சினிமா
Published:Updated:

நைட்ல ரிலீஸ் ஆகிறார் ‘கபாலி’!

நைட்ல ரிலீஸ் ஆகிறார் ‘கபாலி’!
பிரீமியம் ஸ்டோரி
News
நைட்ல ரிலீஸ் ஆகிறார் ‘கபாலி’!

ப.சூரியராஜ், ஓவியங்கள்: கண்ணா

இந்த ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த சில படங்களை, வேறு இயக்குநர்கள்  இயக்கியிருந்தால் எப்படியிருக்கும் எனக் குதர்க்கமாக யோசித்ததில்...

செல்வராகவன் இயக்கும் `இருமுகன்’


படத்தின் முதல் காட்சி,  மலேசியா விமானநிலையத்தின் உள்ளே அத்துமீறி நுழையும் ஒரு பெரியவர், ‘நாடு எட்டியதும் அடியேனை ஒருமுறை நின்னு நினையுங்கோள்...’ எனக் கூறிவிட்டு அதிகாரிகளைத் தூக்கிப்போட்டு அல்லையில் மிதிக்கிறார். அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் அங்கு இருந்த இந்திய விமானம் ஒன்றும் காணாமல்போகிறது. இந்தச் சம்பவத்தை சி.சி.டி.வி பதிவில் பார்க்கும் இந்திய அரசாங்கம், ‘ இந்தப் பெரியவருக்குள்ளேயும் என்னமோ இருந்திருக்கு பாரேன். இந்திய விமானம்னா சும்மாவா?’ என ஷாக் ஆகிறது.

நைட்ல ரிலீஸ் ஆகிறார் ‘கபாலி’!

அங்கே என்ன நடந்தது என்பதையும், விமானம் எங்கே போனது என்பதையும் கண்டறிய ரா ஏஜென்ட் அகிலனை மலேசியாவுக்கு அனுப்புகிறது அரசு. மலேசியா செல்லும் அகிலன், ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு டென்ட் போட்டுத் தங்குகிறார். மல்லாக்கப் படுத்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்து யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை; கேம்ப் ஃபயரை மூட்டிவிட்டு முன்னால் உட்கார்ந்து யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை. இது சரிப்பட்டு வராது என நினைத்து, சரக்கு பாட்டிலை ஓப்பன் செய்ய,  சிறுமூளையும் பெருமூளையும் குஜாலாகிக் குழப்பங்கள் குறைந்து, பல தீர்வுகள் பிறக்கின்றன.

சி.சி.டி.வி பதிவை மீண்டும் போட்டுப் பார்க்கிறார். அதில் அந்தப் பெரியவர் தன் பாக்கெட்டில் வைத்திருந்த பாட்டிலைத் திறந்து எதையோ குடிப்பதையும், கழுத்தில் ‘ஹார்டின் சிம்பல்’ பச்சை குத்தியிருப்பதையும் கவனிக்கிறார். அடுத்தடுத்த காட்சிகளில் அந்த பாட்டிலைத் தயாரித்தவனைக் கண்டுபிடித்து, அவனைப் படுக்கப்போட்டு வயித்துலேயே ‘வங்கு... வங்கு...’னு மிதித்து விசாரிக்க, ‘லவ்தான் இது எல்லாத்துக்கும் காரணம். அவன் அந்தமானுக்குப் பக்கத்துல ஒரு தீவில் இருக்கான்’ என்கிறான். லவ்வை நினைத்து, அகிலன் விட்டத்தைப் பார்த்து கெட்டவார்த்தையில் கத்த அங்கே விடுறோம் இன்டர்வல்.

பின்னர், பிரானா மீன், பாம்புகள், காட்டுவாசிகள், எரி நட்சத்திரங்கள் எனப் பல தடைகளைத் தாண்டி அந்தத் தீவை அடைந்து லவ்வைக் கண்டுபிடிக்கிறார் அகிலன். லவ்வின் ஆட்களைத் தனி ஆளாக அடித்துச் சூறையாடி டயர்டு ஆகி, அங்கே இருந்த தண்ணீரை எடுத்துக் குடிக்க, அவருக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்து, ‘ரட்சகன்’ நாகார்ஜுனா போல நாக்குப் பூச்சிகள் துடித்து பலசாலியாக மாறுகிறார். அந்த பாட்டிலில் இருந்தது இந்த நீர்தான் என்பதைப் புரிந்துகொள்ளும் அகிலன், லவ்வைப் போட்டுத் தள்ளிவிட்டு இந்தியா கிளம்புகிறார்.

படகில் ஒருவர், ‘சார் உங்க முதுகுல இருக்கிற ‘ஹார்டின்’ டாட்டூ சூப்பரா இருக்கு’ எனச் சொல்ல, ‘நம்ம உடம்புல டாட்டூவே கிடை யாதே’ என அதிர்ச்சியில் கண்ணாடியைப் பார்க்கிறார் அகிலன். அவர் முதுகிலும் லவ் முதுகில் இருக்கும் அதே ஹார்ட் டாட்டூ இருக்க ‘தொடரும்...’னு கேப்ஷனைப் போட்டு படத்தை முடிக்கிறோம்!

ஹரி இயக்கும் `24’

படத்தின் முதல் காட்சியிலேயே புழுதி பறக்க பத்து டாடா சுமோக்கள் பரபரப்பாப் போய்ட்டிருக்கு. இந்தப் பக்கம் சயின்டிஸ்ட் சூர்யா பாஸ்பரஸில் பனங்கொட்டையை முக்கி எடுத்து, கால இயந்திரத்தை உருவாக்கிவிடுகிறார். பத்து டாடா சுமோவும் சயின்டிஸ்ட் வீட்டு முன்னர் சடன் பிரேக் அடிக்க, ‘பழநி மலை உச்சியிலே... ஹேப்பி பர்த்டே டு மீ...’ எனப் பாடிக் கொண்டே காரில் இருந்து அரிவாளோடு இறங்குகிறார் ஆத்ரேயா. அவரைப் பார்த்ததும் சயின்டிஸ்ட் சூர்யா குடும்பம் குட்டியோடு காரை எடுத்துக் கிளம்ப, ஆத்ரேயா அவர்களைத் துரத்த பெங்களூரு ஹைவேவுக்கும் சென்னை ஹைவேவுக்கும் இடையில் ஒரு பரபர சேஸிங்.

கேமராவைக் கயிற்றில் கட்டி கிறுகிறுனு சுற்றுவதுபோல் ‘என்னடா நடக்குது இங்கே?’ என நமக்குக் கிறுக்குப்பிடிக்க வைக்கிறது ஒளிப்பதிவு. இருவரது கார்களும் டிவைடரில் முட்டி தீப்பற்றி எரிய... குழந்தை சூர்யா மட்டும் கால இயந்திரம் கையில் மாட்டியதோடு எஸ்கேப் ஆகிறார். அவரைப் பார்க்கும் சரண்யா, தன் வீட்டுக்கு அவரைத் தூக்கிச் செல்கிறார்.

நைட்ல ரிலீஸ் ஆகிறார் ‘கபாலி’!

சரியாக 26 வருடங்களுக்குப் பிறகு கோமாவில் இருந்து எழும் ஆத்ரேயா நேராகப் பெட்டிக்கடைக்குச் சென்று ஒரு ரூபாயைக் கொடுத்து ‘இரண்டு வாழைப்பழம் தாங்க’ என்கிறார். கடைக்காரர் ‘ஒரு பழம் அஞ்சு ரூபாய்’ எனச் சொல்ல, கடுப்பாகும் ஆத்ரேயா ‘ ‘கரகாட்டக்காரன்’ படத்திலேயே ரூபாய்க்கு இரண்டு பழம்தானே விப்பாங்க’ என்கிறார். அதற்குக் கடைக்காரர் ‘ ஏன் 26 வருஷமா கோமாவில் இருந்தியா?’ எனக் கேட்க, அப்போதுதான் 26 ஆண்டுகள் தன் வாழ்க்கை கோமாவில் கழிந்ததை உணர்கிறார். உடனே, ஆத்திரத்தில் ஆத்ரேயா மண்ணெண்ணெய் கேனை எடுத்து அடுப்பில் தூக்கி எறிய, டீக்கடை தீக்கடையாகி ஊரே போர்க்களம் ஆகிறது. இங்கேதான் இன்டர்வல்.

அடுத்தடுத்த காட்சிகளில் மகன் சூர்யாவை ஆத்ரேயா கண்டுபிடிக்க, சித்தப்பாவுக்கும்  மகனுக்கும் இடையே நடக்கும் ‘கால இயந்திரத்துக்கான சதுரங்க வேட்டையில் திடுக் திருப்பத்தோடு மகனே வெல்கிறார். கடைசியாக, மகன் சூர்யா தன் சித்தப்பாவிடம் ‘ கோவக்காரன் வாட்ச் வெச்சிருந்தாத்தான் தப்பு. காவக்காரன் வெச்சிருந்தா தப்பு இல்லை...’ என பன்ச் பேச, ஆத்ரேயா மனம் திருந்திவிடுகிறார். இறுதியில் மகன் சூர்யாவுக்கும் சமந்தாவுக்கும் திருமணம் நடக்க, குடும்பங்கள் சேர்ந்து ‘அடைக்காக்கிற கோழியைப்போலவே நம்ம ஆத்ரேயாவைப் பாருங்க...’ எனப் பாசமழை பொழிகிறார்கள். படம் முடிகிறது!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும்  `ரஜினி முருகன்’

படத்தின் முதல் காட்சி, ‘உவ்வே... உவ்வே...’ எனச் சிரித்துக்கொண்டே ஒரு குழந்தை பிறக்கிறது. ஏன்னா, அந்தக் குழந்தையே சிவகார்த்திகேயன்தான். வளர்ந்து மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்து வேலைவெட்டி இல்லாமல் மதுரையைச் சுற்றிவருகிறார்.

`மதுரையைச் சுற்றும் கழுதைகூடத் தொலை யாது’னு சொல்வாங்க. ஆனால், சிவகார்த்திகேயன் தொலைஞ்சுபோயிடுறார். ஆமாம்... ஹீரோயினைப் பார்த்ததும் தன்னையே அவங்ககிட்ட தொலைச்சு டுறார். அவர் காதலைத் தேடிப் போகலை. அதுவா நடந்துச்சு, அவரைத் தலை கீழாப் போட்டுத் திருப்புச்சு, சும்மா போட்டுத் தாக்குச்சு.

நைட்ல ரிலீஸ் ஆகிறார் ‘கபாலி’!

ஒருநாள் நீல கலர் சட்டை போட்டுக்கொண்டு காபி ஷாப்பில் வைத்து ஹீரோயினிடம், ‘ஐ எம் இன் லவ் வித் யூ கார்த்திகா தேவி...’ என புரப்போஸ் செய்கிறார். ஆனால், ஹீரோயினோ ‘இது சரியா வராது ரஜினிமுருகன். லைஃப்ல நீ ஒரு நல்ல இடத்துக்கு வரணும். அப்புறம்தான் இந்தக் காதல், கல்யாணம் எல்லாம். நீ இந்த காபிக்கு காசு கொடுக்கும்போது, இந்த வர்க்கிக்கும் சேர்த்து காசு கொடுத்துடு’னு சொல்லிட்டு ஒரு வர்க்கியை எடுத்துட்டுக் கிளம்பிடுறாங்க.

சிவகார்த்திகேயனுக்கும் சொந்தமா பிசினஸ் பண்ணலாம்னு ஒரு ஐடியா தோணுது. தன்னுடைய தாத்தா ராஜ்கிரணைக் கூப்பிட்டு, ஒரு காபிஷாப்ல உட்கார்ந்து அது சம்பந்தமாப் பேசுறார்; சூரிகூட இன்னொரு காபிஷாப்ல உட்கார்ந்து பேசுறார். கடைசியாக, ‘நாம இப்படி ஒவ்வொரு காபிஷாப்பா உட்கார்ந்து பேசிட்டிருக்கிறதுக்கு, நாமளே ஒரு காபிஷாப் ஆரம்பிச்சுடலாமே...’னு சட்டுபுட்டுனு ஒரு முடிவுக்கு வந்துடுறாங்க. காபிஷாப் ஆரம்பிக்க பணம் தேவைப்படுவதால் தன் சொத்தை விற்கலாம் எனச் சொல்கிறார் ராஜ்கிரண். அதற்கு வெளிநாட்டில் இருக்கும் மற்ற வாரிசுகளின் கையெழுத்தும் தேவைப்பட, கௌதம் மேனன் இயக்குநர் என்பதால், ஃபாரீன் போயிட்டு வரணும் என்ற கட்டாயமும் இருப்பதால், அமெரிக்கா சென்று கையெழுத்து வாங்குகிறார் சிவகார்த்திகேயன்.

இடையில் கௌதம் மேனன் கெஸ்ட் ரோலில் வந்து ஒரு பாட்டுப் பாடுகிறார். சிவகார்த்திகேயன் சிக்ஸ்பேக்ஸும் வைக்கிறார். எல்லாம் நன்றாக நடந்துகொண்டிருக்கும்போதுதான், சைத்தான் சடைமுடியோடு சமுத்திரக்கனி ரூபத்தில் வருது. `எனக்கும் ஒரு ஷேர் உண்டு. நானும் இந்தக் குடும்பத்தின் வாரிசுதான்’ என அந்தக் குடும்பத்துக்குக் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத சமுத்திரக்கனி, ஆட்டையைக் கலைக்கிறார்.

அடுத்தடுத்த காட்சிகளில் சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனியின் கேடுகெட்ட ப்ளானை அக்குவேர் ஆணிவேராகப் பிய்த்து, க்ளைமாக்ஸில் தூக்கி எறிந்துவிடுகிறார். இதனால், கடுப்பாகும் சமுத்திரக்கனி ஹீரோயினைக் கடத்திவைத்து, ‘ டேய் ரஜினிமுருகன்... அடுத்து உன் தாத்தாவையும் தூக்குறேன்டா. உனக்கு வலிக்கும்டா, நீ அழுவடா...’ என மிரட்டுகிறார். க்ளைமாக்ஸில், சமுத்திரக்கனியை கிடாரை வைத்துப் போட்டுத்தள்ளிவிட்டு, ஹீரோயினைக் கூட்டி வருகிறார் சிவகார்த்திகேயன்.

மிஷ்கின் இயக்கும் `கபாலி’

நைட்ல ரிலீஸ் ஆகிறார் ‘கபாலி’!

25 வருடங்களாக சிறைத் தண்டனை அனுபவித்து வெளியே வரும் கேங்ஸ்டர் கபாலி, தன்னைச் சிறைக்கு அனுப்பியவர்களையும் தன் குடும்பத்தைச் சல்லிசல்லி யாக நொறுக்கியவர்களின் நல்லி எலும்பைக் கடிப்பது தான் கதை. படத்தின் முதல் காட்சியே, சோடியம் லைட் வெளிச்சத்தில் இரண்டு கால்கள் வந்து நிற்குது. அந்தக் கால்கள் கபாலி யோடது. இது மிஷ்கின் படம்கிறதால் கைதியைக் கூட நைட்லதான் ரிலீஸ் பண்றார். ரிலீஸாகி வெளியே வர்ற கபாலி, முதல் வேலையா பொடிநடையா நடந்து நாலு தெருவுக்கு அங்கிட்டு இருக்கிற சுரங்கப்பாதையில் இறங்கி, அரை மணி நேரமா அங்கேயே தலையைத் தொங்கப்போட்டு நிற்கிறார். ஆனால், இருட்டில் அவர் முகம் சரியாகத் தெரிய மாட்டேங்குது. இருளில் இருந்து வெளியே வரும் கபாலியின் முகத்தில் சூரிய ஒளி பட்டும், நமக்கு முகம் தெரிய மாட்டேங்குது. ஏன்னா, ‘பிசாசு’ பட ஹீரோ கணக்கா முகத்துல முக்கால்வாசி ஏரியாவை முடியை வெச்சே கவர் பண்ணியிருக்கார் கபாலி. தன் நண்பர்கள் சத்யா, குருவி மற்றும் எட்வர்டு அப்பாவின் உதவியோடு, தனது மனைவியைத் தேட ஆரம்பிக்கிறார். அப்போது கறுப்பு பேன்ட், சட்டை போட்ட மூணு மொட்டைப் பசங்க கபாலியைப் பின்தொடர்கிறார்கள். இதன் நடுவில், தான் நடத்திவரும் குங்ஃபூ பள்ளியில் இருக்கும் மாணவர்களைச் சந்தித்துப் பேசுகிறார் கபாலி. அவர்கள் கபாலியின் முன்வாழ்க்கையைப் பற்றி தெரியாத்தனமாகக் கேட்டுவிட, அவர்கள் முன்பு இரண்டு மெழுகுவத்திகளை ஏற்றிவைத்து தனது ஃப்ளாஷ்பேக்கைச் சொல்கிறார். கேட்டவர்கள் கண்கலங்கிப்போகிறார்கள். கொட்டாவி விட்டதால் மெழுகுவத்தி அணைந்துவிடுகிறது. வீரசேகரனும் டோனிலீயும்தான் சிவப்புப் புடவை கட்டிய தனது மனைவியைப் போட்டுத்தள்ளினர் எனக் குமுறுகிறார் கபாலி. அடுத்தடுத்த காட்சிகளில், தனது மகளைக் கண்டுபிடிக்கும் கபாலி, தன் மனைவி சாகவில்லை, உயிரோடுதான் இருக்கிறார் என அறிந்து அவரையும் கண்டுபிடிக்கச் செல்கிறார். இந்தத் தேடுதலின்போது வீரசேகரன், டோனிலீயின் அடியாட்களான மொட்டைப் பசங்க தொல்லை கொடுக்க, நகவெட்டியை வைத்தே அவர்களைப் போட்டுத்தள்ளுகிறார். க்ளைமாக்ஸில் வீரசேகரனையும் டோனிலீயையும் பிடித்துவைத்து டிரில்லிங் மெஷினை வைத்தே பயம்காட்டிப் போட்டுத் தள்ளுகிறார் கபாலி. கடைசியாக, தன் மனைவியைக் கண்டுபிடித்துவிடும் கபாலி அவரிடம், ‘நீ செத்துட்டேனு நினைச்சேன்...’ எனக் கண்ணீர் மல்க கேட்கிறார். அதற்கு அவர் மனைவி ‘ஏன்டா டேய்... கடையில் காய் வாங்கிட்டு இருந்தவளை கார் ஏற்றிக் கொல்லப்பார்த்துட்டு இப்போ வந்து வசனம் பேசுறியா?’ எனக் கண்களை உருட்டுகிறார். ஆமாம்... கபாலிதான் பச்சைப் புடவை கட்டிய வீரசேகரன் மனைவிக்குப் பதிலாக, சிவப்புப் புடவை கட்டிய தன் மனைவி மீதே காரை ஏற்றிக் கொல்லப்பார்த்தது. ஏன்னா, கபாலிக்கு கலர் பிளைண்ட் வியாதி!