
கசக்கலாமா கரும்பு?
‘மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துக்கு இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு', `உரங்களுக்காக இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு’ என்றெல்லாம் நம் அரசுகள் அவ்வப்போது வெளியிடும் அறிவிப்புகளைக் கேட்கும்போது, `அடடா... இது அல்லவோ நாடு!' என மெய்சிலிர்த்துப்போவோம். ஆனால், உண்மை நிலையோ காலங்காலமாகத் தலைகீழாகத்தான் இருக்கிறது. கண்ணீரில் மிதக்கும் கரும்பு விவசாயிகளே இதற்கு உயிர்சாட்சி!

கரும்பு விளைவித்து ஆலைகளுக்குக் கொடுத்த விவசாயிகளுக்கு, பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்துக்கொண்டிருக்கின்றன தமிழக தனியார் சர்க்கரை ஆலைகள் பலவும். 1,650 கோடி ரூபாய் அளவுக்கு பாக்கிவைக்கப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடிக்கும் ஆலைகளும் இதில் அடக்கம்.
`கரும்பை கொள்முதல் செய்த 14 நாட்களுக்குள் விவசாயிகளுக்குரிய பணத்தைக் கொடுத்துவிட வேண்டும். மீறினால், 15 சதவிகித வட்டியுடன் தரப்பட வேண்டும்' என, மத்திய அரசு சட்டமே போட்டு வைத்துள்ளது. ஆனால், அதை எல்லாம் காலில் போட்டு மிதித்துக்கொண்டுள்ளன இந்த ஆலைகள்!
இன்னொரு புறம், 2004 - 2009ம் ஆண்டு வரையில் ஆலைகளிடம் இருந்து வரவேண்டிய லாபப் பங்குத்தொகை 350 கோடி ரூபாயும் விவசாயிகளின் கைக்கு வராமலே இருக்கிறது. `உடனடியாக வழங்க வேண்டும்' என உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டும் எதுவும் அசையவில்லை.
தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு, தாங்களே விலைவைக்க முடியாதது கொடுமை என்றால், யாரோ நிர்ணயிக்கும் விலையும் வீடு வந்து சேராமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை!
இதற்கு எல்லாம் காரணம்... கடிவாளம் என்பது, விளைவிக்கும் விவசாயிகளின் கைகளில் இல்லாமல் வெவ்வேறு நபர்களின் கைகளில் இருப்பதுதான். `கையில காசு... வாயில தோசை!' என்பதுபோல, விளைப்பொருட்களைக் கொடுத்த அடுத்த நிமிடமே விவசாயிகளின் கணக்கில் பணம் சேர்க்கப்பட்டால் ஒழிய, இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு இருப்பதாகத் தோன்றவில்லை.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லுக்குப் பணம் கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்னைகள் மற்றும் ஊழலுக்குத் தீர்வாக, விவசாயிகளின் பணம் நேரடியாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதே பாணியில், கரும்பு விவசாயிகளுக்கும் உடனுக்குடன் வங்கிக்கணக்கில் பணத்தைச் சேர்த்துவிட்டால்... `காடு விளைஞ்சென்ன மச்சான்... நமக்குக் கடனும் வட்டியும்தானே மிச்சம்' என, கண்ணீரில் மிதக்காமல் இருப்பார்களே!
ஊருக்கே உணவளிக்கும் விவசாயிகளின் கண்ணீருக்கு, இந்த டிஜிட்டல் யுகத்திலாவது முற்றுப்புள்ளி வைக்க, ஆள்வோர்கள் முன்வருவார்கள் என நம்புவோம்!