
எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

விஷுவல் கார்னர்
லெகோ சிற்பங்கள்
லெகோ டாய்ஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள். `டென்மார்க் பிளாஸ்டிக் கம்பெனி ஒன்று, கடந்த 50 வருடங்களாகத் தயாரித்துவரும் இந்த பிளாஸ்டிக் துண்டுகளை நிஜத்தில் பொம்மைகளாக மாற்றுவது, அதன் பயனாளிகளான குழந்தைகள்தான். இது அவர்களின் க்ரியேட்டிவிட்டியை வளர்க்கிறது' என உலகம் முழுவதும் மார்க்கெட் பண்ணிவிட்டார்கள். இன்று குழந்தைகள் மட்டும் அல்ல, பெரியவர்களும் பொழுதுபோகாவிட்டால் லெகோ கட்டைகளை அடுக்கிவைத்து விளையாடுகிறார்கள்.

இந்த லெகோ கட்டைகளை அடுக்கி, கலைப் படைப்புகளை உருவாக்குவதைப் பார்த்திருக்கிறேன். நாதன் சவாயா என்கிற அமெரிக்கக் கலைஞனின் லெகோ சிற்பங்கள் மிகப் பிரபலமானவை. சீரியஸான நவீன கலையாக அதைப் பார்க்கிறார்கள்.

ஆனால், நீங்கள் இங்கே பார்ப்பது ஃபெலிக்ஸ் என்னும் கலைஞர் படைத்த சிற்பங்கள். லெகோ டாய்களுக்கே உரிய குழந்தைத்தனம் இந்தப் படைப்புகளில் இருக்கிறது. ஜெர்மன் கலைஞரான ஃபெலிக்ஸ் (ஜெர்மனில் Felix Jaensch. இந்தப் பெயரின் இரண்டாவது பகுதியை எப்படி உச்சரிப்பது எனப் பிடிபடவில்லை), இந்த லெகோ கட்டைகளை அடுக்கி, விதவிதமான விலங்கு சிலைகளைச் செய்கிறார்.
உராங் குட்டான் குரங்கின் மயிர் அடர்ந்த தோலையும், அதன் குறும்புத்தனத்தையும், பச்சைக்கிளியின் சிவந்த மூக்கையும், அதன் உடல்மொழியையும் அசலாக லெகோ துண்டுகளை அடுக்கிக் கொண்டுவந்திருப்பது எல்லாம் அசத்தலாக இருக்கின்றன. மூன்று வயதில் யாரோ கொடுத்த லெகோ கிஃப்ட் வழியாக தன் கலையை ஆரம்பித்த ஃபெலிக்ஸ், இன்று லெகோ ரசிகர்களின் கவனம் ஈர்த்திருக்கிறார். ஃபெலிக்ஸின் படைப்புகள் துண்டு துண்டாக இருந்தாலும், அவர் முழுமையான கலைஞன்.
அஞ்ஞானச் சிறுகதை
எரி
“ஃப்யூல் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டோம்” - மார்ஸான் மின் திரையில் தோன்றிச் சொன்னான்.
“நமது வாகனங்களுக்குத் தேவையான அளவுக்கு அங்கே ஃப்யூல் இருக்கும் என்பது உறுதியா?” என்று கேட்டான் நெப்டன்.
“ஆமாம் ஜெனரல். நமது கிரகத்துக்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கான எரிஎண்ணெய் கிடைத்துவிட்டது என்பது உறுதி” என்று பதில் வந்தது மார்ஸானிடம் இருந்து.

“நல்லது. இந்த ஃப்யூலுக்காக நாம் பட்ட கஷ்டங்கள் எல்லாம் முடியப்போகின்றன. எரிஎண்ணெயின் பெயரால் எத்தனை கிரகங்களை அழித்திருக்கிறோம்!? எவ்வளவு சண்டைகள்... மரணங்கள்” என்றான் நெப்டன்.
``ஆமாம் ஜெனரல். இப்போது நாம் கண்டறிந்திருக்கும் இந்தக் கிரகத்தின் பெயர் `பூமி'. பல நூறு ஆண்டுகளாக மக்கிப்போன உயிரிகளின் படிவங்களில் இருந்துதான் ஃப்யூல் கிடைக்கிறது என்பதை உங்களுக்குச் சொல்லவேண்டியது இல்லை. இந்தப் பூமியில் வாழ்ந்த உயிரிகள் எல்லாம் மக்கிப்போய் பல நூறு வருடங்கள் ஆகிவிட்டிருக்கிறது. இப்போது இந்தப் பூமியே ஒரு பெரிய பெட்ரோல் கிணறுபோலத்தான் என் கண்களுக்குத் தெரிகிறது” என்று சிரித்தான் மார்ஸான்.
“ஓகோ! அந்தப் பூமியில் நம்மைப்போல அதிஉயர் ஜீவிகள் வாழ்ந்ததற்கான வரலாறு ஏதேனும் உள்ளதா?” என்றான் நெப்டன்.
“ஆமாம். அவர்கள் `மனிதர்கள்' என அழைக்கப்பட்டார்கள். அசாத்தியமான இயற்கைவளங்களுடன் அழகாக இருந்திருக்கிறது இந்தப் பூமி” என்றான் மார்ஸான்.
“பிறகு எப்படி அந்தப் பூமி அழிந்தது... மனிதர்கள் அழிந்தார்கள்?” வியப்பாகக் கேட்டான் நெப்டன்.
மானிட்டரில் புன்னகை சிந்தியபடி மார்ஸான் சொன்னான், “பெட்ரோலுக்காக”.
நானோ ஹிஸ்டரி
ஸ்க்ரூ - டிரைவர்
ஸ்க்ரூ டிரைவரை பற்றித் தேடினால் குடிப்பவர்களின் ஹிஸ்டரிதான் முதலில் கண்களில் படுகிறது. காரணம் இருக்கிறது. கிசுகிசு பாணியில் சொல்லவேண்டுமானால் பிரபல ரஷ்ய மதுவுடன் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் ஒரு பழத்தின் ஜூஸை சரிபாதியாகக் கலந்து அடிக்கும் காக்டெய்லின் பெயர் `ஸ்க்ரூ டிரைவர்'. குடிப்பவர் மண்டைக்குள் ஸ்க்ரூ இறங்குவதுபோல் இருக்குமோ... என்னமோ! டாஸ்மாக் புண்ணியத்தில் குடிமகன்களை ஏற்கெனவே ஸ்க்ரூ டிரைவரைப்போல சுற்றலில் வைத்திருக்கிறோம். எனவே, நான் சொல்ல வந்தது நிஜமாகவே ஸ்க்ரூ டிரைவர் என்னும் திருகாணி திருப்பியைப் பற்றித்தான் என்பதால், அதன் மேலதிக வரலாற்றை ஒரு சுற்று திரும்பவும் பார்க்கலாம்.

இந்த ஸ்க்ரூ டிரைவரின் ஆதி வடிவம், ஐரோப்பாவின் மத்தியக் காலத்தில் அதாவது 15-ம் நூற்றாண்டுவாக்கில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஒரு குறிப்பு சொல்கிறது. ஆனால், அதைக் கண்டுபிடித்தது யார் என்றோ, எந்த நாடு என்றோ குழப்பம் இருக்கிறது. ஜெர்மனி, பிரான்ஸ் என ஆளாளுக்குக் கதைவிடுகிறார்கள். நாம் இன்று பார்க்கும் ஸ்க்ரூ டிரைவர் வடிவத்தை உருவாக்கியவர், Peter Lymburner Robertson என்னும் கனடா நாட்டுக் கண்டுபிடிப்பாளர்.
Witold Rybczynski என்னும் எழுத்தாளர் One Good Turn: A Natural History of the Screwdriver and the Screw என்னும் நீண்ட தலைப்பில் இந்த ஸ்க்ரூ மற்றும் ஸ்க்ரூ டிரைவரை பற்றி தனியே ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அதில் அவர் எழுதியிருக்கும் சின்னச்சின்ன டெக்னிக்கல் சமாசாரங்களில் சில சுவாரஸ்யமானவை. உதாரணத்துக்கு, ஸ்க்ரூவைச் சுற்றி இருக்கும் சுருள்வடிவப் பகுதியை ஆங்கிலத்தில் என்னவெனச் சொல்வீர்கள்? Spiral என்றா? இல்லை. அது Helix வடிவம் என்கிறார். சுருள் வடிவம் கீழ்நோக்கி சுருங்கி முடிவதை அப்படித்தான் சொல்லவேண்டுமாம். Writers block எனச் சொல்வார்கள். ஒரு சின்ன ஸ்க்ரூவைப் பற்றிக்கூட ஒரு புத்தகம் எழுதலாம் என்னும்போது, எழுதுவதற்கு இந்த உலகத்தில் மேட்டரா இல்லை எனத் தோன்றுகிறது.
வல்லவனுக்கும் ஸ்க்ரூவும் ஆயுதம்!
நாஸ்டால்ஜியா நோட்
சைக்கிள் டைனமோ
சுந்தர ராமசாமியின் `பிரசாதம்' கதை படித்திருக்கிறீர்களா? குழந்தையின் பிறந்தநாளை கோயிலுக்குப் போய்க் கொண்டாட ஆசைப்படும் மனைவியை நினைத்துக்கொண்டு, கையில் காசு இல்லாமல் `ரஸ்தா’வில் யாராவது மாட்டுவார்களா என எதிர்பார்க்கும் பாவப்பட்ட ஒரு போலீஸ்காரர் பற்றிய கதை. அந்தக் காலத்தில் சைக்கிளில் விளக்கு இல்லாமல் போனால், இன்று ஹெல்மெட்டுக்கு மடக்குவதுபோல போலீஸார் மடக்குவார்கள். கதையில் கடைசியில் ஒரு பூசாரி மாட்டுவார். பாலுமகேந்திரா அதை மென்மையான குறும்படமாக எடுத்திருக்கிறார்.

90-களின் இடைக்காலங்கள் வரை ஊரில் உள்ள எல்லா வீடுகளிலும் சைக்கிள்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பைக்குகள், விளம்பரங்கள் போட்டு இ.எம்.ஐ-யில் விற்பனைக்கு வராத காலம். அதிகபட்சம் ஊரில் மைனர்கள்போல யாராவது புல்லட் மட்டுமே வைத்திருப்பார்கள். ஆனால், கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் சைக்கிள் இருக்கும். எனது மாமாவுக்கும் ஒன்று இருந்தது. பள்ளிக் காலத்தில் குரங்கு பெடல் போட்டு சைக்கிள் விடக் கற்றுக்கொண்டது அதில்தான். ஆனால், எல்லா சைக்கிள்களுக்கும் லைட் இருக்காது. சில சைக்கிள்களுக்கு மட்டுமே டைனமோ மாட்டி லைட் வைத்திருப்பார்கள்.
ஓர் உலோகக் குப்பியைப்போல் இருக்கும் டைனமோவில் இருந்து எப்படி மின்சாரம் உருவாகிறது என்பது சிறுவர்களின் ஆச்சர்ய அறிவியல் தேடலாக இருக்கும். டைனமோவின் தலை சைக்கிள் வீலுடன் ஒட்டி உறவாடும்போது மின்சாரம் உற்பத்தியாகி, ஹெட்லைட் எரியும். ஒரு சின்ன அழுத்தத்தில் டைனமோவின் வீலுடனான உறவைத் துண்டித்துவிட முடியும். பகலில் சைக்கிள் ஓட்டும்போது அப்படித்தான் செய்வார்கள். 90-கள் வரை சைக்கிள் ஓட்டியவர்களுக்கு அந்த டைனமோவின் வடிவம் ஞாபகத்தில் சுழன்றுகொண்டிருக்கும் என யூகிக்கிறேன்.

கொலாஜ்
மறதி
காட்சி மொழி என்பது வார்த்தைகளைவிட தீவிரமானது என்பதற்கான உதாரணங்களில் ஒன்று, நாம் அனைவருக்கும் பரிச்சயமான ஒரு புகைப்படம். வியட்நாம் யுத்தத்தின்போது napalm குண்டுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஓடிவரும் புகைப்படம். அதிலும் குறிப்பாக, நிர்வாணமாக ஓடிவரும் ஒன்பது வயதுச் சிறுமியின் புகைப்படம்.

அந்தச் சிறுமியின் பெயர் Phan Thi Kim Phuc. சுருக்கமாக கிம் புக். நபாம் குண்டுகளின் ரசாயனப் பாதிப்பை இன்றும் முதுகில் சுமந்துகொண்டிருக்கும் கிம் புக், தன் 52 வயதிலும் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார். அந்தப் புகைப்படத்தை எடுத்த நிக் (Nick Ut) புலிட்சர் விருது பெற்றார். அந்தப் புகைப்படம், உலகம் முழுவதுமான கவனத்தை ஈர்த்து யுத்தங்களின் மீதான கேள்விகளை எழுப்புவதற்குக் காரணமாக இருந்தது.
ஏன் இந்தப் புகைப்படத்தைப் பற்றி இப்போது எழுதுகிறேன் என்றால், சமீபத்தில் நார்வே எழுத்தாளர் ஒருவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய கட்டுரையுடன் இந்தப் புகைப்படத்தையும் பதிந்திருந்தார். அதை ஃபேஸ்புக் நிர்வாகம் நீக்கியது. ஃபேஸ்புக் கண்ணை மூடிக்கொண்டு சொன்ன காரணம், `ஆடையற்ற சிறுமி'. ஆனால், கண்டனங்கள் எழுந்ததும் சுதாரித்துக்கொண்ட ஃபேஸ்புக், புகைப்படத்தைப் பகிர அனுமதி வழங்கியிருக்கிறது. ஃபேஸ்புக் போன்ற அதிநவீன நிறுவனத்துக்கு இந்தப் புகைப்படத்தின் முக்கியத்துவம் புரியவில்லையா அல்லது அமெரிக்காவின் பழைய வரலாற்றைக் கிளறுவதை அது விரும்பவில்லையா அல்லது மறதியா? ஃபேஸ்புக்கின் இந்த மறைமுக ஸ்டேட்டஸ் மெசேஜுக்கு எந்த எமோஜி பட்டனை லைக்குவது?