
ஒய் திஸ் கொலவெறி ஹீரோஸ்?

`எம்.கே.டி என்ற தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து ஹீரோயிஸம்கிற பேர்ல பாடல் காட்சிகளில் நம் ஹீரோக்கள் பண்ணின அட்டூழியங்களைச் சொல்லவா?

ஆதிகால சூப்பர் ஸ்டார் எம்.கே.டி-லாம் காங்கிரஸ் மந்திரிசபை கூட்டத்தில் உட்கார்ந்திருக்கும் எம்.பி போலவே காலை மடக்கி உட்கார்ந்துகொண்டே ரொமான்ஸ் பண்ணுவார். ‘ஹரிதாஸ்’ படத்தில் ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ...’ பாட்டைப் பார்த்தால் அது எவ்வளவு பெரிய பாவச் செயல் என விளங்கும். ஹீரோயினை ஆடவிட்டு பாடிக் கொண்டே இருப்பார். `உன்னை என்னேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ... உன்னை நினைந்து நான் தேடி ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ...’ என்றெல்லாம் கேட்பார். அந்தப் பெண் ‘ஃப்ளையிங் கிஸ்’ கொடுத்தாலும் நங்கூரம் போட்டதுபோல அப்படியே உட்கார்ந்திருப்பார். ராகம் தப்பாமல் பாடுவதில் காட்டிய அக்கறையை கொஞ்சம் ரொமான்ஸில் காட்ட எந்திரிச்சிருக்கலாமே ஐயா! இவராச்சும் பரவாயில்லை, டி.ஆர்.மகாலிங்கம் என்றொரு ஹீரோ இருந்தார். ‘மேயாத மான்’ என்ற ஒற்றை வரியில் ஒரு பாட்டையே பாடி மானை மேயவே விட மாட்டார்!

`காதல் மன்னன்’ என்று கமலஹாசனை சும்மாவா சொன்னார்கள்! ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி, ரேவதி, மாதவி, ரூபிணி, அம்பிகா, ராதா, ராதிகா என, தன் செட் ஹீரோயின்களையும் தாண்டி தனக்கு சீனியரான லெட்சுமி, லதா, ஸ்ரீவித்யா என இவர் டூயட்டுகள் எல்லாமே ரொமான்டிக் டூயட்டுகள்தான். சமயங்களில், `ஆத்தீ... கடிச்சுக் கிடிச்சி வெச்சிருவாரோ’ என்ற பயத்துடனே பார்க்க வேண்டி இருக்கும். இவர் டூயட் பாடல்கள் எல்லாமே சாம்பிள்தான் என்பதால் யூ-ட்யூபில் பார்த்து முக்தி அடைபவர்கள் அடையலாம்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புரட்சிப் பாடல்களைப் பாடி தத்துவக்குத்து குத்துவதெல்லாம் சரிதான். ஆனால், பப்ளிக்கிற்கு பெரும் துன்பத்தை அல்லவா கொடுப்பார்! பாட ஆரம்பித்தால் கடமையை மறந்து கைகளை இடம்-வலம், வலம்-இடம் என ஆட்டிக் கொண்டே இருப்பார். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் வேலையே செய்யாமல் ‘ஏன் என்ற கேள்வி’ எனும் பாடலைப் பாடியபடியே வேலை செய்பவர்களுக்கு நடுவே புகுந்து, அவர்கள் தூக்கிச் செல்லும் மரத்தைப்பிடித்துத் தொங்கி `டிஸ்டர்ப்' செய்வார். ‘சந்திரோதயம்’ என்ற படத்தில் ‘புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக’ என்ற பாடலை மழையில் ஜாலியாக நனைந்து கொண்டே பாடுவார். பாவம் ஏரியா குடிசை வாழ் குழந்தைகளில் ஆரம்பித்து குடுகுடு தாத்தா வரை மழையில் நனைய வைத்து ஜன்னி வரவைத்து விடுவார். ஏன் தலைவரே... ஏன்?

சூப்பர் ஸ்டார் பாடல்களில் பெரும்பாலும் சின்னப்பசங்க ரைம்ஸ் பாடி ஆடும் ஸ்டெப்ஸ்கள்தவறாமல் இடம்பெறும். குளிருக்கு இதமாய் பாடல் காட்சிகளில் ஜெர்க்கின், லெதர் ஓவர் கோட், தொப்பி, கூலிங் கிளாஸ் என செம சேஃபாய் சூப்பர் ஸ்டார் ஆடினாலும் குறைந்த ஆடைகளோடு ஹீரோயின்கள் ஆடுவார்கள். சாம்பிளுக்கு ‘மாப்பிள்ளை’ படத்தின் ‘மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே’ பாடலையும், ‘வேலைக்காரன்’ படத்தில் வரும் ‘வா வா வா கண்ணா வா!’ பாடலையும் பார்த்து உணர்ந்துகொள்ளுங்கள்.

நடிகர் திலகம் சிவாஜி எல்லாம் பாடி லாங்குவேஜில் பதற வைப்பார். சாம்பிளுக்கு ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் ‘ஆறு மனமே ஆறு’ எனப் பாடிக்கொண்டே அறுபடை முருகன் கோவில் இருக்கும் தலங்களுக்கு பாத யாத்திரை போவார். அத்தனை பெரிய உடம்புக்கு எனர்ஜி எங்கே என்ற கேள்விக்கு விடையாக பாடல் முடியும்போது வறுத்த கடலையை கொறித்துக் கொண்டும் அதன் தோலை ஊதிவிட்டபடியும் நடப்பார் பாருங்கள்... ஆஸம்! ‘சிவகாமியின் செல்வன்’ படத்தில் ‘எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது’ என்ற சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட பாடலைப் பார்த்தால் அவரை ஏன் உலகநாயகன் தன் குருநாதராய் ஏற்றுக்கொண்டார் என்று காரணம் விளங்கும். அம்புட்டு லவ் கெமிஸ்ட்ரி!
- ஆர்.சரண்