உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

சினிமால்

சினிமால்
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமால்

சினிமால்

• `தேவி' படம் வரை ஜி.வி.பிரகாஷ், நா.முத்துக்குமார், நீரவ் ஷா என தன் நண்பர் வட்டத்திலேயே தொடர்ந்து பணியாற்றி வந்த இயக்குநர் விஜய் தற்போது அதைவிட்டு புதிய கூட்டணியில் தான் இயக்கும் ஜெயம் ரவி படத்தை உருவாக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, கிரீடம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திரு ஒளிப்பதிவு செய்கிறார். அகிலோடு தெலுங்குப் படத்தில் அறிமுகமான ஷாயிஷா சேகல்தான் நாயகி.`நா.முத்துக்குமார் இடத்தை நிரப்புவது யார்?' என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் விடையில்லை.

• தெலுங்குப் படங்களைப் பார்த்து தற்போது தமிழ்ப் படங்களும் ஆடலுக்கு ஒரு நாயகி, பாடலுக்கு ஒரு நாயகி, காமெடிக்கு ஒரு நாயகி என மாறிவிட்டது. புதுமுகங்களே இரண்டு நாயகிகளோடுதான் என்ட்ரி கொடுக்கிறார்கள். அப்படியிருக்க ‘காதல் மன்னன்’ ஜெமினிகணேசன் பேரை டைட்டிலில் வெச்சிருக்கும் அதர்வா சும்மா இருப்பாரா? ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் 4 நாயகிகளாம்! ரெஜினாதான் நாயகி என தொடங்கப்பட்ட படத்தில் பிரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், ‘கயல்’ஆனந்தி என மொத்தம் நான்கு நாயகிகள். இன்னும் யாராவது இருக்காங்களா?

சினிமால்

• விஜய்யின் `பைரவா' படத்தில் மக்களைப் பலவித வில்லன்களிடம் இருந்து காக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜய். அதனாலேயே படத்தில் ஒரு வில்லன் என இல்லாமல் பல வில்லன்கள் விஜய்யை ரவுண்டு கட்டுகிறார்கள். ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, சரத் லோகிஸ்தவா, ஹரிஷ் உத்தமன் என நீளும் இந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறார் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.கே.சுரேஷ். சாதாரணத் தோற்றத்தாலேயே மிரட்டுவதால் விஜய்யே முன்வந்து ஆர்.கே.சுரேஷை ஒப்பந்தம் செய்யச் சொல்லியிருக்கிறார்.

• `டிமாண்டி காலனி' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து தற்போது அதர்வா ஹீரோவாக நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்குகிறார் என்றனர். தற்போது நயன்தாரா ஒப்பந்தமானவுடன் திடீர் திருப்பமாக நயன்தாராதான் லீடு ரோலில் நடிக்கிறார், அவருக்கு ஜோடி இல்லை. அதர்வாக்கு இளம் நடிகை ஒருவர்தான் ஜோடி எனக் கூறி அதர்வா படத்தை நயன்தாரா படமாக மாற்றிவிட்டார்கள். மேலும் நயன்தாரா அதிரடி போலீஸாக நடிக்கிறாராம், அவருக்குத்தான் மாஸ் சீன்களாம். டைட்டிலில்கூட நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’னுதான் போடுவாங்க போல!

• சுந்தர்.சி இயக்கும் பிரமாண்டமான `சங்கமித்ரா' படத்தின் திரைக்கதை வேலைகள் ஒருபுறம் நடந்துவந்தாலும், நடிகர், நடிகையர் தேர்வு பரபரப்பாக நடைபெறுகிறது.  மூன்று மொழிகளில் தயாராவதால் அதற்கேற்ப முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். இப்போதைக்கு ஜெயம் ரவி மட்டும் முடிவாகி இருக்கிறார். நாயகியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பாகுபலி2 இந்த ஆண்டு முடிந்துவிடுவதாலும், தன் முதல்பட இயக்குனர் சுந்தர்.சி படம் என்பதாலும் அனுஷ்கா ஓகே சொல்லியிருக்கிறாராம்! ரெண்டுல ஒண்ணு பார்ப்பாங்க!

• ஷாரூக்கான் அவ்வப்போது கமெர்ஷியல் படங்களைத் தவிர்த்து ஏதாவது புது முயற்சிகளை மேற்கொள்வார். தற்போது கமல் நடித்த ‘குள்ள அப்பு' போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். 2018ம் ஆண்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு, மிகுந்த சிரத்தையோடு எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தோடு உருவாக இருக்கிறதாம். காதல் படங்களின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் இந்தப் படமும் காதல் படம்தானா, இல்லை ஆக்‌ஷனா என்பது மட்டும் சஸ்பென்ஸாம். சூப்பர் ஹை!

சினிமால்

• உலக நாயகனின் வாரிசு ஸ்ருதிஹாசன் ஒரு உலகம் சுற்றும் வாலிபி தான். ஆனாலும், தமிழ்நாட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் பாண்டிச்சேரிக்கு இன்னும் போனதில்லையாம். சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் சிங்கம் 3 படத்தின் சில முக்கிய சேசிங் காட்சிகளும், பாடல் காட்சி ஒன்றும் அங்கே படமாக்கப்பட்டு வருகின்றன. அதற்காக பாண்டிச்சேரியில் முகாமிட்டிருக்கும் ஸ்ருதி முதல் முறையா பாண்டிச்சேரிக்கு வருகிறேன், அருமையான ஊர் எனச் சொல்லியிருக்கிறார். வேற மீனிங்ல சொல்லியிருப்பாங்களோ!

• ரஜினி பட அறிவிப்பு வரும்வரையிலும் ரஞ்சித் படத்தில் நடிக்க பெரிதாக ஆர்வம் காட்டாத சூர்யா, தற்போது ரஞ்சித்தும் ஒப்பந்தம் ஆனதால் முத்தையா இயக்கும் படத்தில் அடுத்து நடிக்கப் போகிறாராம். முழுக்க கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு இரண்டு நாயகிகள் ஜோடியாம். தன் ஆஸ்தான நாயகி லக்ஷ்மி மேனனையே எல்லாப் படத்திலும் நடிக்க வைக்கும் முத்தையா இந்த முறை கீர்த்தி சுரேஷ், ரித்திகா சிங் என இரண்டு பேரை சூர்யாவுக்காக ஒப்பந்தம் செய்திருக்கிறார். வடக்கு ஒண்ணு, தெற்கு ஒண்ணு!

• சினேகா மீண்டும் நடிப்புக்குத் திரும்பிவிட்டார், நாயகியாக அல்லாமல் முக்கிய வேடங்களில் நடிக்க. சில முக்கியமான படங்களில் ஒப்பந்தமும் ஆகிவிட்டார். இந்நிலையில் சன் டிவிக்கு சீரியல் தயாரிக்கும் குஷ்பூ சினேகாவை நாயகியாக நடிக்க அழைக்க, மறுக்காமல் ஓகே சொல்லி நடிக்கப் போய்விட்டாராம். இது தவிர நிகழ்ச்சி தொகுத்து வழங்கவும் தயார் தானாம். சினிமாவில் சினேகாவை ரசித்தவர்கள் இனி தினமும் சீரியலில் ரசிக்கலாம்.

• இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் பலருக்கும் கூட இன்னும் முழுமையாக ரேஷன் கார்டு வழங்கியபாடில்லை. ஆனால், பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடித்து கோடிகளில் புரளும் தீபிகா படுகோனே, ஜாக்குலின் பெர்ணாண்டஸ், ராணி முகர்ஜி, சோனாக்ஷி சின்ஹா எனச் சில நாயகிகளுக்கு ரேஷன் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வாங்கியது அவர்கள் அல்ல. அவர்கள் பெயரில் யாருக்கோ வழங்கிய போலி ரேஷன் கார்டுகள்தான் அவை. இதில் தீபிகாவின் கணவர் பெயர் பலராம். ஒருநாள் கணவர் பலராமுக்கு யோகம்தான்!