மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 55

கலைடாஸ்கோப் - 55
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 55

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 55

இமை

``இந்தப் பழங்குடிகளில் இவன்தான் கடைசி மனிதன்'' என மெர்க் சுட்டிக்காட்டிய திசையில் மேஜை மீது பிணமாகக் கிடந்த அவனைப் பார்த்தாள் சனோஃபி.

“இவர்களிடம் இருந்து திருடப்பட்ட மூலிகைகளை வைத்துதான் இதுவரை நமது கம்பெனி எல்லா மருந்துகளையும் தயாரித்தது உனக்குத் தெரியும்தானே?” என்றார் மெர்க். தலையசைத்தாள் சனோஃபி.
``நான் சொல்வதை உன்னால் நம்ப முடியாது. `அகபந்தஸ் அகராடம்’ என்னும் தாவரவியல் பெயர்கொண்ட மூலிகையைக் கடைசியாக அறிந்துகொண்டேன். ஒருவகையில் சஞ்சீவினி” என்றார் மெர்க்.

 சனோஃபி, புரியாமல் பார்த்தாள்.

“உயிர்ப்பிக்கும் மருந்து. மிக ரகசியமாக வைத்திருந்தார்களாம். ஆனால், அதை எவ்வாறு புராசஸ் பண்ணுவது என எனக்குத் தெரியவில்லை. கட்டிவைத்து அடித்தும் கடைசி வரை இவன் சொல்லவே இல்லை. நேற்று இரவு கோபத்தில் சுட்டுக் கொன்றேவிட்டேன்.”

“நான் என்ன செய்ய வேண்டும்?” என்றாள் சனோஃபி.

``இந்த ரகசியக் குறிப்புகளை நீதான் படித்துச் சொல்ல வேண்டும். அவர்களின் மொழி உனக்குத் தெரியும் அல்லவா?” என்ற மார்க் பதப்படுத்தப்பட்ட இலைகளால் செய்த புத்தகத்தை சனோஃபியின் முன்னால் வைத்தார். தாவர மை காய்ந்து, எழுத்துக்கள் அழிந்து கலைந்து இருந்தன.

``இதோ இந்தப் பக்கம்தான்” என்று அந்தப் புத்தகத்தின் ஒரு பக்கத்தை விரித்துக் காட்டினார்.

“ஜனனமும் மரணமும் படைப்புச் செயலில் தவிர்க்க முடியாதவை என்பது மூத்தோர் சொல்.

காரணகாரியம் இன்றி இந்த மூலிகையைப் பயன்படுத்தக் கூடாது. ஆனால், நமது சந்ததியை நீட்டித்துக்கொள்ள நம் இனக்குழுவை அழிவில் இருந்து காக்க, கடைசி ஆயுதமாக இதைப் பயன்படுத்தலாம்” என்று திக்கித் திணறி வாசித்தாள் சனோஃபி.

“மேலே படி!” என்றார் மெர்க்.

`நகநுனி அளவுக்கு இந்த மூலிகையை இமைக்கு அடியில் பதுக்கிக்கொண்டால், மரணித்த மறுநாள் நூறு மடங்கு ஆற்றலுடன் உயிர் மீளும்' என்று படித்தாள் சனோஃபி. மெர்க் அவசரமாக தலையைத் திருப்பி அவன் பிணத்தைப் பார்த்தார்.

இமைகள் லேசாகத் துடிக்கத் தொடங்கியிருந்தன.

கலைடாஸ்கோப் - 55

`தூள்' பறக்கும் படம்

நம் ஊரில் மேம்பாலம், மெட்ரோ என எப்போதும் சாலைகள் தூசியும் தூசி சார்ந்த பகுதியாகவும்

கலைடாஸ்கோப் - 55

இருப்பதால் கார் கண்ணாடிகளில் ஓவர் மேக்கப் போட்டதுபோல தூசி படிந்து இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் நொந்தபடி மானசீகமாக அரசையும், பெளதீகமாக காரையும் கழுவிக் கழுவி ஊற்றுவார்கள். ஆனால் ஸ்காட் வாட் (scott wade), தூசி படர்ந்த கார் கண்ணாடிகளைக் கண்டால் உற்சாகமாகிறார். அதற்கு, காரணம் இருக்கிறது.

கார் கண்ணாடிகளில் படிந்திருக்கும் தூசியை, கலையாக மாற்றும் வித்தைக்கார ஓவியர்களில் ஸ்காட் உலகின் நம்பர் ஒன் கலைஞர். டெக்ஸாஸைச் சேர்ந்தவர் ஸ்காட். டெக்ஸாஸ் என்றதும் கவ்பாய் படமோ, காமிக்ஸோ உங்களுக்கு ஞாபகம் வந்து புழுதி பறக்கும் மண் சாலைகள் விஷுவலாக விரியலாம். இருபது வருடங்களுக்கு முன்னர் இப்படிப் புழுதி படர்ந்து நின்றிருந்த தன் கார் கண்ணாடியில் சும்மா கிறுக்க ஆரம்பித்த ஸ்காட், இன்று அதை ஒரு தனி கலையாகவே வளர்த்தெடுத்திருக்கிறார். இப்படி கார் கண்ணாடியில் `தூள்' பறக்கும் படங்கள் வரைவதற்காகவே உலகம் சுற்றும் ஓவியனாக மாறிவிட்டார் ஸ்காட்.

கலைடாஸ்கோப் - 55

விளம்பர காம்பைன்கள் முதல் என்டர்டெய்ன்ட்மென்ட் நிகழ்ச்சிகள் வரை இன்று வெவ்வேறு நாடுகளுக்குப் பறந்து, இதையே முழுநேரத் தொழில்போல செய்துவரும் ஸ்காட், இந்தத் தூசி ஓவியங்களை வரைய சில மணி நேரங்களே எடுத்துக்கொள்கிறார். காற்றில் கலைந்துவிடும் என்பதால், இந்த ஓவியங்களின் ஆயுசு கம்மி. ஆனால், இதன்மூலம் ஸ்காட்டுக்குக் கிடைத்த ரசிகர்கள் அதிகம். தூள் பறக்கும் படம் என்றால் உண்மையில் இதுதான்!

கலைடாஸ்கோப் - 55

கைக்குட்டை

தாத்தாக்கள் காலத்தில், கைக்குட்டை என்கிற கர்ச்சீப் இல்லை. தோளில் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். சட்டை-பேன்ட் போட ஆரம்பித்த அப்பாக்கள் காலத்தில்தான் கைக்குட்டைகள் நம் ஊரில் புழங்க ஆரம்பித்திருக்கும். பிற்காலத்தில் கைக்குட்டைகள் காதல் கடிதங்கள்போலவோ, அன்புப் பரிசாகவோ பாவிக்கப்பட்டதை சினிமாக்கள் வழி அறிகிறோம்.

கைக்குட்டைகளின் வரலாற்றைக் கொஞ்சம் விரித்து நோக்கலாம் எனத் தேடினேன். கர்ச்சீப் என்ற வார்த்தையையே couvrir + chef எனப் பிரித்து மேய்ந்தால், பிரெஞ்சு மொழியில் `தலையை மறைக்கப் பயன்படுவது' என எடிமோலஜி சொல்கிறார்கள். நம் ஊரிலும் பெரிய சைஸ் கர்ச்சீப்களைத் தலையில் கட்டிக்கொள்ளும் பழக்கம் கல்லூரிப் பசங்க முதல் ஹெல்மெட் போடும் அங்கிள்கள் வரைக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். ஆயிரம் வருடம் முந்தைய ஷோ பேரரசு காலத்திலேயே இப்படி தலையில் கர்ச்சீப் கட்டும் பழக்கம் இருந்ததைச் சொல்லி, இதிலும் சீனாவே முந்திக்கொள்கிறது. இதற்கு ஆதாரமாக அந்தக்கால சீன ஓவியங்களைக் காட்டுகிறார்கள்.

கலைடாஸ்கோப் - 55

ரோமில் குதிரைவண்டிப் பந்தயம் ஆரம்பிக்கும் முன்னர் கைக்குட்டைகளைக் காற்றில் ஆட்டி சிக்னல் காட்டியதாக ஒரு குறிப்பு சொல்கிறது. 15-ம் நூற்றாண்டில் சீனாவில் இருந்து திரும்பிய ஐரோப்பிய வியாபாரிகள் அழகிய கைக்குட்டைகளை இறக்குமதி செய்திருக்கிறார்கள். அதை ஒரு ஃபேஷன் சிம்பல்போல பிடித்துக்கொண்ட ஐரோப்பியர்கள், இந்தக் கைக்குட்டைப் பழக்கத்தை உலகெங்கும் பிற்காலத்தில் பரப்பிவிட்டார்கள் என்பது வரலாறு. அது நம் ஊர் மைனர்கள் வரை பரவி கைக்குட்டைகளை ஹெவியாக பவுடர் அடித்து கழுத்துக்கும் காலருக்கும் நடுவில் புதைத்து வைத்துக்கொண்டு திரிந்ததை எல்லாம் வரலாற்றில் சேர்ப்பார்களா தெரியவில்லை.

கலைடாஸ்கோப் - 55

கோழிக்கூடைகள்

சிறுவயதில் கிராமங்களில் கண்ணாமூச்சி விளையாட்டுக்களில் ஒளிந்துகொள்ள வாகான இடம் கிடைக்கவில்லை என்றால், சில வாண்டுகள் கோழிக்கூடைகளில் நுழைந்துகொள்வார்கள். அப்படி ஒளியும் பட்சிகள் கண்ணாமூச்சி விளையாட்டில் ஜெயித்தாலும் கோழிப்பேன்களிடம் தோற்றுப்போகவேண்டி இருக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு அரிப்பு கேரண்டி. ஆனால், விளையாட்டு சுவாரஸ்யம் அதை எல்லாம் பொருட்படுத்தாது. இன்று ஊரில் கண்ணாமூச்சி விளையாடினாலும் ஒளிந்துகொள்ள கோழிக்கூடைகள் இல்லை. காரணம், கோழிகளே இல்லை!

அப்போது எல்லாம் பாட்டிகள் ஆளுக்கு, குறைந்தது இரண்டு கோழிகளாவது வளர்ப்பார்கள். வீட்டுக்கு வீடு காம்பவுண்ட் சுவர்கள் வராத காலம். வேண்டிய இடத்தில் மேய்ந்துவிட்டு வீடு திரும்பும் கோழிகளை அடைக்க, பாட்டிகள் இந்தக் கூடைகள் வைத்திருப்பார்கள். வழக்கமான கூடைகளைவிட உயரமாகவும் அடர்த்தி இல்லாமலும் பின்னப்பட்டிருக்கும் இந்தக் கூடைகள், குழந்தைகள் ஒளிந்துகொள்ள தோதாகத்தானே இருக்கும்!

காலையில் கோழிக்கூடைகளைத் திறந்து பார்த்தால் புதையல்போல இளஞ்சூட்டுடன் முட்டைகள் இருக்கும். பாட்டிகள் முட்டைகளை அந்தி நேரச் சந்தைகளில் விற்று, தங்களுக்குத் தேவையான சில்லறைக் காசைத் தேத்திக்கொள்வார்கள். சில்லறைகளே அன்றாடத்துக்குப் போதுமானதாக இருந்தது.

இப்போது எல்லாம் எங்கள் ஊரில்கூட வீடுகளில் கோழி வளர்ப்பது குறைந்துவிட்டது. பிராய்லர் முட்டைகளை வாங்கி ஆம்லெட் போடுகிறார்கள். பாட்டிகளுக்கு, கோழிக்கூடைகள் என்பது வீட்டையே பார்த்துக்கொள்ளும் அளவுக்குத் தற்சார்பு பொருளாதாரம். கோழிக்கூடை அளவுக்கு வீடு கட்டவே வங்கிகளை நம்பி இருக்கிறது இன்றைய பேரன்களின் பொருளாதாரம்.

கலைடாஸ்கோப் - 55

நாடோடி

எனது முன்னாள் அலுவலகத்தில் பயணம் பற்றி அடிக்கடி பேசும் ஒரு நண்பரிடம், `பிறகு ஏன் இங்கே கேபினுக்குள் சுழன்றுகொண்டிருக்கிறீர்கள்?' எனக் கேட்டால், `பயணம் செல்வதற்கான பொருளாதாரத்தை வளர்க்கிறேன்' என்பார். அவரைப் பொறுத்தவரை பயணம் என்பது டூரிஸ்ட் கம்பெனிகளின் பேக்கேஜ் டிசைனையும், ரிசார்ட்டுகளின் டிஸ்கவுன்ட் ஆஃபர்களையும் நம்பி இருப்பது. ஆனால் பொருளாதார வளர்ச்சி, மனிதர்களின் நாடோடித் தன்மையை மறைமுகமாகக் குறைத்துவருகிறது எனத் தோன்றுகிறது.

பயணம், மனிதனின் அடிப்படைக் குணங்களில் ஒன்றான நாடோடி மனப்பான்மையுடன் பிணைந்தது. உலகம் முழுக்க நாடோடித்தன்மையுடன் அலையும் மனிதர்கள் இருந்தார்கள். இத்தாலிய இயக்குநர் ஃபெலினியின் `La Strada' படம் பார்த்திருக்கிறீர்களா? `லா ஸ்ட்ரடா' என்றால் `சாலை' என்று அர்த்தம். ஊர் ஊராகப் போய் சர்க்கஸ் காட்டும் ஒரு நாடோடிக் குழுதான் பின்னணி. நம் ஊரிலும் இப்படிப் பல்வேறு கூத்துகள், வித்தைகள் காட்டும் குழுக்கள், வாழ்க்கையின் பெரும்பகுதியை பயணத்திலேயே கழிப்பார்கள். அவர்களின் வாழ்க்கைமுறையே அப்படித்தான் எனத் தோன்றுகிறது.
பொருளாதார வளர்ச்சி, தியேட்டர், டி.வி போன்ற வசதிகளை வீட்டுக்குள் கொண்டுவந்ததால், இந்த வகையான கலைகள், வித்தைகள், கூத்துகள் மெள்ள அழிந்துவிட்டன. விளைவு, நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மனங்களையும் நிரந்தர வேலைக்குப் போகச் சொல்லி மாத சம்பளம், வாடகை, சேமிப்பு, சொத்து என லெளகீகத்தின் கயிற்றை அவர்கள் காலிலும் கட்டுகிறோம்.

ஒரு குடை கிழிந்துபோனாலோ, பக்கெட் கீறல்விட்டாலோ, பாத்திரத்தில் ஓட்டை விழுந்தாலோ இன்று தூக்கிப்போட்டுவிட்டு உடனே புதிதாக ஒன்றை வாங்கிக்கொள்கிறோம். குடை கட்டுவது முதல் பக்கெட்டில் பிளாஸ்டிக் துண்டுகளை உருக்கி ஒட்டுபோடுவது வரை பல வேலைகளால் வரும் சிறு வருமானம் நாடோடிகளாகத் திரிந்தவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. இந்த வேலைகள் இல்லாமல் போவதால் அழிந்துபோவது அந்த மனிதர்கள் மட்டும் அல்ல, ஊர் ஊராக அலையலாம் என்கிற நாடோடி மனப்பான்மையும்தான். நாடோடி மனப்பான்மை அழிந்துபோவது என்பது, மனிதர்கள் மீதான பரஸ்பர அன்பும் நம்பிக்கையும் அழிந்துபோவதுதான்.