
புதியவர்கள் படையெடுப்பு... விஜய் விறுவிறுப்பு

விஜய்

மீசையில்லாத விஜய்.
தீபாவளி ரிலீஸ் `திருமலை’யை முடித்துவிட்டுக் காத்திருக்கிறார். அடுத்த படம் `கில்லி’ ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டது. பாடல் ஒன்றை (திருமலை?) ஹம் பண்ணியபடியே வந்தவர், நம்முடன் பேசத் தயாரானார்.
`` `திருமலை’ எப்படி வந்திருக்கு?’’
``சூப்பரா! `ரொம்பப் புதுமையான கதை. தமிழ் சினிமாவையே புரட்டிப்போட் டுரும்’னெல்லாம் கிடையாது. லவ், ஆக்ஷன்னு செம மசாலா கதை. திருமலைங்கிறவன் செம ஜாலியான பையன். அவனோட பாதையில் ஒரு பொண்ணு வருவா. பயங்கரமான ஒரு வில்லன் வருவான். நம்ம எல்லார் வாழ்க்கை யிலும் நடக்கக்கூடிய விஷயங்கள்தான். ஆனா, அதை திருமலை எப்படி டீல் பண்றான்கிறதுதான் புதுசு!’’

``உங்களோட கடைசி மூணு படங்கள் பெருசா போகாததுக்குக் காரணம் கதை விஷயத்தில் உங்க தலையீடுதான்னு சொல்றாங்களே..’’
``ஒரு கதை பிடிச்சுப்போச்சுன்னா அதை ரெண்டு மூணு தடவை சொல்லச் சொல்லிக் கேட்பேன். எனக்குத் தோணுற சில மாற்றங்கள் சொல்வேன். அதுக்குப் பேர் தலையீடு இல்லை. ஆர்வம்! சில சமயம் நான் ஆசைப்பட்ட மாதிரியே படம் பளிச்சுனு வருது. சில சமயம் எங்கேயோ தப்பு நடந்துடுது. அதுக்காக யாரையும் குறை சொல்ல மாட்டேன். என் படம் ஓடலைன்னா அதுக்கு நான்தான் பொறுப்பு. காரணம், நான்தானே கதையை செலெக்ட் பண்ணினேன். அப்போ நான்தானே காரணமா இருக்க முடியும்! ஆனா, முன்னைவிட இப்ப தெளிவாகிட்டேன். மிக நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன். இப்ப முடிச்சிருக்கிற `திருமலை’யும் சரி, ஆரம்பிச்சிருக்கிற `கில்லி’யும் சரி... சப்ஜெக்ட் `நச்’சுனு இருக்கும்.’’

``பெரிய ரசிகர் கூட்டம் இருந்தும் வழக்கமான ஃபார்முலா படம்தானே பண்றீங்க... வித்தியாசமான கெட்-அப்ல தீவிரமான கதையம்சம் கொண்ட படத்துல நடிக்கணும்னு ஆசையே வராதா?’’
``என் முகத்தைப் பாருங்க. காலேஜ் முடிச்சுட்டு வேலை தேடுற பையன் மாதிரி இருக்கேன். என்னோட வயசு, முகம், இதுக்கு எது சரியா வருதோ அதைத்தான் பண்ணுவேன். பெரிய கேரக்டர் மாற்றமோ, மேக்கப் வித்தியா சமோ நான் செய்யலைதான். அதுக்கு இன்னும் வயசு இருக்கு. ஒரு கதை சிக்கணும். கெட்-அப் மாத்தணுங்கிறதுக்காக சும்மா கதை விடக் கூடாது.’’
``ரஜினி - கமலுக்குப் பின்னாடி விஜய் - அஜித்னு எல்லாரும் பேசினாங்க. இப்போ தனுஷ், சிம்பு, ரவினு வரிசையா உள்ளே புகுந்துட்டாங்களே... உங்க பிடி தளர்ந்துபோச்சா?’’
``அப்படியா நினைக்கிறீங்க?! (சிரிக்கிறார்) எனக்குனு ஒரு இடம் இருக்கு. அதை யாரும் எடுத்துக்க முடியாது. என் பிடியை நான் விட்டாத்தானே மத்தவங்க பிடிக்க? புதுசா ரெண்டு படம் ஓடிடுச்சுன்னா ஏதோ ட்ரெண்டே மாறிப்போயிட்ட மாதிரிதான் தோணும். ஆனா, அவங்கவங்க இடம் அப்படியே இருக்கு. நான் யாரையும் சாதாரணமா நினைக்கிறது இல்லை. அதே சமயம் யாரைப் பார்த்தும் கவலைப் படுறதும் இல்லை. புதுசா வர்றவங்க என்ன பண்றாங்கனு கண்குத்திப் பாம்பா கவனிச்சுக் கிட்டேதான் இருக்கேன். இந்த மூணு பேருமே யதார்த்தமா பண்றாங்க. துடிப்பா இருக்காங்க. அவங்க பங்குக்கும் தமிழ் சினிமாவுக்கு ஏதாவது பண்ணட்டுமே! குறிப்பா தனுஷ், ஒரு சின்ன அலை உண்டாக்கிட்டாரு. அவர் நல்லா வருவ தற்கான ஸ்கோப் இருக்குனு நினைக்கிறேன்!’’

``மனசுல இறுக்கம் இல்லாம பாராட்டுறதுக்கும் பெரிய மனசு வேணும்...’’
`` திட்டம் போட்டா பேசுறோம். நிஜமாவே ரசிக்கிறேன். மனசாரப் பாராட்டுறேன். விக்ரம்கூட படங்களை விதவிதமாப் பண்றார். நல்ல விஷயம்தான். நல்ல திறமைகளைப் பத்தி நாலு வார்த்தை பேசுறதுல என் தகுதி என்ன குறைஞ்சுபோயிடும்... சொல்லுங்க!’’
``எப்பவும் தனிமையில் இருக்கிற மாதிரி ஒரு முகபாவத் தோடு இருக்கீங்க. கேமிராவுக்குப் பின்னாடி சிரிச்சுப் பேசி கலகலப்பா இருக்க மாட்டீங்களா?’’
``சரியா சொன்னீங்க! ஆனா, எப்பவுமேவா இப்படி இருக்கேன்? (சிரிக்கிறார்) இது என்னோட சுபாவம். நான் என்னை மாத்திக்கணும்னு நினைச்சாத்தான் அது நடிப்பு. என்னடா இந்த ஆள் இப்படி உம்முனு இருக்கானேனு பேசினவங்க எல்லாம் போகப் போக என்னைப் புரிஞ்சுக்கிட்டாங்க. புரியாத வங்களும் பின்னாடி புரிஞ்சுக்குவாங்க!’’
கைகளை தலைக்குப் பின்னே கோத்துக் கொண்டு மென்மையாகப் புன்னகைக்கிறார் விஜய்.
- நா.கதிர்வேலன்