
சினிமால்

தன் படத்தில் நடிக்கும் எந்த ஹீரோவையும் ஹீரோயினையும் பெரிதாகப் புகழவோ, பாராட்டவோ மாட்டார் கே.வி.ஆனந்த். முதல் முறையாக ‘கவண்’ படத்தில் நடித்து வரும் மடோன்னா செபாஸ்டினைப் புகழ்ந்து தள்ளுகிறாராம். வெளியிலும் பல இடங்களில் மடோனாவின் நடிப்பைப் பற்றி சிலாகித்துப் பேசுகிறாராம். `இவரா இப்படி?' எனப் பலரும் ஆச்சர்யத்தில் உறைந்து போயிருக்கிறார்கள். மாற்றம் ஒன்றுதான் மாறாதது!
• மோகன்லால் நடித்த படங்களை தமிழ் உட்பட இந்திய மொழிகளில் ரீமேக் செய்ய நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். சமீபத்தில் அவர் நடித்த `ஒப்பம்', `புலிமுருகன்' படங்களை ரீமேக் செய்யாமல் டப் செய்து தமிழ், தெலுங்கில் வெளியிட ஆர்வம் காட்டுகிறாராம் மோகன்லால். தமிழ், தெலுங்கு தனக்குப் பரிச்சயம் என்பதாலும், தனது குரலும் எல்லோருக்கும் பரிச்சயம் என்பதாலும், அவரே டப்பிங் பேசவும் முடிவெடுத்துள்ளாராம். தமிழ் ஹீரோக்கள் கவனிக்க!
• `யாமிருக்க பயமே', `கவலை வேண்டாம்' படங்களை இயக்கிய டி.கே, டாப் டிரெண்டில் இருக்கும் நயன்தாராவை அணுகி நாயகியை மையப்படுத்திய கதை ஒன்றைச் சொல்லி அசத்திவிட்டாராம். நயன்தாரா ஓகே சொன்னதால், முழு வீச்சில் பட வேலைகளில் இறங்கிவிட்டாராம். மாயா மாயா, எல்லாம் சாயா!

• சூர்யா நடித்தால்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும் எனச் சொல்லி, ஒதுக்கி வைத்த ‘துருவ நட்சத்திரம்’ கதையை விக்ரமிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டார் கௌதம் மேனன். ஆங்கிலப் பட பாணியில், முழுக்க அமெரிக்காவில் நடக்கும் இந்தப் படத்துக்காக தொடர்ந்து 60 நாட்கள் கால்ஷீட் கேட்டிருக்கிறார் கௌதம். `அது முடியாது' என விக்ரம் சொன்னதால் விக்ரமின் அடுத்த படம் முடிந்தவுடன், `துருவ நட்சத்திர'த்தை ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிறாராம். பிரேக் கிடைக்குமா?
• முன்பொரு காலத்தில் பாலிவுட்டில் இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் விவேக் ஓபராய். தற்போது மார்க்கெட் இல்லாமல் அஜித் படத்தில் வில்லனாக நடிக்கும் லெவலுக்கு இறங்கிவிட்டார். அதோடு ஒரு மராத்திப் படத்திலும் நடிக்க இருக்கிறாராம். ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் ஒரு மராத்தி இயக்குநர் சொன்ன கதையைக் கேட்கச் சொல்லி விவேக்கிடம் பரிந்துரை செய்திருக்கிறார். கதையைக் கேட்டவருக்கு பிடித்துப்போனதோடு, மராத்தியில் நடிக்கும் ஆசையும் வர, `டபுள் ஓகே' சொல்லிட்டாராம். வேற வழி!
• `கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற படத்தில் விஷாலும், கார்த்தியும் நடிக்க இருக்கிறார்கள். பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் சங்கத்துக்காக நடிக்க இருந்த அந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை எழுதியவர் மறைந்த இயக்குநர் சுபாஷ். `அவர் திரைக்கதையில் நடிப்பது எங்கள் பாக்கியம். சுபாஷுக்கு நாங்கள் செய்யும் மரியாதை இந்தப் படம்!' எனச் சொல்லும் விஷால், `நடிகர் சங்கத்துக்காக நானே தயாரிக்கிறேன்' எனவும் கூறியிருக்கிறாராம்.
• பல பிரச்னைகளில் இருந்து மீண்டு, அமைதியாக அடுத்தடுத்த திட்டங்களை அணுகிவருகிறார் லிங்குசாமி. கடனில் இருந்தாலும் தனக்குப் பணம் தர வேண்டியவர்களைத் தொந்தரவு செய்யாமல், அடுத்த படத்துக்குத் தீவிரமாக உழைத்து வருகிறார். அவர் நல்ல மனதுக்காகவே தயாரிப்பாளர் அசோக் சாம்ராஜ் `சண்டக்கோழி 2' படத்தைத் தயாரிக்க முன்வந்திருக்கிறாராம். விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் நடிக்க ஜனவரியில் துவங்கும் இந்தப் படத்தில், யுவன் ஷங்கர் ராஜாவுடன் மீண்டும் கைகோத்துள்ளார் லிங்குசாமி. இனி எல்லாம் சுபமே!

• `சதுரங்க வேட்டை-2'-ல் த்ரிஷாவுடன் நடித்து வருகிறார் அரவிந்த்சாமி. இதில் த்ரிஷா அவருக்கு ஜோடி கிடையாதாம். இருவரும் எதிரும் புதிருமாக முட்டி, மோதிக்கொள்ளும் கேரக்டர்களாம். படத்தில் அரவிந்த்சாமி மனைவியாக நடிக்கும் இன்னொரு நாயகியும் இருக்கிறாராம். பல நாயகிகளைப் பரிசீலித்துப் பார்த்து, கடைசியாக அந்த ரோலில் நடிக்க பூர்ணாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். நடிக்க வாய்ப்பு இருக்குமா?!
• `முண்டாசுப்பட்டி' ராம் இயக்கும் அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் முதல் முறையாகப் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சைக்கோ கொலைகாரனையும், அவனைத் துரத்திப் பிடிக்கும் போலீஸ் அதிகாரியையும் மையப்படுத்திய கதையாம். நாயகிக்கு கனமான கதாபாத்திரம் என்பதால், அமலா பாலை ஒப்பந்தம் செய்திருக்கிறார் ராம். விஷ்ணு படத்துக்கு ஜிப்ரானை முதல் முறையாக இசையமைக்கவும் வைத்திருக்கிறார். எல்லாமே முதல்!
• ‘பிட்டு படம்டி’ பாடல் பிரபலம் என்பதால் சினிமா வட்டாரங்களில் பிட்டுப் பட ஹீரோ என்றே ஜி.வி.பிரகாஷுக்கு அடைமொழி சேர்ந்துவிட்டதாம். இதைக் கேள்விப்பட்டு ஷாக் ஆன ஜி.வி.பி, `எப்படியாவது அந்தப் பெயரை மாற்றணும்' என முயன்றுவருகிறாராம். இனி நடிக்கும் படங்களில் கவனம் செலுத்தப்போகிறாராம். வாங்க பாஸ்!

• இயக்குநர்கள் மிஷ்கின், ராம் நடித்த `சவரக்கத்தி' படத்தை இயக்கிய ஜி.ஆர்.ஆதித்யா அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். முழுக்க நாயகியை மையப்படுத்திய படமாக உருவாகும் அந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ராதிகா ஆப்தேவை அணுகினார். அவரும் கதையைக் கேட்டுவிட்டு பிடித்துப்போனதால் மகிழ்ச்சியோடு நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டாராம். `சவரக்கத்தி' படத்தின் சில காட்சிகளை அவருக்குப் போட்டுக் காட்டி இம்ப்ரெஸ் செய்திருக்கிறார் ஆதித்யா. செம!
• `சிங்கம் 3' ரிலீஸ் ஆவதற்கு முன்பே டைரக்டர் ஹரிக்கு ஒரு பெரும் தொகையை அட்வான்ஸாகக் கொடுத்து புக் பண்ணி இருக்கிறது தமிழின் முன்னணி நிறுவனம் ஒன்று. `விஜய்யாக இருந்தாலும் சரி, சூர்யாவாக இருந்தாலும் சரி... ஹீரோ உங்கள் விருப்பம்!' என்றவர்கள், `பிரமாண்டமான படமாக இருக்கவேண்டும்!' என்றிருக்கிறார்களாம். ஃபாஸ்ட் ஃபார்வர்டு படமா இருக்கும்!