விகடன் வரவேற்பறை
தண்ணீரில் விழுந்த வெயில் - பழநிபாரதி
வெளியீடு: குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை,
சென்னை - 17. பக்கம்: 64 விலை:

50

காதலைக் கருக்கொண்ட கவிதை களின் தொகுப்பு. 'மொழி பிறக்காத இடத்தில்/என்னைக் கவிஞனாக்கி/நிறுத்தியிருக்கிறாய்/மண்டியிட வைக்கிறது/இந்த மகா நிர்வாணம்’ என்ற வரிகள் இந்தக் கவிதைப் பானையின் பதம் காட்டும் சோற்றுப் பருக்கைகள். அன்பிற்கினியவரை இறுகக் கட்டியணைத்து, உச்சந்தலை யில் முத்தமிடுவதைப்போல இருக் கிறது கல்யாண்ஜியின் முன்னுரை!
வேளாண் நண்பன்!
http://velanarangam.wordpress.com/

இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர் வைப் பரப்பும் வலைப்பூ. இந்தியக் காடுகளின் பரப்பளவில் 12.8 சதவிகிதம் மூங்கில் இருக் கிறது, மின்சாரம் தயாரிக்க மலைவேம்பு மரங் களை எரிபொருளாகப் பயன்படுத்தலாம், வில்வ பழச் சதையைச் சோப்பாகப் பயன்படுத்தலாம் எனத் தகவல்கள் நிரம்பி வழிகின்றன. சந்தேகங் களை நீக்க வேளாண் விஞ்ஞானிகளின் முகவரி, தொலைபேசி எண்களையும் கொடுத் திருப்பது சிறப்பு!
அறிவியல் நண்பன்!
www.sciencebuddies.org

அறிவியல் புத்தகங்களில் இருக்கும் பரிசோதனைகளை வீடுகளில் எளிய முறையில் பரிசோதித்து அறிந்துகொள்ள உதவும் தளம். அறிவியலின் அனைத்துத் துறைகளில் உங்களுக்கு விருப்பமானதைத் தேர்வுசெய்து சொடுக்கினால்போதும், பரிசோதனை மேற்கொள்வதற்கான அனைத்து நெறிமுறைகளையும் எடுத்துக் கூறும். நிபுணர்களின் ஆலோசனைக்கும் ஏற்பாடு செய்யும் இத்தளம், அறிவியல் மீது ஆர்வம் உடைய எவருக்கும் வழி காட்டித் துணைவன்!
Acceptance இயக்கம்: ஸ்ரீகந்தன்

கடற்கரையில் காதலிக்குப் பூங்கொத்து கொடுப்பது, அவளுடன் ஓடிப்பிடித்து விளையாடுவது, மோதிரம் மாற்றிக்கொள்வது என்று காதலியின் நினைவுகளில் வாழ்கிறான் காதலன். இறந்துபோனவளை மறக்க முடியாமல், தினமும் கடற்கரையில் காத்திருப்பவன் ஒரு நாள் உண்மை உணர்ந்து காதலியின் கல்லறைக்குப் பூங்கொத்து வைத்துவிட்டுப் புறப்படுகிறான். வசனங்களே இல்லாமல் பளிச் என்று கருத்து சொன்ன விதத்தில் கவர்கிறார் இயக்குநர் ஸ்ரீகந்தன்!
வித்தகன் வெளியீடு: குட்டி ஆடியோ விலை:

75

ஜோஸ்வா ஸ்ரீதரின் இசையில், நடிகர்-இயக்குநர் பார்த்திபன் பாடலாசிரியராக அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். பென்னி தயாள் பாடியுள்ள 'கப்பு ஆப்பு’ பாடல் பழக்கவழக்கமான ஜாலி ஜாங்கிரி. ஹரிஹரன், ஸ்ரேயா கோஷல் குரல்களில் 'க்குதே... கண்கள் விக்குதே..’ பாடலில் காதலியைக் 'கண்ணீர் வெடிகுண்டே...’ என்று வர்ணிக்கும் கற்பனை அழகு. ஸ்வேதா மோகனின் 'தனன்னனத் தந்தனா...’ சின்மயி குரலில் 'கடலிரண்டு...’ இரண்டும் இனிப்பிசை!