
வந்தாச்சு மலர் டீச்சர் தங்கச்சி!

மலர் டீச்சர் தங்கச்சியும் இப்போ நடிக்க வந்தாச்சு. ‘காரா’ குறும்படத்தின் டீஸர் வெளியானதும் அதில் நடித்திருக்கும் சாய் பல்லவியின் தங்கை பூஜாவிற்கு வாழ்த்துகள் சொன்னோம்.
“இப்போதான் செகண்ட் இயர் ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். அக்கா மாதிரி டாக்டர் ஆகணும்ங்கிற ஆசையெல்லாம் இல்லை (என்னது! டாக்டரா? டீச்சர் இல்லியா?) மேற்படிப்பு முடிச்சுட்டு காலேஜ் புரொஃபஸரா வேலை பார்க்கணும். ‘சாய் பல்லவி காலேஜ் ப்ரொஃபஸரா நடிச்சாங்க. நீ உண்மையாவே காலேஜ் ப்ரொஃபஸரா’ன்னு ஃப்ரெண்ட்ஸ் என்னைக் கலாய்ப்பாங்க தெரியுமா?” - சிரிப்போடு பேச ஆரம்பிக்கிறார் பூஜா.
“சின்ன வயசுல இருந்தே நடிக்கிற ஆசை இருக்கா?”
“அக்காவும் நானும் சின்னவயசுல டான்ஸ் நல்லா ஆடுவோம். ஸ்கூல், காலேஜ் ஸ்டேஜ்ல எல்லாம் கலக்கியிருக்கோம். ஆனா ஆக்டிங்ல அவ்வளவா ஆர்வம் இருந்ததில்லை. எல்லோரையும் போல எனக்கும் சினிமா பார்க்கப் பிடிக்கும். அக்கா நடிக்க வந்ததால என்னையும் வந்து சினிமாவில் நடிக்கக் கேட்டாங்க. காலேஜ் படிச்சுக்கிட்டு இருக்கிறதால இவ்வளவு நாட்களா எல்லாத்தையும் தட்டிக்கழிச்சிட்டு இருந்தோம். இப்போ நடிக்க ஆரம்பிச்சாச்சு.”

“சாய் பல்லவிக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறாங்களே... அதைப்பற்றி?”
“நானும் அக்காவோட ஃபேன் தெரியுமா? நானும் அவளும் வீட்டுல ஒண்ணாதான் டான்ஸ் ஆடுவோம். அவளுக்கு க்ளாஸிகல் டான்ஸ்னா எனக்கு ஃபோக், வெஸ்டர்ன், குத்து டான்ஸ் நல்லாவரும். அதுக்காக, ‘ப்ரேமம்’ படத்துல வர்ற குத்து டான்ஸ்லாம் நான்தான் கத்துக் கொடுத்தேனானு கேட்கக் கூடாது. இன்னொரு விஷயம் தெரியுமா... நாங்க ரெண்டு பேருமே புரொஃபசனலா எங்கேயும் கத்துக்கலை. அவளுக்கு இருக்கிற ஃபேன்ஸ்னாலதான் நானே இப்போ நடிக்க வந்திருக்கேன்.”
‘’ ‘காரா’ ஷார்ட்ஃபிலிம் சான்ஸ் எப்படி...?”
“ ‘காரா’ ஷார்ட்ஃபிலிம் டைரக்டர் அஜித் எங்க வீட்டுக்கு வந்து கதை சொன்னார். நான் பண்ணினா நல்லா இருக்கும்னு கேட்டதால வீட்டில் எல்லோரும் ஓகே சொல்லிட்டாங்க. இப்போ ஷூட் முடிஞ்சு நியூ இயருக்கு ரிலீஸ் பண்றோம். நடிக்கும்போதுதான் கேமராவுக்கு முன்னாடி பெர்ஃபார்ம் பண்றது எவ்ளோ கஷ்டம்னு புரியுது. ஒவ்வொரு படத்தையும் பார்த்து நாம ஈஸியா கமென்ட் பண்ணிட்டுப் போய்டுறோம். ஆனா அதுக்குப் பின்னாடி நிறைய பேரோட உழைப்பு இருக்குனு இப்போதான் தெரியுது. இது ஒரு வித்தியாசமான அனுபவமா இருந்துச்சு.”
‘’ ‘காரா’வில் பைக்லாம் ஓட்டியிருக்கீங்க போல...”
“ஆமா... ஆர்.எக்ஸ் 100 பைக் ஓட்டியிருக்கேன். ஆக்சுவலா புல்லட் ஓட்டுற மாதிரி சீன் வெச்சிருந்தாங்க. என்னால ஓட்ட முடியாதுனு புல்லட்டைக் கயிறுகட்டி இழுத்துட்டுப் போகலாம்னு ப்ளான் பண்ணினாங்க. கார் ஓட்டுவேன்கிறதால இந்த பைக் வேணும்னா நானே ஓட்டுறேனேன்னு சொல்லி ஆர்.எக்ஸ் 100 ஓட்டப் பழகிட்டேன். இந்தப் படத்தில் நான் முரட்டுத்தனமான பொண்ணு. எல்லோர்கிட்டேயும் கோபப்படுற மாதிரியான கேரக்டர். ஒரு சூழல் என்னை எப்படி மாத்துதுங்கிறதுதான் கதை. நல்லா நடிச்சிருக்கேன்னு எல்லோரும் சொன்னாங்க. சந்தோஷமா இருக்கு. நல்ல வாய்ப்புகள் கிடைச்சா தொடர்ந்து நடிக்கிறதை நீங்க பார்க்க வேண்டியிருக்கும்” கலகலவென முடிக்கிறார் பூஜா!
- விக்கி