மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திரைத்தொண்டர் - 26

திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம்
பிரீமியம் ஸ்டோரி
News
திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் ( திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் )

அமரர் பஞ்சு அருணாசலம்

திரைத்தொண்டர் - 26

‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் பங்கேற்கக் கிடைத்த வாய்ப்பு, என் அதிர்ஷ்டம். கமல் சார் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என, எத்தனையோ மொழிகளில் அற்புதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் `குள்ள அப்பு’ கேரக்டர்,

திரைத்தொண்டர் - 26

எனக்கு இன்னமும் ஆச்சர்யம். அந்தப் பட ஷூட்டிங் ஒரு ஷெட்யூல் முடிந்த சமயத்தில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பத்திரிகைகளில் வந்தது. ‘இந்த ஆளு எப்படி இப்படிப் பண்ணினார்?’ என எனக்குப் பயங்கர அதிர்ச்சி. `இது எப்படிச் சாத்தியமானது?' என யோசித்துக்கொண்டிருந்தேன். அது கிராஃபிக்ஸ் அறிமுகம் ஆகாத காலம்.

அந்தச் சமயத்தில் கமல் சாரின் மேனேஜர் டி.என்.சுப்ரமணியம், ‘சார் உங்களை அழைச்சுட்டு வரச் சொன்னார்’ என்று வந்தார். போனேன். ‘நான் ‘அபூர்வ சகோதரர்கள்’னு ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். எடுத்த வரைக்கும் அந்தப் படத்தை உங்களுக்குப் போட்டுக் காட்டலாம்னுதான் கூப்பிட்டேன். பார்த்துட்டு உங்க அபிப்பிராயம் சொல்லுங்க’ என்றார். பார்த்தேன். பயங்கர ஷாக். காரணம், என் மனதில் இருந்த எதிர்பார்ப்பை அந்தப் படம் பூர்த்திசெய்யவில்லை. ‘இதை எப்படி அவரிடம் சொல்வது?’ என்ற தயக்கம்.

‘உங்க மனசுல என்ன தோணுதோ... சொல்லுங்க’ என்றார்.  கமல் சார், விமர்சனங்களை எப்போதும் ஏற்றுக்கொள்வார்.  `இந்தக் கதையே தப்பு கமல். குள்ளனா நடிக்கிறதே ரொம்பக் கஷ்டம். நீ இவ்ளோ சிரமப்பட்டு நடிச்சும், கதை சரியில்லாததால் படம் ஓடலைன்னா, நீ் பட்ட கஷ்டம் எல்லாம் வீணாப்போயிடும்’ என்றேன். ‘எடுத்ததை வெச்சு ஏதாவது மாத்தலாமா?’ என்றார். ‘அடிப்படையே வீக்கா இருக்கிறதால, எடுத்ததை வெச்சு எதுவும் பண்ண முடியாது’ என்றேன்.

‘அப்ப இப்பிடியே டிராப் பண்ணிடவா?’ என்றார். ‘இந்த மாதிரி ஒரு ரோல் பண்ண, உலகத்துல எந்தக் கலைஞனாலயும் முடியாது. ஆனா, அதை நீ பண்ணியிருக்க. டிராப் பண்ணாத. உனக்கு அடுத்த ஷெட்யூல் எப்ப?’ என்றேன். ‘இன்னும் ரெண்டு வாரத்துல தொடங்குது’ என்றார். ‘அந்த ஷெட்யூல்லயே இதுவரைக்கும் எடுத்ததுக்குத் தகுந்த மாதிரி எழுதிக் கொடுத்துடுறேன். ஒரு வாரம் டைம் கொடு’ என்று நேரம் வாங்கிக்கொண்டேன். நான்கு நாட்களிலேயே அந்தப் படத்துக்கான கரெக்‌ஷன்களைச் செய்துகொடுத்தேன்.

நான் செய்த மாற்றங்கள், கமல் சார் உள்பட அந்தப் படக் குழுவினருக்கும் பிடித்திருந்தது. அவர்கள் ஏற்கெனவே ஃபிக்ஸ் செய்திருந்த நடிகர்-நடிகைகளையே பயன்படுத்தும் வகையிலும், அநாவசியமான செலவுகள் வைக்காத வகையிலும் அந்த மாற்றங்களைச் செய்திருந்தேன். அதாவது, கமல் சார் தன் மனதில் நினைத்திருந்த கதையை நான் முற்றிலும் வேறு ஒரு வடிவத்தில் செய்திருந்தேன். அவர்கள் அதுவரை எடுத்திருந்த காட்சிகளை, நான் எழுதிய ட்ரீட்மென்ட்டில் பயன்படுத்த முடியாது என்பதுதான் வருத்தம்.

பிறகு, அந்த ஸ்க்ரிப்ட்டில் கமல் சார் தனக்குத் தேவையான நிறைய அழகான மாற்றங்களைச் செய்துகொண்டார். இளையராஜாவின் இசை உள்பட அந்தப் படத்தில் அனைத்துமே அருமையாக அமைந்திருந்தன. அந்தப் படம், 25 வாரங்களைத் தாண்டி ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கமல் என்ற அற்புதக் கலைஞனுடன் வேலைசெய்ய கிடைத்த அரிய வாய்ப்பு அது.

ஜினி சாருக்கு வித்தியாசமான  ஒரு கதை. அதை எழுதக் காரணமாக இருந்தவர் ஏவி.எம்.சரவணன் சார். ரஜினி சாரின் கால்ஷீட் வாங்கிய பிறகு என்னைக் கூப்பிட்ட சரவணன் சார், ‘ரஜினி சாருக்கு நீங்க பலவிதமா எழுதிட்டீங்க.  இதில் அவரையும் குழந்தை களையும் வெச்சு, குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி நிறையக் காட்சிகள் வர்ற மாதிரி எழுதிக்கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்’ என்றார். யோசித்தேன்.

‘மேரி பாப்பின்ஸ்’, ‘தி சவுண்ட் ஆஃப் மியூஸிக்’ உள்பட குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஏகப்பட்ட படங்கள் நினைவுக்கு வந்தன. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள ஒரு தேவதை வருகிறாள் என, ஏதோ ஒரு படத்தில் பார்த்ததாக நினைவு. தமிழிலும் அதுபோல சில படங்கள் வந்திருக்கின்றன. நானும் ‘உன்னைத்தான் தம்பி’ என்ற படத்தில் ஒரு சிறு பகுதியை அப்படி அமைத்திருப்பேன்.

‘குழந்தைகள், அவர்களைக் கவனித்துக்கொள்ள வரும் ஒரு ஹீரோ’ இப்படிப் பண்ணலாமா என்ற ஒரு யோசனை. அம்மா இல்லாத ஐந்தாறு குழந்தைகள் உள்ள பணக்காரக் குடும்பம். அதைக் கவனிக்க முடியாத அளவுக்கு அப்பாவுக்கு வேலை. அந்தச் சூழலைப் பயன் படுத்தி, அந்தக் குடும்பத்துக்கு வேண்டப்பட்ட ஓர் இளைஞன் பலவிதமான மோசடிகளைச் செய்கிறான். இதற்கு இடையில் அந்தக் குழந்தைகளையும் அந்த வீட்டையும் பராமரிக்க மேனேஜர் ஒருவரை வேலைக்கு எடுக்கிறார்கள். ‘புதிதாக வரும் மேனேஜர் எங்கே தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்துவிடுவானோ?’ என அஞ்சும் அந்த மோசடி இளைஞன், தன் நண்பன் ஒருவனையே மேனேஜராக செட்டப் செய்து அந்த வீட்டில் வேலைக்கு வைக்கிறான்.

திரைத்தொண்டர் - 26

தன் நண்பனுக்காக அந்த வீட்டில் மேனேஜராக  வேலை செய்துவரும் ஹீரோ, குழந்தைகள் மீதான தூய அன்பு, பாசத்தால் அவர்களை நல்லபடியாக வளர்த்து, அந்தக் குடும்பத்தை எப்படி ஓர் ஒழுங்குக்குக் கொண்டுவந்தான்’ என, கதையை எழுதி முடித்தேன். அந்தப் படம்தான்  ‘ராஜா சின்ன ரோஜா’.

அப்போது ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் அறிமுகமாகியிருந்த நேரம். அதைப் பயன்படுத்தி குழந்தைகளைக் கவரும் வகையில் ஒரு பாடலைப் படமாக்குவோம் என முடிவுசெய்தார்கள். காட்சிகளை கார்ட்டூன்களாக வரைந்து எடுக்கவேண்டிய பாடல். மும்பையைச் சேர்ந்த கார்ட்டூன் ஸ்பெஷலிஸ்ட் ராம்மோகன் என்பவர் அந்தப் பாடலை அமைத்தார். குகன் சார் மேற்பார்வையில் அந்தப் பாடல் வேலைகள் மும்பையில் நடந்தன. இப்படி அந்தப் படத்தில் நாங்கள் எதிர்பார்த்தது நடந்தது. ஆம்... ரஜினி சாருக்கு ஏற்கெனவே இருந்த ரசிகர்களுடன் குழந்தைகளும் சேர்ந்துகொண்டனர்.

ன்றும் சுகமான நினைவுகளைத் தரும் படம் ‘மைக்கேல் மதன காமராஜன்’. அந்தப் படத்தின் தயாரிப்பாளராக ஒருவிதத்தில் எனக்குச் சற்று சுமையான படமும்கூட. எனக்கு மட்டும் அல்ல, கமல் சாருக்கும் அப்படித்தான். கமல் சாருக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், ஒரு படத்தின் கேசட்டை அவரிடம் கொடுத்துப் பார்க்கச் சொல்லியிருக்கிறார். அதில் ஹீரோ நான்கு ரோல்களில் வருவார். ‘இந்த மாதிரி பண்ணலாமானு பாருங்க?’ என அந்த கேசட்டை எனக்குக் கொடுத்து அனுப்பியிருந்தார். அந்தப் படத்தை கமல் சார் பார்க்கவில்லை என நினைக்கிறேன். நான் பார்த்தேன். அந்தப் படம்  எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ‘ஒரு அம்மா... நான்கு பிள்ளைகள். நான்கு பேரும் பிரிந்துவிடுகின்றனர். பிறகு எப்படி ஒன்றுசேர்ந்தார்கள்?’ - இதுதான் அந்தப் படத்தின் கதை. ஆனால், எந்த லாஜிக்கும் இல்லாமல் நான்கு கேரக்டர்களுக்குள் எந்த வித்தியாசமும் இல்லாமல் இருந்தது. நடித்தவரும் நன்றாக நடிக்கவில்லை. எடுத்தவரும் நன்றாக எடுக்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால், குப்பைப் படம்.

கமல் சாரைப் பார்த்தபோது, ‘என்ன கமல்... ரெண்டு, மூணு, நாலுனு நிறைய ரோல்கள்ல பண்ணிட்ட. 10 ரோல்ல நடிக்கிற தசாவதாரம் ஒண்ணுதான் பாக்கி. (பிறகு, அதையும் அவர் பண்ணினார்) அப்படி இருக்கையில், உனக்கு நாலு ரோல் வெச்சு என்னால எழுத முடியாதா? நீ நாலு ரோல் பண்ற. நான் உனக்கு அப்படி ஒரு கதை தர்றேன்’ எனச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

பிறகு, நான்கு கேரக்டர்களை வைத்து காமெடியாக ஒரு கதையைத் தயார் செய்தேன். கமலிடம் சொன்னேன். அவரும் சில விஷயங்கள் சொன்னார். அப்படிப் பேசிப்பேசியே அந்தக் கதையை டெவலப் செய்தோம். சிங்கிதம் சீனிவாசராவ் சார்தான் இயக்கினார். ராஜா சார் அருமையான பாடல்களைப் போட்டுத்தந்தார்.

‘க்ளைமாக்ஸைக் கொஞ்சம் வித்தியாசமாக பண்ணுவோம்’ என நினைத்த கமல் சார், ‘எப்ப வேணும்னாலும் விழலாம்கிற நிலையில் மலைக்கு மேல மேலும் கீழுமாக ஆடிக்கொண்டிருக்கும் ஒரு வீடு. நான்கு கமல் உள்பட ஒட்டுமொத்த நடிகர்களும் அந்த வீட்ல உயிர்பிழைக்கப் போராடுறாங்க. எப்படித் தப்பிச்சாங்க? இதுதான் க்ளைமாக்ஸ்’ என, ஒரு புது ஐடியாவையும் கொடுத்தார். இண்டோர் முழுக்க சென்னையில் செட் போட்டு எடுத்தோம். அவுட்டோர் மட்டும் ஊட்டியில் எடுத்தோம்.

சீக்கிரம் முடியும் என நினைத்த க்ளைமாக்ஸ், இழுத்துக்கொண்டேபோனது. சிங்கீதம் சீனிவாச ராவ் தெலுங்கில் வேறு ஒரு முக்கியமான படம் கமிட் ஆனதால், க்ளைமாக்ஸ் போர்ஷனை
கமல் சாரே பண்ணினார். எல்லாவிதமான உதவிகளையும பண்ணிக்கொடுத்தேன்.

ஒரு ஷாட் முடித்து, இன்னொரு ஷாட்டுக்கு டக்கென ஓடிப்போய் வேறு ஒரு காஸ்ட்யூம் மாற்றி... என நான்கு கமல்களாகச் சுற்றிச் சுழன்றார். அந்த க்ளைமாக்ஸ் மட்டுமே ஒரு படம் எடுக்கக்கூடிய அளவுக்கு அத்தனை நாட்களானது. அவ்வளவையும் எடிட் செய்யவே ஒரு மாதம் பிடித்தது. பட்ஜெட்டும் ரொம்பவே கூடிப்போனது.

படத்தைக் கஷ்டப்பட்டு ரிலீஸ் செய்தேன். படத்தைப் பார்த்தவர்கள் ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை எகிறி விழுந்து சிரித்து ரசித்தனர். ஆனால், என்ன காரணம் என கமல் சாருக்கும் தெரியவில்லை, எனக்கும் தெரியவில்லை. அந்த க்ளைமாக்ஸ் மட்டும் எதிர்பார்த்த அளவுக்கு வொர்க்கவுட் ஆகவில்லை. இன்று உள்ள கிராஃபிக்ஸில் செய்திருந்தால், அது ஆல்டைம் ரெக்கார்டாகப் பேசப்பட்டிருக்கும். பொருளாதாரரீதியாக அந்தப் படம் கொஞ்சம் சுமையைத் தந்திருந்தாலும் என் சினிமா வாழ்க்கையில்  ‘மைக்கேல் மதன காமராஜன்’ பற்றி இன்று வரை பெருமையாகப் பேசுகிறார்கள். அதற்குக்  காரணம், கமல் சாரின் நடிப்பும் உழைப்பும்.

பாக்யராஜை வைத்து ஒரு படம் எடுக்கக்கூடிய வாய்ப்பு அமைந்தது. அதற்குக் காரணம் தூயவன். ‘வைதேகி காத்திருந்தாள்’ நன்றாக ஓடிய பிறகு, வேறு மூன்று படங்களுக்கு ஃபைனான்ஸ் பண்ணினேன். மூன்று படங்களும்  தோல்வி. அதில் ஒன்று விஜயகாந்த் சார், ராதிகா நடித்த ‘நானே ராஜா நானே மந்திரி’ படம். அது பாலு ஆனந்த் சொன்ன கதை. காமெடி நன்றாக இருந்தது. எனக்கும் பிடித்திருந்தது. விஜயகாந்த் சாரை மனதில் வைத்துதான் அந்தக் கதையை ஓ.கே செய்தேன். ஆனால், ‘விஜயகாந்தை வெச்சுக்கிட்டு படம் ஃபுல்லா காமெடி பண்ணினால் படம் ஓடுமோ, ஓடாதோ என பயந்து, இரண்டாவது பாதியில் நிறைய மாற்றங்கள் செய்தனர். அதனால் அது காமெடியா, காதலா, ஃபைட்டிங் பிக்சரா... என்ற ஏகப்பட்ட குழப்பத்தில் அதைக் கெடுத்துவிட்டனர். ஆனால், விஜயகாந்த் சாருக்கு பெரிய மார்க்கெட் இருந்ததாலும், முதலிலேயே படத்தை விற்றுவிட்டதாலும் நஷ்டம் இல்லை.

திரைத்தொண்டர் - 26

அடுத்து ஒரு படம், அதையடுத்து கவுண்டமணியை ஹீரோவாக வைத்து ஒரு படம் என இரண்டும் பயங்கர தோல்வி. அந்தச் சமயத்தில் தூயவன் இறந்துபோனார். அதனால் நஷ்டத்தை நானே எடுத்துக்கொண்டேன். அவர் இறப்பதற்கு முன், எனக்கு ஒரு நல்ல காரியம் செய்துவிட்டுச் சென்றார். ‘செட்டியாரே... என்னால் உங்களுக்கு நிறைய நஷ்டமாகிடுச்சு. பாக்யராஜ்கிட்ட ஒரு படம் கேட்டிருக்கேன். `பண்ணித் தர்றேன்'னு சொல்லியிருக்கார். அதை உங்களுக்கு அப்படியே மாத்தித் தந்துடுறேன். நீங்க பண்ணி, உங்க நஷ்டத்தைச் சரிபண்ணிக்கங்க’ என்றார்.

அப்போது பாக்யராஜ் ஓகோவென இருந்த நேரம். பாக்யராஜை நேரில் போய்ப் பார்த்தேன். ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டுப் பண்ணுவதாகச் சொன்னவர், வெகுநாட்கள் கழித்து தாமதமாகத்தான் கால்ஷீட் தந்தார். அவர் எனக்கு கால்ஷீட் கொடுக்கும் நேரத்தில், அவருக்கு மார்க்கெட் டல்லாக இருந்தது. ஏற்ற-இறக்கம் சகஜம்தானே! இரண்டு கதைகள் சொன்னார். அதில் ‘ராசுக்குட்டி’ கதையை ஓ.கே பண்ணினேன்.

ஒரே ஷெட்யூலில் முடித்துத் தருவதாகச் சொன்னார். கம்ப்ளீட்டாக அவரின் பொறுப்பிலேயே விட்டுவிட்டேன். பொள்ளாச்சியில்தான் ஷூட்டிங். 10 ஆயிரம் அடிக்கு மேல் படத்தை எடுத்து முடித்து, போட்டுக் காட்டினார். அவர் இயல்பான திரைக்கதையோடு கதையை உயிர்ப்பாகச் சொல்வார். அதை அப்படியே ஓர் இம்மி பிசகாமல் எடுத்தும் கொடுத்து விடுவார். ஆனால், என்ன காரணம் எனத் தெரியவில்லை. ‘ராசுக்குட்டி’ எடுத்தது வரை எனக்குப் பிடிக்கவே இல்லை. காமெடியும் வொர்க்கவுட் ஆகவில்லை. சுருக்கமாகச் சொன்னால், அவர் என்னிடம் சொன்ன கதைக்கும் அவர் போட்டுக்காட்டிய படத்துக்கும் சம்பந்தமே இல்லை.

நான் அவரிடம் வெளிப்படையாகப் பேசுவேன். ‘என்ன பாக்யராஜ், நீ என்கிட்ட என்ன சொன்ன... என்ன எடுத்திருக்க?’ என்றேன். ‘ஆமா, என் வொய்ஃப்கூட, ‘நீங்க சொன்ன கதையே படத்துல இல்லையே’னு சொன்னாங்க’ என்றவர், ‘எங்க தப்பு பண்ணேன்னு தெரியலை. அடுத்த ஷெட்யூல் போயிட்டு வர்றேன்’ என்றார்.  மறுபடியும் இன்னொரு ஷெட்யூலுக்கு ஏற்பாடு பண்ணிக் கொடுத்தேன். திரும்பவும் போய் எடுத்துவந்தார். படம் பிரமாதமாக வந்தது. ஓகோவென ஓடவில்லை என்றாலும், சராசரியாக ஓடி எல்லோரையும் சேஃப்ட்டி பண்ணியது.

`பாண்டியன்'... எங்கள் யூனிட்டுக்காக ரஜினி சார் பண்ணித்தந்த அடுத்த படம். அதை ஏவி.எம் அண்டர்டேக் பண்ணி ரிலீஸ் செய்தது. அதில் வந்த லாபத்தை, முத்துராமன் சார் எங்கள் டீமில் இருந்த அனைவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்தார். அது பழைய யூனிட் சிஸ்டம் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க்கொண்டிருந்த சமயம். தொடர்ந்து படம் பண்ணினால் புது கேமராமேன், புது உதவி இயக்குநர்கள்... என வெவ்வேறு வகையான டேஸ்ட் உள்ள புதியவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இத்தனை காலமாக ஒரே யூனிட்டில் உள்ளவர்களுடன் வேலை செய்துவிட்டு புதியவர்களுடன் வேலை செய்யும்போது, சரியாக இருக்குமா என அவர் நினைத்திருக்கலாம். ‘நம் டீமில் இருக்கும் அனைவருமே செட்டிலாகி விட்டனர். வயதும் ஆகிவிட்டது. இனியும் தொடர்ந்து படம் பண்ண வேண்டுமா?’ என்று யோசிக்க ஆரம்பித்தவர் ‘இனி நான் படம் பண்ணலை’ என முடிவுசெய்தார்.

பிறகு, அப்போதைய அ.தி.மு.க அரசில் அமைச்சராக இருந்த ரகுபதி அவர்கள், ஜெயலலிதா மேடம் கொண்டுவந்த ‘தொட்டில் குழந்தை’ திட்டம் மக்களிடம் சென்றுசேரும் வகையில் ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும்’ என விரும்பினார். அவருக்காகவும் அந்தத் திட்டத்துக்காகவும் முத்துராமன் சார் அந்தப் படத்தை இயக்க ஒப்புக்கொண்டார். அந்தப் படம்தான் ராம்கி நடித்த ‘தொட்டில் குழந்தை’. அந்தப் படத்துக்குப் பிறகு முத்துராமன் சார் படம் இயக்குவதை நிறுத்தினார்.

முத்துராமன் சார், தனக்கு என சில கொள்கை களை வைத்திருப்பார். அவர் ஒரு முடிவெடுக்கிறார் என்றால், தீர்மானமாக யோசித்துத்தான் முடிவெடுப்பார். பிறகு, யார் சொன்னாலும் அதை மாற்ற மாட்டார். அப்படி அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கும் முடிவை எடுத்தபோதே, நானும் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். அப்படி ஒதுங்காததுதான், நான் என் வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தவறு.

- தொண்டு தொடரும்...