மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திரைத்தொண்டர் - 27

திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம்
பிரீமியம் ஸ்டோரி
News
திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் ( திரைத்தொண்டர் | பஞ்சு அருணாசலம் )

அமரர் பஞ்சு அருணாசலம்

திரைத்தொண்டர் - 27

ப்போதும்போல் அப்போதும் நான் கேட்காமலேயே அழைத்து கால்ஷீட் கொடுத்தார் ரஜினி சார். ‘தெலுங்குல என் ஃப்ரெண்ட் மோகன்பாபு படம் ஓகோனு ஓடிட்டு இருக்கு. அதோட ரைட்ஸ் வாங்கி

திரைத்தொண்டர் - 27

இங்கே பண்ணினா நல்லா இருக்கும்னு தோணுது. அந்தப் படத்தைப் பார்த்துட்டு  முடிவுபண்ணுங்க’ என்றார். அந்தத் தெலுங்குப் படத்தைத் தயாரித்தவர் பிரகாஷ் ராவ். இவரைப் பற்றி இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே நான் சொல்லியிருக்கிறேன். நான் இளைஞனாக இருந்தபோது, என்னை நம்பி சிவாஜி சாரிடம் கதை சொல்ல அனுப்பியவர். சினிமாவில் நான் வளர்ந்த பிறகு அவரின் இரண்டு மூன்று தெலுங்குப் படங்களை தமிழில் ரீமேக் செய்ததில் நல்ல பழக்கம். அவரைச் சந்தித்தேன். அந்தப் படத்தையும் பார்த்தேன். எனக்கும் பிடித்திருந்தது. அதன் தமிழ் ரீமேக் ரைட்ஸை வாங்கினேன்.

சந்தர்ப்பச்சூழலால் ஹீரோவுக்கு இரண்டு மனைவிகள். ஒருவரைப் பற்றி மற்றவருக்குத் தெரியாமல் எப்படி இருவரையும் ஹீரோ சமாளிக்கிறார் என்பதுதான் கதை. ஆனால், இரண்டு மனைவிகள் கதையில் வந்த தமிழ்ப் படங்கள் அப்போது பெரிதாக ஓடியது இல்லை. அதனால் எனக்கு பயம். காமெடிக்கு ஸ்கோப் உள்ள கதைதான். ஆனால், தெலுங்கில் நிறைய லாஜிக் மீறல்கள். தமிழ் ரசிகர்கள் ஒப்புக்கொள்ளக்கூடிய அளவுக்கு அதை எல்லாம் மாற்றி, நிறைய காமெடிகளைச் சேர்த்து டெவலப் செய்தேன். அப்போது ஹீரோயினாக வளர்ந்துகொண்டிருந்த ரோஜா - மீனாவை, ரஜினி சாருக்கு ஜோடியாக ஃபிக்ஸ் பண்ணினேன். டைரக்‌ஷன், சுரேஷ் கிருஷ்ணா. படத்தை ஒரே ஷெட்யூலில் முடித்தோம். அந்தப் படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி. அந்தப் படம்தான் ‘வீரா’. தமிழ் சினிமா வரலாற்றில் கோடிகளைத் தாண்டி வியாபாரமான முதல் படம் ‘வீரா’தான்.

அதுவரை வருடத்துக்கு நான்கைந்து படங்களில் நடித்துக்கொண்டிருந்த ரஜினி சார், ‘வீரா’வுக்குப் பிறகு படங்களைக் குறைத்துக்கொண்டார். ‘எப்ப தோணுதோ அப்ப படம் பண்ணலாம்’ என முடிவுசெய்து, இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு படம் பண்ணிக்கொண்டிருந்தார். அதிலும் வெளி கம்பெனிகளுக்குக் குறைவாகத்தான் பண்ணினார். பெரும்பாலும் சொந்தப்படங்களே. அவருக்கு வெளியில் பண்ணும் ஐடியா இருந்திருந்தால், நிச்சயமாக என்னைக் கூப்பிட்டு ஒரு படம் கொடுத்திருப்பார். ஒரே ஒருமுறை, `நாம மறுபடியும் ஒரு படம் பண்ணுவோமா?’ என, நானே போய்க் கேட்டேன்.

‘படம் பண்ணணும்னு ஐடியா வரும்போது, நானே உங்களைக் கூப்பிடுறேன் சார்’ என்றார். ‘வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருந்தவர், ஒரு நிலைக்கு வந்த பிறகு அவருக்கு என சில விஷயங்களில் முடிவெடுக்க உரிமை இல்லையா என்ன?’ என நினைத்து, அவரை அதன் பிறகு நான் தொந்தரவு பண்ணவே இல்லை.

கமல் சாரும் அப்போது ‘மருதநாயகம்’ படத்தை பெரிய அளவில் திட்டமிட்டு எடுத்துக்கொண்டிருந்தார். அதனால் வேறு எந்தப் படங்களையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், அந்தப் படம் நின்றுபோன பிறகு அதில் இருந்து மீண்டு வர அவர் மிகவும் சிரமப்பட்டார். அந்தச் சமயத்தில் அவரிடமும் போய் கால்ஷீட் கேட்டேன். ‘நானே இப்ப ரொம்ப சிரமப்பட்டுட்டு இருக்கேன். எனக்கு மொத்தமா யாராவது பணம் கொடுத்தால், அதை வெச்சு கடனை எல்லாம் அடைச்சுடுவேன். ஆனா, `மொத்தப் பணத்தையும் கொடுங்க, உங்களுக்கு கால்ஷீட் தர்றேன்’னு உங்ககிட்ட கேட்கிறது நியாயம் இல்லைண்ணே. நீங்க வெயிட் பண்ணுங்க. நான் எங்கேயும் போகப்போறது இல்லை. நாம படம் பண்ணுவோம்’ என்றார்.

திரைத்தொண்டர் - 27

ரஜினி, கமல் இருவரும் பல்வேறு காரணங்களால் எனக்கு கால்ஷீட் தரவில்லை எனும்போதே, நான் படம் பண்ணுவதை நிறுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், சென்னையில் இருந்த பெரிய வீடு, மதுரையில் ஒரு பெரிய வீடு, திண்டுக்கல்லில் இருந்த மிகப்பெரிய சொத்து, சென்னையில் இருந்த வேறோர் இடம்... என, அதுவரை என் கையில் இருந்த 80 சதவிகிதச் சொத்துக்கள் என்னிடம் அப்படியே இருந்திருக்கும். நானும் நிம்மதியாக இருந்திருப்பேன். ஆனால், சினிமா சூதாட்டத்தில் பழக்கப்பட்டவன் சும்மா இருப்பானா? எனக்கு, இருப்பு கொள்ளவில்லை.

கே
யார் சாரை வைத்து ‘வனஜா கிரிஜா’ படம் எடுத்தேன். நன்றாக ஓடியது. அடுத்து ‘மாயாபஜார் 2000’ என்ற படம் எடுத்தேன். முதன்முதலில் தமிழ்ப் படத்தில் கிராஃபிக்ஸை அதிகமாகப் பயன்படுத்தியது அந்தப் படத்தில்தான். `கிராஃபிக்ஸ்' எனச் சொல்வதைவிட, `ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்' எனச் சொல்லலாம். நன்றாகத்தான் இருந்தது, என்ன காரணமோ தெரியவில்லை... அந்தப் படம் போகவில்லை. ஆனால், அதுபோன்ற காமெடிப் படங்கள் இப்போது நன்றாகப் போகின்றன.

ழக்கமாக நான் படத் தயாரிப்புக்கான ஃபைனான்ஸை, ஹைதராபாத், மைசூரில் உள்ளவர்களிடம்தான் வாங்குவேன். அதற்கு சென்னையில் உள்ள ஃபைனான்ஷியர்கள், ‘எங்ககிட்ட எல்லாம் வாங்க மாட்டீங்களா, நாங்க தர மாட்டோமா?’ என உரிமையுடன் கோபித்துக்கொண்டார்கள். ‘நீங்க எல்லாம் அதிக வட்டி கேட்கிறதாலதான் அங்கே போறேன்’ என்றேன். ‘உங்களுக்காக வட்டியைக் குறைச்சுக்கிறோம்’ எனச் சொல்லி, தந்தார்கள். அப்படி இரண்டு மூன்று பேரிடம் ஃபைனான்ஸ் வாங்கித்தான் அப்போது சரத்குமார், இயக்குநர்கள் வசந்த், அகத்தியன், விஜயகாந்த் சார்... என ஒவ்வொருவருக்கும் பத்து லட்சம்,  ஐந்து லட்சம் என அவரவர்களின் சக்திக்குத் தகுந்தாற்போல் அட்வான்ஸ் கொடுத்து கால்ஷீட் வாங்கியிருந்தேன்.

அந்தச் சமயத்தில்தான் படப்பிடிப்பில் இயக்குநர் பாலு மகேந்திராவை, தொழிலாளர்கள் அவமரியாதை செய்துவிட்டார்கள் என, திரைத் துறையில் மிகப்பெரிய ஸ்டிரைக் நடந்தது. அதில் ஒரு பக்கம், திரைப்படத் தொழிலாளர் யூனியன். மறுபக்கம் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என இரண்டு பிரிவுகளாக பிரிந்து நின்று போராட்டம் நடத்தினர். பிறகு, அது வேலை நிறுத்தமாக மாறியது.அதனால் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் எந்தப் படப்பிடிப்பும் நடக்கவில்லை. அதில் பலரும் பாதிக்கப் பட்டாலும் அதிகம் பாதிக்கப்பட்டது தயாரிப்பாளர்கள்தான். ஏனெனில், அவர்கள் வட்டிக்கு வாங்கி சினிமாவில் முதலீடு செய்த பணம் அங்கங்கே முடங்கியது. பிறகு, புதிய தொழிலாளர் அமைப்பு தொடங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து நடந்த சமாதானம்... என மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.

திரைத்தொண்டர் - 27

ந்த ஸ்டிரைக்குக்கு முன்னர், நான் எந்தெந்தப் படங்களுக்கு அட்வான்ஸ் கொடுத்தேன் என்பதையும், ஸ்டிரைக்குக்குப் பிறகு அந்தப் படங்களை எவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியில் ரிலீஸ் செய்தேன் என்பதையும் ஒவ்வொரு படமாகச் சொல்கிறேன்.

‘ரிஷி’ முதலில். ‘சூரியன்’ படம் பார்த்தது முதல் சரத்குமார் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை. ஹாலிவுட் நடிகர் ஆர்னால்டு போல மிகப்பெரிய ஃபைட்டிங் ஹீரோவாக வருவார் என்று நம்பினேன். அவருக்கு நான் ஒரு கதையைத் தயார் செய்தேன். ‘நாட்டாமை’ படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த சமயம். சரத்குமாரைச் சந்தித்து அட்வான்ஸ் கொடுத்தேன். கால்ஷீட் தருவதாகச் சொன்னார். சுந்தர் சி-யை இயக்குநராக ஃபிக்ஸ் பண்ணினேன். ‘நாட்டாமை’க்குப் பிறகு பிஸியான சரத்குமார், ஏகப்பட்ட படங்களை கமிட் பண்ணினார். அதனால் ‘ரிஷி’ படத்துக்கு மாதம் மூன்று நாட்கள், இரண்டு நாட்கள் எனப் பிய்த்துப் பிய்த்து கால்ஷீட் கொடுத்தார்.

சுந்தர் சி, பெரும் ஒத்துழைப்பு தந்து அந்தப் படத்தில் வேலைசெய்தார். ஆனால், படத்தை முடிக்க முடியாமல் எதிர்பாராத இடங்களில் இருந்து எல்லாம் ஏகப்பட்ட சிக்கல்கள். நான் யார் யாருக்காகவோ பாடுபட்டிருக்கிறேன்; முதல் ஆளாகப் போய் நின்று பிரச்னைகளைத் தீர்த்திருக்கிறேன். ஆனால், எனக்கு ஒரு பிரச்னை வரும்போது ஒருவரும் உதவிக்கு வரவில்லை. அதாவது பரவாயில்லை. ‘பஞ்சு சார் நஷ்டத்துல இருக்கார். இப்போ வாங்கலைன்னா எப்பவும் வாங்க முடியாது’ என நினைத்து, 20 ஆயிரம், 30 ஆயிரம் பாக்கிக்கு எல்லாம் எனக்கு நெருங்கியவர்களே கோர்ட்டில் கேஸ் போட்டு அட்டாச்மென்ட் வாங்கினார்கள்.

திரைத்தொண்டர் - 27

`ஊரைவிட்டே ஓடிப்போய்விடலாமா, வேறு ஏதாவது முடிவைத் தேடிக்கொள்ளலாமா..!' என்ற அளவுக்கு, மனம் ஒடிந்துபோனேன். ஆனால், ‘என்ன வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்’ என அன்று எனக்கு தைரியம் கொடுத்த ஒரே மனிதர் அபிராமி ராமநாதன். அவர் என்னுடனே இருந்து ‘ரிஷி’யை ரிலீஸ் பண்ண உதவி செய்தார். ‘நிச்சயம் நீங்க சம்பாதிப்பீங்கனு எனக்குத் தெரியும். அப்ப கொடுங்க போதும்’ எனச் சொல்லி, அவருக்குத் தரவேண்டியதைக்கூட எடுத்துக் கொள்ளவில்லை. ரிலீஸ் தேதி அறிவித்து, பிறகு மாற்றி என, வழக்கு வாய்தாக்களால் அந்தப் படம் ஐந்தாறு ஆண்டுகள் தாமதமாக ரிலீஸ் ஆனது. ஆனாலும் அந்தப் படம் ஓரளவுக்கு ஓடியது. 

தற்கு முன்னர், சரத்குமாரின் கால்ஷீட் தாமதமானதால், ‘வேறொரு படம் பண்ணுவோம்’ என முடிவுசெய்து பண்ணின படம்தான் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’. வசந்தின் ‘ஆசை’ படம் பிடித்திருந்ததால், ‘எனக்கொரு படம் பண்ணுங்க சார்’ என அவரிடம் நான்தான் கேட்டேன். நல்ல சம்பளம் கேட்டார். அதற்கு ஒப்புக்கொண்டுதான் அட்வான்ஸ் கொடுத்தேன். வித்தியாசமான ஒரு காதல் கதை சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது. அதில் சில மாற்றங்களைச் சொன்னேன். அவற்றைச் செய்வதாக ஒப்புக்கொண்டார்.

ஹீரோவாக சூர்யா சாரைச் சொன்னார். ஆனால், சூர்யா சாரின் படங்களை நான் பார்த்தது இல்லை. ‘ ‘நேருக்கு நேர்’ல நான்தான் அறிமுகப்படுத்தினேன். நல்லா பண்ணுவார்’ என்றார். ‘அவரே சொல்லும்போது அப்புறம் என்ன?’ என்ற நம்பிக்கையில் சூர்யாவை ஃபிக்ஸ் பண்ணினேன்.

‘ஹீரோயினாக புதுமுகத்தை ஃபிக்ஸ் பண்ணலாம்’ என்றார். ‘சரி’ என்றேன். மும்பை ஆர்ட்டிஸ்ட் கோஆர்டினேட்டர்களிடம் இருந்து வாங்கி வந்த புதுமுகங்களின் புகைப்படங்களில் நான்கைந்தை என்னிடம் அனுப்பி, ‘இதில் யாரை ஃபிக்ஸ் பண்ணலாம்னு சொல்லுங்க’ என்றார். ‘இந்தப் பொண்ணு நல்லா இருக்காங்க. இவங்களை ஃபிக்ஸ் பண்ணலாம்’ என, அன்று அந்தப் படங்களில் இருந்து நான் தேர்வுசெய்த பெண்தான் ஜோதிகா. அந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவை இசையமைப் பாளராக அறிமுகப்படுத்தினேன். ஆனால், எனக்குப் பிறகு யுவனை கமிட் பண்ணின ‘அரவிந்தன்’ படம் ரிலீஸில் எங்களை முந்திக்கொண்டது.

திரைத்தொண்டர் - 27

60 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில், 40 நாட்களில் ஷூட் செய்து படத்தை முடிப்பதாகச் சொன்ன வசந்த், அந்தப் படத்துக்கு எவ்வளவு செலவுசெய்து எத்தனை நாட்கள் ஷூட்டிங் நடத்தினார் என்பதைச் சொன்னால், மலைத்துப்போவீர்கள். அந்தப் படம் சரியாகப் போகாததால், அதில் எனக்கு மிகப்பெரிய நஷ்டம். நான் சொன்ன மாற்றங்களுடன் அந்தக் கதையை அவர் எடுத்திருந்தால், படம் நிச்சயம் பெரிய வெற்றியைப்  பெற்றிருக்கும் என்பது என் எண்ணம்.  யுவன் ஷங்கர் ராஜா என்கிற சிறந்த இசையமைப்பாளன் அறிமுகமானது, அந்தப் படத்துக்குப் பிறகு சூர்யா-ஜோதிகாவுக்கு நிறையப் படங்கள் வந்தன என்ற அளவில் மட்டுமே `பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தை நினைத்து சந்தோஷப்பட்டுக்கொள்கிறேன்.

விஜயகாந்த் சாரைப் பார்த்து அவருக்கு அட்வான்ஸ் கொடுத்து ‘அலெக்ஸாண்டர்’ என்ற கதையைச் சொல்லி, ஓ.கே பண்ணிவைத்திருந்தேன். அதற்கு கேயார் சாரை இயக்குநராக ஃபிக்ஸ் பண்ணியிருந்தேன். அந்த ஸ்டிரைக்குப் பிறகு ‘யார் மொத்தமா பணம் தர்றாங்களோ, அவங்களுக்கு கால்ஷீட்டில் முன்னுரிமை’ எனச் சொல்லி, பல நடிகர்கள் மொத்தமாக மூன்று நான்கு படங்களை ஒப்புக்கொள்ள தொடங்கினார்கள். ஆனால், சீனியர் விஜயகாந்த் சாரோ ஸ்டிரைக் முடிந்த பிறகு, ‘சீனியாரிட்டியில் நான் உங்களுக்குத்தான் முதல்ல கால்ஷீட் தரணும்’ எனக் கூப்பிட்டு ‘அலெக்ஸாண்டர்’ படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார். அந்தப் படத்தில்தான் கார்த்திக் ராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினேன். அந்தப் படம் வெற்றி பெற்று, எனக்கு லாபத்தைத் தந்தது.

தேபோல ‘காதல் கோட்டை’ படத்தைப் பார்த்தது முதல், அகத்தியன் அவர்களின் டைரக்‌ஷனில் ஒரு படம் பண்ண வேண்டும் என்பது என் ஆசை. அகத்தியன், ஒரு நல்ல தமிழறிஞர்; இலக்கியம் பற்றி அழகாகப் பேசுவார். என்னிடம் அவர் வித்தியாசமான ஒரு கதையின் அவுட்லைன் மட்டும் சொன்னார். எனக்கு அது பிடித்திருந்தது. ‘புதுமுகங்களைப் போட்டு எடுக்குறேன்’ என்றார். ‘எடுங்க’ என்றேன். அந்தப் படம்தான் ‘காதல் சாம்ராஜ்யம்’. ஓரளவுக்குத்தான் செலவு செய்தேன். ‘30 நாள்ல முடிச்சுடுவோம்’ என்று சொல்லி அப்படியே முடிக்கவும் செய்தார்.

படத்தைப் பார்த்தேன். என்ன காரணம் எனத் தெரியவில்லை, அவர் சொன்ன கதை படத்தில் வொர்க்அவுட் ஆகவில்லை. ‘ரிலீஸ் செய்தால் நிச்சயமாக பெரிய நஷ்டம் வரும்’ எனத் தோன்றியது.
யோசித்து யோசித்து இழுத்துக் கொண்டேபோய், கடைசியில் அந்தப் படம் டிராப் ஆனது. என் சினிமா வாழ்க்கையில் முழுப்படமும் எடுத்து ரீ-ரிக்கார்டிங் வரை முடித்து ரிலீஸ் ஆகாத படம் என்றால், அது ‘காதல் சாம்ராஜ்யம்’ மட்டும்தான்.

அந்தப் படத்தில் யுவன் சூப்பரான பாடல்களைத் தந்திருந்தார். `அந்தப் பாடல்களை நாம் வீணாக்கு கிறோமே!' என்று எனக்குள் உறுத்திக்கொண்டே இருக்கும். சமீபத்தில்கூட, ‘அந்தப் படத்தின் பாடல்களை வெச்சுக்கிட்டு, வேற கதை ரெடி பண்ணி நீ ஒரு படம் பண்ணுடா’ என்று என் பையன் சுப்புவிடம் சொல்லியிருக்கிறேன்.

இப்படி நான் வரிசையாகச் செய்த படங்களில், சில படங்கள் ஓடின; சில படங்கள் ஓடவில்லை. கடன்களை அடைக்க பெரும்பாலான சொத்துக் களை விற்றேன். முத்துராமன் சார் டைரக்‌ஷன் பண்ணவில்லை எனச் சொன்னபோதே, நான் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். பிறகு ரஜினி சார், கமல் சார் எனக்கு கால்ஷீட் தராதபோதாவது நான் படத்தொழிலை விட்டு விலகி இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் எனது சொத்துக்கள் ஓரளவுக்காவது மிஞ்சியிருக்கும்.

சினிமாவில் பழகிய அந்த 30 வருட நட்பை மட்டுமே நம்பி ஓடிக்கொண்டிருந்த நான், சினிமாவுக்குப் புதிதாக வருபவர்களில் பலர் அந்தப் புரிதலில் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளாமல் போய்விட்டேன். அப்படி உணர்ந்தது மீண்டு வரலாம் என யோசிக்கையில், காலம் என்னை வெகுதூரம் இழுத்துக்கொண்டுபோய் நிறுத்தியிருந்தது. ஆனாலும் எனக்கு வீறாப்பு போகவில்லை. ‘இந்த சினிமாவுலதான் வளர்ந்தோம். இவ்வளவு பண்ணியிருக்கோம். நம்மால் சமாளிக்க முடியாதா? திரும்பவும் வருவோம். நிச்சயம் நம் கஷ்டம் தீரும். தாயம் விழும், நமக்கான ஏணி வரும்’ என்ற நம்பிக்கையில் தாயக்கட்டைகளை உருட்டத் தயாரானேன்... அதன் விபரீதம் புரியாமல்.

- தொண்டு தொடரும்