
“மிஷ்கினோடு சண்டை போடுவேன்!”
“ஒரு நாள் பெரிய வயித்தோட, காலில் செருப்புகூட இல்லாம ரோட்டுல நடந்தேன். எல்லோருமே கர்ப்பிணிப் பொண்ணுனு பாவமா பார்த்துட்டே போனாங்க. யாருக்குமே அது பூர்ணானு தெரியலை. உண்மைய சொல்லணும்னா, எனக்கே தெரியலை. தெருவுல ஒருத்தர் வெயில்ல செருப்புகூடப் போடாம இப்படி நடந்துபோறீங்களேனு கேட்கவும் எனக்கு ஃபீல் ஆகிடுச்சு. இதுதான் `சவரக்கத்தி' படத்துக்காக முதலில் எனக்கு கொடுக்கப்பட்ட பயிற்சி!'' உற்சாகமாகப் பேசுகிறார் பூர்ணா. நீண்ட நாள் கழித்து மீண்டும் தமிழ் சினிமா என்ட்ரி. மிஷ்கின் எழுத்தில், அவருடைய தம்பி ஆதித்யா இயக்கும் `சவரக்கத்தி' படத்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்திருக்கிறார்.

`` `சவரக்கத்தி' எப்படி கமிட் ஆனீங்க?"
இந்தப் படத்துல நான் நடிச்சது என்னோட லக். `ரெண்டு பசங்களுக்கு அம்மா, காதுகேட்காத கர்ப்பிணி கேரக்டரில் நடிப்பீங்களா'னு மிஷ்கின் சார் ஆபீஸ்ல இருந்து அழைப்பு வந்தது. மிஷ்கின் சார் படத்துல கவனிக்கப்படாத கதாபாத்திரம்னு எதுவுமே இருக்காது. 10 பேர் நடிச்சாலும் எல்லாருக்குமே முக்கியத்துவம் இருக்கும். கதை கேட்காம நடிக்க `ஓகே' சொல்லிட்டேன். படம் ஷூட்டிங் போன சில நாட்களில் `நல்ல வேளை வேறு எந்த ஹீரோயினும் இந்த ரோலில் நடிக்கலை'னு மிஷ்கின் சார் சொன்னதை இப்பவும் மறக்கமுடியாது. படப்பிடிப்புக்கு முன்னாடி ஆறு நாள் பயிற்சி கொடுத்தாங்க. தமிழ்னாலும் எந்த ஸ்லாங்குல பேசணும், குழந்தை உண்டாகியிருக்குறவங்க எப்படி நடப்பாங்கன்னு முழுக்க சொல்லிக்கொடுத்தாங்க. அதுக்காக கிராமத்து கர்ப்பிணிப் பெண்களோட போட்டோஸைப் பெரிய பலகை முழுக்க ஒட்டிவெச்சிருந்தாங்க. அதைப் பார்த்து தான் காஜல் எப்படிப் போடுவாங்க என்பதில் தொடங்கி உடல்மொழிவரைக்கும் கத்துக்கிட்டேன். கத்தியை நாம வாழ்கையில் எதுக்குப் பயன்படுத்துறோம்னு இந்தப் படம் அழகாச் சொல்லும். ஒரே நாளில் நடக்குற கதை. படத்தைப் பார்த்து ஆடியன்ஸ் சிரிக்கிறாங்கன்னா அதுக்கு காரணம் சுபத்ரா தான். என்ன யோசிக்கிறீங்க, என் கேரக்டர்தான் சுபத்ரா!''
``மிஷ்கின், ராம்னு ரெண்டு இயக்குநர்களோட சேர்ந்து நடிச்சது எப்படி இருந்தது?''
``மிஷ்கின் சாரைப் பத்திச் சொல்லணும்னா, ஒருவார டைம்பாஸ் மட்டும் பத்தாது, அடுத்த வாரம் வரைக்கும் எழுதவேண்டியிருக்கும். பயத்தைத் தூக்கி எறியவெச்சு, எனக்கான திறமையை வெளிக்கொண்டுவந்தவர்். என்ன யாராவது திட்டுனாலே அழுதுடுவேன். ஆனா மிஷ்கின் சார் அதிகமா திட்டுவார். ஆனா திட்டுறார்னு தெரியாது. அவரிடம் திட்டுவாங்கணும்னே சிலநேரம் வேணும்னே சேட்டை பண்ணுவேன். சுபத்ரா கதாபாத்திரம் ரியல் லைஃப்ல மிஷ்கின் சாரோட அம்மா கதாபாத்திரம். அவரோட அம்மா மாதிரியே இருக்கேன்னு சொல்வார். ஷூட்டிங்ல உன்னைப் பார்க்கும்போதெல்லாம் என் அம்மா ஞாபகம் வருதுன்னு அடிக்கடி சொல்வார். இரண்டு இயக்குநர்களோட நடிக்கிறோம்னு நிறைய பதற்றம் இருக்கும். முழுப் படமும், ராம் சாரோட நடிக்கணும், எப்படிப் பண்ணப்போறோம்னு நிறைய யோசனை இருந்துச்சு. ஆனா ராம் சார் லெஜண்ட். ரெண்டுபேருமே எனக்குப் பயிற்சிப்பட்டறை மாதிரிதான். அவங்க கூட நடிச்சு முடிச்சதும் முழுமையா நடிப்பு கத்துக்கிட்ட உணர்வுதான் இப்போ இருக்கு.''
``நடிப்பதில் இருந்த சவால்?''
``முழு ஸ்கிரிப்டையும், டயலாக்கையும் ஷூட்டிங்க்கு முன்னாடியே தயார் பண்ணிட்டேன். இயக்குநர் ஆதித்யாகிட்ட நான் வெச்ச ஒரு வேண்டுகோள், ` நீங்களே டயலாக் சொல்லிக்கொடுங்க, இரண்டு நாள் கழிச்சி மிஷ்கின் சார் வரட்டுமே'னு சொன்னேன். அதுக்கும் மிஷ்கின் சார் சம்மதிச்சார். ரூமுக்குள்ள டயலாக் சொல்லிக்கொடுத்துட்டு இருக்கும் போது, வெளிய இருந்து மிஷ்கின் சாரோட குரல் மட்டும் கேட்கும். டயலாக் டெலிவரி சரியா வரலை, இன்னும் பயிற்சி தேவைன்னு. அப்புறம் ஆறு நாள் கழிச்சிதான் மிஷ்கின் முன்னாடி நடிச்சிக் காட்டுனேன். அதுமட்டுமில்லாம முதல்ல நான் டப்பிங் பேசுறதா இல்லை. வேற டப்பிங் ஆர்ட்டிஸ்டு தான் பேசுனாங்க. ஆனா செட்டாகலைன்னு டப்பிங்கிலும் மிஷ்கினின் கடைசி சாய்ஸ் நான்தான். முதல் நாள் டப்பிங்கும் சொதப்பி வெச்சிட்டேன். `நீங்க வீட்டுக்குப் போய்ட்டு நாளைக்கு வாங்க'னு அனுப்பிட்டார். அடுத்த நாள் சமத்துப் பொண்ணா டப்பிங் பண்ணேன். `இந்தப் படம் ஹிட்டோ இல்லையோ நிச்சயம் உனக்காக பார்ட்-2 கண்டிப்பா எடுப்பேன்'னு சொல்லியிருக்கார். என்னை சேர்த்துக்கலைன்னா நேரா போய் சண்டைபோடுவேன். ஷூட்டிங் நடத்த விடமாட்டேன்.''

``மேடையில் அழுவது இப்போ ட்ரெண்டாகிடுச்சு போல, நீங்களும் அழுதீங்களே?''
`` `சவரக்கத்தி' ஆடியோ வெளியீட்டில்தான் முதன்முறையா எங்க அம்மா டீஸர் பார்த்ததும் அழ ஆரம்பிச்சிட்டாங்க. எங்க வீட்டுல இப்பவும் நான் குழந்தைதான். ஆனா நானே குழந்தைக்குத் தாயா நடிச்சது ரொம்ப உணர்வுப்பூர்வமா இருந்தது. ஒரு பொண்ணுக்குத் திருமணம் முடிந்து, புகுந்த வீட்டுக்குப் போகும் போதும் சரி, தாலி கட்டும் அந்தத் தருணத்திலும் சரி... நிறைய பொண்ணுங்க அழுறாங்கன்னா, அதுக்கு காரணம் அவங்களுக்கான சந்தோஷம்தான். எனக்குக் கிடைத்த சந்தோஷம் இந்த சவரக்கத்தி.''
``பொதுவா நாயகிகளுக்கு, அம்மாதான் சப்போர்ட். உங்க வீட்டுல எப்படி?''
``சின்ன வயசுல இருந்தே டான்ஸ் கத்துக்கிட்டேன். இந்த டான்ஸ் தான் என்னை சினிமாவுக்குள்ள கொண்டுவந்துச்சு. நான் நல்லா டான்ஸ் ஆடுவேன், நடிப்பேன்னு கண்டுபிடிச்சது எங்க அம்மாதான். அவங்க இல்லாம நான் இல்லை. இந்தப் படம் முடிஞ்ச கையோட அம்மாட்ட நான் கடைசியா கேட்டது, `அம்மா எனக்குப் பாப்பா வேணும்'. நான் சினிமாவை விட்டுப்போனாலும், எனக்குக் குழந்தைங்க பிறந்தாலும், மறக்கமுடியாத பொக்கிஷமா `சவரக்கத்தி' இருக்கும்னு நான் நம்புறேன்.''
``தமிழைவிட தெலுங்கு, மலையாளத்தில் நிறைய நடிச்சிட்டீங்களே?''
``ஆரம்பத்தில் தமிழில்தான் நிறைய படங்கள் நடிக்க ஆரம்பிச்சேன். நல்ல படமா இருந்தாலும், ஹிட் ஆகலைன்னா நிச்சயம் நமக்கான ரீச் இருக்காது. தமிழில் கிடைக்காத லக், தெலுங்கில் கிடைச்சது. தமிழில் நிறைய படங்கள் பண்ணணும்னு ஆசை கிடையாது. ஆனா நல்ல படங்கள் நடிக்கணும். பசங்களுக்கு அம்மாவா நடிச்சிட்டா, இனி எல்லா பட வாய்ப்பும் அப்படித்தான் வரும்னு நிறைய பேர் சொன்னாங்க. அதுக்கென்ன? நான் நடிக்க பயப்படமாட்டேன். `மணல்கயிறு-2', `சதுரங்கவேட்டை-2'னு அடுத்தடுத்து தமிழ்ல நடிச்சுக்கிட்டு இருக்கேன். இனி, சினிமாவில் பூர்ணாவை வேற லெவல்ல பார்ப்பீங்க!''
- முத்து பகவத்