரச் சொல்லுடா’ என்று சத்தம்போட்டு சொல்லியிருக்கிறார்.
ரகுநாத் சத்தம்போடுவது, எம்.ஜி.ஆரைச் சந்திக்க வந்த ரசிகர்களுக்குக் கேட்டிருக்கிறது. உடனே ரசிகர்களில் ஒருவர், ‘யாருண்ணே, உங்களையே `ராமச்சந்திரன்'னு பேர் சொல்லிக் கூப்பிடுறது? அவன்கிட்ட சொல்லிவையுங்க. கை-கால உடைச்சிடுவோம்’ என்று எம்.ஜி.ஆரிடம் கோபமாகச் சொல்லியிருக்கிறார். உடனே எம்.ஜி.ஆர்., ‘உஷ்... அப்படி எல்லாம் பேசக் கூடாது. டைரக்டர். அவர் என் குரு’ என்று அந்த ரசிகரை ஆசுவாசப்படுத்தி அனுப்பிவைத்திருக்கிறார்.
அன்று ஷூட்டிங் முடிந்த பிறகு, இயக்குநர் ரகுநாத்தை, எம்.ஜி.ஆர் தனியாக அழைத்துபோய், ‘அண்ணே... நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. உங்க நன்மைக்காகத்தான் சொல்றேன். தெரிஞ்சோ, தெரியாமலோ மக்கள் என்னை பெரிய இடத்துல கொண்டுபோய் வெச்சுட்டாங்க. ரசிகர் மன்றங்களும் நிறைய ஆகிப்போச்சு. நீங்களும் நானும் தனியா இருக்கும்போது என்னை எப்படி வேணும்னாலும் கூப்பிடுங்க. ‘ராமச்சந்திரா’னு கூப்பிடுங்க, ‘டேய்’னு கூடக் கூப்பிடுங்க. எல்லா உரிமையும் உங்களுக்கு இருக்கு. ஆனா, என் ரசிகர்கள் இருக்கும்போது அப்படிக் கூப்பிடாதீங்கண்ணே. என் மரியாதைக்காக இதை நான் சொல்லலை. நாளைக்கு நீங்க எங்கேயாவது கார்ல தனியா போகும்போது கல்லை விட்டு எறிஞ்சாங்கன்னா நல்லாவா இருக்கும்? உங்க நன்மைக்காகத்தான் சொல்றேன்' என்று சொல்லியிருக்கிறார்.
‘ஆமாம்பா... நீ சொல்றது சரிதான். இதை நான் யோசிக்கவே இல்லை. இனி அப்படி நடக்காதுப்பா’ என ரகுநாத்தும் சொல்லியிருக்கிறார். ஆனால், மறுநாள் படப்பிடிப்பில் அவரை அறியாமலேயே ‘டேய் ராமச்சந்திரா’ என்று கூப்பிட்டுவிட்டார். ‘ஐயய்யோ... பழக்கதோஷத்துல வந்துடுச்சே!’ என நாக்கைக் கடித்துக்கொண்டாராம். தயாரிப்பாளர் லேனா செட்டியாரிடம் போய் விஷயத்தைச் சொல்லி, ‘அவன் சொல்றதுலயும் நியாயம் இருக்கு. அதனால நாளையில இருந்து இந்தப் படத்தை நான் டைரக்ட் பண்ணலை’ எனச் சொல்லியிருக்கிறார். லேனா செட்டியார் பதறிவிட்டார். ‘இதெல்லாம் பெரிய விஷயமா சாமி. பழக்கம்தானே, மாத்திக்கலாம் சாமி’ என்று சமாதானப்படுத்தியிருக்கிறார்.
‘இல்லை இல்லை... அவன் நல்லவன். ஆனா, சென்சிபிள் பெர்சன். என்னை அறியாமல் நான் சொல்லிட்டேன்னா, நான் ஏதோ வேணும்னே சொல்றதா நினைச்சு அவன் எரிச்சலாக வாய்ப்பு இருக்கு. அதனால இந்தப் படத்தை இனி நான் பண்ணலை’ என்று கூறி தன் முடிவில் உறுதியாக இருந்தார். பிறகு அவரே, தன் அசிஸ்டன்ட் யோகானந்தை வைத்து ‘மதுரை வீரன்’ படத்தை முடித்திருக்கிறார்.

படம் உதவி: ஞானம்
ஒருநாள், கவிஞர் இந்த அனுபவத்தைச் சொல்லி, ‘அனைவரையும் மரியாதையாகப் பேசி நடத்த வேண்டும்’ என்றார் என்னிடம். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், உலகத்தின் இயல்புக்குத் தகுந்தாற்போல் நாம் மாறிக்கொள்ள வேண்டும்.
நாம் அறிமுகப்படுத்தியிருக்கலாம், அவர்களுக்கு நிறையப் படங்கள் செய்திருக்கலாம், தனிப்பட்ட முறையில் பேசும்போது உரிமை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், 10 பேர் இருக்கும்போது அவர்களை மரியாதையாக அழைத்துப் பேச வேண்டும். ‘வாங்க’, ‘சார்’ என்ற வார்த்தைகள், அவர்களுடைய சமூக அந்தஸ்துக்காக அழைக்கும் வாய் வார்த்தைகள் மட்டும் கிடையாது; அவங்களுடைய கடும் உழைப்புக்காக, போட்டிகள் நிறைந்த இந்தச் சூழலில் தங்களின் இடத்தைத் தக்கவைக்க நடத்தும் அவர்களின் போராட்டுத்துக்காக நாம் தரும் மரியாதை. அதை நாம் அவர்களுக்குக் கொடுத்தே ஆகவேண்டும். ‘இல்லை... இல்லை... நான் அப்படித்தான் அழைப்பேன்’ என்றால் அதனால் அவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் கிடையாது. நமக்குத்தான் மரியாதைக் குறைவு.
நான் பரபரப்பாக எழுதிக்கொண்டிருந்த காலகட்டங்களில், தற்போது இருக்கும் தி.நகர் பாகீரதி அம்மாள் தெரு வீட்டுக்குக் குடிவந்துவிட்டேன். மூசா தெரு வாடகை வீட்டைவிட இந்த வீடு வசதியாகவே இருந்தது. ஆனாலும் நான் பாம்குரோவ் ஹோட்டல் அறையையும் தொடர்ந்தேன். அங்குதான் எழுதுவது, நண்பர்களைச் சந்திப்பது என்று இருப்பேன். மகேந்திரன் சார், கமல், ரஜினி, பாரதிராஜா... என்று பலரும் அங்கு வந்து போவார்கள். அப்படி ஒருநாள் நான், இளையராஜா, மகேந்திரன் சார் மூவரும் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தபோது எதேச்சையாக எனக்கோர் எண்ணம் தோன்றியது.
‘ஃபாரீன்ல நடந்த குற்றவழக்குகளை வெச்சு, அங்கே நிறையப் படங்கள் பண்ணிட்டிருக்காங்க. அப்படி நாமளும் இங்கு நடந்த ஒரு வழக்கை எடுத்துக்கிட்டு திரைக்கதை அமைக்கலாமே’ என்று தோன்றியது. அதற்கு ‘லெட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பொருத்தமா இருக்கும்’ என நினைத்தேன். இங்கு உள்ள சீனியர்களுக்கு அந்த வழக்கு பற்றி தெரிந்திருக்கும். அப்போது அந்த வழக்கு பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் இருவரும் அப்போது சினிமாவில் பரபரப்பாக இருந்த நேரம். அந்தச் சமயத்தில் அவர்களைப் பற்றி லெட்சுமிகாந்தன் பரபரப்பாக தன் பத்திரிகையில் எழுதியிருக்கிறார். தொடர்ந்து தங்களைப் பற்றி நெகட்டிவான செய்திகள் வருவதைப் பார்த்து, இவர்களுக்கு வருத்தம். ஒருகட்டத்தில், அந்த லெட்சுமிகாந்தன் கொலை செய்யப்படுகிறார். பாகவதர், என்.எஸ்.கே இருவரும் சேர்ந்துதான் லெட்சுமிகாந்தனைக் கொலை செய்துவிட்டதாக வழக்கு.
இந்த வழக்கை வைத்து படம் எடுக்கலாம் என்று முடிவானதும், ‘யாரை வெச்சு எடுக்கப்போறீங்க?’ என்று இளையராஜா கேட்டார். அப்போது நான் சிறிய யோசனைக்குப் பிறகு, ‘இதுல ஆர்ட்டிஸ்ட் நடிச்சா ஒரிஜினாலிட்டி வராது. நாம நாமளாவே நடிப்போம். டைரக்டர் மகேந்திரன், கதாசிரியர் பஞ்சு அருணாசலம், இசையமைப்பாளர் இளையராஜா. நம்ம மூணு பேரும் அவங்கவங்க துறைகள்ல முன்னுக்கு வந்துட்டிருக்கோம். இது பொறுக்காத ஒரு பத்திரிகையாளர், நம்மைப் பற்றி தொடர்ந்து தப்பா எழுதிட்டே இருக்கார். ‘என்ன இப்படி எழுதிட்டிருக்கான். நேர்ல பார்த்தேன்... அவனைச் சும்மா விட மாட்டோம்’ என்று நாம நம் கோபத்தை ஒரு பொது இடத்துல சொல்லியிருப்போம். இதற்கு இடையில் அந்தப் பத்திரிகையாளரை யாரோ வேறொருவர் கொலை செய்துவிட, அந்தப் பழி நம் மீது விழுது.
‘கதாசிரியர் பஞ்சு அருணாசலம், இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் மகேந்திரன் மூவரைப் பற்றியும் இவர் தொடர்ந்து விமர்சித்து எழுதிவந்ததால் இவர்கள் கோபப்பட்டு அவரைக் கொன்றுவிட்டனர்’ என்று நம் மூணு பேர் மீதும் கொலை வழக்கு பதிஞ்சு, கைது பண்ணி சிறையில அடைச்சுடுறாங்க. ‘மனசாட்சிப்படி நாம ஒண்ணும் பண்ணலை. விதிப்படி நடக்கட்டும்’னு ஜெயில்ல உட்கார்ந்துட்டு அடுத்த படம் பற்றி பேசுறோம். நீங்க அந்தப் படத்துக்கான பாடல்களுக்கு ட்யூன் போடுறீங்க. நான் பாட்டு எழுதுறேன். வெளியில நம்ம வழக்கு பரபரப்பா நடந்துட்டிருக்கு. ஆனால், நாம அந்த வழக்கு எதையும் மனசுல வெச்சுக்காம, ஜெயில்ல நம்ம வேலையைத் தொடர்ந்து பார்த்துட்டே இருக்கோம்.
இதற்கு இடையில நம் தரப்பு வக்கீலா கமல்கிட்டயும், அரசு தரப்பு வக்கீல் கேரக்டருக்கு ரஜினிகிட்டயும் கேட்போம். ஒருகட்டத்தில் அந்த வழக்கில் அவர்கள் இருவரும் சேர்ந்து உண்மையான குற்றவாளியை எப்படிக் கண்டுபிடிக்கிறாங்க என்பதை பரபரப்பான ஒரு க்ளைமாக்ஸுடன் முடிப்போம்’ என்று அந்தக் கதையைப் பற்றி விளக்கமாகச் சொன்னேன்.
மகேந்திரன், இளையராஜா இருவருக்குமே அந்தக் கதை பிடித்திருந்தது. அந்தப் படத்தில் மூவரும் நடிப்பதாக உறுதியானது. பிறகு, ‘லெட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பற்றி பல்வேறு இடங்களில் பேசி, ஒட்டுமொத்தத் தகவல்களையும் சேகரித்து திரைக்கதை எழுதிக்கொண்டிருந்தேன்.
இதற்கு இடையில் நாங்கள் மூவரும் இணைந்து பங்கேற்ற போட்டோஷூட் நடத்தினோம். அந்தப் படங்களுடன் நாளிதழ்களுக்கு முழுப்பக்க விளம்பரம் கொடுத்தோம். அந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு சினிமாவில் இருந்த பலருக்கு அதிர்ச்சி, ஆச்சர்யம். பல பேர் வாழ்த்தினார்கள். சிலர், ‘உங்களுக்கு ஏன்யா இந்த வேண்டாத வேலை? உங்க வேலையைப் பாருங்க. ராஜாவுக்கு 10 படங்கள் போயிட்டிருக்கு. உங்களுக்கு ரஜினி, கமல் படம் இருக்கு. மகேந்திரனும் பரபரப்பா இருக்கிறவர். ‘நடிகர்களா நம்மை நிரூபிச்சே ஆகணும்’னு நினைக்க ஆரம்பிப்பீங்க. அப்புறம் ஏற்கெனவே நீங்க பண்ணிட்டிருக்கிற வேலைகள்ல உங்க கவனம் போயிடும். அறிவிப்போட நிப்பாட்டிடுங்க’ என்று அறிவுரை கூறினார்கள்.
எங்களுக்குக் குழப்பம்... யோசிக்க ஆரம்பித்தோம். அந்தச் சமயத்தில் வந்துகொண்டிருந்த 95 சதவிகிதப் படங்களுக்கு இளையராஜாதான் இசை. அவர்கள் சொல்வதுபோல இந்த முயற்சி பலரையும் சிரமப்படுத்தும் எனத் தெரிந்தது. ‘நாமதான் ஆரம்பிச்சோம். நாமளே முடிப்போம்’ என்று நினைத்து, அந்தப் படத்தை அறிவிப்போடு நிறுத்திக்கொண்டோம்!
- தொண்டு தொடரும்...