
அமரர் பஞ்சு அருணாசலம்
`பஞ்சுவின் படங்களில் ‘எங்கேயோ கேட்டகுரல்’ முக்கியமான படம்' - அந்தப் படம் வந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகும் இப்படிப் பாராட்டும்போது சந்தோஷமாக உணர்வேன். அந்தப் படத்துக்கு அப்போதே நிறைய விருதுகள் கிடைத்தன. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அன்று தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது, அந்த வருடத்தின் சிறந்த படம், சிறந்த கதை-வசனகர்த்தா, சிறந்த தயாரிப்பு உள்ளிட்ட விருதுகளுக்கு எங்களைத் தேர்வுசெய்தார். ஆனால், அந்த விருது கொடுக்கும் சமயத்தில் நான் ‘ஜப்பானில் கல்யாணராமன்’ படப்பிடிப்புக்காக ஜப்பான் சென்றிருந்தேன். அந்த விருதை என் சார்பில் என் மகன் சுப்புதான் வாங்கிவந்தான். அந்த நாட்களை நினைக்கும்போது, ‘நாமும் ஏதோ செய்திருக்கிறோம்’ என்ற மகிழ்வைத் தருகின்றன.

இதற்கு இடையில் ஏவி.எம் சரவணன் சார் ‘சுட்டாலுன்னாரு ஜாக்ரதா’ என்ற ஒரு தெலுங்குப் படத்தைப் பார்த்து, அது பிடித்துப்போய் அதன் ரைட்ஸ் வாங்கிவந்தார். அது கிருஷ்ணா தயாரித்து, நடித்த படம். தெலுங்கில் அந்தப் படத்தில் நடித்த ஸ்ரீதேவியையே தமிழுக்கும் புக்செய்தனர். ‘பஞ்சு சார், ரஜினி சாரை வைத்து பண்றதுக்காக ஒரு படம் வாங்கியிருக்கேன். நீங்க அதைப் பார்த்துட்டு தமிழுக்குத் தகுந்த மாதிரி எழுதிக்கொடுத்துடுங்க’ என்றார் சரவணன் சார். அந்தப் படத்தைப் பார்த்தேன். எனக்கும் பிடித்திருந்தது. அந்தக் கதைக்கு, தமிழுக்குத் தகுந்தவாறு ட்ரீட்மென்ட் செய்தேன். அந்தப் படம்தான் ‘போக்கிரி ராஜா’.
திரைக்கதையின் போக்கு, கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை வைத்து ஒவ்வொரு கேரக்டரிலும் யாரை நடிக்கவைக்கலாம் என்பதையும் நானே சொல்வேன். அப்படி ‘இந்த வில்லன் கேரக்டருக்கு யாரை நடிக்கவைக்கலாம்’ என யோசனை. ‘ஹீரோவா நடிச்சுட்டு இருந்த ஜெய்சங்கர் சாரை ‘முரட்டுக்காளை’யில் வில்லனாக்கினோம். அது புதுமையா பேசப்பட்டது; மக்களும் ரசிச்சாங்க. பிறகு, அவர் பல படங்களில் வில்லனா நடிக்க ஆரம்பித்தார். அந்த மாதிரி இதில் யாரை கமிட் பண்ணலாம்...’ என யோசித்தபோது, நடிகர் முத்துராமன் சாரின் நினைவு வந்தது.
அது, முத்துராமன் சாருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் குறைந்திருந்த நேரம். குணச்சித்திர வேடங்களில் நடிக்கலாம். ஆனால், ஏனோ தெரியவில்லை சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். ‘அந்தச் சிறந்த நடிகரை மீண்டும் சினிமாவுக்குத் திருப்பிக் கொடுக்கணும்’ என்று எனக்கு ஆசை. விஷயத்தை சரவணன் சாரிடம் சொன்னேன். ‘அவர் ஒப்புக்கிட்டா, எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நீங்களே பேசுங்களேன்’ என்றார். நானே போய் முத்துராமன் சாரிடம் பேசினேன். அவர் அமைதியாக, அழகாக, அளவாகப் பேசக்கூடியவர்.

‘பஞ்சு, நீங்க வந்து என்னைக் கூப்பிட்டதுக்கு சந்தோஷம். ஆனா, சினிமா, நாடகம்னு நல்லவிதமா நிறையப் பண்ணிட்டோம். நிறையப் படங்கள்ல ஹீரோவா நடிச்சு, வசதி வாய்ப்போடு செட்டிலாகி ரெஸ்ட் எடுத்துட்டிருக்கேன். இப்ப கடைசியில் வில்லனா நடிச்சு, ஹீரோகிட்ட அடிவாங்கிட்டு... எதுக்கு?’ - அவர் யோசித்தார். ‘அப்படி நினைக்காதீங்க சார். அது இன்ட்ரஸ்ட்டிங் கேரக்டர். நல்ல படமும்கூட. படம் ஓகோனு ஓடுச்சுன்னா இன்னும் பத்து கம்பெனிகள்ல இருந்து உங்களைக் கூப்பிடுவாங்க. நீங்களும் எப்பவும் ரசிகர்களோட தொடர்பிலேயே இருந்தால், உங்களுக்கும் பெருமைதானே? தவிர, நான் உங்களை பி.எஸ்.வீரப்பா மாதிரியோ, நம்பியார் மாதிரியோ முரட்டுத்தனமா காட்டப்போறது இல்லை. இப்ப அப்படிக் காட்டினாலும் ரசிப்பாங்களானு தெரியலை. இது காமெடி கலந்த வில்லன். எனக்காக நீங்க பண்ணுங்க சார். சரியா வரும்’ என்றேன். நடிக்க ஒப்புக்கொண்டார். கதையில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து ட்ரீட்மென்ட்டை மாற்றி எழுதினேன்.
இதற்கு இடையில் எங்களின் ஷெட்யூலுக்குத் தகுந்தாற்போல் நாங்கள் கேட்ட அளவுக்கு ஸ்ரீதேவியால் கால்ஷீட் தர முடியவில்லை. ஓரளவுக்குத்தான் கால்ஷீட் கொடுத்திருந்தார். ‘ஸாரி சார்... இந்த கால்ஷீட்டுக்குள் முடிச்சுக்கங்க. எல்லாம் பெரிய கம்பெனிகள். என்னால அட்ஜெஸ்ட் பண்ண முடியலை’ என்று சொல்லியிருக்கிறார். ‘ஸ்ரீதேவியின் கால்ஷீட்டுக்குள் அவங்க போர்ஷனை முடிக்கிற மாதிரி பார்த்துக்கங்க சார்’ என்று டைரக்டர் முத்துராமன் சார் என்னிடம் சொல்ல, நான் ட்ரீட்மென்ட்டை மீண்டும் மாற்றினேன்.
இன்னொரு ஹீரோயினான ராதிகாவையும் அந்த ‘போக்கிரி’ ரஜினி கேரக்டரையும் டெவலப் செய்து ஃபுல் என்டர்டெயின்மென்ட்களையும் அந்த இரு கேரக்டர்களின் மீது ஏற்றினேன். படித்த ரஜினி, அவரின் மனைவியாக வரும் ஸ்ரீதேவி கேரக்டர்களை, கதைக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு மட்டும் வைத்துக்கொண்டு குறைத்தேன். ஒரிஜினல் தெலுங்கு படத்தில் இருந்த அதே கதைதான். ஆனால், அதில் இரண்டு ஜோடிகளுக்கும் 50:50-ஆக இருந்த காட்சிகள் என் ட்ரீட்மென்ட்டில் போக்கிரி ரஜினி ஜோடிக்கு 70 சதவிகிதமாகவும், படித்த ரஜினி ஜோடிக்கு 30 சதவிகிதமாகவும் மாறியது. காரணம், ஸ்ரீதேவி தந்திருந்த குறைந்த கால்ஷீட்டில் படத்தை முடிக்கவேண்டும் என்ற கட்டாயம்.
படம் முடிந்தது. ரிலீஸ் பண்ணினோம். படம் சூப்பர் ஹிட். அந்தப் படத்தில் சினிமா துறையிலேயே நடக்காத வேடிக்கை ஒன்று நடந்தது. படத்தின் ரீமேக் ரைட்ஸை யாரிடம் வாங்கி ‘போக்கிரி ராஜா’ எடுத்தோமோ, அந்த கிருஷ்ணாவே இந்த ட்ரீட்மென்ட் பிடித்துப்போய் ‘போக்கிரி ராஜா’வை அப்படியே இந்தியில் எடுக்கலாம் என முடிவுசெய்து சரவணன் சாரிடம் அதன் ரைட்ஸ் வாங்கினார்.
‘போக்கிரி ராஜா’ படத்தைப் போட்டுக்காட்டி ஸ்ரீதேவியை இந்தியில் நடிக்கச்சொல்லி கேட்கும்போது, ‘அடடா, இதில் ராதிகாவுக்கு நிறைய போர்ஷன்ஸ் இருக்கே. ஆனால், என் கேரக்டருக்கு பெரிய ஸ்கோப்பே இல்லை. இந்தியில் பண்ணும்போது நிச்சயமா தமிழில் பண்ணின என் ரோலைப் பண்ண மாட்டேன். எனக்கு ராதிகா ரோல் தர்றதா இருந்தா நான் நடிக்கிறேன்’ எனச் சொன்னார். அப்படி அமைந்த ‘மாவாலி’தான் ஸ்ரீதேவிக்கு இந்தியில் மிகப்பெரிய ஓப்பனிங்கைக் கொடுத்த படம். அங்கும் அந்தப் படம் மிகப்பெரிய ஹிட். இப்படி கிருஷ்ணாவால் இந்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ரீதேவி, பிறகு அங்கு மிகப்பெரிய ஹீரோயின் ஆனது நாம் அறிந்ததே.
‘சகலகலா வல்லவன்’ படத்துக்குப் பிறகு ஏவி.எம்-க்கு கமல் மீண்டும் கால்ஷீட் கொடுத்திருந்தார். ‘கதை ரெடி பண்ணுங்க’ என, ஒரு மாதத்துக்கு முன்னரே சொல்லிவிட்டார்கள். எனக்கு எப்போதும் பல்வேறு கதைகளின் கரு, மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். அந்தச் சூழலுக்குத் தகுந்தாற்போல் யோசித்து, புதிதாகப் பண்ணுவதும் உண்டு. அப்படி அந்தச் சமயத்தில் பத்திரிகைகளில் போதைப்பொருட்கள் தொடர்பான செய்திகள் வந்துகொண்டிருந்தன. அதுவரை கள், சாராயம், விஸ்கி, ஓட்கா... போன்றவைதான் `போதை' என நினைத்திருந்தேன். ஆனால், போதைப் பொடியை புறங்கையில் வைத்து நுகர்வது, போதை ஊசி போட்டுக் கொள்வது... என பத்திரிகைச் செய்திகள், ஆங்கிலப் படங்கள் எல்லாம் பார்க்கும்போது, அவை எனக்குப் புதிதாக இருந்தன.
‘இந்தப் புது டைப் போதையை வைத்து டபுள்ரோல் கதை ஒன்று பண்ணலாமே’ என நானே முடிவுசெய்து பண்ணின கதைதான் ‘தூங்காதே தம்பி தூங்காதே’. பெரும் அளவிலான சொத்துக்கு அதிபதியான ஒருவனை, போதைக்கு அடிமைப்படுத்தி, அவனின் சொத்துக்களை ஒரு குரூப் அனுபவித்துவரும். நன்கு படித்த இன்னொரு ஹீரோ, வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பான். ஒரு வீட்டில் தோட்டக்காரன் வேலை காலியாக இருக்கும். ‘படித்தவன்’ என்றால் அந்த வேலையும் கிடைக்காமல் போய்விடுமோ எனப் பயந்து, தோட்டக்காரனாக மாறி, அங்கு போய் வேலைக்குச் சேருவான்.
இதற்கு இடையில் போதைக்கு அடிமைப்படுத்தப்பட்டிருப்பது தன் சொந்த அண்ணன் என்பது தோட்டக்காரனாக இருக்கும் தம்பிக்குத் தெரியவருகிறது. அண்ணனை எப்படிக் காப்பாற்றி, போதைப் பழக்கத்தில் இருந்து அவனை விடுபடவைத்து, சொத்துக்களை தம்பி எப்படி மீட்கிறான் என்பதே அந்தப் படத்தின் கதை. அண்ணன் கமல் ஃபாரீனில் இருந்து வருவார். ஏ.சி ஹால், டிரிங்க்ஸ், போதை ஊசி போட ஒரு டாக்டர்... என அவருக்குவேண்டிய சகல வசதிகளையும்கொண்ட ஓர் அறையில் வைத்து அவரின் சொத்துக்களை சுந்தர்ராஜன் குரூப் எப்படி அபகரிக்கிறது என்று ஒரு சீரியஸ் டிராக் போகும். இன்னொரு டிராக்கில் தம்பி கமல் கேரக்டர் செம காமெடியாகப் போகும்.
கிட்டத்தட்ட 14 ஆயிரம் அடியில் படத்தை முடித்துவிட்டோம். அப்போது சரவணன் சாரை, ஆனந்த விகடனில் பணியாற்றிய மணியன் சந்தித்தார். அவர் இந்தியில் ஒரு படம் எடுத்திருந்தார். அந்தப் படம் பெரிய அளவில் அங்கு கவனிக்கப்படவில்லை. அந்தப் பட க்ளைமாக்ஸில் ஆறு, ஏழு கார்களின் சேஸிங் வைத்து ஒரு காரின் மீது இன்னொரு கார் மோதி, உடைந்து நசுங்கி, அதை ஐந்தாறு கேமராக்கள் ஷூட் செய்து எனப் பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாகச் செய்திருந்தார். இன்று அது மாதிரியான சண்டைக்காட்சிகள் ஆயிரம் படங்களிலாவது வந்திருக்கும். ஆனால், அந்த நேரத்தில் அது புதுமையாக இருந்தது.

‘க்ளைமாக்ஸைப் பெரிய அளவில் செலவுசெய்து ரிச்சா எடுத்துட்டேன். உங்க படங்களுக்குத் தேவைன்னா அந்தக் காட்சிகளைப் பயன்படுத்திக்கங்க’ என்று சரவணன் சாரிடம் மணியன் அப்போது சொல்லியிருக்கிறார். அந்தக் காட்சிகளைப் பார்த்த சரவணன் சாருக்கு, அவை பிடித்துவிட்டது. ‘இதை எப்படியாவது நம் பட க்ளைமாக்ஸில் வைக்கணும்’ என்று முத்துராமன் சாரிடம் சொல்ல... அதற்கு அவர், ‘அதை விலைக்கு வாங்கிடுங்க. அவருக்கும் ஒரு நல்ல விஷயம் நடக்கும். நம்ம படத்துக்கும் ஒரு ரிச் அயிட்டம் கிடைக்கும்’ எனச் சொல்லியிருக்கிறார். பிறகு, விலைக்கு வாங்கிவிட்டு அந்த விவரத்தை என்னிடம் சொன்னார்கள்.
‘சார், ஏற்கெனவே 14 ஆயிரம் அடி எடுத்தாச்சு. இதில் அந்த க்ளைமாக்ஸைச் சேர்க்கணும்னா லிங்க் பண்ணி எழுதணும். அப்படிப் பார்த்தால் 16 ஆயிரம் அடிக்கு மேல வருமே சார்’ என்றேன். ‘பரவாயில்லை. நீங்க எழுதிக்கொடுங்க. அப்புறம் சரி பண்ணிக்கலாம்’ என்றார் முத்துராமன் சார்.
‘ஓ.கே’ என்று லிங்க் பண்ணி எழுதிக்கொடுத்தேன். அந்த இந்திப்பட க்ளைமாக்ஸில் பயன்படுத்தப்பட்ட கார்களைப்போலவே இரண்டு மூன்று கார்களை இங்கேயே ரெடி பண்ணி, அதில் வைத்து க்ளோஸப் காட்சிகளை மட்டும் எடுத்துக்கொண்டு லாங் ஷாட் காட்சிகளுக்கு இந்தப் படத்தின் காட்சிகளைச் சேர்த்தார்கள். எடிட் செய்து பார்த்தபோது, ஏதோ உண்மையிலேயே நாங்களே திட்டமிட்டு எடுத்ததுபோல் அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. ஆனால், படம் 16 ஆயிரம் அடியைத் தாண்டிவிட்டது.
சரவணன் சார், சில கொள்கைகளில் உறுதியாக இருப்பார். அப்போது எல்லாம் சினிமா பிற்பகல் 3:30, மாலை 6:30, இரவு 9:30 என மூன்று காட்சிகள்தான். ‘நைட் ஷோ பார்த்துட்டுப் போறவங்க ஒரு மணிக்குள் வீட்டுக்குப் போயிடணும். ஆனா, நம் படம் மூன்றரை மணி நேரத்துக்கு மேல் ஓடுது. இப்படியே ரிலீஸ் பண்ணினா நைட் ஷோ முடிஞ்சு வீட்டுக்குப் போக மிட்நைட் 2:30 மணியாகிடும். போகப்போக நைட் ஷோ பார்க்க வர்ற கூட்டம் குறைஞ்சுடும். நமக்கு கலெக்ஷனும் அடிபடும். அதனால் மூவாயிரம் அடியைக் குறைச்சுடுங்க’ எனச் சொல்லியிருக்கிறார். ஆனால், இந்த விஷயங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. அவர்களுக்குள் பேசி முடித்திருக்கிறார்கள்.
மீண்டும் எடிட் செய்து படத்தை ட்ரிம் செய்துவிட்டு படம் பார்க்கக் கூப்பிட்டார்கள். படம் பார்த்தேன். நான் எதிர்பார்த்தபடி படம் மிகச் சிறப்பாகவே இருந்தது. க்ளைமாக்ஸ் பிரமாதமாக வந்திருந்தது. ‘வட இந்தியாவில் ஒரு மாஸ்டர் இருக்கார். குதிரை ஃபைட் நல்லா பண்ணுவார். அதனால் கதையில் அந்தக் குதிரை ஃபைட்டையும் சேர்த்துக்கங்க பஞ்சு சார்’ என்று சரவணன் சார் ஆரம்பத்தில் சொல்ல, கதையில் அதுவும் வருவதுபோல எழுதியிருந்தேன். அந்தக் குதிரை சண்டைக் காட்சியும் நன்றாக இருந்தது. ‘தான் ஒரு கமர்ஷியல் கிங் என்பதை சரவணன் சார் நிரூபிச்சுட்டார்’ என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால், நான் ரசித்து எழுதிய ஏகப்பட்ட காமெடிக் காட்சிகள் படத்தில் இல்லை. மிச்சம் இருந்த நான்கைந்து காமெடிக் காட்சிகளுக்கே தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ். ‘மொத்தமும் இருந்தால் படம் இன்னும் பிரமாதமாக இருந்திருக்குமே’ என்ற ஆதங்கம். வழக்கமாக ‘படம் சற்றே நீளம்’ என்று விமர்சனம் வந்தால், மற்ற எதில் கை வைத்தாலும் மெயின் கதைக்குப் பாதிப்பு வரும் என்பதால் முதலில் நகைச்சுவை காட்சிகள்தான் பதம் பார்க்கப்படும். அதனால் முத்துராமன் சார் கதையை டிஸ்டர்ப் பண்ணாமல் காமெடியை கட் பண்ணி படத்தை கரெக்ட் செய்து முடித்துவிட்டார்.
படம் முடிந்தது. ‘என் காமெடிக் காட்சிகள் போச்சே’ என்ற ஆதங்கம். வெளியில் வந்தேன். யாரிடம் கோபத்தை, வருத்தத்தை வெளிப்படுத்தலாம் எனக் காத்திருந்த நான், அப்போது எதிர்பட்ட முத்துராமன் சாரிடம் சில வார்த்தைகளைக் கோபமாக சொல்லிவிட்டேன். ஆதங்கத்தில் சொன்ன அந்த வார்த்தைகள், அவரைப் பாதிக்கும் என நான் அப்போது நினைக்கவில்லை. அப்படி அவரை நான் என்ன சொன்னேன்?
- தொண்டு தொடரும்...