மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 56

கலைடாஸ்கோப் - 56
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 56

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 56

கம்பிக்கலை

`கம்பி நீட்டிட்டான்' என ஊரில் சொல்வார்கள். இணையத் தமிழ் அகராதியில்கூட `யாருக்கும் தெரியாமல் நழுவி ஓடுதல்' என்று அர்த்தம் இருக்கும். ஆனால், இந்தக் கம்பிச் சிற்பங்களைப் (Wire Sculpture) பார்த்தபோது கம்பி நீட்டுதல் மட்டும் அல்ல, வளைத்தல், நெளித்தல் எல்லாவற்றுக்கும் ஓர் அர்த்தம் இருக்கும் எனத் தோன்றுகிறது. அது கால்டரின் கலைக்கான அர்த்தம்.

கலைடாஸ்கோப் - 56

அலெக்ஸாண்டர் கால்டர் (Alexander calder), 20-ம் நூற்றாண்டின் அமெரிக்கக் கலைஞர்; `கைனெடிக்

கலைடாஸ்கோப் - 56

ஆர்ட்' என்னும் கலைவடிவத்தின் தந்தை. கைனெடிக் ஆர்ட் என்றால், காற்று போன்ற இயற்கையான விஷயங்களைப் பயன்படுத்தி, கலைப் படைப்புகளில் ஓர் அசையும் தன்மையைக் கொண்டுவருவது. அவருடைய `ஆர்ட் ஆஃப் பெடல்ஸ்’ சிற்ப வரிசைகள் அதில் பிரபலம். ஆனால், கால்டரின் இன்னொரு கலைவடிவமான ஒயர் சிற்பங்களைப் பற்றி மட்டும் இங்கே பார்ப்போம்.

1920-களில் செர்பியன் பொம்மை வியாபாரி ஒருவருக்காக மெக்கானிக்கல் பொம்மைகள் செய்துகொண்டிருந்தவருக்கு, இந்தக் கம்பிச் சிற்பங்கள் செய்ய ஆர்வம் வந்தது. கோட்டோவியங்களை, வழக்கமாக காகிதத்தில் வரைவார்கள். அது இரண்டு பரிமாணங்கள்கொண்டது. `இந்தக் கோட்டோவியங்களைப்போல, கம்பியில் செய்தால் என்ன?' என்று கால்டர் யோசித்ததின் விளைவு, இந்த `முப்பரிமாணக் கோட்டோவியங்கள்’ என்று விமர்சகர்களால் சொல்லப்பட்ட கம்பிச் சிற்பங்கள்.

கால்டருக்குப் பிறகு நிறையக் கலைஞர்கள் இதுபோல சிற்பங்களைச் செய்தாலும், அவர்தான் இந்த வகை கலையில் முன்னோடி. கால்டரை, ‘கம்பியில் கலைவண்ணம் கண்டான்!’ எனச் சொல்வேன்.

கலைடாஸ்கோப் - 56

காண்

``இது அறிவியல்பூர்வமாக இல்லை. அந்த ஆளுக்கு சீசோப்ரெணியா இருக்கலாம்” என்றான் சிக்மண்ட். உதகையின் குளிரில், அவன் வார்த்தைகள் வெடவெடத்தன.

“இல்லை, பூசாரி மீது சாமி வந்து இறங்கும். அது நிஜம்” என்றான் விவேகானந்த்.

“நீ ஒரு அறிவியல் மாணவன் என்பதை எப்படி மறந்தாய்?” என்றான் சிக்மண்ட்.

“அறிவியலில் எல்லாவற்றுக்கும் பதில் இல்லை என்பதை நீ எப்படி மறந்தாய்?” என்றான் விவேகானந்த்.

“எப்படியோ... மனிதக் கண்களுக்குத் தெரியாதது, கருவியின் கண்களுக்குத் தெரியும் என்பதை நீ ஒப்புக்கொள்கிறாய்தானே! உதாரணம், மைக்ரோஸ்கோப். இல்லை என்று சொல்வாயா என் இந்திய நண்பனே?” என்றான் சிக்மண்ட்.

விவேகானந்த் சிரித்தான்.

``இந்த காஸ்மிக்ரே கேமரா, அப்படி அசாத்தியமான ஏதாவது ஒன்று நடந்தால் அதைப் படம்பிடிக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. உங்க பூசாரி மீது சாமியோ எதுவோ வந்தால், இது பதிவுசெய்யும். இன்று சடங்கில் இதைப் பயன்படுத்துகிறேன். எதுவும் இருக்காது பார்” என்று கேமராவைக் காட்டினான்.

சிக்மண்ட், இரவு பூசாரி சாமியாடும்போது சுற்றிச் சுற்றி வந்து வீடியோ எடுத்தான். அறைக்கு வந்ததும் விவேகானந்தை அழைத்து கேமராவைக் காட்டி வீடியோவை ஓடவிட்டான். சடங்குகளை, பூசாரி சாமி வந்து ஆடியதை எல்லாம் ஓட்டினான்.

“எதுவும் தெரியவில்லை பார்த்தாயா! நான் முன்னர் சொன்னதுதான் இது சீசோப்ரெணியா” எனச் சிரித்தான்.

“என்ன அர்த்தத்தில் சொல்கிறாய்?” என்றான் விவேகானந்த்.

“இல்லாத ஒன்று இருப்பதுபோல தோன்றுவது. இல்லாத ஒன்று கண்ணுக்குத் தெரிவது. இதெல்லாம்தான்.”

“ரிவர்ஸிலும் யோசிக்கலாம் அல்லவா! இருக்கிற ஒன்று இல்லாததுபோலவும் தெரிய வாய்ப்பு இருக்கிறது” என்றான் விவேகானந்த்.

கலைடாஸ்கோப் - 56

சிக்மண்ட் ஒரு நொடி அதிர்ந்து, மறுபடியும் வீடியோவைப் பார்த்தான்.

கலைடாஸ்கோப் - 56

தொப்பி

விளையாட்டு வீரர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை தொப்பி அணிவது ஒரு ஃபேஷனாக இன்றும் தொடர்கிறது. மனிதர்கள் அணிவதில், தொப்பிகளைப்போல விதவிதமான வடிவங்களில் இருக்கும் வேறு ஒரு பொருள் இருக்கிறதா எனத் தெரியவில்லை. வரலாறு முழுக்க நாட்டுக்கு, இனத்துக்கு, வர்க்கத்துக்கு என விதவிதமான தொப்பிகள் இருந்திருக்கின்றன. தேடிப் படித்தால் `சந்திரமுகி' ரஜினி போல `தொப்பி... தொப்பி..!' எனச் சொல்லத் தோன்றுகிறது.

25,000 வருட பழைமையான சிலையாகக் கருதப்படும் பிராஸம்போய் வீனஸ் (Venus of Brassempouy) தந்த சிலைதான் தலையில் தொப்பி அணிந்தபடி கிடைத்திருக்கும் பழைமையான தொல்லியல் ஆதாரம். `அது தொப்பியா... தலைமுடியா?' என ஆய்வாளர்கள் தலையைப் பிய்த்துக்கொள்வது தனிக் கதை.

ஆஸ்திரியாவுக்கும் இத்தாலிக்கும் நடுவில் இருக்கும் மலையில் கண்டெடுக்கப்பட்ட வெண்கலக் காலத்தைச் சேர்ந்த மனிதனின் உறைநிலையில் இருந்த உடல், கி.மு 3,300-ஐ சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதுகிறார்கள். அவன் தலையில், கரடித் தோலால் செய்யப்பட்ட ஒரு தொப்பி இருந்தது. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தைச் சேர்ந்த எகிப்திய தேபஸ் கல்லறை ஓவியத்திலும் தொப்பி அணிந்த மனிதனின் உருவம் உள்ளது.

பனிப்பிரதேச எஸ்கிமோக்கள் விலங்குத் தோல் தொப்பிகள் அணிந்தார்கள் என்றால், காடுகளில் வாழ்ந்த அமெரிக்கக் குடிகள் பறவை இறகுகளால் செய்த தொப்பிகளை அணிந்தார்கள். நம் ஊரில் பருத்தித் துணிகளால் செய்த தலைப்பாகை முதல், வெயிலுக்கு இதமாக ஆவாரை இலைகளால் செய்த தலைப்பாகை வரை அணிந்திருந்ததாக வரலாற்றுக்குறிப்புகள் இருக்கின்றன. இப்படி சூழலுக்கும் வாழ்வியலுக்கும் ஏற்ப தொப்பிகள் அணியும் பழக்கம், உலகம் முழுக்க இருக்கிறது.

தலைவர்கள் முதல் ராணுவ வீரர்கள் வரை தொப்பிகள் அதிகாரத்தின் அடையாளமாகவும் இருந்ததை வரலாற்றில் பார்க்கிறோம். அதிகாரத்துக்கு எதிரான அடையாளமாகவும் அது இருந்திருக்கிறது. சாப்ளினின், சே குவேராவின், மைக்கேல் ஜாக்சனின் தொப்பிகளை மறக்க முடியுமா?

கலைடாஸ்கோப் - 56

சிண்டோகு

குடையை விரித்து அதில் கொட்டும் மழைநீரை, கைகளில் வைத்திருக்கும் கேன்களில் `மழைநீர் சேகரிப்பு' செய்வது, சாப்பிடும்போதே நூடுல்ஸ் ஆறிப்போக முழங்கையில் குட்டியாக ஒரு ஃபேனைக் கட்டுவது, தவழும் குழந்தையின் உடையில் வீடு துடைக்கும் நூல் துடைப்பத்தை இணைத்தால் குழந்தையும் தவழ்ந்த மாதிரி ஆச்சு, ஃபுளோரும் துடைத்த மாதிரி ஆச்சு... என்பது போன்ற விசித்திரமான புராடெக்ட்டுகளை இணையத்தில் பார்த்திருப்பீர்கள்.

இது ஒரு வகை அபத்தமான கலைவடிவம். ஜப்பானில் இதற்கு `சிண்டோகு' எனப் பெயர். சும்மா ஜாலிக்காக இந்த வகையான கண்டுபிடிப்புகளை உருவாக்கி, சிண்டோகுவில் சேர்த்துவிடுகிறார்கள். ஜப்பானில் சிண்டோகு என்றால் `விசித்திர உபகரணங்கள்' என்று விளக்கம் தருகிறார், இந்த வார்த்தையை உருவாக்கிய கெஞ்சி கவகாமி (Kenji Kawakami). சிண்டோகுவுக்கு என உலகம் முழுக்க சொசைட்டிகூட இருக்கிறது.

`அமெரிக்க கார்ட்டூனிஸ்ட்டும் நகைச்சுவைக் கண்டுபிடிப்புகளைச் செய்தவருமான ரூப் கோல்ட்பெர்க்தான் (Rube Goldberg) இந்தச் சிண்டோகுவுக்கான உந்துதல்' என்கிறார்கள். `ரூப் கோல்ட்பெர்க்கிஸம்' எனச் சொல்வார்கள். தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது எனச் சொல்வோம் அல்லவா, அந்த மாதிரி ஒரு சின்ன விஷயத்துக்குக்கூட சிக்கலான வழிமுறைகளைக் கையாள்வதுதான் ரூப் கோல்ட்பெர்க்கிஸம். சாப்ளினின் `மாடர்ன் டைம்ஸ்'-ல் தொழிலாளர்கள் சாப்பிட ஒரு மெஷின் கண்டுபிடிப்பார்களே ஞாபகம் இருக்கிறதா? நவீனம் என்னும் பெயரில், இப்படித்தான் நம்மிடம் பல கேட்ஜெட்களைத் தள்ளிவிட்டு நம்மையும் சாப்ளின் ஆக்குகிறார்கள்.

கலைடாஸ்கோப் - 56

டென்ட் கொட்டாய்

`விநாயகனே... வினை தீர்ப்பவனே...' என சீர்காழி கோவிந்தராஜன் உச்சஸ்தாயியில் பாடுவதைக் கேட்டால், எனக்கு எங்கள் ஊர் டென்ட் கொட்டாய்தான் ஞாபகம் வரும். இந்தப் பாடலுடன்தான் டென்ட் கொட்டாய்களின் அன்றைய மாலை ஆரம்பிக்கும். வழக்கமாக, டென்ட் கொட்டாய்களில் மாலை மற்றும் இரவுக் காட்சிகள்தான் இருக்கும். அதுவும் டவுனில் ரிலீஸாகும் படங்கள், சில மாதங்களுக்குப் பிறகுதான் இந்த டென்ட் கொட்டாய்களில் அடுத்த ரவுண்டு வரும்.

கட்டில் போட்டு ஹாயாகப் படுத்துக்கொண்டே படம் பார்க்கும் மாடர்ன் தியேட்டர்கள் எல்லாம் இன்று வந்துவிட்டன. ஆனால், எங்கள் ஊரில் `கிருஷ்ணப்பிரியா’ என்ற டூரிங் டாக்கீஸ் ஒன்று இருந்தது. தரை டிக்கெட் எல்லாம் உண்டு. மண்ணைக் குவித்துத் தலைக்கு வைத்துப் படுத்துக்கொண்டே படம் பார்க்கலாம். அண்ணாந்து பார்த்தால், இன்றைய ஐமேக்ஸ் எல்லாம் தோற்றுபோகிற அளவுக்கு, தலைக்கு மேல் ஹீரோக்கள் பறப்பார்கள். செகண்ட் ஷோ பார்க்கப்போனவர்களை, காலையில் தியேட்டர் பெருக்குபவர்கள் எழுப்பிவிட்ட கதை எல்லாம் நடந்திருக்கிறது.

இடைவேளைக்கு முறுக்கு, வறுத்தக்கடலை எல்லாம் கொட்டாய்க்கு உள்ளேயே கொண்டுவருவார்கள். வழக்கமாக, நாகர்கோவில் போன்ற நகர தியேட்டர்களில் படம் ஓட ஆரம்பித்தால், இடைவேளை ஒரு தடவைதான் வரும். ஆனால், எங்கள் ஊர் கொட்டாயில் மூன்று தடவை வருகிறதே என்று சிறுவயதில் வியப்பாக இருக்கும். பிற்காலத்தில்தான் தெரிந்தது ஒரே ஒரு பழைய புரொஜெக்டரை வைத்து ரீல் மாற்ற எடுத்துக்கொள்ளும் இடைவெளிகளையும் இடைவேளைபோல கொண்டாடியிருக்கிறோம் என்பது. பொழுதுபோக்க போக்கிடம் இல்லாததால், மாலை ஆரம்பித்தால் குடும்பமும் குட்டியுமாக கொட்டாய்க்குத்தான் படையெடுப்பார்கள். இன்று `தியேட்டருக்குப் போய் படம் பாருங்கள்' எனக் கெஞ்சவேண்டியதாகிவிட்டது.