
கொடி விமர்சனம்

அரசியலுக்காகவே பிறந்த தனுஷுக்கும், பதவிக்காக எந்த லெவலுக்கும் இறங்கிப்போகும் த்ரிஷாவுக்கும் இடையிலான மோதலும், படரும் காதலுமே கொடி!
அன்பு, கொடி என இரட்டை வேடங்களில் முதன்முறையாக தனுஷ். கதைக்கு இது போதும் என்பதால் மீசை வெச்சா சந்திரன் மீசை இல்லைனா இந்திரன் மாதிரி, தாடி இருந்தால் கொடி, தாடியை எடுத்துவிட்டால் அன்பு என அளவோடு ட்வின்ஸ் கேரக்டரில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.
பக்கத்து ஊரில் பாதரச பேக்டரியின் கழிவுகள் ஏற்படுத்தும் அபாயத்தையும் அதற்குப் பின்னால் நடக்கும் பணவேட்டையையும், அதை வைத்து அரசியல் செய்யும் கட்சிக்காரர்கள், கட்சிக்காரர்களுக்குள் நடக்கும் உள்ளரசியல், பதவி வெறி எனப் பரபர திரைக்கதையில் போகிற போக்கில் போட்டு உடைக்கிறார் இயக்குநர்.
இதிலும் லாஜிக் மீறல்களுக்குப் பஞ்சம் வைக்கவில்லை. “நான் தனுஷை இதுவரை பார்த்ததே இல்லை, அவர் எப்படி இருப்பார் என்பதுகூட தெரியாது” என மேடையில் ஊர் பொதுமக்கள் சூழ மீடியாக்கள் மத்தியில் பேட்டி தட்டிவிடுகிறார் த்ரிஷா, ஆனால் படத்தின் ஆரம்பத்திலேயே த்ரிஷாவும், தனுஷும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். மாறிமாறி மண்டையை உடைத்துக்கொள்வதுபோலவும், சைக்கிளில் காத்தைப் பிடுங்கிவிடுவதுபோலவும் காட்டிருக்கீங்களே அதுலாம் என்ன பாஸ்? அப்டினா அந்த ஊர்க்காரங்களுக்கு த்ரிஷாவும் தனுஷும் ஒண்ணா படிச்சவங்கங்கிறதுலாம் தெரியாதா? இல்லை அரசியல் படத்துல இதெல்லாம் சாதாரணமுனு மறந்திடணுமா? புரியலையே!
பாதரசக் கழிவு அகற்றும் பிரச்னையில் நடக்கும் ஊழல் அரசியலால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்காக முட்டை வியாபாரம் செய்து பணம் சேர்க்கும் பாத்திரத்தில் அனுபமாவை நடிக்க வைத்திருப்பது ஓகே, ஆனால் சாதா முட்டையை நாட்டுக்கோழி முட்டையென ஃபிராடுத்தனம் பண்ணி பணம் சேர்க்கும் கதாப்பாத்திரமாகக் காட்ட வேண்டிய அவசியம்தான் என்ன? அதைத் தவிர்த்திருக்கலாமே, பின் அரசியல்வாதிகளுக்கும், அவருக்கும்தான் என்ன வித்தியாசம்!?
- தரை டிக்கெட்