
அமரர் பஞ்சு அருணாசலம்

வெறும் காது கழுத்துடன் நிற்கும் அம்மா, செலவாளி அப்பா, பள்ளியில் படிக்கும் தம்பிகள், தங்கைகள். வறுமையின் பிடியில் குடும்பம். இப்படிப்பட்ட வீட்டின் மூத்த மகனாக இருப்பது ஒரு பக்கம் வேதனையாக இருந்தாலும், ‘இவங்க தேவைகளை நாமதானே பூர்த்தி செய்யணும்’ என நினைக்கும்போது, அது ஒரு சுகமான சுமை. ‘இன்றைய தேவைக்கு சம்பாதிச்சா போதும்’ என முடிவு எடுக்காமல், ‘மெட்ராஸ் போய் ஏதோ ஒரு வகையில் பெரிய ஆளா வரணும்’ என அன்று நான் நின்று நிதானமாகச் செயல்பட்டது எனக்கே ஆச்சர்யம்தான்.
அப்போது எங்கள் உறவினர்கள் நிறையப் பேர், வியாபார விஷயமாக காரைக்குடியில் இருந்து சென்னை வருவார்கள். அன்று நான் ஊரில் இருந்து சென்னைக்கு ரயில் ஏறியபோது, ரயிலில் வந்த உறவினர் ஒருவர் என்னைப் பார்த்து வேறொருவரிடம், ‘இந்தப் பய தலப்பட்டுதான் இவங்க குடும்பத்தைக் காப்பாத்தணும்’ எனச் சொன்னார். அவர் சொன்னதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன். ஆம், நான் தலப்பட்டுதான் என் குடும்பத்தைக் காப்பாற்றினேன். அந்த விஷயத்தில் ஒரு மூத்த மகனாக, நான் மனநிறைவாக இருக்கிறேன். ஆரம்பத்தில் என்னை அரவணைத்த ஏ.எல்.எஸ் தொடங்கி, உதவியாளராக சேர்த்துக்கொண்ட கவிஞர் வரை எத்தனையோ பேரை இன்று நினைத்துப்பார்க்கிறேன். கவிஞருக்கு 15 பிள்ளைகள் இருந்தாலும் என்னையும் என் மனைவி மீனாவையும் தன் 16, 17-வது பிள்ளைகள்போலவே நடத்துவார். இது, அவர் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை. அவரின் பிள்ளைகளும் அப்படியே, ‘பஞ்சண்ணன்... பஞ்சண்ணன்...’ என்று அவ்வளவு ப்ரியம். நானும் அவர்களிடம் அப்படித்தான் இருக்கிறேன்.
எதையும் கதைகளாகவும் காட்சிகளாகவும் பார்க்கும் எழுத்தாளர்களுக்கு அது ஒரு பக்கம் வரம்

என்றாலும், இன்னொரு பக்கம் சாபம். ஒரு மாய உலகில் மாய மானைத் துரத்திக்கொண்டு ஓடுவதுபோல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த ஓட்டம் தடைபடாமல் பார்த்துக்கொண்டது என் குடும்பம். மீனாட்சி என்கிற மீனா. என் மனைவி. சென்னை, அவளுக்கு ஆரம்பத்தில் கண்ணைக் கட்டி காட்டில்விட்டது போன்ற ஒரு உணர்வு. ‘குடும்பம் நல்லா இருக்கணும்னுதானே சம்பாதிக்கிறார். ஆனா, அந்தக் குடும்பத்தைப் பற்றிய எந்தச் சிந்தனையுமே இல்லாம இருக்காரே இந்த மனுஷன்!’ என்று நினைத்திருப்பாள். என் கடைசிக்காலம் வரைகூட அவளுக்கு அந்த நினைப்பு இருக்கும் என நினைக்கிறேன். ஆம், அன்றில் இருந்து இன்று வரை நான் அப்படியேதான் இருக்கிறேன்.
காலை எழுந்தவுடன் கிளம்பிவிடுவேன் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், நான் எப்போது வீட்டுக்கு வருவேன் என்பது எங்கள் இருவருக்குமே தெரியாது. பல நாள், நள்ளிரவைத் தாண்டியும் வருவேன். பொறுமையாகக் காத்திருப்பாள். நான் கொஞ்சம் முன்கோபி. பொறுத்துக்கொள்வாள். நான் கடும் சோம்பேறி, அவள் உற்சாகமாக இருப்பாள். என் நெகட்டிவ் விஷயங்களை தன் பாசிட்டிவ் விஷயங்களால் சமப்படுத்துவாள். எங்கள் இருவர் வீட்டு உறவுகளுக்கும் அவள்தான் பாலம். ஊரில் யார் வீட்டில் விசேஷம் என்றாலும் தவறாமல் கலந்துகொள்வாள். அப்படி காரைக்குடி ரயில் பயணங்கள்தான் அவளின் ஒரே ஆறுதல்.
என் பனியன் சைஸ் என்ன என்றுகூட எனக்குத் தெரியாது. இப்படி வேட்டி-சட்டை வாங்கி வைப்பதில் தொடங்கி, அனைத்தையும் பார்த்துக்கொள்வாள். ஆனால் நானோ, ‘உனக்கு என்ன வேணும்... புடவை, நகைநட்டு எதுவும் வாங்கித் தரவா?’ என்று இதுநாள் வரை கேட்டதே இல்லை. காரைக்குடியைவிட்டு வந்து வெகுநாட்கள் ஆனாலும், அந்த ஊர் சுவையும் எங்கள் அம்மாவின் கைப்பக்குவமும் என் நாக்கிலும் மனதிலும் அப்படியே தங்கிவிட்டன. அம்மாவின் அந்தக் கைப்பக்குவம் பழக, மீனாவுக்குக் கொஞ்சம் நாள் பிடித்தது.
‘இந்த மனுஷனுக்கு எது பிடிக்குமோ?’ என நினைத்திருப்பாள்போல. நான்கைந்து வகைகளைச் செய்து வைத்துவிட்டு உட்கார்ந்து இருப்பாள். நான் ஏதோ ஒரு சிந்தனையில் ஏதோ அனிச்சைச் செயல்போல சாப்பிட்டுக்கொண்டு இருப்பேன். இது என்னைப் போன்ற ஆட்களுக்கே உள்ள சாபம். மனதில் எப்போதும் நான்கைந்து அலைவரிசைகளை ஆன் செய்துவைத்தபடியே சுற்றுவார்கள். அந்தச் சமயத்தில் உணவை கேட்காமல் பரிமாறிவிட்டால், அந்த நான்கில் ஏதோ ஓர் அலைவரிசை தடைபட்டதாக நினைத்து கோபப்படுவேன். மற்றதைவிட ஒரு கரண்டி கூடுதலாக எதை அதிகமாக எடுத்துவைத்து சாப்பிடுகிறோனோ, ‘ஓ... அவருக்கு அதைவிட இதுதான் பிடிக்கும்போலிருக்கு’ என்று குத்துமதிப்பாக என் விருப்ப உணவாக அதை மனதில் புரிந்துகொள்வாள்.

பிறகு, குழந்தைகள் பிறந்தன. ‘வளர்த்தோம்’ எனச் சொல்வதைவிட ‘அவள் வளர்த்தாள்’ என்றுதான் சொல்வேன். அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதுகூட எனக்குத் தெரியாது. அவர்களுக்கு அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தது அவள்தான். அவள் குடும்பத்தினருடன் சென்று சில படங்கள் பார்த்திருக்கிறாள். இத்தனை படங்களை நான் எடுத்திருந்தாலும் நாங்கள் இருவரும் சேர்ந்து பார்த்த ஒரே படம் ‘சாரதா’. இன்று வீட்டில் ஓய்வில் இருக்கும்போதுகூட ஃபேஸ்புக்கையும் புத்தகங்களையும் வாசித்து பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறேன்.
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர், அவளுக்கு உடம்புக்கு முடியாமல் தொடர்ந்து இன்ஜெக்ஷன் போட்டனர். அப்போது நரம்பு கிடைக்காமல் ஊசியைக் குத்திக் குத்தி எடுத்தபோது கதறி அழுதுவிட்டாள். ‘இத்தனை நாளா அழாதவ இன்னைக்கு அழுவுறானா... அவளுக்கு முடியலைபோல விட்ருங்க’ என்றேன் சத்தமாக. அவர்களுக்கு ஆச்சர்யம். ‘பாரு... ஆச்சிக்கு ஒண்ணுன்னா, ஐயா துடிச்சுப்போயிடுறாங்க!’ என ஆச்சர்யப்பட்டார்கள். குடும்பத்தினர் மீது எவ்வளவோ அன்பும் ப்ரியமும் இருந்தும் அதை வெளிப்படுத்தக்கூடத் தெரியாதவனாக இருந்திருக்கிறேன் என நினைக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது.
‘இவங்களுக்குத்தான் நாம இருக்கோமே’ என்ற உணர்வில், என் வேலைகளுக்கு மத்தியில் அவர்களை நான் கவனிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அதை ஒருநாளும் அவர்கள் வெளியே காட்டிக்கொண்டதே இல்லை. அதேபோல என் தம்பி, தங்கைகளுக்குக் கொடுத்து உதவும்போதும் சரி, சினிமாவில் யார் யாருக்கோ உதவியபோதும் சரி, நட்புக்காக சில விஷயங்களைச் செய்தபோதும் சரி, முகம் தெரியாதவர்களுக்குக் கொடுத்தபோதும் சரி... ‘ஏன் இப்படி எடுத்துக் குடுக்குறீங்க?’ என அவர்கள் என்னை அனத்தியதே கிடையாது. இப்படி மனைவி மக்கள் கிடைத்த வகையில் நான் கொடுத்துவைத்தவன் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஷண்முகநாதன், என் மூத்த மகன். அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர். நல்ல படிப்பாளி, ரசனைக்காரன். மருமகள் லதா. இவர்களுக்கு ஹரன், அனந்தன் என இரு மகன்கள். ‘ஏன்டா ஷண்முகம், உன்னோட போனவங்க எல்லாரும் அங்கே ரெண்டு மூணு வீடு வாங்கி செட்டிலாகிட்டாங்களே... நீ எப்படா வீடு வாங்கப்போற?’ என என் மனைவி ஒருமுறை கேட்டபோது, ‘எவ்வளவு பணம் காசு இருந்தாலும் ஒரு வீட்லதானேம்மா வாழப்போறோம். அதுக்கு எதுக்கு அத்தனை வீடு?’ எனக் கேட்டானாம். நல்லவன், ஆர்ப்பாட்டம் இல்லாதவன்.
அடுத்தவன், சுப்பு. நடிகன். சினிமா தயாரிப்பு நிர்வாகி. ‘பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ்’ பேனரில் மீண்டும் சினிமா தயாரிக்கும் முனைப்பில் இருக்கிறான். டாக்டரிடம் அழைத்துச் செல்வது, நண்பர்களின் வீட்டு விசேஷங்களுக்குக் கூட்டிப்போவது என தன் வேலைகளுக்கு மத்தியில் என்னையும் கவனித்துக்கொள்வான். இவனின் மனைவி மீனா. இவர்களுக்கு கிரிஷ் என்கிற மகன், ஜோஸ்னா என்கிற மகள் உள்ளனர்.
இவர்களுக்கு அடுத்து பிறந்தவர்கள் இரட்டைப் பெண் குழந்தைகள், கீதா-சித்ரா. கீதாவின் கணவர் சுப்ரமணியன், அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர். அமெரிக்காவிலேயே செட்டிலாகி உள்ளனர். கீதா தமிழ் இலக்கியம் படித்தவர். அங்கு தமிழ்ச் சங்கத்தில் இரண்டு முறை தலைவராக இருந்துள்ளார். நண்பர்கள் யார் சென்றாலும் அவர்களை உபசரிப்பது இவர்களுக்குப் பிடிக்கும். அஸ்வின், அருண் என்கிற இரண்டு மகன்களும் நிவேதா என்கிற மகளும் உள்ளனர். கடைசி மகள் சித்ராவின் குடும்பம் தற்போது பெங்களூரில் உள்ளது. இவரின் கணவர் ராஜேஷும் சாஃப்ட்வேர் இன்ஜினீயரே. இவர்களுக்கு ஆதவ், அரவிந்த் என்கிற இரு மகன்கள்.

எனக்கு பாராட்டு, பகட்டு என்றால், அலர்ஜி. கவிஞரிடம் இருந்து வந்ததாலோ என்னவோ, ‘அவ்வளவு பெரிய மனுஷனே அமைதியாக இருக்கையில், நாம எதுக்கு குதிக்கணும்?’ என்று நினைத்தேனா... எதற்காக வெளிப்படுத்த தயங்கினேன் எனத் தெரியவில்லை. என் சுபாவமே அப்படித்தான் போலிருக்கிறது. ‘ஓ.கே அப்படியே இருந்துவிடுவோம்’ என்றுதான் நினைத்தேன்.
‘உங்க அப்பா அவ்வளவு விஷயங்கள் பண்ணியிருக்கார். ஏன் அவரோட வொர்க்கை எல்லாம் நீங்க ஆவணப்படுத்தலை?’ என்று என் பிள்ளைகளிடம் அவர்களின் நண்பர்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஒருகட்டத்தில், ‘எங்களுக்கு ஏதோ விருப்பம் இல்லாத மாதிரி பேசுறாங்க. நீங்க இதுக்கு சம்மதிச்சே ஆகணும்’ என்று பிள்ளைகள் வற்புறுத்த, அதற்கு ஒப்புக்கொண்டு பண்ணினதுதான், ‘தொட்டதெல்லாம் பொன்னாக்கிய படைப்பாளி - பஞ்சு அருணாசலம்’ (A Creator with Midas Touch) என்கிற ஆவணப்படம்.
இதை மிகச்சிறப்பாக இயக்கித் தொகுத்தது ‘ஃபோப்தா ஃபிலிம் அகாடமியின் நிர்வாக இயக்குநர் தனஞ்செயன் அவர்கள். இது மிகப்பெரிய வேலை. என்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் ஆய்வுசெய்து, அது தொடர்பான பிரபலங்களைச் சந்தித்து, தொகுத்துள்ளார். ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் என 15 நாட்கள் கிட்டத்தட்ட 50 மணி நேரம் பேசினேன். அதேபோல ரஜினி சார், சிவகுமார் சார், இளையராஜா சார்... என என்னுடன் பணியாற்றிய அனுபவங்களை 40 பேர்களிடம் கேட்டுத் தொகுத்துள்ளனர். இதில் ரஜினி சாரிடம் பேசக் கேட்டபோது அவருக்கு அப்போது காய்ச்சல். இருந்தாலும் இவர்கள் கேட்டதும் வரச்சொல்லி பேசினாராம்.
இந்த ஆவணப்படத்துக்காகப் பேசிய பிரபலங்கள், இதை இயக்கிய தனஞ்செயன் சாருக்கும் தயாரித்த லலிதா, உமா மகேஸ்வரி அவர்களுக்கும், இதன் ஒளிப்பதிவாளர் சுதர்சன், எடிட்டர் விக்னேஷ், சவுண்ட் ரிக்கார்டிஸ்ட் சமந்த் உள்ளிட்ட டீமுக்கு இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்து விகடனின் ‘திரைத்தொண்டர்’. மறந்துகொண்டே இருப்பதுதான் மனித இயல்பு. அந்த வகையில் இந்த வழக்கமான சினிமா பரபரப்பில் இருந்து ஒதுங்கி இருந்த என்னை, சினிமாவும் ரசிகர்களும் மறந்திருந்த வேளையில் இந்தத் தொடர் தொடங்கியது.
‘உறுதியாக நமக்கு நினைவில் இருக்கும் விஷயத்தை மட்டுமே சொல்ல வேண்டும். அரைகுறை ஞாபக விஷயங்களைத் தவிர்த்துவிடலாம்’ என்று முடிவு செய்து பேச ஆரம்பித்தேன். எதிர்பார்க்காத அளவுக்கு ரெஸ்பான்ஸ். எங்கெங்கு இருந்தோ முகம் தெரியாதவர்கள் எல்லாம் தொலைபேசினார்கள். ஒருகட்டத்தில் வியாழக்கிழமை வந்துவிட்டாலே, ‘ஐயய்யோ... நிறைய போன் வருமே!’ என பயப்படும் அளவுக்கு அவ்வளவு அழைப்புகள். சமயங்களில் தொலைபேசி ரிசீவரை எடுத்து கீழே வைத்துவிடுவதும் உண்டு. அதன் பிறகு, ‘ஓ.. இந்தாளும் ஏதோ கொஞ்சம் பண்ணியிருக்கான் போல’ என்று விழாக்களுக்கு எல்லாம் அழைக்கத் தொடங்கினர். விருதுகூட கொடுத்தனர். இப்படி என் மீது திடீர் வெளிச்சம் பாய்ச்சிய விகடனுக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.
மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வது, மற்றவர்கள் எனக்கு அறிவுரை கூறுவது இரண்டுமே பிடிக்காத விஷயம். எழுத்தாளராக, தயாரிப்பாளராக என் மீது இருந்த நம்பிக்கையில் கமர்ஷியல் சினிமாவில் நிறைய முயற்சிகள் செய்தேன். அவை அனைத்தையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்ட அத்தனை சினிமா கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரே ஒரு விஷயம் சொல்லலாம் என நினைக்கிறேன்.
இது, சினிமா க்ரியேட்டர்களுக்கு. உங்கள் கால்கள், மக்களுக்கு மத்தியில் தரையிலேயே இருக்கட்டும். எவ்வளவுதான் தொழில்நுட்பம் வந்துவிட்டாலும், பல நூறு கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தாலும் அதில் நம் குடும்பங்களும் நம் எமோஷன்ஸும் இருக்கட்டும். ஒவ்வொரு ரூபாயையும் செலவு செய்யும்போதும் உங்களின் தயாரிப்பாளரை மனதில் வையுங்கள். கதைக்கு தேவை எனில், தாராளமாகச் செலவு செய்யுங்கள். கதைக்கு தேவை இல்லாத எதற்கும் செலவு செய்யாதீர்கள்.
நான் பரபரப்புடன் படங்களைத் தயாரித்துக்கொண்டிருந்த நேரம் அது. தி.நகர் வீட்டில் நுழைந்ததுமே என் அறைதான் முதலில் இருக்கும். மேஜையில் கட்டுக்கட்டாகப் பணம் சிதறிக்கிடக்கும். அவற்றைப் பார்க்கும் என் ஃபைனான்ஷியர் பதறுவார். ‘சார், லட்சுமியை வெளியே வைக்காதீங்க. உள்ளே எடுத்து வெச்சுப் பூட்டுங்க’ என்பார். சிரிப்பேன். பணத்தை உள்ளே சேர்த்துவைக்க எனக்குத் தெரியாது. ஆனால், நீங்கள் எவ்வளவுதான் அள்ளிக் கொடுங்கள். வேண்டாம் எனச் சொல்லவில்லை. அதில் கொஞ்சமாவது கிள்ளி எடுத்து எதிர்காலத்துக்காகச் சேர்த்து வையுங்கள். இன்று இல்லாவிட்டாலும் என்றாவது உங்களுக்கு உதவும். ‘இன்று 100 கோடி. நாளைக்கே தெருக்கோடி’ என எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு உள்ள இந்த சினிமாவில், இதைத் தவறாமல் செய்யுங்கள். உங்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளுங்கள்.
கவிஞரை நன்றியோடு நினைவுகூர்ந்து தொடரை முடிக்கிறேன். நன்றி, வணக்கம்!
தொகுப்பு: ம.கா.செந்தில்குமார்
நன்றி!
‘‘அப்பா, எனக்கு யானை பலம். இன்று அவர் இல்லை என்று நினைக்கும்போது கஷ்டமாக

இருக்கிறது. அதேசமயம் விகடனின் ‘திரைத்தொண்டர்’ தொடர் மூலமாக அப்பாவினுடைய நண்பர்கள், ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் இன்று என்னுடன் மீண்டும் தொடர்புக்கு வந்திருக்கிறார்கள். அந்த வகையில் விகடனுக்கும் அதன் வாசகர்களுக்கும் நன்றி. அப்பாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் அவருக்கு மரியாதை செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
அப்பா, எதற்குமே ஆசைப்படாதவர்; எதிலும் தன்னை முன்னிறுத்தாதவர். ஆனால், இனிமேல் நான் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அவரை முன்னிறுத்தியே இருக்கும். எனக்கு சிறந்த தந்தையாகவும் தோழனாகவும் இருந்த, என்றும் இருக்கப்போகும் அவரை தலைவணங்கி... ஒரு புதிய பயணத்துக்குத் தயாராகிறேன். நன்றி!''