மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 8

male-female-relationship
பிரீமியம் ஸ்டோரி
News
male-female-relationship ( விகடன் டீம் )

#MakeNewBondsதமயந்தி - படம்: அருண் டைட்டன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 8

வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?' விடைகளுக்கான விகடனின் தேடலே இந்தத் தொடர். வாரம் ஒரு பிரபலம் தங்களுடைய வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்சுகின்றனர்.

`தோழமையிலும் மகிழ்ச்சியிலும் நீங்கள் தேனும் பாலுமாக இருப்பீர்கள். ஒற்றுமையிலும் நம்பிக்கையிலும் நீங்கள் சர்க்கரையும் அல்வாவும் போல் இருப்பீர்கள்’ - இது ரூமியின் கவிதையில், திருமணம் செய்துகொள்ளும் ஆண்-பெண்ணை வாழ்த்துவதாக வரும் எளிமையான வரிகள். வரிகள்தான் எளிமையானவை; வாழ்வது அல்ல.

`இந்த உலகம் யாருடையது, ஆணுக்கானதா... பெண்ணுக்கானதா?' என்பதில் சமூக வரலாற்றில் ஆரம்பம் முதலே தடுமாற்றங்கள் இருக்கின்றன. தாய்வழிச் சமூகம், மெள்ள ஆண் சார்ந்ததாக மாறியதன் பின்னணி தெரியாமல்தான், இந்த நிமிடம் டாஸ்மாக்கில் குவார்ட்டர் போட்டுவிட்டு ஒட்டுமொத்தக் கெட்டவார்த்தைகளால் ஒரு சுப்ரமணி ஒரு சுகந்தியை அடித்துக்கொண்டிருக்கலாம்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 8

அப்படியான உச்சக்கட்ட உடல் மற்றும் மனம் சார்ந்த வன்முறையை, நான் என் 21 வயதில் அனுபவித்தேன். 18 வயதிலேயே வீட்டில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டார்கள். இத்தனைக்கும் நான் பள்ளிப் பருவத்தில் இருந்தே காதலித்தேன். அத்தனை அழகான காதல் அது; ஆத்மாவின் உள்ளூற்றில் உடன் இருத்தலை உறுதிப்படுத்திய காதல் அது. நான் காதலிப்பது வீட்டுக்குத் தெரிந்ததும், தந்திரமாக அதைத் தடுத்து நிறுத்த எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. எல்லாவற்றையையும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளக் கூடாது அல்லவா? காதல் என்பது, ஒரு சராசரி நடுத்தரவர்க்கத்து கிறிஸ்துவக் குடும்பத்தில் கெட்டவார்த்தை அல்லவா! அதுவும் பைபிளில் `முக்காடு போட வேண்டும்' என்ற கட்டுப்பாடுகளைக் கேட்கும், ஆனால் அதைச் செய்யாத ஒரு பெண்ணின் காதல், அவர்களுக்கு அப்போது அச்சுறுத்தியிருக்க வேண்டும்.

என் அப்பா, அத்தனை சிநேகமான மனிதர்; என் பால்ய நண்பர் என்றே சொல்லலாம். அவர் என் காதலை `வெறும் இனக்கவர்ச்சி' எனச் சொல்லிக் கடந்ததை, இதை எழுதும் இந்த நிமிடம்கூட என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறுதியாக, கல்லூரி முடித்து 15 நாட்களில் திருமணம் நடந்தது, வீட்டில் பார்த்த மாப்பிள்ளையோடு. ஒருபுறம் காதலில் ஏமாற்றம்; இன்னொரு புறம் ஒப்புக்கொண்ட வாழ்க்கை. மனம் அலைக்கழிப்பில் கிடக்க, பிரச்னைகள் வர ஆரம்பித்தன. நான் அதுவரை கேட்டே பழக்கப்படாத கெட்ட வார்த்தைகள். அடி... அடி... அடி.

அப்போது என் ஒரே தஞ்சம், கதை எழுதுவதாகத்தான் இருந்தது. வாழ்க்கையில்  மிகவும் சந்தோஷத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்ந்ததாக நடித்த நான், என் கதைகளில் பாலியல் வன்முறையால்  புணரப்படும் நிஜத்தை எழுதினேன். ஒரு பெண் மனதால் தற்கொலை செய்துகொள்ள முடியுமா? என்னால் முடிந்தது.

எழுத்தும் மனமும் அழகான உலகங்கள். அங்கு நான், நிஜமாக வாழ்ந்தேன்; என் காதலனை மணந்தேன். யதார்த்தத்தில் என் கண் முன்னரே அவன் திருமணம் செய்துகொள்ளாமல் 14 வருடங்கள் வாழ்ந்ததைப் பார்த்து, மனம் துவண்டிருக்கிறேன். நினைத்ததை எல்லாம் பேசும் வெளி, கேட்கும் காதுகள், துணிவு எதுவுமே பெண்களுக்குக் கிடைக்கும் வாழ்க்கையில் பெரும்பாலும் வாய்ப்பது இல்லை. பேசாததால் இழந்த வாழ்க்கை ஒன்றின் வலியை, நத்தைக் கூடு சுமப்பதுபோல சுமந்துகொண்டிருக் கிறேன்.

பேரைக்கூட நாமே தேர்ந்தெடுக்காத வாழ்வில் பெண்கள், (குறிப்பாக தங்கள் வீட்டுப் பெண்கள்) அவர்கள் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் திறன் அற்றவர்கள் என்றுதான் இந்த உலகம் தீர்மானமாக, தீர்க்கமாக நம்புகிறது. குடும்பம் என்னும் ஒரு மெய்நிகர் உலகின் மாயைகளோடு பயணித்த நம் அம்மாக்கள், அதன் மர்மங்களோடுதான் தங்கள் பெண்களையும் அதில் தள்ளிவிட முயல்கிறார்கள். இன்றைய வாழ்வில் ஆண்-பெண் உறவுச் சிக்கல்களே இந்தத் தடுமாற்றத்தில் கிளர்ந்ததுதான்.

பலரோடு தொடர்புடைய பெண்ணாக நான் அடையாளப்படுத்தப்பட்டு, விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அதற்குள்ளாகவே என் கை விரல்கள் அடித்து ஒடிக்கப்பட்டுவிட்டன.  கதை எழுதும் ஒரு பெண்ணின் கை விரல்கள் அடித்து நொறுக்கப்படுவதை, இந்தச் சமூகம் அமைதியாகத்தான் எதிர்கொண்டது. அதற்கான தழும்புகள் இன்னும் என் கைகளில் உள்ளன. என் அப்பாவைப் பார்த்து ‘ஒம்பொண்ணும் அவளோட நண்பனும் படுத்தப்ப, நீ விளக்கு புடிச்சியா?' என நடுத்தெருவில் வைத்துக் கேட்கப்பட்டது. என்னால் மன்னிக்க முடிந்தாலும், மறக்க முடியாத வார்த்தைகள் அவை.

உடல் அல்லாமல் அல்லது உடலை நீக்கி ஓர் ஆண்-பெண் உறவை நம்மால் பார்க்கவே முடிவது இல்லை. அதுதான் ஆத்மார்த்தமான பாலினக் கோட்பாடுகள் அற்ற ஓர் உலகத்தின் பிரதி. ஆனால், ` `புதுவசந்தம்' போன்ற படங்கள் எல்லாம் சினிமாவுக்குத்தான் சரியாக இருக்குமோ!' என அப்போது தோன்றியது. ஆனால் என்ன செய்ய? எழுத்துத் துறையில் பெரும்பாலும் ஆண்களாக இருந்தார்கள். எழுத்துக்கு ஆன்மா உண்டே தவிர, பாலினம் கிடையாது. ஆனால், உடலோ அல்லது அது சார்ந்த ஈர்ப்போ ஏற்பட்டு இணைந்த சம்மதத்துடன்  இருவர் தங்களுக்குள் உடலுறவை முழுமனதோடு வைத்துக்கொண்டால், அதைத் தடைசெய்ய சமூகம் யார்? ஆனால், தொடர்ந்து இந்த அழுக்குச் சமூகம் ஒருபுறம் ஒழுக்கக் கோடுகளை வரைந்துகொண்டு, மறுபுறம் இருளில் அதை அழித்துக்கொண்டேதான் இருக்கிறது.

உடல் பற்றியோ, உடல் அரசியல் பற்றியோ பெண்களிடத்தில் பெரிய உரையாடல்கள் இல்லை.  ஒரு பகுதி பெண்கள் மட்டும் `இட்லி செய்யவா... தோசை ஊற்றவா?' எனக் கேள்விகள் மட்டும் கேட்டபடியே பிறந்து வாழ்ந்து செத்தும்போகிறார்கள் என்பது எப்படி ஆரோக்கியமான விஷயமாக இருக்க முடியும்?

ஒரு பிரபஞ்சத்தில் அவள் உடலின் தேவை என்ன என்பதை வெட்கத்துடன் சுமக்கும் நிர்பந்தத்தையும், தீர்க்கப்படாத உடல் தாகத்தின் வெப்பத்தையும் வெற்றுப் பெருமூச்சுகளால் அவள் வெளியேற்றுவதன் நியாயம் என்னவாக இருக்க முடியும்?

ஒரு பெண் உடலுறவுக்குத் தயாராகிறாள் என்பதையே `சடங்கு' என்னும் பெயரில் கொண்(டாடிய)டாடும் சமூகம்தான் இது. இந்தச் சமூகத்தில் திருமணமான பெண்கள், கணவன் என்பவனாலேயே பாலியல் வன்முறை செய்யப்படுவதை குடும்பம் என்னும் நிறுவனத்தின் பெயரில் நாம் அங்கீகரிக்கிறோம். எத்தனை பெண்களுக்கு முதன்முதலாக உடலுறவு கொண்டபோது, `இப்படித்தான் உடலுறவு இருக்கும்' என்பது தெரியும்? அதில் திருப்தி அடைந்தவர்கள் எத்தனை பேர்? தங்கள் ஆவல்களைப் பகிர்ந்துகொண்டவர்கள் எத்தனை பேர்? அதில் எத்தனை பெண்கள் அவர்களின் சம்மதத்தின் பேரில் கருவுற்றார்கள்?

சமூகத்தின் பதில் அளிக்கப்படாத, உரையாடப்படாமலேயே இருக்கும் இருள் பகுதிகளைக் கிழிக்கும்போது கற்பு, கலாசாரத் திரைகள் அவிழ்ந்துபோகும்.

திருமணத்துக்கு முன்னரே உடலுறவுகொண்ட ஒரு தோழி, தன் முதலிரவில் எதுவுமே தெரியாத அப்பாவியாக நடிக்கவேண்டியிருந்ததைப் பகிர்ந்துகொண்டிருக்கிறாள். தன் கன்னித்தன்மையையும் கற்பையும் நிரூபித்துக்கொண்டே இருக்கும் பயணத்தில், பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தபடி இருக்கிறார்கள். `கன்னித்தன்மை என்ற வார்த்தைதான் தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை' என்று நான் எப்போதுமே சொல்வது உண்டு. எனக்கு, குழந்தைகள் உண்டு. ஆனால், நான் வெர்ஜின். 

`கன்னித்தன்மை' என உலகியல் கோட்பாடுகள் வரையறுக்கும் உடலுறவு கொள்ளப்படாத பெண் உறுப்பை அறிவது யார்?

விவாகரத்து வழக்கில், நான்  மிகக் கேவலமான நடத்தைகொண்ட பெண் என்பதை நிரூபிக்க எதிர்க்கட்சி வக்கீல் கேட்ட கேள்விகள், என் மன உரத்தைச் சிதைக்கும். அசையாமல் பதில் சொல்லும்போதுதான் எனக்குப் புரிந்தது, இந்தச் சட்டம் என் பெண்ணுறுப்புகளைக் கொய்துவிட்டது என; இந்தச் சட்டமும் சமூகமும் ஆண் உறுப்பால் ஆனது என. 

நாம்  உடல்களாக  மட்டுமே  அறியப்படுவதால் தான், நம் சட்டங்கள் மாற்றப்படாமல் இன்னமும் குரலற்றவர்களின் குரலாக ஒலிக்காமல் உள்ளது. என் மெளனங்களில் கசிந்துகிடந்தது என் வலிகளின் தொப்புள்கொடி. ஓர் ஆணை எளிதாக நம்பிவிடும் சமூகம், ஒரு பெண்ணைச் சந்தேகத்தோடு நம்புகிறது.

நான் யாரிடமும் என் வாழ்வு குறித்து சரியாக எதுவும் சொன்னது இல்லை. `ஜீவனாம்சம் வேணாம்னு சொல்றீங்களே... ஏங்க?’ என வக்கீலின் ஜூனியர் பெண், என்னிடம் கேட்டபடியே இருந்தாள். என் மெளனப் புன்னகையில் அவள் பல பதில்களை மொழிபெயர்த்துக்கொண்டே இருந்தாள். ‘ஏங்க்கா... அவருக்கு வேற ஏதாச்சும் தொடர்பு இருக்கா... என்ன பிரச்னைக்கா? அவங்க உங்களை இவ்ளோ சொல்றாங்க...' அவர் ஒருவேளை இந்தக் கட்டுரையை வாசித்தால் நிஜங்கள் புரியலாம்.

புனைவின் மிச்சங்களில் தஞ்சமாகியே நாட்களைக் கடத்திவிட்டேன். அதுவே எனக்கு ஒரு பாதுகாப்பையும் தந்திருக்கிறது. யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டும் என எந்தக் காலகட்டத்திலும் எனக்குத் தோன்றியது இல்லை. குடும்பம் நீங்கிய நாட்களில், என் முன் அதைக் காட்டிலும் பரந்த ஓர் உலகம் விரிந்தது. பயணங்களாலும் நிரம்பிய உலகம் அது.

யாரென்றே தெரியாத ஒரு குழந்தை, பேருந்தில் நம் கையில் கை வைத்துச் சிரிக்குமே... அதைவிட  அழகான நொடி வாழ்க்கையில் வேறு என்ன வந்துவிடப்போகிறது? அந்த நிலையிலும் வாழ்க்கையை, அதன் பரப்பை அறிந்துகொள்ள நிறையப் பயணித்தேன். இலக்கற்றப் பயணங்களும் முகமறியா மனிதர்களும் என்னை எனக்கு அர்த்தப்படுத்தினார்கள். யாரின் அனுமதி கேட்காமல், பயணத்தின் முற்றுப்புள்ளி அறியாமல் பயணம் செய்யும் பெண் பெரும்பேறு பெற்றவள். அவளிடம் எப்போதுமே சிறகுகள் உண்டு.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 8

இப்படியான பயணங்கள், ஒரு புள்ளியில் வாழ்வின் பயணமாக மாறிற்று. அது ஒரு மாயப்புள்ளி. இந்தியாவின் குறுக்குவெட்டில் பெண்களின் வாழ்க்கைக் கதைகளால் நிரம்பியப் பத்தாயமாக அலைகிறேன். அவை அனைத்துமே கதைகளாக மாற்றுவதில்தான் என் இலக்கு பயணிக்கிறது. காற்றில் கலந்திருக்கும் நம் அம்மாச்சிகளின் குரல்களை, காதலை, பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா? இவற்றைக் கதைகளாக்குவதன் மூலம் நவீன வாழ்வியலின் சிக்கல்களான சாதி, மதம், பாலியல், பாலினம், ஆண், பெண் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளவும் அவற்றை மறுகட்டுடைப்புச் செய்யவும் தொடர்ந்து முனைய இயல்கிறது.

அப்படி பயணம் செய்த காலங்களில், எனக்கு கடுமையான நரம்புத் தளர்ச்சி இருந்தது. காபி கோப்பையைக் கையில் பிடிக்க இயலாமல், ஸ்ட்ரா வைத்துக் குடிக்கவேண்டிய நிர்பந்தங்களில் வாழ்ந்தேன். எங்கேயாவது மயங்கிவிழுவேன். என்னை சென்னைத் தெருக்களில் கண்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்த அற்புதமான  மனிதர்கள், (பெண்களும் ஆண்களும்) இந்த உலகில்தான் இருந்தார்கள்.

நான் இரண்டு முறை தற்கொலை செய்துகொள்ள முயற்சிசெய்திருக்கிறேன். ஒருசில நண்பர்களுக்குத் தெரியுமே தவிர, என் குடும்பத்தினருக்குக்கூடத் தெரியாது. அப்போது ஒருமுறை என் தோழி என்னிடம் `அடுத்த தடவை முயற்சி செய்தன்னா, சரியாச் செஞ்சிடு...புரியுதா? சும்ம்ம்மா ஹாஸ்பிட்டல் அது... இதுன்னு அலைய முடியலை' என்றாள்.

சமீபத்தில் கியோ ஸ்டாக் என்பவர் சொன்ன `டெட் டாக்ஸ்' கதை ஒன்று மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். ஒரு பெண், திறந்த லிப்ஃட் ஒன்றில் போய்க்கொண்டிருக்கிறாள். அவள் அருகில் நிற்பவர், அவளைக் கொஞ்சம் உள்ளே தள்ளி வந்து நிற்கச் சொல்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம், `நான் சற்று திரும்பினேன் என்றால்கூட, நீங்கள் கீழே விழுந்துவிடும்  ஆபத்து இருக்கிறது' என்று. கியோ பின்னர் சொல்கிறார், `என் உயிர் எத்தனை முக்கியமானது என, முகம் தெரியாத ஒருவர் எனக்குச் சொன்னார்' என்று. நம் உயிரின் மதிப்பையும் மேன்மையையும் யார் எனத் தெரியாதவர்கள் உணர்த்துவதுதான் பேரழகான விஷயமும்கூட‌.

பேருந்து விபத்தில் எனக்கு அடிப்பட்டபோது என் நண்பன் ஒருவன் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, உடன் இருந்தான். அவனுக்கும் எனக்கும்தான் தொடர்பு உண்டு என முன்னர் குற்றம்சாட்டப்பட்டவன். அவன் எனக்கான மருந்தை வாங்கிக் கொடுத்தபோதுதான் எனக்கு `ஆண்பால் பெண்பால் அன்பால்' இணைய முடியும் என நம்பிக்கை வந்தது.

என் வாழ்வியல் சிரமங்கள் அத்தனையையும் புரிந்துகொண்டு எல்லா தருணங்களிலும் உடன் இருந்து `எங்க பஞ்சாபீஸ்ல சிஸ்டர்னு சொல்லிட்டா, அதைக் கடைசி வரைக்கும் நிலைநிறுத்துவோம் தெரியுமா?' எனச் சகோதர நேசத்துடன் சொல்லும் காவல் துறை அதிகாரி அஸ்ரா கர்க், தனிமையின் கூர்முனைகள் கிழிக்கும்போது `மகளே... தோட்டத்துக்கு வா’ என வாயும் மனதும் சேர்ந்து அழைக்கும் செளபா அண்ணன், `பாட்டு எழுதட்டுமா மீரா?' எனக் கேட்ட ஒற்றை வார்த்தைக்காக நம்பி பாடல் எழுதும் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மீரா கதிரவன், என் கனவுகளையும் தனதுடனாக்கி உடன் பயணிக்கும் குட்டி ரேவதி, எனக்கு என்ன வேண்டும் என்பதைக் கேட்க மறந்த குடும்பத்தினர் நடுவே `உனக்கு என்ன வேணும்... எதுன்னாலும் தயங்காமச் சொல்லு!' எனத் திரும்பத் திரும்பக் கேட்கும் ப்ரேமி, `ஏய்... என் புள்ளையப் பார்க்க வர மாட்டியா?' என அதட்டி உரிமையுடன் கேட்கும் பத்மா, காளான் மாதிரி முளைத்து ‘லே... ழவ் யூ’ எனச் சொல்லும் அம்மு... என என் உலகம் இப்போது அழகான உறவுகளால் பின்னப்பட்டிருக்கிறது.

உடல் குறித்து நான் பதிவுசெய்யும் எதையும், இன்றும் என் அம்மாவால் ஏற்க முடிவது இல்லை. `அசிங்கமா எழுதாதடி' என்பாள். அப்பா இறந்த பிறகு, `அப்பாக்குப் பிடிக்காத மாதிரி இப்படி எல்லாம் எழுதாதடி' என்பாள். என்னுள்ளாக ஓர் அலைபோல் பரவி, நிறைந்து என்னை ஆட்கொண்டு திமிறி வெளிவரும் என் வார்த்தைகளின் கடிவாளத்தை வைத்துக்கொள்ள வேறு யாரோ காத்திருக்கிறார்கள். அதை நான் மறுக்கும்போது ஏற்படும் பிரளயங்களை மட்டும் சமாளிக்க, வயதும் அனுபவமும் கற்றுகொடுத்தி ருக்கின்றன.

இந்த வாழ்க்கை விசித்திரமானது. பிரபஞ்சனின் `சந்தியா' வாசித்து, இதுபோல் வாழ்க்கையைக் கட்டமைக்க வேண்டும் என நினைத்தவளுக்கு, வாழ்க்கை ஒரு நதியாக மாறி அதில் ஓடும் இலையாக அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறது.

ஒரு நொடியில் முடியும் வாழ்க்கைக்குள் ஆணுக்கும் பெண்ணுக்குமாக ஏன் இத்தனை சிக்கல்கள்? ‘எங்கே இருக்கீங்க, யார்கூட இருக்கீங்க?' என சதா போன் போட்டுக் கேள்வி கேட்கும் மனைவிமார்கள் நிறையப் பேரை நான் பார்த்துவிட்டேன். என்ன ரீதியில் அவர்கள் கணவனுக்குத் துணையாக மாறுவார்கள்? எத்தனையோ விதமான மனச்சிக்கல்களில் ஓர் ஆணும் பெண்ணும் `குடும்பம்' என்ற பெயரில் வாழ்கிறோம். அதில் ஒருவருக்கு ஒருவர் எத்தனை பொய்கள்! இன்னொரு பக்கம் பெண்ணியம், இசம் எனப் பேசி, ஒருவரை ஒருவர் காயப்படுத்திக்கொள்கிறோம்.

அன்புக்கும் அறிவுஜீவித்தனத்துக்கும் ஒரு துளியும் சம்பந்தம் இல்லை.

ஒருமுறை எங்கள் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர், ஒரு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளவர். நாங்கள் குளிக்கும்போது மொட்டைமாடிக்குப் போய் மேல் ஜன்னல் வழியே குனிந்து பார்த்ததை அறிந்து கூப்பிட்டுப் பேசினால், அவரால் கண்ணைக்கூட பார்த்துப் பேச முடியவில்லை. தீராத உடல்வேட்கை குறித்த பிரக்ஞைகளோடேதான் இந்தச் சமூகம் முன்செல்கிறது; தன்னைக் குழப்பிக்கொள்கிறது. அந்த வேட்கை குறித்த விவாதம் இல்லாத வரைக்கும், `சுவாதிக்கு, பிலால் காதலரா... நண்பரா?' என்ற விவாதம் இருந்தபடியேதான் இருக்கும்.

கட்டுடைத்தல் கட்டமைக்கவே செய்யும். தன்னைப் படுக்கையறைக்கு அழைத்த நண்பரை மறுத்துவிட்டு, இன்றும் அவருடன் காபி குடிக்கும் பெண்களை எனக்குத் தெரியும்.

என் மகளிடம், உடலுறவு பற்றியும் காண்டம் பற்றியும் என்னால் பேச முடிகிறது. மொத்தமாக ஆண்கள் மட்டும் பயணிக்கும் வாகனத்தில் நான் இப்போதும் வெளியூர் பயணங்கள் செல்கிறேன். கழிவறை இருக்கும் பெட்ரோல் பங்கில் நிறுத்தும் நண்பர்களுக்கு நிஜமாகவே மனம் நன்றி சொல்லத் தூண்டும். ஏழு வருடங்களுக்கு முன்னர் வரை நான் உடன் பயணித்த ஆண்களுக்கு ஒரு பெண் இருக்கிறார். அவருக்கு கழிவறை செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்காது.

இன்று இருப்பு புரிகிறது. இருப்பின் அவஸ்தைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுகின்றன. ஒரு காலம் வரலாம், குடும்பம் என்னும் பொய்மை கலைந்து, ஆத்மார்த்தமான துணையுடன் நிர்பந்தம் இல்லாத வாழ்க்கை சாத்தியப்பட... தன் மகளாலும் வாழ்க்கையைச் சிறப்பாகத் தேர்ந்தெடுக்க முடியும் எனப் பெற்றோர் சாதி மதம் கடந்து நம்ப... சானிட்டரி நாப்கின், காண்டம் விளம்பரங்கள் பற்றிய எந்தப் பொய்யும் இல்லாமல் நம் குழந்தைகளிடம் பேச, `இவன் என் நண்பன்' என ஒரு பெண் சொன்னால் அசிங்கமாக, கேவலமாக, புத்தியிலும் நினைத்துப்பார்க்காமல் கை குலுக்கும்  மனநிலை பெருக‌… 20 வருடங்கள் கதைகள் எழுதியும் இன்றும் எனக்கு எழுத என ஒரு தனி அறை இல்லாத நிலை மாற...

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

ஆண்பால் பெண்பால் அன்பால் - 8

ஒரு பெண்ணாக எனக்கு எந்த நாடும் இல்லை. ஒரு பெண்ணாக எனக்கு எந்த நாடும் தேவையும் இல்லை. ஒரு பெண்ணாக எனக்கு இந்த உலகமே என் நாடுதான்!

- வர்ஜினியா வுல்ஃப்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 8

பேட்டிக்கு வரும் சமூக சேவகியிடம் `நீங்க எப்பவும் போடுவீங்களே... இந்த சொசைட்டி மேக்கப். அதை போட்டா போதும். வித்தியாசமா இருக்கிற மாதிரி காட்டிக்கிறது ஒரு ஃபேஷன்.’

மஞ்சு - `அவள் அப்படித்தான்' திரைப்படம்

ன் கணவரின் முன்னர் எனக்கு காமவேட்கை எழுந்தது இல்லை. அவர் எதிரில் என் காமவேட்கை

ஆண்பால் பெண்பால் அன்பால் - 8

எங்கோ போய் ஒளிந்து கொள்கிறது. அறிவாற்றல் மிகுந்த என் காதலர், என்னிடம் எப்போதும் பித்துப்பிடித்த பாலியல் மோகத்தை எழுப்புகிறார். அவர் என்னைத்திருப்திப்படுத்தியபோதிலும், அவர் திருப்தியடை வதைக் கண்டு மகிழ்ச்சியடை கிறேன். ஒருமுறை உடலுறவுக்குப் பிறகு நான் அரைத் தூக்கத்தில் இருந்தபோது, என் கன்னங்களை அழுத்திக் கொண்டிருந்த அவரது உள்ளங்கை சட்டென மென்மையடைவதாக எனக்குத் தோன்றியது. அவர் ரகசியமாக மெள்ள என் பெயரை உச்சரிப்பதைக் கேட்டேன்.

- கமலா தாஸ், `என் கதை' நூலில்...

நீல மல காட்டுக்குள்ள

ஆண்பால் பெண்பால் அன்பால் - 8


நீயும் நானும் பாத்துவெச்ச
முட்டை எல்லாம் பட்சிகளாப் பறக்குதே
சோடி சேர்ந்து கண்டெடுத்த
பட்டுப்புழு கூடு எல்லாம்
அம்மனுக்குப் பட்டாகக் கிடக்குதே
காத்திருந்து கதைபேசும் காலமும் முடியலை
சேர்ந்திருந்து பிறை பார்த்த ராத்திரி விடியலை
செல்லம்மா... என் செல்லம்மா!

- ரமேஷ் வைத்யா,
`ஜோக்கர்' படப் பாடலில்...

ன்னிடம் உண்டா ஓர் அரண்மனை?

ஆண்பால் பெண்பால் அன்பால் - 8


ஒவ்வொரு நாளும் அவன்
ஒரு பெண்ணாக மாறிக்கொண்டே இருந்தான்
பெண்ணின் அடையாளங்களை முதலில்
புற உடலில் வரைந்துகொண்டான்
உடலின் வரைப்படத்தில் நீர் ஓவியத்தைப்போல
காமத்தின் எழுச்சிகளும் வரையப்பட்டிருந்தன
கண்குழியில் ஆழ்க்கடலின் ரகசியங்களைப்
பொதிந்துகொண்டான்
உணர்ச்சியின் நீரோட்டங்களை
ஆறாகப் பெருகவிட்டான் உடல் சமவெளியில்
விறைத்த குறியை அதன் ஆண்மைய முட்களை
அறுத்தெறிந்து சமனப்படுத்திக்கொண்டான்
இப்பொழுதிருந்து அவனை `அவள்' என்றே
அழைக்கலாம் என்று அறிவித்துக்கொண்டாள்!

- குட்டி ரேவதி

ஆண்பால் பெண்பால் அன்பால் - 8

பெரும்பாலானோருக்குப் பின்னால் ஒரு காதல் தோல்விக் கதை இருக்கும். அதற்குக் காரணம், குடும்பமாக இருக்கும். `குடும்பம் எதிர்த்ததால் காதல் தோல்வி’ என்பது அல்ல... குடும்பத்தின் நிலை அறிந்து, அவர்களே தான் விரும்பிய பெண்ணிடம் காதலைச் சொல்வதுகூட இல்லை. இந்தக் காரணத்தையும் ஆண்கள் வெளிப்படையாகச் சொல்வது இல்லை. காரணம், `ஆண்’ என்ற கெத்து அவர்களைத் தடுக்கிறது!

                                   - பாரதி தம்பியின் `ஆண்கள் உலகம்' கட்டுரைப் பகுதி.