
ஞானப்பழம்

ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடையாமல் படியுங்கள். இந்த வார சுட்டபடம் ‘ஜிகிர்தண்டா’ - மதுரைப் பின்னணியில் குளுகுளு பெயரில் வந்த கேங்ஸ்டர் சினிமா. ஒளிப்பதிவு, எடிட்டிங், பாபி சிம்ஹா எனப் பல விஷயங்களுக்காகப் பேசப்பட்ட படம். தேசிய விருதுகளை வென்ற படம். இதெல்லாம் சரிதான். ஆனால் இந்தப் படம் உரசியும் உரசாமலும் ஒரு கொரியன் படத்தில் இருந்து தழுவப்பட்டது என்பதுதான் ஆச்சர்ய உண்மை.
ஒரிஜினலான ‘டர்ட்டி கார்னிவல்’ படத்தின் கதையைப் பார்ப்போம். பியூங் டூ என்ற இளைஞன்தான் படத்தின் மையப்புள்ளி. வறுமையினால் ரெளடியிசம் நோக்கித் தள்ளப்படும் இவன் அந்த ஏரியாவின் பிரபல கேங்கில் கடைநிலை ரெளடியாகிறான். ஆனாலும் வறுமை அவனைவிட்டு விலக மறுக்க, ஏதாவது பெரிதாக செய்து சம்பாதிக்க வேண்டும் என முடிவு செய்கிறான். கேங்கில் அவனுக்குத் தலைவன் சாங் ஜுல். சாங் ஜுல்லுக்கும் ஆர்டர் போடக்கூடிய இடத்தில் இருக்கும் பெரிய தாதா ஹ்வாங்.

ஹவாங்கிற்கு அரசு வழக்கறிஞரான பார்க் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அதனால் பார்க்கைப் போட்டுத்தள்ள முடிவு செய்கிறான் ஹவாங். ‘நாம் வளர இது சரியான நேரம்’ என நினைக்கும் பியூங் டூ, பார்க்கைக் கொல்கிறான். இந்தச் சம்பவம் பற்றி யாருக்கும் சொல்லக் கூடாது என ஹ்வாங்கும் பியூங்கும் முடிவு செய்கிறார்கள். பார்க்கைக் கொன்றதன் மூலம் கேங் லீடர் ஹ்வாங்கின் நம்பிக்கைக்குரிய தளபதியாக உயர்கிறான் பியூங்.
இதே நேரத்தில் தன் பள்ளிக்கால நண்பன் மின் ஹோவைச் சந்திக்கிறான் பியூங். மின் ஹோவின் நாடி, நரம்பு, ரத்தம் முழுக்க சினிமா வெறிதான். ரத்தம் தெறிக்கத் தெறிக்க ஒரு ரியலிஸ்டிக் கேங்ஸ்டர் சினிமாவை எடுக்க வேண்டும் என விரும்புகிறான் மின் ஹோ. அதற்கு முன் வந்த படங்கள் எல்லாம் சும்மா கதை விடுகின்றன என்பது மின் ஹோவின் எண்ணம். தன் நண்பனே வளர்ந்து வரும் ரெளடி என்பது தெரிந்தவுடன் அவனின் கதையையே படமாக எடுக்க முடிவு செய்கிறான்.
இதற்கிடையில், தன்னை மீறி பியூங் வளர்கிறானே என காண்டாகும் சாங் ஜூல் அவனைக் கொல்லப் பார்க்கிறான். தொடர்ந்து நடக்கும் முயற்சிகளில் வெற்றி பியூங்கிற்கே. தன் முன்னாள் முதலாளியைத் தன் கைகளாலேயே கொல்கிறான் பியூங். இதெல்லாமும் மின் ஹோ உருவாக்கும் படத்தில் கதையாய் உருவாகிறது.
ஒரு கட்டத்தில், மின் ஹோ படம் எடுத்தால், தான் செய்த கொலைகள் பற்றி எல்லோருக்கும் தெரிய வருமே என சுதாரிக்கும் பியூங் தன் ஆட்களை அனுப்பி மின்னை மிரட்டுகிறான். இதனால் கோபமாகும் மின் ஹோ பியூங் பற்றிய எல்லாத் தகவல்களையும் போலீஸிடம் சொல்லிவிட, மின்னைப் போட்டுத்தள்ள கொலைவெறியோடு சுற்றுகிறான் பியூங்.
மின் ஹோவைக் கடத்தும் வாய்ப்பு பியூங்கின் ஆட்களுக்குக் கிடைக்கிறது. அவனைக் கொல்ல பியூங் அந்த இடத்திற்குச் செல்லும்போது கதையில் ஒரு ட்விஸ்ட். அத்தனை நாட்களாக பியூங்கின் வலதுகரமாக இருந்த ஜோங் சூவே பியூங்கைக் கொல்கிறான். காரணம், சீக்கிரம் பெரியாளாக வர வேண்டும் என முன்பு பியூங் கொண்டிருந்த அதே லட்சியம்தான். மின் ஹோ, கேங் தலைவன் ஹ்வாங்கைச் சந்திக்கிறான். அவர் வாழ்க்கையைப் படமாக எடுக்கும்படி மின் ஹோவிடம் கூறுகிறார் ஹ்வாங். சாங் ஜூலிடம் இருந்து பியூங்கிற்கு வந்த தளபதி பதவி, இப்போது ஜோங் சூவிடம் இருக்கிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்ற தளபதியின் கருத்தை உணர்த்துவதுபோல முடியும் இந்தப் படம்.

‘ஜிகிர்தண்டா’வின் மையக்கதையும் கிட்டத்தட்ட இதுதான். சினிமா ஆசை கொண்டிருக்கும் கார்த்திக் நிஜ கேங்ஸ்டரின் கதையைப் படமாக்குவதற்காக அசால்ட் சேதுவைப் பின்தொடர்கிறான். அசால்ட் சேதுவிற்கு இது தெரிய வர, அவனே நடிக்கிறேன் எனக் கிளம்பி குழப்பக் குழம்பு வைத்து பின் மீம் மெட்டீரியல் ஆவான். தொடக்கத்தில் கெத்தாக காட்டப்பட்ட அசால்ட் சேது இறுதியில் காமெடி பீஸாக ஆக்கப்பட்டதற்கு அதிருப்திகள் எழுந்தாலும் படம் ஆல் சென்டர் ஹிட்.
சமூக வலைதளங்களில் ‘ஜிகிர்தண்டா’ வெளியாவதற்கு முன்பே அது கொரியன் படத்தின் காப்பி என்றெல்லாம் தகவல் பரவியது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இதை கிண்டலடிக்கவும் செய்தார். ஆனால் வெளியான படத்தின் மையக்கதை அந்தக் கொரியன் படத்தைப் போலவே இருந்ததை என்னவென்று சொல்ல?
- இன்னும் சுடும்..!