Published:Updated:

``ரஜினிக்கு வலை விரித்த திராவிடக் கட்சிகள், கமலின் ஆதரவைக் கோரினார்களா?” நடிகர் ஆனந்தராஜ்

``ரஜினிக்கு வலை விரித்த திராவிடக் கட்சிகள், கமலின் ஆதரவைக் கோரினார்களா?” நடிகர் ஆனந்தராஜ்

``ரஜினிக்கு வலை விரித்த திராவிடக் கட்சிகள், கமலின் ஆதரவைக் கோரினார்களா?” நடிகர் ஆனந்தராஜ்

Published:Updated:

``ரஜினிக்கு வலை விரித்த திராவிடக் கட்சிகள், கமலின் ஆதரவைக் கோரினார்களா?” நடிகர் ஆனந்தராஜ்

``ரஜினிக்கு வலை விரித்த திராவிடக் கட்சிகள், கமலின் ஆதரவைக் கோரினார்களா?” நடிகர் ஆனந்தராஜ்

``ரஜினிக்கு வலை விரித்த திராவிடக் கட்சிகள், கமலின் ஆதரவைக் கோரினார்களா?” நடிகர் ஆனந்தராஜ்

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மௌன விரதம், கூவத்தூர் சொகுசு ரிசார்ட்டில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சிறைவைப்பு, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்பதை உறுதிசெய்த உச்சநீதிமன்றம், சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தேர்வு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிப்பு, இடைத்தேர்தல் ரத்து, ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் இணைந்து அ.தி.மு.க- வைக்  கைப்பற்றியது, ஒட்டுமொத்த சசிகலா குடும்பமும் அதிமுகவிலிருந்து விலக்கிவைப்பு, ஈ.பி.எஸ் துணை முதல்வராகத் தேர்வு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக நின்று டிடிவி தினகரன் பெற்ற வெற்றி... இப்படிக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரேக்கிங் செய்திகளால் நிறைந்திருக்கிறது தமிழகம். இந்தச் சூழலில் `மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கியது, விரைவில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவிருப்பது என்று தொடர்கின்றன இந்த பிரேக்கிங் நியூஸ்கள்.

இந்தச் சூழலில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த நடிகர் ஆனந்தராஜ் நடிகர் ரஜினியைச் சமீபத்தில் சந்தித்தார். பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்து ரஜினிக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்தார். இந்த நிலையில் ஆனந்தராஜிடம் பேசினேன். அப்போது அவர் கூறியதாவது...

``நான் ரஜினி கட்சியில் சேரவில்லை. இப்போதும் அ.தி.மு.கவில்தான் இருக்கிறேன். முன்பு ரஜினியை வைத்து சம்பாதித்து செட்டிலானவர்கள், இன்று நம்மால் அவரைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம் உள்ளவர்கள் எல்லாம் திட்டமிட்டு அவரைத் தனிமைப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளனர். அது எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதைச் சொல்லவே நான் ரஜினியைச் சந்தித்தேன். 

நான் அ.தி.மு.க-வில் சேர்வதற்கு முன்பிருந்தே ரஜினியுடன் நல்ல நட்பில் இருந்து வருகிறேன். 2004-ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை எதிர்த்து ரஜினி அறிக்கைவிட்டார். நதிகளை இணைக்க வேண்டும் என்று சூளுரைத்தார். அப்போது நடந்த தேர்தலில் அ.தி.மு.க-பி.ஜே.பி கூட்டணிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். ரஜினி சார் இன்னும் கட்சி தொடங்கும் நாள், கட்சியின் பெயர் அறிவிக்கவில்லை. 

அப்படி அவர் அறிவிக்கும்போது அந்தச் சூழலே வேறு லெவலில் இருக்கும். அன்று அதி.மு.க-வில் உள்ள முக்கியப் புள்ளிகள் பலரும் அவரது கட்சியில் சேர்வார்கள். திரைத்துறையிலிருந்து பலரும் அவரின் கட்சியில் சேரத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். ரஜினி, அரசியலில் இறங்குவதற்கு முன்பு நிதானத்தை கடைப்பிடித்து வருகிறார். நான் அவருடன் ஒரு மணி நேரத்துக்கு மேலாகத் தமிழக அரசியல் குறித்துப் பேசினேன். 

தமிழ்நாட்டில் இருக்கும் 20 தொலைக்காட்சி சேனல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் அரசியல் கட்சியின் சார்பு நிலையில்தான் செயல்பட்டுவருகின்றன. பொதுவான விஷயங்களில் தங்களுக்கு பாதகமான செய்திகளைத் தவிர்த்துவிட்டு, சாதகமான விஷயங்களை மட்டும் ஒளிபரப்பி வருகின்றன. ஒருவருடைய நல்லொழுக்கம், பண்புகள், செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்யாமல், அவர் எந்தச் சாதிக்காரர், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறித்து விவாதம் செய்வது எந்த வகையில் நியாயம்?

நம் அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் வேறு இனம், வேறு மொழி பேசுபவர்களாக இருக்கலாம். ஆனால், நமக்கு ஓர் ஆபத்து என்று வந்துவிட்டால் அவர்கள்தான் ஓடிவந்து காப்பாற்றுவார்கள். எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவர்கள்தான் மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்ப்பார்கள் அதன்பிறகே உறவினர்கள், சாதிக்காரர்கள் நம்மைப் பார்க்க வருவார்கள். அப்படி எப்போதும் நமக்குப் பாதுகாப்பாக இருக்கும் பக்கத்துவீட்டுக்காரர்களை எப்போதாவது வீட்டுக்கு வரும் சொந்தக்காரர்களுக்காக வெளியே அனுப்ப முடியாது. 

தமிழ்நாட்டில் இருக்கும் பெரிய கட்சிகளான அ.தி.மு.க, தி.மு.கவே ரஜினியை கேள்விகேட்காமல் மெளனமாக இருக்கின்றன. அப்படி இருக்கையில் சின்னச்சின்ன லெட்டர் பேட் கட்சிகளுக்கு எல்லாம் ரஜினியைக் கேள்விகேட்கும் உரிமை கிடையாது. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்குப் பிறகே `தமிழ்நாட்டில் வெற்றிடம் இருக்கிறது' என்கிற வார்த்தையை ரஜினி பயன்படுத்தினார் என்று கருதுகிறேன். 

அ.தி.மு.கவைத் தாங்கி, தூக்கிப் பிடிப்பவர்கள் தொண்டர்கள். ஆனால், பதவியில் இருப்பவர்கள் மட்டுமே பலன்களை அனுபவிக்கிறார்கள். பதவியில் இருப்பவர்கள் செய்யும் சமரசங்களால் ஏற்படும் பழிபாவங்களை அப்பாவி அ.தி.மு.க தொண்டர்களே சுமந்து நிற்கின்றனர். `பதவி என்பது தோளில் போட்ட துண்டு மாதிரி, கீழே விழுந்தால் கவலையில்லை. கட்சி என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி மாதிரி, கீழே விழுந்தால் மானமே போய்விடும்' என்று அறிஞர் அண்ணா சொன்னதை திரும்ப நினைவூட்ட விரும்புகிறேன்.

1991-ம் ஆண்டிலிருந்து இரண்டு பெரிய திராவிட கட்சிகளும் ரஜினியிடம் மறைமுகமாகவும் பகிரங்கமாகவும் ஆதரவு கேட்டன. 1996-ம் ஆண்டு அ.தி.மு.க-வுக்கு எதிராக ரஜினி கொடுத்த வாய்ஸ் தி.மு.க-வுக்குச் சாதகமாக அமைந்தது. 2001-ம் ஆண்டு ரஜினியிடம் ஆதரவு கேட்டது வேறொரு திராவிட கட்சி. ஆனால், எந்தக் காலத்திலும் எந்தத் தேர்தல்களிலும் இவை கமலின் ஆதரவை கேட்டதே இல்லை. 

தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் 2 அல்லது 3 சதவிகிதம் வாக்குகள் கொண்ட கட்சிகளைப்போல் ரஜினியின் செல்வாக்கைத் தவறாக எடைபோட்டுவிடக் கூடாது. அவர்கள் அனைவரையும்விட ரஜினிக்கு வாக்கு வங்கி அதிகம். எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பித்தபோது எப்படி எல்லாக் கட்சிகளிலிருந்தும் அவருடைய கட்சியில் ஆர்வமாகச் சேர்ந்தார்களோ அதுபோல ரஜினி கட்சி ஆரம்பிக்கும்போதும் அந்த அதிசயம் நடக்கும். 

காவிரி நீர் விவகாரத்தில், தமிழகத்துக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசு குறித்து கேட்கும்போது, `பொறுத்திருப்போம்’ என்கிறது தமிழக அரசு. அதனை அ.தி.மு.க-வின் நடவடிக்கை என்று சொல்கிறீர்கள். அதையே ரஜினி சொன்னால் தமிழின எதிர்ப்பு நடவடிக்கை என்று சொல்வது எப்படி நியாயமாகும்? "