
உணவு நல்லது வேண்டும்!
வெங்காய சூப்
தேவையானவை: பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 4, பூண்டுப் பற்கள் - 4, பச்சைமிளகாய் - 2, கெட்டியான தேங்காய்ப்பால் - அரை கப், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், நசுக்கிய பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாமுமாகச் சேர்ந்தது - ஒரு டீஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் வெண்ணெயைப் போட்டு பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். இதில், மூன்று கப் நீர் விட்டு மசாலா, உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். வெந்ததும் சிறிது ஆறவிட்டு, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, மிளகுத்தூள், கரைத்த சோள மாவு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும். ஒரு கொதி வர ஆரம்பிக்கும்போது, தேங்காய்ப்பாலை ஊற்றி, கொதிக்கவிட்டு மல்லித்தழையைத் தூவி இறக்க வேண்டும்.
பலன்கள்: வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோயைத் தடுக்கும். இதில் உள்ள குரோமியம், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
சிவப்பு அரிசி ஆப்பம்
தேவையானவை: சிவப்பு அரிசி - 1/2 கிலோ, தேங்காய்த்துருவல் - 20 மி.கி., தேங்காய் - 1, வெல்லம் - சிறிய துண்டு, தண்ணீர், உப்பு - சிறிதளவு.

செய்முறை: சிவப்பு அரிசியில் தண்ணீர் ஊற்றி, ஒரு மணி நேரம் ஊறவைத்து, பிறகு தேங்காய்த்துருவல், வெல்லம் சேர்த்து, கிரைண்டரில் மாவாக அரைக்கவும். எட்டு மணி நேரம் மாவை நொதிக்கவைத்து, ஆப்ப சட்டியில் ஊற்றி மூடிவைக்கவும். ஒரு நிமிடம் கழித்துத் திறந்தால், சுவையான ஆப்பம் ரெடி.
தேங்காயை அரைத்துத் தேங்காய்ப்பால் எடுத்துக்கொள்ளவும். தேங்காய்ப்பால் பிடிக்காதவர்கள், பால் சேர்த்துக்கொள்ளலாம்.
பலன்கள்: வயிற்றுப்புண், அல்சர் இருப்பவர்கள், ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு இது. நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ் இந்த உணவில் இருக்கிறது. சிவப்பு அரிசி, உடலுக்கு வலுவூட்டும். எனவே உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், தினமும் இதைச் சாப்பிடலாம். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், இந்த உணவைத் தவிர்க்கவும்.
ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க...

`உயர் ரத்த அழுத்தம் கண்டறியப்பட்டால், வாழ்நாள் முழுக்க மாத்திரை மருந்து எடுக்க வேண்டுமே' எனக் கவலைப்படுகின்றனர். ஆனால், உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது, தொடர் உடற்பயிற்சி செய்வது, சோடியம் குறைவான, பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது, மன அழுத்தத்தைத் தவிர்ப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கலாம். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும் உணவுகள்: பீட்ரூட், பூண்டு, மீன் எண்ணெய், நட்ஸ், மஞ்சள், கிரீன் டீ.
