
அமரர் பஞ்சு அருணாசலம்

எனக்கு எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், அவை பற்றி எல்லாம் யாரிடமும் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனால், எப்போதும் என்னுடனே இருக்கும் இளையராஜாவுக்குத் இதெல்லாம் தெரியாதா என்ன? தங்கர்பச்சானைக் கூப்பிட்டு, ‘பஞ்சண்ணனுக்கு ஒரு படம் பண்ணித்தாங்க’ எனச்

சொல்லியிருக்கிறார். ‘அழகி’ படம் பிரமாதமாக ஓடிக்கொண்டிருந்த நேரம் அது. இளையராஜா சொன்னதற்காக, அவர் எனக்குப் படம் பண்ண ஒப்புக்கொண்டார்.
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலின் ரைட்ஸ் வாங்கி, அதன் கதையைச் சொன்னார். ‘நிச்சயம் வித்தியாசமான குடும்பப் படமாக இருக்கும்’ என்ற நம்பிக்கை வந்தது. ‘யாரை ஹீரோவாகப் போடலாம்?’ என்ற யோசனை. திடீரென ஒருநாள் வந்த தங்கர் சில போட்டோக்களைக் காட்டி, ‘இவரைப் போடலாமா?’ எனக் கேட்டார். வேட்டி, சட்டை, முண்டாசு என அந்த கேரக்டருக்குப் பொருத்தமான முகமாகத் தெரிந்தது. ‘ஆனால், இந்தப் படத்தில் இருக்கிறவரை எங்கேயோ பார்த்திருக்கிறேனே...’ என என்னை அறியாமல் சொன்னேன். ‘நல்லா யோசிச்சுப் பாருங்க...’ என்றார் தங்கர். ‘டைரக்டர் சேரன்தானே?’ எனச் சரியாகச் சொன்னேன்.
பேன்ட் ஷர்ட்டில் பார்த்துப் பழகிய சேரனை... வேட்டி, சட்டை, துண்டுடன் விறகு சுமந்து வருவது போன்ற காட்சியைப் பார்த்ததும், அந்த கேரக்டராகவே இருந்தார் எனத் தோன்றியது. ‘ஓ.கே சேரனையே ஃபிக்ஸ் பண்ணுங்க’ என்றேன். சேரனுக்கும் சந்தோஷம். அந்தப் படம்தான் ‘சொல்ல மறந்த கதை’. தங்கரும் நன்றாகவே எடுத்திருந்தார். ஓரளவுக்கு லாபம் கிடைத்தது. அதைவைத்து கொஞ்சம் கடனை அடைத்தேன்.
‘காத்திருந்தாலும் பரவாயில்லை. அடுத்து பெரிய படமாகப் பண்ணிவிட வேண்டும்’ என முடிவெடுத்தேன். சேரனிடமே பேசினேன். ‘நிச்சயம் பண்ணுவோம்’ என்றவர் பிறகு, ‘அண்ணே... சில பிரச்னைகள். அதனால நானே சொந்தமா ஒரு படம் பண்றேன். என் படத்தை முடிச்சுட்டு உங்களுக்குப் பண்ணித்தர்றேன்’ என்றார். அப்படி அவர் பண்ணின படம்தான் ‘ஆட்டோகிராஃப்’. மிகப் பிரமாதமான வெற்றிபெற்ற படம் அது. ‘அடுத்து நாம பண்ணுவோம்’ என்றபோது, ‘இன்னொரு சொந்தப் படம் பண்ணவேண்டிய சூழல். அதை முடிச்சுட்டு உங்களுக்குப் பண்றேன்’ என்றார். ‘ஓ.கே’ என்றேன். அதையும் முடித்தார். அதுவும் சூப்பர் ஹிட். அந்தப் படம் ‘தவமாய் தவமிருந்து’. அவர் மார்க்கெட் உயர்வதில் எனக்கும் மகிழ்ச்சியே. ‘அடுத்து நமக்குப் பண்ணும்போது இது இன்னும் பலம்தானே. லேட்டானாலும் பரவாயில்லை’ எனக் காத்திருந்தேன்.
பிறகு ஒருநாள் கூப்பிட்டிருந்தார். போயிருந்தேன். ‘ ‘சேரன் திரும்பத் திரும்பக் குடும்பக் கதைகள் எடுத்துட்டிருக்கார்’னு சொல்லிடுவாங்களோனு பயமா இருக்கு. அதனால கொஞ்சம் வித்தியாசமா பண்ணுவோமா?’ என்றார். ‘எப்படி?’ என்றேன். ‘சொல்றேன்’ என்றார். வந்துவிட்டேன். பிறகு ஒரு மாதம் கழித்துபோய்ப் பார்த்தேன். ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ஒட்டுமொத்தமாக மாறிப்போயிருந்தார். தலையை ப்ளீச் பண்ணி, நவநாகரிக வாலிபர்போல் தன்னை மாற்றிக் கொண்டிருந்தார்.
‘இந்தத் தோற்றத்துக்கான கதாபாத்திரம் இல்லையே... தாங்குவாரா, தப்பாப்போயிடுமே, இந்த மனுஷன் நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆச்சே’ என மனதுக்குள் தோன்றியது. ஆனால், வெளிப்படையாக என்னால் சொல்ல முடியவில்லை. ‘சார், நீங்க பண்ணின எல்லா படங்களுமே ஹிட். என் சூழ்நிலையும் உங்களுக்குத் தெரியும். பேங்க்ல கடன் வாங்கிக் கொடுக்கிறேன். இதுதான் லாஸ்ட் சோர்ஸ். இது சரியா வரலைன்னா, எனக்குப் பெரிய பிரச்னை ஆகிடும்’ என்றேன். ‘உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராம நான் பார்த்துக்கிறேன். நீங்க ரிலாக்ஸா இருங்க’ என்றார். நானும் என் பையன் சுப்புவைக் கூப்பிட்டு, ‘அவர் இஷ்டத்துக்கு விட்டுடு. அவர் பண்ணித்தர்றேன்னு சொல்லிட்டார்’ எனச் சொல்லிவிட்டேன். அந்தப் படம்தான் ‘மாயக்கண்ணாடி’.
அதில் சேரன், நவ்யா நாயர் என முக்கியமான ஆர்ட்டிஸ்ட்கள் இரண்டே பேர்கள்தான். கால்ஷீட் பிரச்னையே கிடையாது. அவர் ஒரு கதை சொன்னார், எனக்குப் பயங்கர ஷாக். ‘நீ கனவு காணக் கூடாது. நீ எந்த வேலையில் இருக்கிறாயோ, அந்த வேலையிலேயே இருக்கணும். அதுக்கு மேல நீ ஆசைப்படுறது தப்பு; பேராசைப்பட்டால் பெருநஷ்டம்’ என்ற அர்த்தம் தொனிக்கும் கதை. ‘நெகட்டிவ் கதையாச்சே. இது எப்படி ஓடும்?’ என எனக்கு யோசனையாகவே இருந்தது.
‘படம் பார்க்க வர்றவங்களுக்கு அவங்களின் முன்னேற்றத்துக்கான வழிவகைகளைச் சொன்னா தான், ஆர்வத்தோடு பார்ப்பாங்க. ‘நீ இப்படித்தான் இருக்கணும்’னு சொன்னா எரிச்சலாவாங்க’ எனச் சொன்னேன். ‘இல்லல்ல... இந்தப் படத்தை நான் எப்படி எடுத்துக்காட்டுறேன் பாருங்க’ என்றார். ‘சரி பண்ணுங்க’ என்று ஒதுங்கிவிட்டேன். எந்த விஷயத்திலும் நான் தலையிடவில்லை. ஒருவழியாக படத்தை முடித்தார். அப்போதே ஆறரை கோடி ரூபாய்க்கும் மேல் செலவானது. தென் இந்தியாவில், முதன்முதலில் தனியார் வங்கியில் சினிமா எடுக்க லோன் சேங்ஷன் ஆனது எனக்குத்தான். அதை வைத்துத்தான் அந்தப் படத்தை எடுத்தோம்.
ஆனால், நாங்கள் எதிர்பார்க்காத வகையில் எட்டு கோடி ரூபாய்க்கு அந்தப் படம் பிசினஸ் ஆனது. அதற்கு சேரன் மீதான எதிர்பார்ப்புதான் காரணம். ரிலீஸ் சமயம் ஏகப்பட்ட பிரச்னைகள். எங்கெங்கோ கடனை வாங்கி, பேங்க் லோன் கட்டி படத்தை ரிலீஸ் பண்ணினோம். ஆனால், ஏகப்பட்ட நஷ்டம். படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை.
இப்படியான தொடர் தோல்விகளால் ஏற்பட்ட கடனை எப்படி அடைத்தேன், பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி, என் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொண்டேன் என்பதைப் பற்றி பேசி அடுத்த வாரத்துடன் தொடரை முடித்துக் கொள்கிறேன். அதற்கு முன் திரைக்கதை எழுதுவதைப் பற்றி சில விஷயங்கள் பேசலாம் என நினைக்கிறேன். காரணம், இந்தத் தொடர் ஆரம்பித்த நாளில் இருந்து எனக்கு ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள். அவற்றில் பெரும்பாலானாவை, இப்போது சினிமா இயக்கிக் கொண்டிருக்கும் இளைய இயக்குநர்களின் அழைப்புகள்.
அவர்களில் பலரும், ‘உங்க படங்களோட வெற்றிக்கு உங்க திரைக்கதைக்குப் பெரும்பங்கு இருக்கு. திரைக்கதையை எப்படி அமைப்பீங்க..?’ - இப்படி ஏகப்பட்ட கேள்விகள். பலர் தங்களின் ஸ்க்ரிப்ட் புத்தகங்களைக் கொடுத்து, ‘படிச்சுட்டு கரெக்ஷன்ஸ் சொல்லுங்க சார்’ என்கிறார்கள். சிலர், தங்களின் குறும்படங்களைக் கொடுத்து, ‘இதை சினிமாவாக்கலாமானு பார்த்துட்டுச் சொல்லுங்க சார்’ என்கிறார்கள். இதற்கு எல்லாம் காரணம், நான் எழுதிய படங்களின் வெற்றி. அந்த வெற்றிக்கு நான் மட்டுமே காரணம் இல்லை என்றாலும் நான் பின்பற்றிய அந்தக் கதைசொல்லும் பாணி எனக்கு மிகப்பெரிய வெற்றிகளைக் கொண்டுவந்து சேர்த்தது.

தவிர என் கதை, திரைக்கதை, வசனத்தில் படங்களைத் தயாரித்ததுவரை எனக்கு வெற்றிகளே வந்துசேர்ந்தன. ‘நானேதான் கதை எழுதி, திரைக்கதை அமைத்து, வசனம் எழுதி, டைரக்ஷனும் பண்ணுவேன்’ என வந்த இளைய இயக்குநர்களின் படங்களைத் தயாரிக்கத் தொடங்கியதில் இருந்துதான், எனக்கான தோல்வி தொடங்கியது. அதற்காக அவர்களின் சினிமா மேக்கிங் பாணி தவறு எனச் சொல்லவில்லை. ஆனால், இன்று 90 சதவிகிதத்துக்கும் மேல் படங்கள் தோல்வி அடையக் காரணம், கதையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, வெறும் காட்சிகளை மட்டுமே கோத்து எழுதுவதுதான் என்பது என் கருத்து.
‘உங்களின் கதை சொல்லும் பாணி என்ன?’ என்று நீங்கள் கேட்கலாம். முதலில் இதற்கு எப்படி நான் தயாரானேன் என்பதைச் சொல்கிறேன். ஆரம்பக் காலத்தில் இருந்தே என்னை அறியாமலேயே ஆர்வத்தின்பால் தயார்படுத்திக் கொண்டேன். நிறைய நாவல்கள், சிறுகதைகள் படித்தேன், எழுத்தில் ஆர்வம் ஏற்பட்டது. ஏகப்பட்ட பாடல்களைக் கேட்டு வளர்ந்ததால், இசைப் பாடல்கள் எழுத ஆர்வம் வந்தது. இப்படி வாசித்தும் கேட்டும் கற்பனையிலும் மிதந்தபோதுதான் கவிஞரிடம் உதவியாளராகச் சேர்ந்தேன்.
அவருடன் பல கம்பெனிகளுக்குச் சென்றபோது, எல்.வி.பிரசாத், கே.எஸ்.பிரகாஷ்ராவ், சக்கரபாணி, பீம்சிங், சோலைமலை, ஆரூர்தாஸ், தேவர், கொட்டாரக்கோ, ராமண்ணா, கே.எஸ்.கோபால கிருஷ்ணன், ஸ்ரீதர், முக்தா சீனிவாசன், வித்வான் லட்சுமணன், மணியன், வலம்புரி சோமநாதன், ஏ.எல்.நாராயணன்... இப்படி எத்தனையோ ஜாம்பவான்கள், கவிஞருக்குக் கதை சொல்வார்கள். அவர்கள் கதை சொல்லும் பாணியை, தள்ளி நின்று ரசிப்பேன். ‘இந்தக் கதை எப்படிப் போகும்? வித்தியாசமா இருக்கே. இது சிவாஜிக்குப் பொருந்துமா?’ என எனக்கு நானே கேள்விகளை எழுப்பிக்கொள்வேன்.
அப்படி, ஒரு கதையைக் கேட்டபோது, ‘இந்தக் கதை ஓடவே ஓடாது’ என நான் கணித்த படம் ‘படிக்காத மேதை’. ‘சிவாஜியை இந்த அளவுக்கு முட்டாளாகக் காட்டினால், மக்கள் எப்படி ஒப்புக்கொள்வார்கள்? இதில் ரங்காராவ்தானே ஹீரோவாகத் தெரிகிறார்’ என்ற சந்தேகம். ஆனால், படம் பார்த்தேன். சிவாஜி சார், அந்த கேரக்டரைச் செய்திருந்த முறை, பீம்சிங்கின் இயக்கம் எல்லாம் சேர்ந்து தியேட்டரில் பெண்கள், ஆண்கள் என அனைவரையும் அழவைக்கும் அளவுக்கு உருக்கமான காவியமாக அமைந்தது.
என் மரியாதைக்கு உரிய அற்புதமான இயக்குநர் ஸ்ரீதர். பல நல்ல படங்களை இயக்கியவர். ‘கலைக்கோயில்’ என்ற வித்தியாசமான படத்தை எம்.எஸ்.விஸ்வநாதன் தயாரிப்பில் இயக்கினார். எப்போதுமே கவிஞரிடம் சுருக்கமாகக் கதை சொல்லக்கூடிய ஸ்ரீதர், அந்தப் படத்தின் கதையை அவ்வளவு அழகாக வர்ணித்து ஈடுபாட்டுடன் சொன்னார். அது, கலையம்சம் உள்ள உணர்ச்சிப் போராட்டங்கள் நிறைந்த கதை. எனக்கு அந்தக் கதை பிடித்து இருந்தது. ‘மியூஸிக்கல் சப்ஜெக்ட். பெரிய ஹிட் ஆகும்’ என்று நினைத்தேன்.
ஆனால், படம் ஃபெயிலியர். ‘கதையைக் கேட்டு ரசிச்சோமே, நம்ம ரசனை தப்பா? போய்ப் பார்ப்போம்’ என்று ஆர்வமாக அந்தப் படத்தைப் பார்த்தேன். படம் எனக்கும் பிடிக்கவில்லை. ‘ஏன் பிடிக்கலை?’ என்று வீட்டுக்கு வந்த பிறகு யோசித்தேன். அதில் எஸ்.வி.சுப்பையா ஒரு பெரிய பாடகர். அவர் முத்துராமனை எடுத்து வளர்ப்பார். அவருக்குத் திருமணம் பண்ணிக்கொடுத்து அன்பாகப் பார்த்துக்கொள்வார். ஆனால், முத்துராமனோ, ‘அவருக்கு இருக்கும் புகழ், நமக்கு இல்லையே’ என்ற ஏக்கத்தில் குடித்துக் கெட்டுப்போய்விடுவார். பிறகு ஒரு வாக்குவாதத்தில் சுப்பையா வீட்டைவிட்டே வெளியேறிவிடுவார். இப்படிப் போகும் கதையில் ஹீரோவான முத்துராமன் வில்லனைப் போல் சித்தரிக்கப் பட்டிருப்பார். சுப்பையாவை ஹீரோவைப்போல் காட்டியிருப்பார். இது ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. ‘இதுதான் மிஸ்டேக்’ எனத் தோல்விக்கான காரணத்தைப் புரிந்துகொண் டேன். ‘சரி ஓ.கே. இதை எப்படிப் பண்ணியிருக்கலாம்’ என எனக்கு நானே, வேறு ட்ரீட்மென்ட் யோசித்தேன். ‘அதற்கு மாற்றாக நான் என்ன ட்ரீட்மென்ட் யோசித்தேன்’ என்று சொல்வதைவிட, இன்னொரு படத்தையே அதற்கு உதாரணமாகச் சொல்கிறேன்.
‘சங்கராபரணம்’ நேரடி தெலுங்குப் படமாக தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம். ஒரு மிகப்பெரிய வித்வான், தற்செயலாக அவருக்கு வேறு ஒரு தொடர்பு, அதன் மூலம் ஒரு குழந்தை, அதை வெளியே சொல்ல முடியாத நிலை. அந்தப் பையனே அவருக்குச் சீடனாக வருகிறான். ஒருகட்டத்தில் வித்வானுக்கு வயதாக, அவரால் மேடையில் பாட முடியாத சூழல். அந்தச் சமயத்தில் அவரின் மகன் பாட ஆரம்பிக்கிறான். படம் சூப்பர் டூப்பர் ஹிட். அந்த வெற்றிக்குக் காரணமாக நான் நினைப்பது, அனைவரையுமே பாசிட்டிவ் கேரக்டர்களாக அமைத்திருந்ததுதான். எவ்வளவு நல்ல கதைகளாக இருந்தாலும், ஜனங்களுக்குப் பிடித்த வகையில் அதைச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்.
‘திரைக்கதை எழுதுவது எப்படி?’
சினிமாவுக்கு என்று இல்லை... `இப்படித்தான் எழுத வேண்டும்' என்று யாரும் அறிவுரை சொல்லி எல்லாம் எதுவும் எழுத முடியாது. அது சிறுகதை, நாவல், சினிமா, நாடகம்... என எதை எழுதுவதாக இருந்தாலும், கற்பனையில் ஒரு விஷயத்தை உருவாக்கும் திறன் வேண்டும். அது அனுபவம், வாசிப்பு, பார்த்த படங்கள், கேட்ட இசை... என ஒவ்வொருவரைப் பொறுத்தும் கொடுக்கப்படும் வாய்ப்புகள், சுதந்திரத்தைப் பொறுத்தும் அது மாறும்.
ஓ.கே. சினிமாவில் கதை, ஸ்க்ரீன்ப்ளே, ட்ரீட்மென்ட் உண்டு. ஆனால் நாவல், குடும்ப நாவல், பெருங்கதை, குறுங்கதை, சிறுகதை... இவற்றுக்கு ஸ்க்ரீன்ப்ளே, ட்ரீட்மென்ட் எதுவும் கிடையாது. ‘கதை, ட்ரீட்மென்ட் எழுதுவதில் கல்கி கெட்டிக்காரர்’, ‘கதை, ஸ்க்ரீன்ப்ளே எழுதுவதில் புதுமைப்பித்தன் கெட்டிக்காரர்...’ என்று யாராவது சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி இருக்கும்போது சினிமாவில் மட்டும் இந்த ஸ்க்ரீன் ப்ளே, ட்ரீட்மென்ட் எப்படி வந்தது?
ஸ்க்ரீன்ப்ளே... இதில் ‘ப்ளே’ என ஏன் சொல்கிறார்கள்? கிரிக்கெட் விளையாட்டு உலகம் முழுவதும் ஒன்றுதான். அதில் சிலர் டெண்டுல்கராகவும் சிலர் தோனியாகவும் சிலர் கோஹ்லியாகவும்... அந்த விளையாட்டை எத்தனைவிதமாக விளையாடுகிறார்கள். அதே கிரிக்கெட்தான். ஆனால், அதை ஒவ்வொருவரும் எத்தனைவிதமாக, எத்தனை வருடங்களாக விளையாடுகிறார்கள்? போரடிப்பதே இல்லை.
அதுபோன்ற ப்ளேவை திரையிலும் பண்ணலாம். அதுதான் ஸ்க்ரீன்ப்ளே. ‘அடுத்த பந்தை அடிப்பானா, அது சிக்ஸரா, ஃபோரா, விக்கெட்டா..?’ இப்படி விறுவிறுப்பு குறையாமல் போய்க்கொண்டிருக்கும் ப்ளே போல. ‘நல்ல கதையைச் சொல்கிறேனே...’ என எந்தவித ப்ளேயும் இல்லாமல், கதையைச் சொல்லிக்கொண்டே இருந்தால், ‘அடப்போய்யா... நீயும் உன் கதையும்’ எனக் கொட்டாவி விட்டுவிட்டு எழுந்துபோய்விடுவார்கள். அதனால் நல்ல கதைகளைக்கூட சரியாக ப்ளே பண்ண வேண்டும்.
அடுத்து ‘ட்ரீட்மென்ட்’. இந்த வார்த்தையை உபயோகப்படுத்தும் இடம் மருத்துவமனை. உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுப்பது டாக்டர்களின் வேலை. அப்படி இருக்கையில் சினிமாவில் எங்கிருந்து வந்தது அந்த ட்ரீட்மென்ட்? நம் உடலில் செயல்படாத உறுப்புகளைச் செயல்படவைப்பதுதானே ட்ரீட்மென்ட். அதேபோல்தான் எவ்வளவு மிகச் சிறந்த கதையாக இருந்தாலும், திரைக்கதை என்ற ஒன்றை நீங்கள் எழுதி முடிக்கும்போது, நம்மை அறியாமல், ஆங்காங்கே சில வீக் பாயின்ட்ஸ் வந்துவிடும். அவற்றை உன்னிப்பாகக் கவனித்து அதை ‘ட்ரீட்’ பண்ண வேண்டும். அப்படி ஒரு கதையை ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை விறுவிறுப்பாகவும் அனைவரும் ரசிக்கும்படியாகவும் புரியும்படியாகவும் செய்யக்கூடியதுதான் நல்ல ட்ரீட்மென்ட்.
இன்று படம் இயக்கும் பல இயக்குநர்களிடம் நான் கதை கேட்டிருக்கிறேன். ‘இது என்ன கதை?’ என ஆரம்பம் முதல் கடைசி வரை கதையை முடிவுபண்ணாமல், அவர்கள் சிந்திக்கும்போதே சினிமாவாகவே, அதாவது ட்ரீட்மென்டாகவே சிந்திக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இது தவறு. முதலில் முழுக் கதையைத் தயார்செய்த பிறகே ப்ளே, ட்ரீட்மென்ட்டுக்குப் போக வேண்டும்.
ஆனால் இவர்கள், கதையையே ரெடி பண்ணாமல், ‘ஓப்பன் பண்ணினா பெரிய கார் வந்து நிக்குது’ என்று ஷாட் பை ஷாட்டாகவே சிந்தித்து, ‘இந்த இடத்தில் பாட்டு, அந்த இடத்தில் காமெடி ட்ராக்’ எனக் காட்சிக் காட்சியாக எடுத்துக் கோத்து சினிமா ஆக்குகிறார்கள். அவர்கள் சொல்லும் காட்சிகளைக் கோத்துப்பார்த்தால், அதில் கதை இருக்கிறதா, இல்லையா என்றுகூட பார்ப்பது இல்லை. அப்படியே அதில் கதை இருந்தாலும், அது நன்றாக இருப்பது இல்லை.

ஆனால், நான் ஒரு படத்துக்கு முதலில் அடிப்படையான ஒரு கதையை ரெடி பண்ணுவேன். பிறகு அந்தக் கதையின் ஹீரோ, ஹீரோயின், வில்லன் என முக்கியமான கேரக்டர்களில், யாரை நடிக்கவைக்கலாம் என நடிகர், நடிகைகளை ஃபிக்ஸ் பண்ணுவேன். அந்தக் கதையையும், அந்த நடிகர்- நடிகைகளையும் மனதில் வைத்து திரைக்கதை அமைப்பேன். அந்த ஃப்ளோ இழுவையாக இல்லாமல், அனைத்துத் தரப்பினரும் பார்க்கும் வகையில் பரபரப்பாக இருக்கிறதா என, பிறகு ட்ரீட் பண்ணுவேன்.
இப்படி நான் எழுதியதை எஸ்பி.முத்துராமன் சார் அழகாக எடுத்துத் தருவார். அவர் தேவைக்கு அதிகமாக எடுத்து, பிறகு வெட்டித் தூக்கி எறிந்ததாக நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. தனித்தனியாக இருந்த நாங்கள் இருவரும், அப்படி ஒரே மாதிரியான அலைவரிசையில் இயங்கி பல வெற்றிகளைத் தந்திருக்கிறோம். ஆனால் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ என அனைத்தையும் ஒரே ஆளாக, கன்ட்ரோலில் வைத்துள்ள இன்றைய இயக்குநர்கள் எங்களைத் தாண்டியும் மிகப்பெரிய வெற்றிப் படங்களைத் தரலாம். அது உங்கள் ப்ளே, ட்ரீட்மென்டைப் பொறுத்தது.
- தொண்டு தொடரும்...