
அமரர் பஞ்சு அருணாசலம், படங்கள் உதவி: ஞானம்

‘தூங்காதே தம்பி தூங்காதே’ படம் பார்த்துவிட்டு கொஞ்சம் அப்செட். படம் நன்றாக இருந்தாலும், நான் ரசித்து எழுதிய பல நகைச்சுவைக் காட்சிகள் படத்தில் இல்லை. நான் ஒன்றும் பெரிய காவியம் எழுதிவிடவில்லை. கமர்ஷியல் படம்தான்.
‘அந்த காமெடி சீன்கள் போனால் என்ன, அவற்றை அடுத்தடுத்த படங்களில் பயன்படுத் திக்கலாம்’

என்று அமைதியாக வந்திருக்கலாம்.
ஆனால், படம் முடிந்து வெளியே வந்ததும், ‘ஒரு வெள்ளி விழா படத்தை, 100 நாள் படமா பண்ணிட்டீங்க. ரொம்ப தேங்க்ஸ் சார்’ என முத்துராமன் சாரிடம் வருத்தமாகச் சொல்லி, கைகொடுத்துவிட்டு, யாரிடமும் பேசாமல் கிடுகிடுவென வீட்டுக்கு வந்துவிட்டேன். அப்படி நான் பேசியதால், முத்துராமன் சார் பயங்கர அப்செட்.
நாங்கள் ஏகப்பட்ட படங்களில் இணைந்து பணிபுரிந்திருக்கிறோம். இப்படி ஒன்றிரண்டு சங்கடங்களைத் தவிர எங்களுக்குள் வேறு எந்த வருத்தமும் இல்லை. அப்படி ஏற்பட்ட ஒன்றிரண்டு வருத்தங்களுக்குக்கூட நான்தான் காரணமாக இருந்திருப்பேன்.
ஃபிலிமாலயா புரொடக்ஷன்ஸ், திலீப்குமாரை வைத்து ‘லீடர்’ உள்பட சில இந்திப் படங்களை எடுத்தவர்கள். அந்த கம்பெனியின் வாரிசுகள், ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ கதையை இந்தியில் எடுக்க என்னிடம் ரைட்ஸ் வாங்கியிருந்தார்கள். ராஜேஷ் கண்ணாவை ஹீரோவாக வைத்து அந்தப் படத்தை ஆரம்பித்து, ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தது. அந்தப் படத்துக்காக லொக்கேஷன் பார்க்க காரில் சென்ற அவர்கள் விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்து, தீவிர சிகிச்சைக்குப் பிறகு பிழைத்து வந்தனர். அதனால், ‘இந்தப் படம் நமக்கு ராசி இல்லை’ என்று சொல்லி அவர்களின் அம்மா ஷூட்டிங்கை நிறுத்தச் சொல்லிவிட்டார்.
ஆனால், அது ராஜேஷ் கண்ணாவுக்கு மிகவும் பிடித்த கதை. சில வருடங்களுக்குப் பிறகு ‘அது எனக்கு ரொம்பப் பிடிச்ச கதை. அப்ப அதைப் பண்ண முடியலை. அதேமாதிரி இப்ப ஒரு கதை பண்ணித்தாங்க. நான் நடிக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். அவர் கேட்டதற்காக எழுதி எடுக்கப்பட்டதுதான் ‘அவ்தார்’ என்ற இந்திப் படம்.
‘நீங்க ‘ஆறிலிருந்து அறுவதுவரை’ படத்தை அண்ணன்-தம்பியை வெச்சு எழுதியிருந்தீங்க. ‘அவ்தார்’ அப்பா-பிள்ளையை வெச்சு எழுதியிருக்காங்க’ என்றார்கள். ‘நம் கதை இந்தியில் வேறு ஒரு ரூபத்தில் வந்து ஓடுது. அதன் ரைட்ஸையும் நாமளே வாங்கி இங்க பண்ணணும்’ என்று நினைத்தேன். ‘அவ்தார்’ படத்தை நடிகர் ராஜேந்திரகுமாரின் மைத்துனர் மோகன்குமார் என்பவர் எடுத்ததாகச் சொன்னார்கள். பாரதிராஜா அப்போது ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை ‘லவ் ஸ்டோரி’ என்ற பெயரில் ராஜேந்திரகுமாரின் மகனை வைத்து இந்தியில் எடுத்துக்கொண்டிருந்தார். சித்ரா லட்சுமணன் உட்பட அவரின் டீம் அப்போது மும்பையில்தான் இருந்தது. நான்தான் முதன்முதலில் சித்ரா லட்சுமணனை சினிமா பி.ஆர்.ஓ-வாகவும் ‘மண்வாசனை’ படம் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகப்படுத்தினேன்.
அவரிடம் விஷயத்தைச் சொல்லி, ` ‘அவ்தார்’ பட ரைட்ஸைக் கேட்டு வாங்கிடு’ என்றேன். அவரும் பேசியிருக்கிறார். ‘அந்தப் படத்துக்கு நிறையப் போட்டிகள். ராஜேந்திரகுமார் மூலமா போனதால நமக்கு முன்னுரிமை தர்றேன்னு மோகன்குமார் சொல்லியிருக்கார். ஆனா, ரெண்டு நாள்ல இரண்டு லட்சம் ரூபாய் கேட்கிறார். பணத்தைக் கொடுத்துட் டோம்னா இந்தக் கதையை நாம வாங்கிடலாம்’ என்றார். இன்று உள்ளதுபோல அன்று ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் எதுவும் கிடையாது.
என் ஃபைனான்ஷியர் அர்ஜுன் தாஸிடம் விஷயத்தைச் சொல்லி மும்பையில் இருந்த அவருக்கு நெருக்கமான ஒருவரை போனில் பிடித்து, பணத்தைக் கொடுக்கச் சொன்னோம். ‘நீயே உன் பேர்ல அக்ரிமென்ட் போட்டு வாங்கிட்டு வந்துடு’ என்று சித்ரா லட்சுமணனிடம் சொல்லி விட்டேன். அவரும் தன் பெயரில் அக்ரிமென்ட் போட்டு ரைட்ஸ் வாங்கிவந்தார்.
பிறகு, சித்ரா லட்சுமணன், ‘அண்ணே, நீங்க எவ்வளவோ படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க. ‘மண்வாசனை’யை ஆரம்பத்துலயே வித்துட்டதால எனக்குப் பேர் கிடைச்ச அளவுக்கு லாபம் கிடைக்கலை. அதனால, இந்த ‘அவ்தார்’ பட தமிழ் ரீமேக்கை நாம ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணலாம். நான் புரொடக்ஷன் சைடு பார்த்துக்கிறேன்’ என்றார். ‘முடியாது’ எனச் சொல்ல கஷ்டமாக இருந்தது. ‘சரி பண்ணுவோம்’ என்றேன். ‘அக்ரிமென்ட் போட்டுக் கலாம்ண்ணே’ என்றார். ‘அதெல்லாம் வேணாம். நீ உன் பேர்லயே பண்ணு. லாபத்தை 50:50-யாகப் பிரிச்சுப்போம்’ என்றேன்.
சிவாஜி அண்ணனிடம் பேசி ஃபிக்ஸ் பண்ணினேன். ஜெய்சங்கர், அம்பிகா, ராதா என படத்தில் ஏகப்பட்ட நடிகர்-நடிகைகள். அதுதான் ‘வாழ்க்கை’ படம். படத்துக்கான ஃபைனான்ஸையும் நானே ஏற்பாடு செய்துகொடுத்தேன். படம் ரிலீஸ் ஆகி ஓகோவென ஓடியது. ஆனால், அந்தப் படத்திலும் லாபம் வரவில்லை. ‘ஏகப்பட்ட ஆர்ட்டிஸ்ட்களைப் போட்டு அதிக அளவில் செலவு செய்ததால் ஒன்றரை லட்சம் ரூபாய் பற்றாக்குறை’ என்று சித்ரா லட்சுமணன் சொன்னதாக நினைவு.
பிறகு, சித்ரா லட்சுமணன் கமல் சாரிடம் போய், ‘முதல்முறையா நான் டைரக்ட் பண்றேன். எனக்கு ஒரு படம் பண்ணித்தாங்க’ எ்ன்று கேட்டிருக்கிறார். ‘அடுத்தது என் கால்ஷீட் பஞ்சு அண்ணனுக்குக் கொடுத்திருக்கேன்’ என்று கமல் சார் சொல்லியிருக்கிறார். பிறகு என்னிடம் வந்த சித்ரா லட்சுமணன், ‘முதன்முதல்ல டைரக்ட் பண்றேன். நீங்க கமல் கால்ஷீட்டை எனக்கு விட்டுக்கொடுக்க முடியுமா?’ என்று கேட்டார். நம்மால் பி.ஆர்.ஓ-வானார். பிறகு தயாரிப்பாளரும் ஆனார். இயக்குநராகவும் வரட்டுமே’ என்று நினைத்து, கமல் சாரிடமும் பேசி, அந்த கால்ஷீட்டை சித்ரா லட்சுமணணுக்கு விட்டுக்கொடுத்தேன். அப்படி நான் விட்டுக்கொடுத்த கமல் கால்ஷீட்டில் சித்ரா லட்சுமணன் இயக்கிய படம்தான், ‘சூரசம்ஹாரம்’.

‘நீங்க எனக்கு கால்ஷீட் கொடுத்து நாலஞ்சு வருஷம் ஆச்சே’ என்று நானாகப் போய் எவரையும் தொந்தரவுபண்ணினது கிடையாது. அவர்களே கூப்பிட்டுக் கொடுப்பார்கள். அப்படித்தான் ரஜினி சார் அடுத்து கால்ஷீட் கொடுத்திருந்தார். ‘அவருடன் நிறையப் படங்கள் பண்ணிட்டோம். புதுசா பண்ணுவோம்’ என்று யோசனையில், நான் ஏற்கெனவே பண்ணின படங்கள் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துக்கொண்டே வந்தேன். அவற்றில் பெரும்பாலான கதைகளில் ஹீரோ, கிராமத்தில் இருந்து மெட்ராஸுக்கு வந்து கஷ்டப்பட்டு முன்னேறுபவனாகக் காட்டியிருந்தேன். ஆனால், எந்தப் படத்திலும் ஒரு ஹீரோ நகரத்தில் இருந்து கிராமத்துக்குப் போய் ‘உறவுனா என்னனு தெரிஞ்சுக்கிட்டு வர்றான்’ என்ற மாதிரி, ரிவர்ஸில் போய்வந்தது இல்லை எனப் புரிந்தது. ‘அப்படி ரிவர்ஸில் ஒரு கதை பண்ணுவோம்’ என்று முடிவுசெய்து எழுதப்பட்ட கதைதான் ‘தம்பிக்கு எந்த ஊரு’.
அந்தச் சமயத்தில் எதிர்பாராத ஒரு விஷயம் நடந்தது. எஸ்பி.முத்துராமன் சாருக்கு கண்களில் தாங்க முடியாத வலி. டாக்டர் பத்ரிநாத்திடம் காட்டினார். ‘உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும்’ எனச் சொல்லிவிட்டார். இன்று உள்ள மாதிரியான லேசர் அறுவைசிகிச்சை அன்று கிடையாது. ‘ஆபரேஷன் முடிந்து மூணு மாசம் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்கணும். லைட்டையே பார்க்கக் கூடாது’ எனச் சொல்லிட்டார்.
ரஜினி சார் தந்திருந்த கால்ஷீட்டும் அவரின் ஆபரேஷனும் ஒரே நேரத்தில் வந்தது. ‘நான் வேணும்னா ரஜினிகிட்ட சொல்லி, கால்ஷீட்டை கொஞ்சம் தள்ளி வாங்கிக்கிறேன் சார்’ என்று முத்துராமன் சாரிடம் கேட்டேன். ‘உங்களுக்கு இருக்கும் பிரச்னைகள் எல்லாம் எனக்குத் தெரியும். நீங்க வேற யாரைவெச்சு வேணும்னாலும் டைரக்ட் பண்ணுங்க. எனக்காக தள்ளி வைக்காதீங்க’ என்றார்.
எனக்கு டைரக்டர் ராஜசேகர் பழக்கம் உண்டு. அப்போது அவர் முன்னுக்கு வந்துகொண்டிருந்த நேரம். அவரிடம் கேட்டேன். ‘ரஜினி படம் பண்ண ஒரு சந்தர்ப்பம். நிச்சயமாப் பண்றேன்’ என்று அவர் சந்தோஷப்பட்டார். அவரை இயக்குநராக ஃபிக்ஸ் பண்ணினேன்.
அடுத்த சோதனை, ரிக்கார்டிங் போகலாம் என நினைக்கும்போது இளையராஜாவுக்கு குடல்வால் அறுவைசிகிச்சை. ‘15 நாள் எங்கேயுமே போகக் கூடாது ரெஸ்ட் எடுக்கணும்’ என டாக்டர் சொல்லிவிட்டார். வீட்டில் ஓய்வில் இருந்தார். நான் அவுட்டோர் போயே ஆகவேண்டும். ஏனெனில், ரஜினி சார் தொடர்ந்து 40 நாட்கள் கால்ஷீட் தந்திருந்தார். அதனால் ஆறு பாடல்களையும் ரிக்கார்டிங் பண்ணிவிட்டுத்தான் ஷூட்டிங் போக முடியும் என்ற நிலை. ஆனால், ஷூட்டிங் முடித்த பிறகுதான் இளையராஜாவால் ரிக்கார்டிங் வர முடியும் என்ற சூழல்.
இளையராஜாவுக்கு என் ஷெட்யூல் அனைத்தும் தெரியும். ‘ரஜினி கால்ஷீட் வருமே. எப்ப ஷூட்டிங் போறீங்க?’ என்றார். ‘இப்பதான் ஃபிக்ஸ் பண்ணியிருக்கேன். முத்துராமன் சாருக்கு அப்படி ஒரு பிரச்னைன்னா, உனக்கு இப்படி ஒரு பிரச்னை. அதான் யோசிக்கிறேன். உனக்கு உடம்பு முடியாம இருக்கும்போது எப்படி சாங்ஸ் ரிக்கார்ட் பண்ண முடியும்? நான் ரஜினி சார்கிட்ட சொல்லி 10 நாள் தள்ளி கால்ஷீட் வாங்கிக்கிறேன்’ என்றேன்.
‘ச்சே... ச்சே... அதெல்லாம் வேணாம். நீங்க இப்ப கதையைச் சொல்லுங்க’ என்றார். ‘இப்படிப் படுத்திருக்கும்போது கதை சொல்லணுமா? அப்படியே சொன்னாலும் இவரால எப்படி ரிக்கார்ட் பண்ண முடியும்?’ என்ற யோசனை. ஆனால், அவரின் வற்புறுத்தலால் கதையைச் சொன்னேன். ‘நீங்க கவலைப்படாமப் போயிட்டு, நாளைக்கு வாங்க. ரெண்டு மூணு நாள்ல எல்லா பாடல்களும் ரெடியாகிடும்’ என்றார்.
மறுநாள் போனேன். இரண்டு இரண்டாக மூன்று நாட்களில் படுத்திருந்தபடியே ஆறு பாடல்களுக்கும் தத்தகாரமாகவே ட்யூன் சொன்னார். நான் டேப்பில் ரிக்கார்ட் பண்ணிக்கொண்டு வந்து, எல்லா பாடல்களையும் நானே எழுதிக்கொண்டு போய்க் கொடுத்தேன். அந்தப் பாடல்கள் அனைத்துக்கும் வீட்டில் இருந்தபடியே நோட்ஸ் எழுதிக் கொடுத்தார். ‘இந்த நோட்ஸை வெச்சு நல்லா ரிகர்சல் பார்த்து ரெடி பண்ணிட்டு எனக்குச் சொல்லுங்க. நான் பக்கத்துல இருந்து பண்ணிடுறேன்’ என்றார்.
சரியாக காலை 11 மணிக்கு ஸ்டுடியோ போவார். 10 நிமிடங்கள் அமர்ந்து ஏற்கெனவே ரிகர்சல் செய்து வைத்திருந்தவற்றைக் கேட்பார். பிறகு, ரிக்கார்டிங். இப்படி ஒரு நாளைக்கு கால் மணி நேரம் ஸ்டுடியோ விஜயம், இரண்டு பாடல்கள் ரிக்கார்டிங் என்று மூன்று நாட்களில் ஆறு பாடல்களையும் ரிக்கார்ட் பண்ணிக் கொடுத்துவிட்டார். அப்படி ஓர் இக்கட்டான சூழலில் ரிக்கார்ட் பண்ணின அந்தப் படத்தின் பாடல்களும் பெரிய வெற்றியடைந்தன. இன்றும் பேசப்படும் படமாகவும் இருக்கிறது.
அந்தப் படத்தைப் பற்றி இப்போது பேசும்போது எனக்கு வேறு ஒரு நினைவுவருகிறது. இன்று நாளிதழ்களைத் திறந்தாலே, ‘அந்தக் கதையை இவர் திருடிவிட்டார்; இவர் கதையை அவர் திருடி படம் எடுத்துவிட்டார்’ என ஏகப்பட்ட கதைத் திருட்டு செய்திகள் வருகின்றன. பிறகு, நீதிமன்றங்கள் மூலமோ அல்லது சத்தமின்றி நான்கு சுவர்களுக்குள் இழப்பீடு பெற்றோ தீர்வுபெறுகிறார்கள்.
ஆனால், என் கதைகளை யார் யாரோ வெவ்வேறு வடிவங்களில் எடுத்துக்கொண்டே இருந்தாலும், இதுநாள்வரை நான் ஒரு வார்த்தைகூடச் சொன்னதே கிடையாது. இப்போதுதான் முதல்முறையாகச் சொல்கிறேன்.
‘உங்க ‘தம்பிக்கு எந்த ஊரு’ கதையை தெலுங்கில் எடுத்திருக்கிறார்கள்’ என்றார்கள். ‘நம்ம கதை அவங்களுக்குப் பிடிச்சிருக்கு. ரசிச்சதை வேறு ஒரு மொழியில் எடுக்கணும்னு நினைச்சிருக்காங்க. ஓ.கே என்று விட்டுவிட்டேன். பிறகு, அதே படத்தை தமிழிலும் எடுக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். நான் இங்குதான் இருக்கிறேன். நல்ல பெயருடன் அனைவருக்கும் தெரிந்தவனாக இருக்கிறேன். படம் எடுப்பவர்கள், நடிப்பவர்கள் அனைவரும் எனக்குத் தெரிந்தவர்களே. எனக்கு அவர்கள் பணம் தர வேண்டாம். ‘உங்க படத்தை அதே சாயல் இல்லாம கொஞ்சம் மாற்றி எடுக்குறோம்’ என்றாவது சொல்லியிருக்கலாம். பிறகு நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன். என் கதையேதான், ட்ரீட்மென்ட்டை கொஞ்சம் மாற்றி எடுத்திருந்தார்கள். பிறகு, அந்தப் படத்தை இந்தியிலும் எடுத்தார்கள்.
இதேபோல ‘முரட்டுக்காளை’ படமும் வெவ்வேறு வடிவங்களில் இன்றும் வந்துகொண்டே இருக்கிறது. ‘மயங்குகிறாள் ஒரு மாது’ கதை தமிழ், இந்தி இரண்டிலும் சில வருடங்களுக்கு முன்னர் வந்தது. ஒரே கதைக்கு 15 ட்ரீட்மென்ட்கூட எழுதும் வித்தை தெரிந்தவன்தானே நான். ட்ரீட்மென்ட்டை மாற்றினாலும் என் கதைதான் என்று அதை எழுதிய எனக்குத் தெரியாதா?
ஆனால், ‘மரியாதைக்கு ஒரு வார்த்தை கேட்டுவிட்டுச் செய்வோம்’ என்று அடிப்படை பண்புகூடத் தெரியவில்லை என்பதுதான் வருத்தம். பணம் கொடுப்பதுதான் மரியாதை என்று சொல்லவில்லை. ‘அண்ணே, உங்களோட அந்தப் படம் ரொம்பப் பிடிச்சிருக்கு. நான் பண்றேன்’ என நேரில் வந்து சொன்னால்கூடப் போதும். ‘பண்ணக் கூடாது’ என்றா சொல்லப்போகிறேன்? அந்த பண்பு இல்லாமல்போனது ஏன்?

ஆனால் இவர்களில் இருந்து வித்தியாசப்பட்டு, ஒருவர் என்னை வந்து சந்தித்தார். ‘உங்களோட அந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடிச்சப் படம்ணே. அதை நான் என் பாணியில எடுக்கணும்னு நினைக்கிறேன். பண்ணிக்கவா?’ என்று கேட்டார். ‘தாரளமா பண்ணிக்கப்பா’ என்றேன். மறுநாள் வந்தவர், ஒரு தொகையைக் கொடுத்தார். `எதுக்குப்பா?’ என்றேன். ‘என் திருப்திக்காக வெச்சுக்கங்கண்ணே’ என்றார். நான் பணம் எதுவும் கேட்காதபோதும் அவர் பணம் கொண்டுவந்து கொடுத்தது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.
ஆனால், அவர் என் எந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தாரோ, அதை இதுவரை எடுக்கவே இல்லை. ‘என்னப்பா... என் படத்தை எடுக்குறேன்னு சொல்லிட்டு, பார்ட் 1, 2னு வெவ்வேற படங்களை எடுத்துட்டு இருக்க?’ என்றேன். ‘இதெல்லாம் உங்க படத்தோட தாக்கம்தாண்ணே. அந்த அவுட்லைனை வெச்சு இன்னும் எத்தனை பார்ட் வேணும்னாலும் எடுக்கலாம்ணே’ என்று சிரித்தார்.
அவர் யார், என் எந்தப் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என நினைத்தார்? அவர் எடுத்த படங்கள் எவை?
- தொண்டு தொடரும்...