
“ஜாங்கிரிக்கு நன்றி!”
தேன்ன்ன்ன்ன் அடையாக வெள்ளித்திரைக்கு அறிமுகமான மதுமிதா, முன்னணி ஹீரோக்களின் படங்களில் கலக்குவதைப் பார்த்து கொஸ்டீன் கொக்கிகள் போட்டோம்!

``எப்படிப் போகுது சினிமா வாழ்க்கை?''
``விஜய்கூட `ஜில்லா', `புலி', கார்த்திகூட `காஷ்மோரா'ன்னு பெரிய ஆக்டர்ஸ்கூட எல்லாம் நடிச்சதை நினைச்சா சந்தோஷமா இருக்கு. நல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் கொஞ்சம் இடைவெளிக்கு அப்புறம் தொடர்ந்து நடிச்சிட்டு இருக்கேன். இப்போ `கொஞ்சம் கொஞ்சம்'னு ஒரு படம் பண்ணியிருக்கேன். அதுல அப்புக்குட்டிக்கு ஜோடி நான்தான். காமெடி மட்டுமில்லாம அந்தப் படத்தில் அழுதிருக்கேன். அழுதுக்கிட்டே டயலாக் பேசியிருக்கேன், டான்ஸ் ஆடியிருக்கேன். இதுவரைக்கும் பார்க்காத ஒரு மதுமிதாவை அந்தப் படத்துல நீங்க பார்க்கலாம்.''
``சின்னத்திரை டூ சினிமா எப்படி இருக்கு?''
``சீரியல், டி.வி. ஷோக்களில் நடிச்சா அது டெலிகாஸ்ட் ஆகும்போது அதைப் பார்க்கிற மக்கள், `ஹே... இந்தப் பொண்ணுதானே அது...'னு நம்மைப் பார்ப்பாங்க. சின்னத்திரையை விட்டு விலகிப்போய்ட்டா நம்மை யாருக்கும் அடையாளம் தெரியாது. அதுவே சினிமாவில் நடிக்கும்போதோ, அந்தப் படத்தை எத்தனை வருஷம் கழிச்சு டி.வி.யில் போடும்போதும் நம்மைப் புதுசாப் பார்க்கிற மாதிரிதான் இருக்கும். அதனால் சினிமாதான் எனக்கு பெஸ்ட்!''
``காமெடி கேரக்டர்ல பெண்கள் வர்றது குறைஞ்சிடுச்சே..?''
``தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இங்கே எத்தனை ஆண் நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆனா, பெண்கள் நகைச்சுவை நடிகைகளா வளர்றதுக்குப் பல காலம் ஆகும். ஸ்க்ரிப்ட்லேயே பெண் நகைச்சுவை வேடங்களை அவாய்ட் பண்ணிடறாங்க. ஹீரோக்கள் ஃபிக்ஸ் பண்ணும்போது படத்தில் எந்த காமெடியனைப் போடலாம்னு டிஸ்கஸ் பண்ணுவாங்க. ஹீரோக்களும் ஃபீமேல் காமெடியன்ஸ் ரோலுக்கு எங்களைச் சொன்னா நல்லாருக்கும்.''

``ரொம்ப ரொம்பச் சந்தோஷமா நினைக்கிற விஷயம்..?''
``இந்தக் காலகட்டத்தில் பெயர் சொல்ற அளவுக்கு ஓர் ஆளா இந்தப் புகழ்மிக்க தமிழ் சினிமாவில் இருக்கிறதையே ரொம்ப சந்தோஷமா நினைக்கிறேன். மனோரமா ஆச்சி, கோவை சரளா அம்மாவுக்குப் பிறகு ஸ்ட்ராங்கா வேற பெண்கள் யாரும் இப்போ நகைச்சுவையில் வரலைங்கிறதால நான் ஸ்பெஷல். `ஓகே ஓகே' ல நான் நடிச்சப்போ என்னையெல்லாம் அடையாளம் கண்டுபிடிப்பாங்கனு நினைச்சே பார்க்கலை. ஆனா, அந்த ஜாங்கிரி கேரக்டர்தான் எனக்கு ஒரு ப்ளாட்ஃபார்ம் அமைச்சுக் கொடுத்துச்சு. அதை வெச்சுதான் எனக்கே ஒரு அடையாளம் கிடைச்சுது. இப்போ என்னை `ஜாங்கிரி மதுமிதா'ன்னு சொன்னாதான் பல பேருக்குத் தெரியுது. முதல் படமே சிறப்பா அமைஞ்சதுல ஐ யம் ஹேப்பி!''
``காமெடியில் உங்களுக்கு பெஸ்ட் ஜோடியா யாரைச் சொல்வீங்க?''
``நான் குறைஞ்ச காலத்திலேயே நிறையப்பேர்கூட இணைஞ்சு காமெடி ரோல் பண்ணிட்டேன். சந்தானம் சார் இப்போ ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சிட்டார். இதுவரைக்கும் மூணு படம் சூரிகூட சேர்ந்து பண்ணினதால அவரையே செலக்ட்டா வெச்சுக்கலாமே.''

``உங்களுக்குக் கிடைத்த அதிகபட்ச அங்கீகாரம்?''
``டி.வி-யில் நடிச்ச காலத்திலிருந்து என்னோட நடிப்பை நல்லாயிருக்குனு நிறையப் பேர் பாராட்டியிருக்காங்க. ஆனா, முதன்முதலில் சிவப்புக்கம்பள மரியாதை கொடுத்தது ஆனந்த விகடன் விருது. அதுவும் நான் நடிச்ச முதல் படத்திற்காகவே கிடைச்ச அவார்ட்ங்கிறதால இன்னும் ஸ்பெஷல். அதற்கு அடுத்த வருஷமும் விகடன் பெஸ்ட் ஃபீமேல் காமெடியன் அவார்டு `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்திற்காகக் கிடைச்சுது.''
``சினிமாவில் இன்னும் எந்த ஸ்டேஜ் வரையும் போகணும்னு நினைக்கிறீங்க?''
``எல்லோரையும் என்டர்டெயின் பண்ற மாதிரி நிறைய நல்ல படங்கள்ல நடிக்கணும். `சதிலீலாவதி' மாதிரியான ஒரு காமெடி கலந்த ஹீரோயின் ரோல்ல நடிக்கணும்ங்கிறதுதான் வாழ்நாள் லட்சியம்னு வெச்சுக்கலாம். அப்புறம் `ஜாங்கிரி' மதுமிதாவா தெரியுற என்னை மதுமிதான்னு சொன்னாலே எல்லோருக்கும் தெரியற அளவுக்கு வளரணும். அவ்ளோதான்.''
- விக்கி, படங்கள்: டி.அசோக்குமார்