மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 58

கலைடாஸ்கோப் - 58
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 58

எண்ணம், வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 58

தேனீ காதலன்

மேத்யூ வில்லி (Matthew Willey) நியூயார்க் ஓவியர். அழிந்துவரும் தேனீக்களைப் பற்றிய விழிப்புஉணர்வைத் தூண்டுவதற்காக The Good of the Hive என்ற பெயரில் ஓவியம் வரைந்துகொண்டிருக்கிறார். அதுவும் உலகம் முழுக்க வலம்வந்து 50,000 தேனீக்களின் ஓவியங்களை வரைவதுதான் இவரின் இலக்கு.

ஒருநாள் தனது ஸ்டுடியோவுக்குள் தவறுதலாக வந்த தேனீ ஒன்று, அலைந்து திரிந்து இறந்துபோயிருக்கிறது. அது ஏன் என்பதற்கான பதில் தேட ஆரம்பித்திருக்கிறார் மேத்யூ. காரணம், Altruistic suicide. `அதாவது நோய்வாய்ப்பட்ட ஒரு தேனீ, பிற தேனீக்களுக்கு அந்த நோய் பாதிப்பு நிகழாமல் இருக்க தன் கூட்டில் இருந்து வெளியேறி தொலைவில் வந்து தற்கொலை செய்துகொள்கிறது' என்கிறார்.

கலைடாஸ்கோப் - 58

`அந்தச் சம்பவம், எனக்கு தேனீக்கள் மீதான ஆர்வத்தை அதிகரித்தது. பிறகு, தேனீக்களைப் பற்றித் தேடத் தேட அவற்றைப் பற்றிய ஆச்சர்யமான தகவல்கள் வந்துகொண்டே இருந்தன. அறிவியல் வளர்ச்சி, தேனீக்களின் வாழ்வியலில் குழப்பத்தை ஏற்படுத்தி அவற்றை அழிவை நோக்கிக் கொண்டுசெல்கிறோம் என்பதை, தேனீக்களின் மீது உலகின் கவனத்தைக் குவிக்க நினைத்தேன். இந்த ஓவியங்கள் வழியாக மனிதர்களுக்கும் தேனீக்களை ஞாபகப்படுத்த நினைக்கிறேன். இந்த ஓவியங்களை நான் வரைய ஆரம்பித்தபோது சந்தித்த, ஒவ்வொரு மனிதரிடமும் தேனீக்கள் பற்றி சொல்ல ஏதோ ஒன்று இருக்கிறது' என்கிறார் இந்த தேனீ காதலன்.

கலைடாஸ்கோப் - 58

புள்ளி

அந்த உயர் கட்டடத்தின் 18-வது மாடி அறையில் மிஸ்டர்.கெயின் கண் விழித்தபோது, எதிரே டாக்டர் லாசர் நின்றிருந்தார்.

``மூளையின் ஃப்ரெண்டல் லேபில் ஒரே ஒரு புள்ளி, அதில் சின்னத் திருத்தம். பொறாமை என்னும் உணர்ச்சியை முழுவதுமாக அகற்றிவிட்டேன். அதற்காகத்தான் இந்த சர்ஜரி. இப்போது நீதான் இந்த உலகின் முதல் பொறாமை உணர்ச்சியே இல்லாத மனிதன்” என்றார் டாக்டர் லாசர்.

பெட்டில் இருந்து எழுந்து உட்கார்ந்து புன்னகைத்தான் மிஸ்டர் கெயின்.

லாசர் அருகில் வந்து சொன்னார், “மிஸ்டர் கெயின், என் பல வருட ஆராய்ச்சிகளுக்கு நல்கிய ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி. நியூராலஜியில் இது ஒரு சாதனை. ஏன், மனித வரலாற்றிலேயே இது ஒரு மகா சாதனைதான்.”

லாசர் சில குறிப்புகளை, புகைப்படங்களை கெயினின் முகத்துக்கு நேராகக் காட்டினார். “பார், இவை எல்லாம் உன் வாழ்க்கையில் உன்னைப் பொறாமைப்படவைத்த விஷயங்கள். இவை எல்லாம் பார்த்தால், இப்போது உனக்கு எப்படி இருக்கிறது?”

“எதுவும் தோன்றவில்லை டாக்டர்” என்றான் கெயின்.

``நல்லது. உனக்கு மீண்டும் நன்றி. நீ என் ஆராய்ச்சிக்கு கிடைத்த எலி. நான் வெற்றி பெற்றுவிட்டேன். இந்தச் செயலுக்காக நான் பெறப்போகும் விருதுகளை, பாராட்டுக்களை எல்லாம் நீ பார்க்கத்தான் போகிறாய்” என்றார் லாசர்.

கெயின் மெள்ள எழுந்து நின்றான்.

“இந்த வருட நோபல் எனக்குக் கிடைத்தால், நீ ஆச்சர்யப்பட மாட்டாய் அல்லவா?” என்ற லாசர், அறை அதிர சிரித்தார்.

“என் உயிரைக் கொடுத்து இந்த ஆராய்ச்சிக்கு ஒத்துழைத்திருக்கிறேன். நான் எலி... விருது உங்களுக்கா?” என்றபடி லாசரை ஜன்னல் கண்ணாடியில் அழுத்தினான். கண்ணாடியை உடைத்துக்கொண்டு கீழ்நோக்கி விழுந்த லாசர் கத்தினார் “ஏன் கெயின்... ஏன்?”

கெயின் சொல்வது லாசர் காதில் விழுந்தது `பொறாமை'.

கலைடாஸ்கோப் - 58

நகைச்சுவை

தாத்தாக்களிடம் இருந்த நகைச்சுவை உணர்ச்சி பேரன்களிடம் இல்லையோ? அந்தக் கால பெருசுகள் வாயைத் திறந்தால் வெற்றிலைச்சாறுடன் நக்கல் நையாண்டியையும் தெறிக்கவிடுவதைப் பார்த்திருக்கிறோம். இப்போது நகைச்சுவை உணர்ச்சி குறைந்துவிட்டதா?

சில நாட்களுக்கு முன்னர் டெலிகிராஃப் இணைய தளத்தில் படித்த ஒரு கட்டுரை `உலகம் தன் ஹ்யூமர் சென்ஸை இழந்துகொண்டே இருக்கிறதா?' என்ற கேள்வி எழுப்பியது. `ஒரு கார்ட்டூனைச் சகித்துக்கொள்ள முடியாத சார்லி ஹெப்டே பத்திரிகை அலுவலகத் தாக்குதல் உதாரணம்' என்று அதில் சொல்கிறார் கட்டுரையாசிரியர்.

நகைச்சுவை என்பது, அதிகாரத்துக்கு... அடக்கு முறைகளுக்கு எதிராகக் கேள்விகள் எழுப்பக்கூடியது; மக்களிடம் இணக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் உருவாக்கக்கூடியது என்பது அறிவியல்பூர்வமான விளக்கம். அந்தப் பயம் இருந்ததினால்தான் ஹிட்லர் 1933-ம் ஆண்டில் `ஜோக்ஸ்'க்குத் தடைவிதித்து ஒரு சட்டம் இயற்றினார். குறிப்பாக, ஹிட்லரின் ராணுவத்தைக் கிண்டல் பண்ணும் ஜோக்குகளை யாராவது சொன்னால், உடனடி ஜெயில். ஆனால் நம் சாப்ளின், ஹிட்லரை `தி கிரேட் டிக்டேட்டர்'-ல் நம் ஊர் மொழியில் சொன்னால் `நல்லா வெச்சுசெய்தார்’.

உண்மையில் அதிகாரமும் ஆட்சியாளர்களும் சீரியஸாக விமர்சிப்பதைவிட கிண்டல் கேலிசெய்வதைச் சகித்துக் கொள்ளாது. அதன் ஆழமும் தாக்கமும் அதிகம். முதல் வரியின் கேள்விக்கு இப்போது வருவோம். தாத்தாக்களிடம் இருந்த கேலி, கிண்டல் பேரன்களிடம் இல்லையா? இருக்கிறது. தாத்தாக்கள், திண்ணைச் சுவரில் சாய்ந்துகொண்டு அதைச் செய்தார்கள். பேரன்கள், ஃபேஸ்புக் சுவரில் அதை ஸ்மைலியும் மீம்ஸும் போட்டுக் கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள். டெலிகிராஃப் கட்டுரையாளர் பயப்படுவது வீண். `கடவுளின் பரிசு' என நகைச்சுவையைச் சொல்வார்கள். கடவுளே நக்கல் பிடிச்ச ஆள் எனத் தோன்றுகிறது. பிரபஞ்ச படைப்பில் அவர் செய்த நையாண்டிதான் மனிதன்.

கலைடாஸ்கோப் - 58

சைன் போர்டு ஆர்ட்டிஸ்டுகள்

சிறுவயதில் எனக்குத் தெரிந்த டாவின்சியும் ரவிவர்மாவும்தான் எங்க ஊர் சைன் போர்டு ஓவிய அண்ணன்கள். மியூஸிக்கல் கடைகள் முதல் சலூன்கள் வரை எனாமல் பெயின்ட்டில் என்னென்னமோ மேஜிக் காட்டியிருப்பார்கள். இளையராஜா, ரஜினி, கமல் அனைவரும் கடைப் பலகைகளில் தத்ரூபமாகச் சிரிப்பார்கள். எழுத்துகள் எல்லாம் 3டி எஃபெக்ட்டில் எழுந்து நிற்கும்.

அரசியல்வாதிகள் முதல் சினிமாக்காரர்கள் வரை பிரபலங்களில் கட்அவுட்டுகளை பெரிய சைஸில் வரைவதை, 90-களில் பார்த்திருப்பீர்கள். கட்அவுட் கலாசாரம் அரசியல் மாற்றத்துக்குக்கூட காரணமாக இருந்ததை அறிவீர்கள். ஆனால், அந்த மெகா சைஸ் கட்அவுட்டுகளை வரைவது அவ்வளவு அநாயாசம் அல்ல. தலை முதல் கால் வரை துண்டு துண்டாக வரைந்துதான் ஒன்றாகச் சேர்க்க முடியும். அனாடமி மிஸ்ஸானால் அத்தனையும் வீண். ஆகவே, கணக்குகள் துல்லியமாக இருக்கவேண்டிய கலை அது.

கலைடாஸ்கோப் - 58

ஆர்ட் மீதான ஆர்வம் காரணமாக இந்த சைன் போர்டு அண்ணன்கள் வரைவதை, பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். பென்சிலால் கிரிட்டுகள் போட்டு சாக்பீஸால் உருவங்களை முதலில் வரைந்துகொள்வார்கள். பிறகு, எனாமல் பெயின்ட்டுகளை மிக்ஸ் பண்ணி மெள்ள மெள்ள கண்களில் இருந்தோ கன்னத்தில் இருந்தோ ஆரம்பித்து லேயர் லேயராக உருவம் முழுமை அடைவது அற்புதம். டைப்போகிராஃபி எழுதுவதற்காக அதற்கான பேஸ்லைன்களைப் போட்டுக்கொள்ள ஒரு நூலை பொடி நீலத்தில் புரட்டி இரண்டு நுனிகளையும் இரண்டு பேர் சுவருடன் சேர்த்துப் பிடித்திருக்க, டைட்டான நூலை லேசாக இழுத்துவிட்டால் நீல வண்ணத்தில் கோடு சுவரில் பதிந்துவிடும். அதன் மீது லெட்டரை எழுதுவார்கள். அதற்கு கிரேடியன்ட், ஷேடோவ் எல்லாம் கொடுத்து 3டி எஃபெக்ட் கொண்டுவருவார்கள். நீங்களும் இதை எல்லாம் பார்த்திருக்கக்கூடும். சைன் போர்டு ஆர்ட்டிஸ்டுகளின் பொற்காலம் அது. கம்ப்யூட்டரும் ஃப்ளெக்ஸுகளும் வந்து அந்த ஓவியர்களை ஓரம்கட்டியது பிற்காலம்.

கலைடாஸ்கோப் - 58

மெழுகுவத்தி

நம் கவிஞர்கள், சோகத்தின் குறியீடாக மெழுகுவத்தியை ஏகத்துக்கும் கவிதையில் பயன்படுத்தியதால், அதை நினைக்கும்போதே நம்மில் சிலருக்கு மனம் உருகுகிறது. நம் ஊரில் வெளிச்சத்துக்கு விதவிதமான எண்ணெய் விளக்குகள் வைக்கும் பழக்கம்தான் இருந்தது.

மெழுகுவத்திகளைக் கண்டுபிடித்தது யார் என, அதன் வரலாற்றில் அதன் வெளிச்சம் விழுந்த பக்கங்களைத் தேடினேன்.

ரோமில் கி.மு500-களில் மாமிசக் கொழுப்பை மெழுகாகப் பதப்படுத்திப் பயன்படுத்தி விளக்கு எரிக்க ஆரம்பித்ததுதான் இதன் ஆதிமூலம் என்கிறார்கள். கி.மு 2-ம் நூற்றாண்டு சீனாவின் கின் பேரரசர் கின் ஷி ஹாங்கின் கல்லறையை 90-களில் தொல்லியலாளர்கள் கண்டடைந்தபோது, அங்கே நிறைய மெழுகுவத்திகள் பயன்படுத்தியிருந்ததைப் பார்த்தனர். ஆராய்ந்துபார்த்தால், அவை திமிங்கலக் கொழுப்பில் இருந்து செய்யப்பட்டவை எனத் தெரிந்திருக்கிறது.

மத்திய கால ஐரோப்பிய வரலாற்றில் விலங்குக் கொழுப்புகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மெழுகுவத்திகள் விற்பனை ஒரு வியாபாரமாக வளர்ந்திருக்கிறது.

இந்த மெழுகுவத்திகளின் ஒளி கண்களுக்குத் தேவையாக இருந்தாலும், மூக்கினால் சகித்துக்கொள்ள முடியவில்லை. காரணம், எரியும்போது வரும் துர்நாற்றம். அதனால் தேன்கூடுகளில் இருந்து மெழுகுவத்திகள் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், அவற்றை அரச குடும்பத்தவர்களும் தேவாலயங்களும் மட்டுமே பயன்படுத்த முடியும் அளவில் விலையும் இருந்ததாம்.

நவீன மெழுகுவத்தி, பெரும்பாலும் பாரஃபின் மெழுகு, ஸ்டீரின் (Stearin) போன்ற வேதிப்பொருட்களால் உருவாக்கப்படுகிறது. 19-ம் நூற்றாண்டின் கடைசியில் மின்சார பல்பு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மெழுகுவத்திகள், மதச் சடங்குகளுக்கும் அலங்காரங்களுக்கும் காதலர்கள் `கேண்டில் லைட்' டின்னர் சாப்பிடவும் பயன்படுகின்றன.

நம் ஊரில் மின்வெட்டு, வெள்ளம் வந்தால்தான் இதன் ஞாபகம் வருகிறது.