
எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

புக்
``யுனிவர்ஸ் பற்றிய என் ஆய்வில், சுவாரஸ்யமான ஓர் அனுமானத்துக்கு வந்திருக்கிறேன்” என்றான் ஆதன்.
“நீ தினமும் ஒரு கருத்து சொல்கிறாய். அதில் எதை நான் ஒப்புக்கொள்வது?'' என்றான் அந்தன்.
“யுனிவர்ஸ் தட்டையாக இருக்கிறது. ஜீரோ கர்வேச்சர். அதாவது `வளைவுகள் இல்லாமல்' என ஒரு தியரி சொல்கிறார்கள். உனக்குப் புரியும்படி சொன்னால், பிரித்து வைக்கப்பட்ட ஒரு புத்தகத்தின் பக்கம்போல. அதில் எழுத்துக்கள்போல பால்வீதிகளும் நட்சத்திரக் கூட்டங்களும் கோள்களும் நீயும் நானும் இருக்கிறோம்” என்றான் ஆதன்.
“ஒரு புக்பேஜ்போல என்ற உன் உவமை சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. நாம் அறிந்த இந்த யுனிவர்ஸ், புத்தகத்தின் ஒரு பக்கம்தான் என்றால், அந்தப் புத்தகத்துக்கு எவ்வளவு பக்கங்கள் இருக்கும்?” என்றான் அந்தன்.
``சரிதான். ஆனால், இங்கே நான் சற்று வேறுபடுகிறேன்” என்ற ஆதன், கனமான ஒரு புத்தகத்தை எடுத்து மேஜை மீது வைத்தான்.
அந்தன் ஆர்வமாகப் பார்த்தான்.
``யுனிவர்ஸ் தட்டையாக இருக்கிறது என்ற வரைபடத்தை இந்தப் புத்தகத்தின் வடிவத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். அதன் அகல-நீளங்களில், கன பரிமாணங்களில் எனக்குக் குழப்பம் உள்ளது. அதனால், நாம் அறிந்த இந்த யுனிவர்ஸ் ஒரு புத்தகத்தின் பக்கம் அல்ல.”
“என்ன சொல்கிறாய்?” என்றான் அந்தன்.
அந்தனைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டு ஆதன் சொன்னான், “நாம் அறிந்த இந்த யுனிவர்ஸ், ஏதோ ஒரு பெரிய புத்தகத்தில் இருந்து நழுவிவிழுந்த ஒரு சிறிய புக்மார்க்!”

கசேனா சுவர் ஓவியங்கள்
சமீபத்தில் நண்பர் செந்தமிழன், தஞ்சாவூரில் கட்டிய மரபு வீட்டில் நண்பர்கள் மணி, பாலச்சந்திரன், சத்யாவுடன் நானும் இணைந்து சுவர் ஓவியம் (Muaral)ஓன்று தீட்டினோம். அருகில் இருந்த ஓடையில் இருந்து எடுக்கப்பட்ட களிமண்கொண்டு வரைந்த ஓவியம். எந்தவித செயற்கை வண்ணங்களும் பயன்படுத்தாமல் சுடுமண்ணின் கடும் சிவப்பு நிறம், அந்தக் களிமண்ணுக்கு இயல்பாக இருந்தது. முழுக்க முழுக்க பழங்குடிகளின் பாணி.
மேற்கு ஆப்பிரிக்காவின் பர்கினா ஃபாஸோ (Burkina Faso) என்னும் பகுதியைச் சேர்ந்த பழங்குடிகளான கசேனா மக்கள் வரைந்த இந்தச் சுவர் ஓவியங்களைப் பாருங்கள். இயற்கை வண்ணங்களையே முழுவதுமாகப் பயன்படுத்தி வரைந்தவை. `பர்கினா ஃபாஸோ, உலகிலேயே மிகவும் வறுமையான பகுதி' எனச் சொல்கிறார்கள். வறுமைக்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், `கலையிலும் பண்பாட்டிலும் வளமையான மக்கள் இவர்கள்' எனவும் சொல்கிறார்கள்.

இவர்கள் வீடு கட்டுவதே ஊர் கூடி தேர் இழுப்பது போலத்தான். நம்மைப்போல சிமென்ட்டுக்கும் ஜல்லிக்கும் பட்ஜெட் போட்டு தலையைப் பிய்த்துக்கொள்வது இல்லை. அவர்களுக்கு அருகில் இருக்கும் வளமான உறுதியான மண்ணையும் வைக்கோலையும் மாட்டுச்சாணியையும் பிரத்யேக வழியில் கலந்து, நவீன ஆர்க்கிடெக்ட்கள் வியக்கும்வண்ணம் முழு வீட்டையும் கட்டிவிடுகிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லாரும் கூட்டமாகச் சேர்ந்து தேனீக்கள் கூடு கட்டுவதுபோல இவர்கள் வீடு கட்டுகிறார்கள்.


கட்டுமானம் முடிந்ததும் வீட்டின் சுவர்களில் ஓவியங்களை வரைய, பெண்களுக்கு மட்டுமே அனுமதி. பல நூற்றாண்டுகளாக இதுவே வழக்கம். வரைந்து முடித்த ஓவியங்கள் மீது, ஒரு வகையான பீன் மரங்களில் இருந்து கிடைக்கும் பட்டைகளைக் காய்ச்சி எடுக்கும் பிசினால் வார்னீஷ் பண்ணினால் சுவர்கள் பளபளக்கின்றன. கலை மட்டும் அல்ல, இயற்கையோடு இணைந்த அறிவியலும் இந்த வீட்டுக்கு அழகு!

புலிப்பல் தாலி
சபரிமலைக்குப் போய் வருபவர்களில் ஒருசிலர், புலிப்பல் மாலை வாங்கிவருவார்கள். நிஜப் பல் இல்லை... பிளாஸ்டிக்தான். சிறுவர்கள் அதை கெத்தாகப் போட்டுக்கொண்டு திரிவார்கள். நிஜமான புலிப்பல்லில் செய்த மாலை அணியும் பழக்கம் நம் மரபில் இருந்திருக்கிறது. அந்த மாலைக்கு `புலிப்பல் தாலி' எனப் பெயர்.
பொதுவாக, ஆதிமனிதர்கள் தாங்கள் வேட்டையாடிய விலங்குகளின் எலும்புகள், பற்கள், நகங்கள் போன்றவற்றை மாலையாக்கி அணிந்துகொள்வது வழக்கம். `பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி' என, அகநானூற்றில் வருகிறது. பால் பேதமற்று இதை அணிந்திருந்ததாகவும் தெரிகிறது. குறிப்பாக, குறிஞ்சி நில மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அணிவித்திருக் கிறார்கள். `மறங்கொள் வரிப்புலி வாய்பிளந்து பெற்ற மாலை வெண்பல் தாலி நிரை பூட்டி' என்பதைக் குறிப்பால் உணர்த்த சிலப்பதிகாரத்தில் வரும் வரி, புலிப்பல்லை எப்படி எடுத்தார்கள் என்பதை அட்வெஞ்சராகச் சொல்கிறது.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன், சிறு வயதிலேயே போருக்குச் சென்றான் என்பதைக் குறிப்புணர்த்த `தாலி களைந்தன்று மிலனே' என புறநானூற்றில் வருகிறது. இன்று புலிகள் பாதுகாப்பு முக்கியம் என்பதால், மெள்ள அதெல்லாம் மறைந்துவிட்டது.

அன்று தீயசக்திகளிடம் இருந்து குழந்தைகளுக்குப் பாதுகாப்பும் உடல்நலனும் கிடைக்க, இந்த வகையான புலிப்பல் தாலியை கழுத்தில் போட்டார்கள். இன்று எத்தனையோ நாடுகளில் தடைசெய்யப்பட்ட தடுப்பூசிகளை, `குழந்தைகளின் பாதுகாப்பும் உடல்நலனும்' எனச் சொல்லி உடலில் போடுகிறார்கள். புலிகளைப் பாதுகாக்கிறோம்... பிள்ளைகளை..?

வேப்பம் பழம்
வேப்பமரத்தின் வேர் முதல் நுனி வரை கசப்பாக இருக்கும் என்பது தெரியும். ஆனால், வேப்பம் பழம் இனிக்கும் என்பது இன்றைய தலைமுறையில் பலருக்குத் தெரியாது. கிராமத்தில் வேப்பம் பழம் சாப்பிட்டவர்களில், நுனி நாக்கில் அந்த ஞாபகம் இன்னும் மிச்சம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.
வேப்பம் பழங்கள் காய்த்துப் பழுத்துத் தொங்கும்போது, அதை ஏறிப் பறித்தோ அல்லது கனிந்து உதிர்ந்துவிழும் பழத்தைப் பொறுக்கியோ அப்படியே லேசாக நசுக்கினால், தோல் உரிந்து பழம் வெளியே வரும். பழத்தின் கனத்தில் பெரும்பகுதி கொட்டைதான். சதைப் பகுதி, இனிப்பாக சின்ன லேயர்போல ஒட்டிக்கொண்டிருக்கும். அப்படியே வாயில் போட்டு நாக்கில் பட்டும்படாதவாறு சுவைக்க வேண்டும். பல் பட்டு கொட்டை உடைந்துவிட்டால், கசப்பு வாய் முழுவதும் பரவிவிடும். அதுபோன்ற விபத்துக்கள் நடக்காமல் வேப்பம் பழம் சாப்பிட நாங்கள் பழகியிருந்தோம்.
வேப்பங்கொட்டையை மருந்துக்கு வைத்துக்கொள்வார்கள். மொத்தமாக அரைக்கிலோ ஒரு கிலோ வேப்பங்கொட்டையைச் சேர்த்தால், கடையில் எடைக்குப் போட்டு காசும் வாங்கிக்கொள்ளலாம். வேப்பம் எண்ணெய் தயாரிக்கப் பயன்படும். சீஸனில் பாக்கெட் மணிக்காக வேப்பங்கொட்டை சேகரித்திருக்கிறோம். வேப்பங்கொட்டையை மணிக்கட்டில் செங்குத்தாக நிறுத்தி, இன்னொரு கையால் ஓர் அடி அடித்துவிட்டு கையைக் காற்றில் சுழற்றினால் லேசாக ரத்தம் துளிர்க்கும். இதுபோன்ற ஆகப்பெரிய வன்முறை விளையாட்டுக்கள் எல்லாம் ஆடியிருக்கிறோம்.
கொட்டையை நசுக்கி வெளியே எடுத்த பிறகு கிடைக்கும் தோல், தொப்பி போல அழகாக இருக்கும். அதை ஈர்க்குச்சியில் செருகி, கவண் வில்லில் கல்லை இழுத்து அடிப்பதுபோல அடித்தால், தோட்டாபோல தோல் சீறிப்பாய்ந்து பறக்கும். இப்போதும் வேப்பம் பழங்கள் உதிரத்தான் செய்கின்றன. அவற்றைப் பொறுக்கத்தான் ஆள் இருக்கா எனத் தெரியவில்லை.

நெயில் பாலீஷ்
கிளியோபாட்ராதான் நகத்துக்கு மட்டும் கலர் பண்ணும் நுட்பத்தை ஆரம்பித்துவைத்து. இன்று வரை அது பெண்களின் விரல்களில் தொடர்கிறது என்பார்கள். ஆனால், கிளியோபாட்ராவுக்கு முன்னரே
கி.மு.3,000-த்திலேயே சீனாவில் நகத்துக்கு பாலீஷ் போடும் பழக்கம் இருந்திருக்கிறது. ஆனால், நகத்தில் ஆரம்பித்து கை முழுக்கப் போட்டுக்கொள்வார்களாம். தேன்கூட்டின் மெழுகு, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் தாவரச் சாயங்களின் கலவைதான் சீனாவில் அன்று இருந்த ஃபார்முலாவாம். நம் ஊரில் மருதாணியை அரைத்துப் போட்டு சிம்பிளாக முடித்திருக்கிறார்கள்.
பண்டைய எகிப்தில் வர்க்க வேறுபாடுகளுக்கு ஏற்ப நெயில் பாலீஷ் போட்டுக்கொள்ளும் பழக்கம் இருந்திருக்கிறது. உயர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் சிவப்பு நிறத்தில் போடுவார்களாம். உழைக்கும் வர்க்கத்துக்கு, மங்கிய நிறங்களுக்கு மட்டுமே அனுமதி. அரசிகளின் மம்மிகளை ஆராய்ந்து நகங்களைப் பார்த்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்போல.
9-ம் நூற்றாண்டிலேயே மேற்கில் பல்வேறுவிதமான வாசங்களுடைய நெயில் பாலீஷ் எல்லாம் அறிமுகமாகி யிருக்கின்றன.
நவீன நெயில் பாலீஷ்களைக் கண்டுபிடித்ததற்கு ஆட்டோமொபைல்களுக்கு பெயின்ட்டிங் பண்ணும் நுட்பமும் ஒரு காரணம் என்கிறார்கள். 1917-ல் க்யூடெக்ஸ் நைட்ரோசெல்லுலோஸைப் பயன்படுத்தி நவீன நெயில் பாலீஷ் உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு நெயில் பாலீஷின் வேதியியல் ஃபார்முலாவைப் பார்த்தால், எதில் அசிடேட் முதல் பென்சோபெனோன் வரை வாயில் நுழையாத வேதிப்பொருட்களின் பெயர்கள் நிறைந்து பயமுறுத்துகின்றன. மருதாணியை அடித்துக்கொள்ள முடியாது.