கலாய்
Published:Updated:

ராட்டின சினிமாக்கள்!

ராட்டின சினிமாக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ராட்டின சினிமாக்கள்!

ராட்டின சினிமாக்கள்!

ராட்டின சினிமாக்கள்!

சில படங்கள் எல்லாம் தனுஷ் மாதிரி. பார்க்க பார்க்கத்தான் புரியும், பிடிக்கும். காரணம், ஈஸியாகப் புரிந்துகொள்ள முடியாத திரைக்கதை. ட்விஸ்ட், அதற்குள் ஒரு ட்விஸ்ட், க்ளைமாக்ஸில் வேறு ஒரு ட்விஸ்ட் எனக் குழப்பியடித்து நம்மை வாவ்டா என வாய் பிளக்க வைப்பார்கள். அதற்கு நம்ம ஊர் உதாரணம் ‘பீட்சா’. பேய்ப்படம் போலவே தொடங்கி, எதுக்கு இதெல்லாம் நடக்குது என குழப்பிக் கடைசியில் முடிச்சை அவிழ்த்து, ‘சூப்பரு’ என அந்த க்ளைமாக்ஸைப் பொறுத்திப் பார்ப்பதற்காகவே இன்னொரு முறை பார்க்கவைப்பார்கள். இந்த மாதிரியான படங்கள் ஹாலிவுட்டில் எக்கச்சக்கம். அவற்றில் சிலவற்றின் லிஸ்ட் இது.

சைனா டவுண்: ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் ஜாக் நிக்கல்சன் நடிப்பில் வெளிவந்து தெறி ஹிட்டடித்த படம். லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நிர்வாகத்திற்கும் கிழக்கு கலிபோர்னியா மாகாண விவசாயிகளுக்கும் நடுவே நிகழ்ந்த தண்ணீர்ப் பிரச்னையைப் பின்னணியாகக் கொண்ட த்ரில்லர் படம். படத்தில் டிடெக்டிவ்வாக இருப்பார் ஜாக். அவரையே ஏமாற்றி சிக்கலில் மாட்டி விடுவார் ஒரு ஜெகஜ்ஜால லேடி. யார் அவர், எதற்காக இவரை மாட்டி விட்டார் என ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது நம் கண்ணிமைகள் தன்னாலே வளையும். ஹேப்பி எண்டிங் க்ளைமாக்ஸ்களை மாற்றி கண்ணீர் வரவழைக்கும் க்ளைமாக்ஸை வைக்கும் ட்ரெண்டைத் தொடங்கியது இந்தப் படம்.

ராட்டின சினிமாக்கள்!

இர்ரிவர்ஸ்பிள்: பேரழகி மோனிகா பெல்லூச்சி நடித்த பிரெஞ்சு திரைப்படம். வேறு எந்தப் படத்திற்கும் இல்லாத ஸ்பெஷல் இந்தப் படத்திற்கு உண்டு. எல்லாக் காட்சிகளும் வரிசையாக இல்லாமல் ரிவர்ஸில் நடக்கும். திரைக்கதையில் அப்படி ஒரு வித்தையை இறக்கியிருந்தார் கேஸ்பர் நோ. பாரீஸில் கொடூரமாக ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கும் கிரிமினல்கள் பழிவாங்கப்படுவதுதான் கதை. பத்து நிமிட நீள அந்த பலாத்கார காட்சிக்காகப் படம் விமர்சிக்கப்பட்டாலும், நேர்த்தியான திரைக்கதைக்காகக் கொண்டாடுகிறார்கள் உலக சினிமா ரசிகர்கள்.

ராட்டின சினிமாக்கள்!

ஃபைட் க்ளப்: திரைக்கதையைச் செதுக்குவதில் டேவிட் பின்சர் எவர்க்ரீன் கில்லி. அதிலும் இந்தப் படம் சூப்பர் ஸ்பெஷல். போரடிக்கும் வாடிக்கையான வேலை பிடிக்காத ஹீரோ தன் திடீர் நண்பனோடு இணைந்து ஒரு சண்டைப் போட்டியை நடத்துகிறான். ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கோபத்தை, ஆங்காரத்தை, சலிப்பை இந்தச் சண்டை வழியே தீர்த்துக்கொள்ளலாம் என்பதுதான் அதன் கொள்கை. எட்வர்ட் நார்டனும் பிராட் பிட்டும் போட்டி போட்டு நடிக்க, படம் செவ்வாய் கிரக லெவலில் இருந்தது. அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் உலக சினிமா ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்.

ராட்டின சினிமாக்கள்!

அமெரிக்கன் சைக்கோ: 2000-ல் வெளியான பிளாக் காமெடி படம். அமெரிக்கன் சைக்கோ என்ற பெயரிலேயே வெளியான நாவலைத் தழுவி மேரி ஹாரன் எடுத்த படத்தில் ஹாலிவுட் விக்ரமான க்றிஸ்டியன் பேல் தன் மொத்தத் திறமையையும் காட்டி நடிக்க, வசூல் எகிறியடித்தது. நியூயார்க்கின் பணக்கார பிசினஸ்மேனான ஹீரோவும் அவனுக்குள் இருக்கும் சைக்கோத்தனமான எண்ணங்களும்தான் படத்தின் மையப்புள்ளி. சீரியஸான சைக்கோக் கதையை காமேடி தொனியில் சொன்னதற்காகவே படம் கொண்டாடப்பட்டது.

ராட்டின சினிமாக்கள்!

இன்ஷெப்சன்: இதுவும் நோலன் செஞ்சுரி போட்ட இன்னிங்க்ஸ்தான். சயின்ஸ் பிக்‌ஷனையும் ஹெய்ஸ்ட் ஜானரையும் கலந்துகட்டி புதியபாதை போட்ட படம். இந்த மனுஷன் எப்படி இதை எழுதியிருப்பார்? என முடியை கொத்தாகப் பிய்த்துக்கொள்ளுமளவிற்கு, கனவு, அதற்குள் ஒரு கனவு, அந்தக் கனவிற்குள் இன்னொரு கனவு என பார்ப்பவர்களை மூர்ச்சையாக வைக்கும் இந்தப் படம். திரும்பத் திரும்ப பார்த்தாலே ஒழிய இந்தப் படம் புரிய வாய்ப்பே இல்லை. இந்த வித்தியாச கான்செப்டிற்காகவே உலகம் முழுக்க ஹிட்டடித்து வசூல் மழை பொழிந்தது.

ராட்டின சினிமாக்கள்!

தி பிரெஸ்டிஜ்: ஹாலிவுட் பிரமாண்டம் க்றிஸ்டோபர் நோலனின் ‘நச்’ சினிமா. இதுவும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான். 19-ம் நூற்றாண்டில் வாழும் இரு மேஜிக் நிபுணர்களுக்குள் ‘நீயா நானா’ என்ற போட்டி எழுகிறது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஒருவருக்கொருவர் ஆப்படிக்க முயல்கிறார்கள். அதை அசத்தல் திரைக்கதையில் சிற்சில மேஜிக் டாப்பிங்குகள் தூவி நோலன் சொல்ல, ரசிகர்களுக்கு பச்சக்கெனப் பிடித்துப்போய்விட்டது. இதிலும் ஒரு சூப்பர் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் இருக்கிறது. அதற்குத் தனியாக கோடி லைக்ஸ்.

ராட்டின சினிமாக்கள்!

கான் கேர்ள்: பைட் கிளப்பில் வாங்கிய மேன் ஆஃப் தி மேட்ச் விருதை இந்தப் படத்திலும் தக்க வைத்துக்கொண்டார் டேவிட் பின்சர். நாவலை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ஹாலிவுட்டில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்ற குறையைப் போக்கியது. பென் அஃப்லெக், நீல் பாட்ரிக் ஹாரிஸ் எனப் பலர் திறமை காட்டினாலும், ஹம்ம்ம்ம்மா...! யாரு தாயீ நீ என மொத்தமாகப் புலம்ப வைத்தது ரோஸமண்ட் பைக் தான். கணிக்கவே முடியாத கதை என்பதால் தியேட்டர்களில் ஹவுஸ் புல் போர்டு எந்நேரமும் தொங்கியது. பின்சரின் படங்களில் அதிகம் வசூல் செய்தது இந்தப் படம்தான்.

- நித்திஷ்