Published:Updated:

ஆசை - “சூர்யாவுடன் மீண்டும் நடிக்க ஆசை!”

ஆசை -  “சூர்யாவுடன் மீண்டும் நடிக்க ஆசை!”
பிரீமியம் ஸ்டோரி
News
ஆசை - “சூர்யாவுடன் மீண்டும் நடிக்க ஆசை!”

ம.கா.செந்தில்குமார், பரிசல் கிருஷ்ணா, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

‘வணக்கம். என் பெயர் ஹேமலதா.

ஆனந்த விகடனின் 40 ஆண்டுகளுக்கும் மேலான வாசகி. நாங்கள் ஆரம்பத்தில் சேலத்தில் குடியிருந்தோம். அப்போது எங்கள் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி சீனு என்பவரின் வீடு. அவரும் நடிகர் சிவகுமாரும் நெருங்கிய நண்பர்கள். எந்தக் கைமாறும் எதிர்பாராமல் பழகும் அந்த நட்பு, எங்களுக்கு வியப்பைத் தந்தது. அந்த ஆச்சர்யத்துடன் ஐந்து வருடங் களுக்கு முன்னர் ஆனந்த விகடனில் இதே ‘ஆசை’ பகுதிக்கு `சிவகுமார் அவர்கள், என்னையும் என் கணவரையும் போர்ட்ரைட் ஆக வரைந்து தர வேண்டும்' என்ற என் ஆசையை எழுதி அனுப்பியிருந்தேன். அப்போது அந்த ஆசை நிறைவேறவில்லை.

இதற்கிடையில் என் மகன் வெங்கடேஷுக்கு இந்த ஆண்டு ஜனவரி-ல் திருமணம் நடந்தது. மருமகள் லாவண்யா, ஜோதிகாவின் தீவிர ரசிகை. ஜோதிகாவை ‘எங்க தலைவி' என்றுதான் சொல்வார் லாவண்யா. ஜோவை நேரில் சந்தித்து ஒரு செல்ஃபி எடுக்க வேண்டும் என, அவளுக்கு நீண்ட நாட்களாக ஆசை. ஒரு நல்ல மாமியாராக, என் மருமகளின் ஆசையை உங்கள் மூலம் நிறைவேற்ற விரும்புகிறேன்.’

- இது போரூர் வாசகி ஹேமலதாவின் ஆசை. மாமியார் ஹேமலதா, மருமகள் லாவண்யா இருவரின் ஆசையையும் ஒரே சமயத்தில் நிறைவேற்ற நினைத்தோம். விஷயத்தை, நடிகர் சிவகுமாரிடம் சொன்னோம்.

ஆசை -  “சூர்யாவுடன் மீண்டும் நடிக்க ஆசை!”

`‘அக்டோபர் 27-ம் தேதி, என் பசங்க சூர்யா, கார்த்தி ரெண்டு பேரும் என் 75-வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்காங்க. அது என் நெருங்கிய உறவுகள், நட்புகள் மட்டும் கலந்துக்கிற நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சிக்கு அவங்களை அழைச்சுட்டு வந்துடுங்க.  அவங்களுக்கு அங்கே ஒரு சர்ப்ரைஸும் வெச்சிருக்கேன்'' என சஸ்பென்ஸ் வைத்தார் சிவகுமார்.

நாள் அக்டோபர் 27, வியாழக்கிழமை. இடம் கிண்டி கிராண்ட் சோழா ஹோட்டல். ஹேமலதா, அவரின் கணவர் சீனிவாசன், மகன் வெங்கடேஷ், மருமகள் லாவண்யா நால்வரையும் அழைத்துச் சென்று இரண்டாவது தளம் ராஜேந்திரா ஹாலில் பிரதான ரவுண்ட் டேபிளில் உட்காரவைத்தோம். சிவகுமாரை அலைபேசியில் அழைத்தால், `‘ரெடியாகிட்டே இருக்கேன். வந்துடுறேன். அந்த ஃபேமிலி அந்நியமா உணரப்போறாங்க. நம்ம வீட்டு நிகழ்ச்சினு சொல்லி, கேஷுவலா இருக்கக் சொல்லுங்க'’ என்றார்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கோட்-சூட்டில் சிவகுமார். உடன் அவரின் மனைவி லட்சுமி. அவர்களைப் பார்த்த ஹேமலதா குடும்பத்துக்கு உட்சபட்ச மகிழ்ச்சி. அந்தப் பரபரப்பிலும் அவர்களிடம் ஆர்வமாக உரையாடிய சிவகுமார், ‘`அந்த சர்ப்ரைஸைக் காட்டுறேன், வாங்க'’ என்று அவர்களை ஸ்டேஜிக்கு அழைத்துச் சென்றார்.

‘`இவன்தான், நீங்க சொன்ன சீனு. என் நண்பன்’' என்று சீனுவை அறிமுகப்படுத்தி வைத்ததும் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. ‘‘உங்களுக்கு சீனுவை நல்லா தெரியும். இவங்களுக்காகச் சொல்றேன்’' என்று நம்மை நோக்கிய சிவகுமார், ‘`அப்ப இவனை யார்னு எனக்குத் தெரியாது. நான் படங்கள்ல நடிச்சுட்டே 1967-ல் சொந்த நாடக கம்பெனி ஆரம்பிச்சு, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்புல ‘அம்மன் தாலி’ங்கிற நாடகத்தை அரங்கேற்றம் பண்ணினேன். அந்த நாடகம் பார்த்த சீனு, ‘அதே நாடகத்தை சேலம் அமெச்சூர் ஆர்ட்ஸ் சார்பா எங்க ஊர்ல போடணும்’னு சொல்லி, என்னை புக் பண்ண வந்திருந்தான். பேசி முடிச்சுட்டு வேன்ல கிளம்பினாங்க. அப்ப இவன் ஏறுவதற்குள்ள வேன் புறப்பட்டுடுச்சு. ‘டேய்... டேய்...’னு சத்தம்போட்டுட்டு தொங்கிட்டே போறான். ‘என்ன ஆச்சு?’னு விசாரிச்சா, ‘சீனுக்கு விபத்துல வலது கால் துண்டாகிடுச்சு’னாங்க. அதிர்ந்துட்டேன்.

ஆசை -  “சூர்யாவுடன் மீண்டும் நடிக்க ஆசை!”

சீனுவைப் பற்றி அப்ப ஒரு விநாடி யோசிச்சேன். ‘லேசா சளி பிடிச்சாலே நடுங்கிப்போயிடுறோம். ஆனா, ஒரு காலே போன பிறகும் நம்பிக்கையா வாழ்ந்துட்டு இருந்தான்னா, வாழ்க்கை மேல இவனுக்குதான் எவ்வளவு பற்று!’னு தோணுச்சு. சீனுவை எனக்கு ரொம்பப் பிடிச்சிப்போச்சு. ‘டேய் சிவா!’னு என்னை உரிமையோடு கூப்பிடுற உரிமையை சிலருக்கு மட்டும்தான் கொடுத்திருக்கேன். அதில் சீனு முக்கியமானவன்'' - சீனுவை சிவகுமார் அணைத்துக்கொள்ள, அனைவரின் கண்களிலும் நீர்.

‘‘ஓ.கே... இப்ப நாம நிகழ்ச்சிக்குப் போகலாம்...’’ என்ற சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தால், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக சூர்யாவும் கார்த்தியும். ‘`அப்பாவுக்கு, திரும்பின பக்கம் எல்லாம் லைக்ஸ் அண்ட் ஷேர்தான். ஆனா, அவரின் டிஸ்லைக் ஏரியாக்கள் எல்லாம் அப்பாவின் நண்பர்களுக்குத்தான் தெரியும். அதைப் பற்றி கூச்சம் இல்லாம இங்கே ஷேர் பண்ணலாம்'’ என்றார் சூர்யா. ஆனால், பாசிட்டிவ் விஷயங்கள் தான் வந்து விழுந்தன.

இந்த நிகழ்ச்சிக்கு இடையில் சிவகுமாருடன் ஹேமலதா குடும்பத்தினர் உரையாட நேரம் கிடைத்தது. ‘‘75 வயது. ஆனாலும் ஸ்மார்ட்டா இருக்கீங்க. உங்க ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன?'’ இது லாவண்யாவின் கேள்வி.

‘‘நான் கடைப்பிடிக்கிற சில விஷயங்களைச் சொல்றேன். ஆனா, இதைத்தான் நீங்களும் கடைப்பிடிக் கணும்னு சொல்ல மாட்டேன். அது உங்கள் விருப்பம். அதிகாலை காலைக் கடனை முடிச்சுட்டு வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர். காலை 4:15 மணி முதல் 5 மணி வரை பத்மாசனம், சர்வாங்காசனம் உள்பட எட்டு ஆசனங்கள். 5:30 மணி முதல் 6:10 மணி வரை நடைப்பயிற்சி. 7 மணிக்குள் குளித்து முடித்து ஒரு பிடி பழைய சாதம் கலந்த மோர் ரெண்டு டம்ளர், 5 சின்ன வெங்காயம், 9 மணி அளவில் பப்பாளி, 2 இட்லி. பகல் உணவு காய்கறிகளுடன் கொஞ்சம் சாதம் அல்லது சிறிய சப்பாத்தி 2.

ஆசை -  “சூர்யாவுடன் மீண்டும் நடிக்க ஆசை!”

மாலை வறுத்த பொறிக்கடலை அல்லது எண்ணெய் இல்லாத ஓமப்பொடி, இளநீர் அல்லது அரை டம்ளர் ஹார்லிக்ஸ். இரவு 7:30 மணிக்கு கொஞ்சம் சாலட், 2 இட்லி. 10:00 மணிக்கு உறக்கம். தினமும் 8 டம்ளர் தண்ணீர், 7 மணி நேர உறக்கம். இடையில் அரை மணி நேரம் தனிமையில் மௌனம். இவ்வளவுதான்’’ - சிவகுமார் சொல்லி முடித்ததும் லாவண்யாவின் முகத்தில் ஆச்சர்யம்.

‘‘ஓ.கே. வாங்க குரூப் போட்டோ எடுத்துக்கலாம்'’ என, தன் மகன்கள் சூர்யா, கார்த்தியையும் மேடைக்கு அழைத்தார். சீனிவாசனும் ஹேமலதாவும் தாங்கள் கொண்டுவந்த பொன்னாடையை சிவகுமாருக்கு அணிவித்து, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். ஹேமலதாவின் குடும்பத்துக்கு சந்தோஷம். ஆனால், ‘தன் தலைவி ஜோதிகா பக்கத்துல இருந்தும், பார்த்தும், பேசியும்... ஒரு செல்ஃபி எடுக்க முடியலையே!' என லாவண்யாவுக்கு மட்டும் சின்ன வருத்தம். `‘இன்னைக்குக் கிளம்புவோம். சிவகுமாரிடம் பேசி, ஜோதிகாவுடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்கிறோம்’' என்று அவரை சமாதானப்படுத்தி பிறந்தநாள் நிகழ்ச்சியில் இருந்து அவர்களை வழியனுப்பிவைத்தோம்.

பிறகு சிவகுமாருடன் பேசி, சூர்யாவின் பெசன்ட் நகர் வீட்டில் ஜோ உடனான செல்ஃபி ஷூட்டுக்கு நாள் குறித்தோம். லாவண்யாவும் அவரது கணவர் வெங்கடேஷும் வந்தனர். அவர்கள் இருவரையும் ஜோதிகாவும் சிவகுமாரும் வரவேற்றனர். லாவண்யாவுக்கு, ஜோதிகாவைப் பார்த்ததும் நம்ப முடியவில்லை. பிரமிப்பிலேயே இருந்தார். ‘`அன்னைக்கு உங்ககூட போட்டோ எடுக்க நேரம் இல்லாமல் போயிடுச்சு, ஸாரி'’ என்றார் ஜோதிகா.

‘‘ஐயோ... எதுக்கு ஸாரி எல்லாம்?'’ என்று பதறிய லாவண்யா, ‘`என்னால நம்பவே முடியலை. நான் உங்களுக்கு எந்த அளவுக்கு ஃபேன்னா, ‘காக்க காக்க'ல ‘என்னைக் கொஞ்சம் மாற்றி...’ பாட்டுல நீங்க போட்டிருந்த ஆக்சசரீஸைத் தேடித் தேடி அலைஞ்சு, கடைசி வரை ஃப்ளாப். என் தேடலைப் பார்த்துட்டு, ‘அவங்க வீட்டு வாசல்லயே வெயிட் பண்ணு. அது பழையத் துணியா ஆனதும் தூக்கிப்போடும்போது எடுத்துட்டு வந்துடு’னு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கிண்டலடிக்க ஆரம்பிச்சுட்டாங்க’’  என வியந்தபடி பேசுகிறார் லாவண்யா.

‘‘என் கசினுக்கு மூணு மாசத்துக்கு முன்னாடி பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பேர் தியா’’ என்கிற வெங்கடேஷை இடைமறித்த லாவண்யா, ‘`எங்க ரெண்டு பேர்ல யாருக்கு முதல்ல பெண் குழந்தை பிறந்தாலும் ‘தியா’னு பேர் வைக்கிறதா ப்ளான். அவங்களுக்கு பிறந்தது. ‘தியா’னு வெச்சுட்டாங்க’’ என்றதும், ‘‘தேங்க்யூ... தேங்க்யூ...’’ என்று நன்றி சொல்லியபடி இருந்தார் ஜோதிகா.

‘‘மேடம், நீங்க எப்ப சூர்யா சார்கூட திரும்பவும் நடிக்கப்போறீங்க?'’ என வெங்கடேஷ் கேட்க. ‘‘நாங்களும் அதுக்காகத்தாங்க காத்திருக்கோம். ஆனா, அதுக்கான ஸ்கிரிப்ட் வரணுமே. எங்க பசங்களுக்கு எங்க ரெண்டு பேரையும் ஸ்கிரீன்ல ஒண்ணா பார்க்கணும்னு ஆசை. எனக்கும் அதுதான் ஆசை'' என்கிறார் ஜோ.

ஆசை -  “சூர்யாவுடன் மீண்டும் நடிக்க ஆசை!”

‘‘என் கசின் உங்ககிட்ட போன்ல பேசணும்னு ப்ரியப்பட்டாங்க. போன் பண்ணித்தரவா?'’ ஆர்வமும் தயக்கமுமாகக் கேட்ட லாவண்யாவிடம், ‘`யார்... தியாவின் அம்மாவா? கால் பண்ணுங்க. பேசிடுவோம்'’ என்றார் ஜோதிகா.

செல்ஃபி ஷூட் முடிந்தது. பிரிய மனம் இல்லாமல் ஜோவிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டார் லாவண்யா. ``மாமியார், மருமகள் எங்க ரெண்டு பேரின் ஆசைகளையும் ஒரே நேரத்தில் நிறைவேத்திட்டீங்க. விகடனுக்கு நன்றி'' - லாவண்யாவின் கண்களில் மகிழ்ச்சி மிளிர்கிறது!

வாசகர்களே... இதுபோல உங்களுக்குள்ளும் சின்னச்சின்ன ஆசைகள் ஒளிந்திருக்கலாம். ஜாலியான, ரசனையான, காமெடியான ஆசைகளை எழுதி அனுப்புங்கள். ஆசிரியர் குழுவினரின் பரிசீலனையில் தேர்வாகும் ஆசைகளை, விகடன் நிறைவேற்றித் தருவான். உங்கள் ஆசைகளை அனுப்பவேண்டிய முகவரி...

 ‘ஆசை’,  ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.
இ-மெயில்: aasai@vikatan.com