
குதிரையோடு விளையாடு!
பரத், கதிர் - தமிழ் சினிமாவில் பிரேக்குக்காகக் காத்திருக்கும் இளம் ஹீரோக்கள். குதிரைப் பந்தயத்தை மையமாக வைத்துள்ள கதைக்களத்தில் அதகளம் பண்ண இருப்பதாய் கேள்விப்பட்டேன். கூடவே ராதாரவியின் வித்தியாசமான தோற்றம், க்ளாஸ் லுக் விஷூவல்ஸ் எனப் பல சிறப்பம்சங்களை `என்னோடு விளையாடு' டிரெய்லரில் சுருக்கிக் காண்பித்திருக்கிறார், இயக்குநர் அருண் கிருஷ்ணசாமி. அவரைச் சந்தித்துப் பேசினேன்.

“சிவகாசி பக்கத்துல இருக்கிற வடமலாபுரம்ங்கிற கிராமம்தான் என் ஊர். பெங்களூருல கல்லூரிப் படிப்பை முடிச்சிட்டு இயக்குநர் பூபதி பாண்டியன்கிட்ட உதவியாளராகவும், சிம்புவோட ‘போடா போடி’ படத்துலயும் வொர்க் பண்ணேன். இது என்னோட முதல் படம்” என்று அறிமுகம் கொடுத்தவரிடம் சில கேள்விகள்.
“ ‘என்னோடு விளையாடு’ எந்த மாதிரியான படம்...?”
“முழுப் படமே ஆறு கேரக்டர்களைச் சுற்றிதான் நடக்கும். அவங்க ஒவ்வொருத்தரும் எப்படி இந்த குதிரைப் பந்தயத்திற்குள் வர்றாங்க என்பதுதான் திரைக்கதை. படத்தோட கடைசி இருபத்தி அஞ்சு நிமிடம், படம் பார்க்கிறவங்களோட கவனத்தைத் திசை திருப்பாது. அந்தளவுக்கு திரைக்கதைக்குள் ஒன்றிப்போகிற மாதிரி படத்தை எடுத்திருக்கோம்.”

“குதிரைப் பந்தயத்தைப் பற்றி படம் எடுக்கிறதுக்காக உங்க மெனக்கெடல் எப்படி இருந்தது?”
“குதிரைப் பந்தயம்னா, குதிரை ஓடும். அவ்வளவுதான்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனால் அதுக்குள்ள போய்ப் பார்த்தால் அவங்க சொல்ற எதுவுமே எனக்குப் புரியலை. குதிரைப் பந்தயத்திலே நிறைய வகை இருக்கு. எந்தெந்தக் குதிரை எத்தனையாவது இடத்திற்கு வரும், எந்தக் குதிரைகள் முதல் மூன்று இடத்திற்குள் வரும், எந்தக் குதிரை ரேஸ் அடிக்கும்னு இப்படி பெட்டிங்ல பல ரகங்கள் இருக்கு. 1000 ரூபாய் வச்சா 20000 ரூபாய் வரைக்கும் கிடைக்கிற அளவு பெட்டிங்ல நிறைய வகை இருக்கு. அதையெல்லாம் தெரிஞ்சுக்க நானும் பெட்டிங்ல இறங்குனேன். முதல் பெட்டிங்ல நான் வின் பண்ணேன். பரவாயில்லையே, பெட்டிங் ரொம்ப ஈசியா இருக்குதேன்னு நான் நினைக்கிறதுக்குள்ள எல்லா காசையும் தோத்துட்டேன். அப்போதான் குதிரை பெட்டிங் எப்படி ஒரு ஆளை இழுக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு அனிமலை ஜட்ஜ் பண்ணி அதுமேல பெட் பண்றதும் ஒரு கிக்கு தான்னு தெரிஞ்சுகிட்டேன். ஒரு பணக்காரனைப் பொறுத்தவரை பெட்டிங்ல வின் பண்ணணும்னு நினைக்கிறது அவனோட கௌரவம். மிடில் க்ளாஸ் ஆட்களைப் பொறுத்தவரை அது பணம் சம்பந்தப்பட்ட விஷயம். இப்படி தான் பெட்டிங் போயிட்டு இருக்கு. மைசூர்ல 21 வயசு பசங்க எல்லாரும் பெட்டிங்குக்குள்ள வந்துடுறாங்க. அது அவங்க ரத்தத்துலேயே கலந்திருக்கு. ஆனால், சென்னையில அப்படியில்லைனு வெளியில இருந்து பார்க்கிறவங்க நினைப்பாங்க. உள்ளப் போய்ப் பார்க்கும் போது அங்க சில தயாரிப்பாளர்களும் இருந்தாங்க. அவங்க யாரும் வெளியில வந்து நான் பெட்டிங் பண்றேன்னு சொல்றது இல்லை. அதுனால தான் வெளியில இருந்து பார்க்கிறவங்களுக்கு அப்படித் தெரியுது. குதிரைப் பந்தயத்தில் இருக்கிற எல்லாத்தையும் இந்தப் படத்திற்குள் கொண்டு வரலை. அப்படிக் கொண்டு வந்தா நம்ம ஊருல இந்தப் படம் ஒதுங்கிடும். ரேஸிங்கைப் பத்தி எதுவுமே தெரியாத ஆள் படத்தைப் பார்த்தாலும் அவனுக்குப் புரியுற மாதிரி எளிமையான விஷயங்களை படத்தின் ஆரம்பத்தில் இருந்து சொல்லிச் சொல்லி க்ளைமேக்ஸில் வேற ஒரு லெவல்ல படத்தைக் கொண்டு போயிருப்போம். அப்படிப் பார்க்கும் போது தான் பார்க்கிறவங்களுக்கு ரேஸிங் பத்தி தெரியலைன்னாலும் படம் புரியும்.”

“குதிரைப் பந்தயத்தை படமா எடுக்கிறதுல என்ன என்ன ரிஸ்க் இருந்துச்சு...?”
“விலங்குகளை வைத்துப் படம் எடுக்கும் போது பெர்மிஷன் வாங்குறது தான் பெரிய டாஸ்க். `விலங்குகளுக்குத் தேவையான எல்லா வசதிகளும் பண்ணி, ஆம்புலன்ஸ், டாக்டர்ஸ்னு எல்லாரையும் ஷூட்டிங் ஸ்பாட்லையே வெச்சுப்போம்'னு உறுதி கொடுத்து பெர்மிஷன் வாங்கினோம். அப்புறம் விலங்குகளை வைத்து படம் எடுக்குறது பயங்கர ரிஸ்க். நம்ம வெச்சிருக்க ஃப்ரேமுக்குள்ள குதிரை வராது, நம்ம நினைச்சு வெச்சிருக்குற குதிரை முதல்ல வராதுன்னு பல பிரச்னைகள் ஆரம்பத்தில் இருந்துச்சு. அதுக்கப்பறம் குதிரையை ஜட்ஜ் பண்ண ஆரம்பிச்சோம். ஒரு குதிரையைப் பார்த்தாலே அது எப்படி ஓடும், எவ்வளவு நேரத்தில் ரீச்சாகும்னு எல்லாத்தையும் ஜட்ஜ் பண்ணினோம். அந்த அனுபவத்தால தான், ‘ரேஸ்ல ஓடுற குதிரையை கணிக்கிறது மூளை சம்பந்தப்பட்ட வேலைங்கிறனாலதான் குதிரைப் பந்தயத்தை சட்டப்படி அனுமதிக்கிறாங்க’னு படத்தில் ஒரு வசனமே வெச்சேன். இந்தப் படத்தில் மற்றுமொரு பெரிய ரிஸ்கா தோணுனது ரேஸிங் சீனை ஷூட் பண்றதுதான். அதுக்காக ஒரிஜினலா ரேஸ் நடக்குற இடத்துக்கும் போய் ஷூட் பண்ணினோம். நாங்களா தனியா ரேஸ் வச்சும் ஷூட் பண்ணினோம். மொத்தமா படத்தைப் பார்க்கும் போது எங்களுக்கே ரொம்பப் புதுசா தெரியுது.”

“படத்துல இரண்டு ஹீரோ, இரண்டு ஹீரோயின்... கூடவே ஒரு எலியும் நடிச்சிருக்காமே..?''
“பரத்துக்கு ஜோடியா சாந்தினி நடிச்சிருக்காங்க. அவங்களோட கேரக்டர் மியூசிக் டீச்சர். லேட் நைட்ல தான் ஒர்க் முடிச்சுட்டு வீட்டுக்கு வருவாங்க. அப்படி ஒரு நாள் நைட்ல தான் பரத்தும் அவங்களும் மீட் பண்ணுவாங்க. கதிர் ஐ.டியில வேலை பார்க்கிற பையன். அவருக்கு ஜோடியா சஞ்சிதா ஷெட்டி நடிச்சிருக்காங்க. அவங்களும் ஐ.டியில ஒர்க் பண்ற ஆள்தான். இரண்டு பேரும் ஒரே வீட்டில தங்குற மாதிரி சூழ்நிலை வரும், அதனால ஒண்ணா தான் தங்கியிருப்பாங்க. அவங்களுக்குள்ள அடிக்கடி சண்டை வரும். அதனால, கதிர் அந்த வீட்டை காலி பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணும்போது ரொம்ப நாளா அந்த வீட்டிற்குள் இருந்த எலி, கதிருக்கு எதிரா ஒரு சேட்டை பண்ணிடும். அதோட விளைவா கதிரும் சஞ்சிதாவும் லவ் பண்ணிடுவாங்க. தமிழ் சினிமாவுல எலியால சேர்ந்த காதல் இதுவாகத்தான் இருக்கும். படத்தில் அந்த எலிக் காட்சிகள் எதுவுமே க்ராஃபிக்ஸ் கிடையாது. எல்லாமே ஒரிஜினல் தான். அந்த சஸ்பென்ஸ் எல்லாத்தையும் படத்துல பார்த்து தெரிஞ்சுக்கோங்க பாஸ்.”
“படத்தோட ப்ளஸ்ஸா நீங்க நினைக்கிறது...?”
“வேகமான திரைக்கதை. படத்தோட கடைசி இருபத்தி ஐந்து நிமிடங்கள். படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் நடிகர்கள். குறிப்பா, பரத்தோட நடிப்பு. பரத்தோட முந்தைய படங்களோட சாயல் சுத்தமா இந்தப் படத்துல இருக்காது. அப்புறம் கதிர், கதையோட ஒத்துப்போகிற மாதிரியான கதாபாத்திரம். ரொம்ப நல்லா நடிச்சிருக்கார். இரண்டு ஹீரோயினும் படம் முழுக்க அழகா இருப்பாங்க.”
“அடுத்து..?”
“500, 1000 ரூபாயை செல்லாதுன்னு மோடி அறிவித்த அந்த நிமிடம் அதை வெச்சு ஒரு ஒன் லைன் பிடிச்சேன். ‘என்னோடு விளையாடு’ படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் அந்த ஒன் லைனை டெவலப் பண்ணுவேன். என்னோட அடுத்த படம் பணத்தால் இப்போ மக்கள் சந்திக்கிற பிரச்னைகளை மையப்படுத்திதான் இருக்கும்.”
- மா.பாண்டியராஜன்