மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திரைத்தொண்டர் - 25

திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம்
பிரீமியம் ஸ்டோரி
News
திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் ( திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் )

அமரர் பஞ்சு அருணாசலம், படங்கள் உதவி: ஞானம்

திரைத்தொண்டர் - 25

‘உங்க ‘கல்யாணராமன்’ எனக்கு ரொம்பப் பிடிச்ச படம்ண்ணே. அந்த ஐடியாவை வெச்சு நான் ஒரு கதை பண்ணலாம்னு இருக்கேன். பண்ணிக்கலாமாண்ணே?’ என நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ்

திரைத்தொண்டர் - 25

வந்து என்னிடம் கேட்டார். ‘தாராளமா பண்ணிக்கப்பா’ என்றேன். மறுநாளும் வந்தார். எனக்கே ஆச்சர்யம், ‘வெச்சுக்கங்கண்ணே’ என ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தார். ஆனால், நான் அவரிடம் பணம் எதுவும் கேட்கவே இல்லை. `என் எத்தனையோ கதைகளை எடுத்து, மரியாதைக்குக்கூடச் சொல்லாமல் படம் பண்ணுபவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவரா?!' என்று எனக்கு ஆச்சர்யம்.

‘கல்யாணராமன்’ கதையை மையமாக வைத்து அவர் எடுப்பதாகச் சொன்ன ‘முனி’ மிகப்பெரிய வெற்றி. அடுத்து வந்த ‘காஞ்சனா’வும் வெற்றி. ‘பயந்த சுபாவம் உள்ள ஹீரோ’ என்ற ஒரு விஷயத்தைத் தவிர `கல்யாணராமனு’க்கும் அவரின் படங்களுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. அந்த ஐடியாவை வைத்து எடுக்கலாம் என நினைத்து டெவலப் பண்ணும்போது, அது வேறு ஒரு கதையாக மாறிப்போயிருக்கிறது. ‘என்னப்பா... என் பட ரைட்ஸை வாங்கிட்டு வேற படங்கள் எடுத்திட்டிருக்க?’ என்றேன். ‘கல்யாணராமன்’ இன்ஸ்பிரேஷனை வெச்சு இன்னும் எத்தனை படங்கள் வேணும்னாலும் எடுக்கலாம்ணே’ என்றார் லாரன்ஸ். சந்தோஷமாக இருந்தது.

திரைத்தொண்டர் - 25

நான் தேவர் ஃபிலிம்ஸுக்காக கதை விவாதத்துக்குப் போகும்போது அங்கு பழக்கமானவர் தூயவன். ‘சக்ரவர்த்தி’ என்ற படத்துக்கு வசனம் எழுத வந்த மகேந்திரன் சாருடனும் அப்போதுதான் எனக்குப் பழக்கம். நாங்கள் மூவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி, நிறையக் கதைகளை விவாதித்து, ஒன்றாக நிறைய நேரங்கள் செலவழித்திருக்கிறோம். தேவர் இறந்த பிறகு, தூயவனுக்கு வேறு வருமானம் இல்லை. ஃபைனான்ஸ் வாங்கி சொந்தப் படம் எடுப்போம் என முடிவு செய்திருந்தார். ‘என்னை நீங்க டைரக்டராகப் போட்டீங்கன்னா, எப்படியும் 10 நாளாவது ரஜினி கால்ஷீட் வாங்கிட்டு வந்துடுவேன்’ என்று கே.நட்ராஜ் சொல்லியிருக்கிறார். இந்த விவரங்களை, தூயவன் என்னிடம் சொன்னார். நான் அப்போது ‘தம்பிக்கு எந்த ஊரு’ ஷூட்டிங் கிளம்பிக் கொண்டிருந்தேன்.

‘ஃபெஸ்ட்டிவல்ல வந்த ஒரு நல்ல கதை. அதை தமிழுக்குத் தகுந்த மாதிரி நான் மாற்றி எழுதியிருக்கேன்’ என, கதையையும் சொன்னார். ‘ஃபெஸ்ட்டிவல்ல வந்திருக்கலாம். அதை இங்கிலீஷ் ரசிகர்களும் ரசித்திருக்கலாம். நம்ம ஊர்ல ஹீரோ ஒரு பொறுப்பை எடுத்துக்கிட்டார்னா, அதை அவர் சக்சஸ் பண்ணினாத்தான் அந்தப் படம் ஓடும். ஆனா, இதுல ஹீரோவின் ரசிகையா வர்ற அந்தச் சிறுமியை அவரால் காப்பாற்ற முடியலைனு வந்தா, தமிழ்ல ஓடாது தூயவன்’ என்றேன். ‘எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. கண்கலங்கி அழுதுட்டாங்க. நிச்சயம் ஓடும்’ என்றார். ‘அப்படின்னா நீங்களே பண்ணுங்க’ என்றேன்.

‘நீங்க ஏதாவது ஃபைனான்ஸ் ஏற்பாடு பண்ணுங்க. இல்லைன்னா, நீங்களே தயாரிங்க. அதுவும் இல்லைன்னா படத்தை நான் உங்களுக்கு எழுதித் தந்துடுறேன். ஒரு விலை வைத்து மொத்தமா நீங்களே எடுத்துக்கங்க. நீங்க எனக்கு ஏதாவது சம்பளம் மாதிரி கொடுங்க’ என்றார். ‘நான் பெரிய படம் ஒண்ணு பண்ணிட்டிருக்கேன். அதை முடிச்சுட்டு வர்றேன்’ என்றேன். உண்மையிலேயே எனக்கு அந்தக் கதை பிடித்திருந்தாலும், ‘அந்தப் படம் ஓடாது’ என நினைத்தேன். பிறகு தூயவன், ஒரு ஃபைனான்ஷியரிடம் முதல் பிரதி அடிப்படையில் பேசி அக்ரிமென்ட் போட்டு விட்டார். அந்தப் படம்தான் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’.

திரைத்தொண்டர் - 25

ஒருகாலத்தில் தூயவனிடம் பாக்யராஜ் அசிஸ்டன்டாக வேலை செய்திருக்கிறார். அந்தப் ப்ரியத்தின் காரணமாக அவர் பாக்யராஜிடம், ‘ஆரம்பத்துல இருந்தே தன்கூட இருக்கும் நட்ராஜுக்காக, ரஜினிகாந்த் 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கார். அந்த மாதிரி நீ எனக்காக 10 நாட்கள் கால்ஷீட் தரக் கூடாதா?’ என்று கேட்டிருக்கிறார். ‘சரி தர்றேன். ஆனா, இந்தக் கதையில் எனக்கு வேலையே இல்லை. அதனால் படத்துக்குள் ஒரு டிராமாவை வைத்து, அதில் நானும் ரஜினியும் நடிக்கிறோம். அந்த டிராமாவையும் நானே எழுதித் தர்றேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

பிறகு ஃபைனான்ஷியரிடம் தூயவன், ‘நான் இப்படிக் கூடுதலான சில விஷயங்களைச் சேர்க்கிறேன். படம் நல்ல விலைக்கு விற்கும். நீங்க முன்னாடி பேசினது தவிர, எனக்கு எவ்வளவு தருவீங்க?’ எனக் கேட்டிருக்கிறார். ‘இதுல பாக்யராஜும் நடிச்சு, அவரே ஒரு போர்ஷனை டைரக்‌ஷன் பண்ணி, காமெடி எல்லாம் சேர்த்தால், நான் உங்களுக்கு கூடுதலா 5 லட்சம் ரூபாய் தர்றேன்’ என்று அந்த ஃபைனான்ஷியர் சொல்லியிருக்கிறார்.

ஆனால் அதற்கான எந்த அக்ரிமென்ட்டும் கையெழுத்து ஆகவில்லை. படம் முடிந்து, ஃபர்ஸ்ட் காப்பி எடுத்துவிட்டார்கள். நான் எதிர்பார்த்ததைவிட படம் நன்றாகவே போனது. அந்த ஃபைனான்ஷியருக்கு 15 லட்சம் ரூபாய்க்கும் மேல் லாபம். தூயவனுக்கு 5 லட்சம் தருவதாகச் சொன்னவர், தரவில்லை. கேட்தற்கு, `அக்ரிமென்ட்படி பணம் கொடுத்துட்டேன். அவ்வளவுதான்’ என்று கையை விரித்துவிட்டார்.

‘நான் ஆரம்பத்துலயே உங்களைத் தான் பண்ணச் சொன்னேன். நீங்க பண்ணியிருந்தீங்கன்னா, உங்களுக்கும் லாபம் வந்திருக்கும்; அதுல எனக்கும் ஒரு பங்கு தந்திருப்பீங்க. பாக்யராஜ் எனக்காக சும்மா பண்ணிக்கொடுத்தார். அந்த லாபமும் வரலை’ என வருத்தப்பட்ட தூயவன், ‘அடுத்து இப்ராஹிம் ராவுத்தரிடம் கேட்டிருக்கேன். `விஜயகாந்த் கால்ஷீட் வாங்கி தர்றேன்’னு சொல்லியிருக்கார். இந்தப் படத்துக்காவது மறுக்காம உதவி பண்ணுங்க’ என்றார். ‘சரி' என நினைத்து, ‘இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் படங்கள் வரிசையா நல்லாப் போகுதாம். அவர் எனக்குப் பழக்கம் இல்லை. உனக்கு அவரைத் தெரியுமா?’ என்று கேட்டேன்.

திரைத்தொண்டர் - 25

‘அட... பாக்யராஜ், சுந்தர்ராஜன் எல்லாரும் என் வீட்ல சுத்திக்கிட்டு இருந்தவங்கதான்’ என்றார். ‘சுந்தர்ராஜனிடம் கால்ஷீட் வாங்கிக் கூட்டிட்டு வா. அவர் டைரக்‌ஷன் பண்றதா இருந்தா, நான் உனக்கு ஃபைனான்ஸ் பண்றேன்’ என்றேன். ‘நாளையோ நாளை மறுநாளோ ஆளைத் தேடிப் பிடித்துப் பேசி அழைத்துக்கொண்டு வருவார்’ என நினைத்திருந்த எனக்கு,  அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் சுந்தர்ராஜனை அழைத்து வந்தது பெரிய ஷாக்!

பேசினோம். ‘இவருக்காக நீங்க ஒரு படம் பண்ணிக்கொடுக்கிறதா சொன்னார். நீங்க பண்றதா இருந்தா, நான் டைரக்‌ஷன் பண்றேண்ணே’ என்றார் சுந்தர்ராஜன். ‘எக்கச்சக்கமா சம்பளம் கேட்கிறார், எல்லோருடனும் சண்டை, அரட்டையாகப் பேசுவார். ஜாக்கிரதையாகப் பழகணும்...’ என்று அப்போது சுந்தர்ராஜனைப் பற்றி இண்டஸ்ட்ரியில் பேசிக்கொண்டார்கள். எனக்கு, பிரச்னை என்றால் பயம். அதனால் தெளிவாகப் பேசிக்கொள்வோம் என நினைத்து, ‘என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீங்க, எப்ப பண்றீங்க?’ என்றேன்.

‘நானும் ரெண்டு மூணு படங்கள் பண்ணிட்டேன். எல்லாம் சில்வர் ஜூப்ளி. அடுத்து, ‘எனக்கு... உனக்கு’னு சில பேர் படம் பண்ணச் சொல்லி அட்வான்ஸ் கொண்டுவந்தாங்க. எதையும் நான் வாங்கலை. வீடு வாங்கணும்னு எனக்கொரு ஆசை. அதுக்கு உதவி பண்ணீங்கன்னா, உடனே உங்களுக்கு படம் பண்றேன்’ என்றார் சுந்தர்ராஜன்.

‘சரி, ஒரு வீடு பாருங்க’ என்றேன்.

‘ஏதாவது சந்தர்ப்பம் கிடைச்சா வாங்க வசதியா இருக்குமேனு கோடம்பாக்கத்துல ஒரு வீடு பார்த்து வெச்சிருந்தேன். இரண்டே முக்கால் ரூபாய் சொல்றாங்க. என்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு. ரெண்டு ரூபாய் கொடுத்தீங்கன்னா வீடு  வாங்கிடுவேன்' என்றார். உடனே ரெண்டு லட்சம் ரூபாய்க்கு ஒரு செக் எழுதிக் கொடுத்தேன். ‘இதைவெச்சு வாங்கிக்க. பத்தலைன்னாலும் தர்றேன்’ என்றேன். நான் ஏதோ சும்மா தூக்கிக் கொடுத்துவிட வில்லை. சம்பளத்துக்குப் பதிலாக வீடு வாங்கிக்கொடுத்தேன் அவ்வளவுதான்.

அவர் ஒரு கதை சொன்னார். அந்தக் கதை எனக்குப் பிடித்திருந்தது. ‘சரி, நாம டெவலப் பண்ணிக்கலாம்’ என்றேன். ஆனால், அந்தக் கதைக்கு விஜயகாந்த் சரியா வருவாரா என்ற சந்தேகம். ‘ஏம்பா... அவர் நிறைய ஃபைட்டிங் பிக்சர் பண்ணிட்டிருக்கார். இந்தக் கதையை அவர் ஒப்புக்குவாரா?’ என்றேன்.

‘விஜயகாந்த் கதை கேட்க மாட்டார். ராவுத்தர்கிட்ட பேசுறேன்’ என்றார் தூயவன்.

‘சரி, நீ ராவுத்தரைப் பார்க்கப் போகும்போது சுந்தர்ராஜனையும் அழைச்சுட்டுப் போ. இந்தக் கதைக்கு ஒப்புக்கலைன்னா, ‘இதுக்கு பஞ்சு அண்ணன் நூத்துக்கு நூறு கியாரன்டி. இது விஜயகாந்த்துக்கு வித்தியாசமான படமா இருக்கும். வேணும்னா அவரே நேர்ல வந்து சொல்றேன்னு சொன்னார்னு சொல்லு’ என்று சொல்லி அனுப்பினேன்.

‘ஆரம்பத்துல இருந்தே தாடி வெச்சுக்கிட்டு சோகப்பாட்டா பாடிட்டு இருந்தா எப்படிப்பா?’ என்று ராவுத்தர் சந்தேகமாகக் கேட்டிருக்கிறார். ‘இப்படி கேட்பீங்கனு தெரிஞ்சுதான் பஞ்சு அண்ணன் அவர் கியாரன்டினு சொல்லச் சொன்னார். அவர் பொறுப்புல விடுவீங்களாம்’ என்று சொல்லியிருக்கார். ‘பஞ்சு சார் சொன்னா சரியா இருக்கும். அவர் எப்படிச் சொல்றாரோ அப்படியே பண்ணுங்க’ எனச் சொல்லியிருக்கிறார் ராவுத்தர்.

திரைத்தொண்டர் - 25

`படத்தில் ‘கவுண்டமணி - செந்தில்’ காம்பினேஷன் இருந்தே ஆகணும்' என்றேன். அவர்கள் இருவரும் அதற்கு முன்னர் ஒருசில படங்களில் சேர்ந்து நடித்திருந்தாலும் அந்த காம்பினேஷன் ஓகோவென பாப்புலர் ஆனது இந்தப் படத்தில்தான். படம், பாட்டு, காமெடி... எல்லாமே அந்தப் படத்தில் சூப்பர் ஹிட். விஜயகாந்த் எத்தனையோ படங்கள் பண்ணியிருந்தாலும் அவருக்கு மிகச்சிறந்த பேர் கொடுத்தது இந்தப் படம்தான். அது, `வைதேகி காத்திருந்தாள்'.

வி.எம்.சரவணன் சார் கூப்பிட்டார். `ரஜினி சார் கால்ஷீட் கொடுத்துட்டார். அவருக்கு ஒரு கதை பண்ணுங்க’ என்றார். யோசித்தேன். நானும் மனிதன்தானே புதிதாக எந்தக் கதையுமே தோணவில்லை. பிறகு, ‘குகநாதன் ஒரு கதை சொன்னார். பிடிச்சிருந்தா அதை டெவலப் பண்ணுங்க’ என்றார் சரவணன் சார். ‘அமாவாசையில் பிறந்தவன் திருடனாகத்தான் இருப்பான்’ என்ற நம்பிக்கையை வைத்து அந்தக் கதையை யோசித்திருந்தார். ‘அது பொய்’ என என் ட்ரீட்மென்டில் நான் நிரூபிக்க வேண்டும். எனக்கு அந்த லைன் பிடித்திருந்தது. அந்தப் படம்தான் ‘மனிதன்’. படம் சூப்பர் டூப்பர் ஹிட்!

அந்தச் சமயத்தில் இளையராஜா கூப்பிட்டு, ‘அண்ணே... ரஜினி சார்கிட்ட கேட்டு எனக்கு ஒரு படம் பண்ணிக்கொடுங்க’ என்றார். அவரின் சகோதரர் பாஸ்கர், அதற்கு முன்னர் ஒன்றிரண்டு படங்கள் பண்ணியிருந்தார். அதில் பாரதிராஜாவுடன் பண்ணின முதல் படம் சூப்பராக ஓடியது. அடுத்து இரண்டு படங்கள் சரியாகப் போகவில்லை. ரஜினி சாரும் கால்ஷீட் கொடுத்தார். ‘ஃபைனான்ஸை எல்லாம் நானே ஏற்பாடு பண்ணிக்கொடுத்தேன்.

ஆர்.சுந்தர்ராஜன் டைரக்‌ஷன், நான் வசனம் எழுதினேன். அந்தப் படம்தான் ‘ராஜாதிராஜா’. அந்தப் படமும் நன்றாகப் போனது. அது பாஸ்கருக்கு செட்டில்மென்ட் கொடுத்தது.

ப்படி நிறையப் படங்கள் பண்ணிக்கொண்டி ருந்தேன். சமயங்களில் சின்னச்சின்ன ஆசைகள் வரும் இல்லையா... அப்படி ‘நாமளும் ஒரு படம் டைரக்‌ஷன் பண்ணிப் பார்க்கலாமே!’ என்ற ஆசை வந்தது. நல்ல காமெடி சப்ஜெக்ட், தலைப்பு ‘மணமகளே... வா’. மெயின் ரோல்களில் பிரபு, ராதிகா. எஸ்.எஸ்.சந்திரன், கவுண்டமணி, சோ, மூர்த்தி... இப்படி நிறைய ஆர்ட்டிஸ்ட்டுகள். ஒரு டைரக்டரின் வேலை என்னென்ன என்பது எனக்குத் தெரியும். ஆனால், அதை எல்லாம் பார்க்கும் அளவுக்கு எனக்குப் பொறுமை இல்லை. அதை நான் ஆரம்பத்திலேயே உணர்ந்து பார்த்து புரிந்திருக்க வேண்டும்.

நடிகர்கள் சரியாகப் பண்ணிவிட்டால், ‘ஷாட் ரெடி ஓ.கே. நெக்ஸ்ட்’ எனப் போய்விடுவேன். தவறு பண்ணினால் இரண்டாவது டேக், மூன்றாவது டேக் போகும்போது எல்லாம் பொறுமை இழந்து ‘என்னடா இது... எடுத்ததையே திருப்பித் திருப்பி எடுத்துட்டிருக்கோம்!’ என மூட்அவுட் ஆகிடுவேன். 

‘ஆரம்பிச்சுட்டோம், இடையில விட்டோம்னா பேர் கெட்டுப்போயிடும்’ என்ற யோசனை. பிறகு என் நண்பர் சி.வி.ராஜேந்திரனைக் கூப்பிட்டு அருகில் வைத்துக்கொண்டு, எடுக்க ஆரம்பித்தேன். எனக்கு எந்த மாதிரி வேண்டும் எனச் சொல்லி பெரிய சீன்களை அவரை எடுக்கச் சொல்லிவிட்டு, நானும் சில சீன்களை எடுப்பேன். ஒருவழியாக அந்தப் படத்தை எடுத்து முடித்தேன். ரிலீஸ் ஆனது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நான்கூட எதிர்பார்க்கவில்லை, படம் மிகப்பெரிய வெற்றி.

ந்தப் படம் ராஜாவுக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. ‘நம்ம கம்பெனிக்கு ஒரு படம் டைரக்ட் பண்ணுங்க’ என்றார். ‘நான் ஏதோ ஒரு காமெடிப் படம் பண்ணினேன். ஓடிடுச்சு. நமக்குப் பண்றதா இருந்தா மியூஸிக்கல் பிக்சர் பண்ணணும்’ என்றேன். ‘நீங்க பண்ணுங்க’ என்றார். நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் சிலர் சொன்னால் அதைத் தட்டவே மாட்டேன். அவர் சொல்கிறார் என்றால் காரணம் இல்லாமல் இருக்காது’ என்று ஒப்புக்கொண்டேன். ராமராஜனை ஃபிக்ஸ் பண்ணியிருந்தார். கதைக்கு தகுந்த மாதிரி சுமாரங்கநாத், வைதேகி உள்பட புதிதான ஆட்களை புக் பண்ணினேன். வழக்கம்போல் கவுண்டமணி-செந்தில்.

ஷூட்டிங்கை ஒரே சமயத்தில் பண்ணணும் என்பது திட்டம். ஆனால், அப்போது ராமராஜனின் நான்கைந்து படங்கள் பிரமாதமாக ஓடி, அவரை ஏராளமானோர் புக் பண்ணியிருந் தார்கள். எல்லோரிடமும் அட்வான்ஸ் வாங்கிட்டார். அதனால் மாதத்துக்கு மூன்று நாட்கள், நான்கு நாட்கள் என்றே கால்ஷீட் கொடுத்துவந்தார். ‘எனக்கு இப்படி எல்லாம் வேலைசெய்து பழக்கம் கிடையாது. உங்களுக்குத் தொடர்ந்து எப்ப கால்ஷீட் கொடுக்க முடியுமோ, அப்ப கொடுங்க’ என்றேன். அப்படி அந்தப் படத்தை முடிக்க ஒரு வருடம் ஆனது.

திரைத்தொண்டர் - 25

அந்தப் படத்தில் நான் பண்ணின ஒரே தவறு, அதற்கு முன்னர் வந்த ராமராஜன் சார் படங்களில் ஒரு படத்தைக்கூட நான் பார்க்க வில்லை என்பதுதான். நான் பண்ணியிருந்த கதை, க்ளாஸ் லவ் ஸ்டோரி வித் மியூஸிக்கல் சப்ஜெக்ட். ஸ்பாட்டுக்குப் போய் எடுக்க ஆரம்பித்த பிறகுதான் ‘இந்த சப்ஜெக்ட்டுக்கு அவர் சரிப்பட்டு வர மாட்டார்’ எனத் தோன்ற ஆரம்பித்தது. பிறகு, கதையை அவருக்குத் தகுந்தாற்போல் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, படத்தை ஒருவழியாக முடித்தேன். படம் க்ளாஸாக வந்திருந்தது. ஓரளவுக்கு ஓடிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்தச் சமயத்தில் ராமராஜன் அ.தி.மு.க-வில் இருந்து விலகியதால் அவருக்கு இருந்த லேடீஸ் மாஸ் கொஞ்சம் குறைந்தது என நான் நினைத்தேன். அது சூப்பர் ஹிட் ஆகவேண்டிய படம் கிடையாது. ஆனால், ஓரளவுக்கு ஓடியிருக்கவேண்டிய படம்.   சுமாராகத்தான் போனது. அந்தப் படம்தான் ‘புதுப்பாட்டு’.

தைத் தொடர்ந்து ‘தம்பி பொண்டாட்டி’ என்ற பெயரில் வித்தியாசமான ஒரு கதை எழுதினேன். அந்தப் படத்துக்கு பெயர் வந்த அளவுக்கு அது பெரிதாக ஓடவில்லை. இதற்கு இடையில் ஜெயசுதா தெலுங்கில் தயாரித்த படம், அங்கு ஓகோவென ஓடியது. நண்பர் ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ் அவர்கள், இந்த விவரத்தை என்னிடம் சொன்னார். படம் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. அதையும் தமிழில் எடுத்தேன். ஆனா, அந்தப் படமும் சுமாராகத்தான் போனது. `நாம் எழுதுவதை, நாம் நினைத்தபடி அழகாக எடுத்துத் தர இங்கு நிறைய இயக்குநர்கள் இருக்கும்போது நமக்கு எதற்கு டைரக்‌ஷன்?' என யோசித்த அந்த நாளில் தான் டைரக்‌ஷன் பண்ணுவதை நிறுத்தினேன்!

- தொண்டு தொடரும்...