
டோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்! - ஹாலிவுட்

கிராஃபிக்ஸில் கலக்குவதாகட்டும், திரைக்கதையில் மிரட்டுவதாகட்டும் ஹாலிவுட்டுக்கு நிகர் ஹாலிவுட்தான். அப்படி சகல ஏரியாக்களிலும் சிக்ஸ் அடித்த இந்த ஆண்டின் மிஸ் பண்ணக் கூடாத ஹாலிவுட் படங்களின் பட்டியல்தான் இது...
Green Room
ஹாலிவுட் புகுந்து விளையாடும் ஹாரர் ஜானர் சினிமா. போதை, இசை, பயணம் என வாழ்க்கையை ஜாலியாகக் கழிக்கும் இசைக்குழு ஒன்று ஒரு கிளப்பிற்குச் செல்கிறது. அங்கே எதிர்பாராதவிதமாக ஒரு கொலை நடக்க, அதன்பின் நடக்கும் பரபர சம்பவங்கள்தான் கதை. மேக்கிங், ஒளிப்பதிவு என டெக்னிக்கலாக மிரட்டியதால் படம் விமர்சகர்களின் ஏகபோக ஆதரவைப் பெற்றது. கேன்ஸில் திரையிடப்பட்ட ஓர் ஆண்டிற்குப் பின் அமெரிக்காவில் திரையிடப்பட்டாலும் காத்திருந்து, படம் பார்த்துக்கொண்டாடினார்கள் ரசிகர்கள்.
Captain America: Civil War

மார்வெல் காமிக்ஸின் மற்றுமொரு கலர்ஃபுல் பிரமாண்டம். வழக்கமாய் வில்லன்களோடு மோதும் சூப்பர் ஹீரோக்கள் இதில் தங்களுக்குள் மோதிக்கொண்டார்கள். அவெஞ்சர்களோடு ஸ்பைடர்மேன், ஆன்ட் மேன், பிளாக் பேந்தர் போன்ற கேரக்டர்களும் சேர்ந்துகொள்ள ரசிகர்களுக்கு இரட்டைத் தீபாவளி. முந்தையப் படங்களிலிருந்து வித்தியாசப்பட வேண்டும் என மெனக்கெட்ட படக்குழுவிற்கு வெற்றி கிடைத்தது. பட்டி தொட்டி எல்லாம் பம்பர் ஹிட்!
Queen of Katwe

`சலாம் பாம்பே', `காமசூத்ரா' போன்ற படங்களை இயக்கிய மீரா நாயரின் லேட்டஸ்ட் படைப்பு. உகாண்டாவின் சேரிப் பகுதியில் வாழும் ஒரு சிறுமி செஸ் விளையாட்டில் மாஸ்டரான உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். சுருங்கச்சொன்னால் அந்த ஊர் `இறுதிச்சுற்று'. ஆஸ்கார் விருதை அசால்ட்டாக வென்ற லுபிட்டா யோங்கோவின் மெர்சல் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. ஒரு இன்ஸ்பிரேஷனல் மூவி பார்க்க விரும்புவர்களுக்கு இந்தப் படம் பெஸ்ட் சாய்ஸ்.
Star Trek Beyond

Star Trek - கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக ஹாலிவுட் இந்தப் படத்தை மாற்றி மாற்றி எடுத்துக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் சலிக்காமல் பார்த்து ஹிட்டடிக்க வைக்கிறார்கள் ரசிகர்கள். ரிலீஸுக்குக் கொஞ்சம் முன்னால் படத்தில் நடித்த ஆன்டன் யெல்சின் ஒரு விபத்திலும் சீனியர் நடிகரான லியோனார்ட் நிமோய் நுரையீரல் கோளாறாலும் இறந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே கோடிக்கணக்கான ரசிகர்கள் தியேட்டருக்கு வந்தனர்.
Pete's Dragon

இந்த ஆண்டு வெளியான ஹாலிவுட் ஃபேன்டஸி படங்களில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அதிகம் பேசப்பட்ட படம். 1977-ல் இதே பெயரில் வெளியான படத்தின் ரீமேக் இது. ஐந்து வயது பீட் தன் பெற்றோர்களோடு செல்லும்போது ஒரு விபத்தில் சிக்குகிறான். அதில் அவன் பெற்றோர்கள் இறந்துவிட காட்டிலிருக்கும் டிராகன் அவனை வளர்க்கிறது. இவர்களை வெளியாட்கள் பார்த்துவிட அதன்பின் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. கிட்டத்தட்ட ஜங்கிள்புக் டைப் கதைதான் என்றாலும் கிராஃபிக்ஸ் சங்கதிகள் எல்லாம் பக்கா.
Don't Breathe

த்ரில்லரில் இது வேற லெவல் சினிமா. கண் தெரியாத வயதானவர் வீட்டில் திருடச் செல்கிறார்கள் மூன்று இளைஞர்கள். பாவம் அந்தக் கிழவர் என நாம் நினைத்தால்... அங்கேதான் ட்விஸ்ட். ஆழம் தெரியாமல் காலை விட்டது இந்த மூன்று பேரும்தான். ஒரே ஒரு வீடு. அதில்தான் மொத்தக் கதையும். ஆனால் சீட் நுனியிலேயே நம்மை ஒட்டிவைத்தது திரைக்கதை. படக் படக்கென ஹார்ட்பீட்டை உணரச்செய்யும் இந்த சினிமாவை ரீமேக் செய்ய தமிழ் உள்பட பல மொழிகளிலும் முட்டி மோதுகிறார்கள்.
Sully

நடிப்பு ராட்சஷன் டாம் ஹாங்க்ஸ் அசத்திய படம். 2009-ல் அமெரிக்க விமானம் ஒன்று கிளம்பிய கொஞ்சநேரத்திலேயே இயந்திரக் கோளாறுகளுக்கு உள்ளானது. பயணிகளைக் காப்பாற்ற அருகிலிருந்த ஆற்றில் விமானத்தைத் தரையிறக்கினார் அதன் பைலட். அவர் ஆற்றில் இறக்கியது தவறு என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்தார் அந்த பைலட். இந்த நிஜ சம்பவத்தைத்தான் திரையில் உயிர்ப்போடு கொண்டு வந்திருந்தார்கள் படக்குழுவினர்.
Arrival

இந்த ஆண்டு வெளியான சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களில் இதுதான் பெஸ்ட் என பெட் கட்டுகிறார்கள் விமர்சகர்கள். 12 ஏலியன் விண்கலங்கள் உலகம் முழுக்க தரையிறங்குகின்றன. அவற்றோடு தொடர்புகொள்ள நியமிக்கப்படுகிறார் ஹீரோயின். அவர்களுக்குள் நடக்கும் தகவல் பரிமாற்றங்களும் அதன் விளைவுகளும்தான் கதை. ஏலியன்கள் என்றாலே இப்படித்தான் என்பதை உடைத்து வேறு விதமாக யோசித்ததற்கு பொக்கே கொடுத்து பாராட்டினார்கள் ரசிகர்கள்.
Doctor Strange

மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோ படம். மிஸ்டிக்கல் ஃபேன்டஸி என இதுவரை அதிகம் தொடப்படாத ஏரியாவில் இறங்கி செஞ்சுரி போட்டது படம். ஷெர்லாக் ஹோம்ஸில் பின்னிப் பெடலெடுத்த பெனடிக்ட் கம்பர்பேட்ச்தான் இதில் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். மிரட்டும் விஷுவல் எஃபெக்ட்ஸ், அதிரடிக்கும் இசை என, பார்ப்பவர்களுக்குத் தலைவாழையில் விருந்து பரிமாறினார்கள். ரிசல்ட் - படம் அதிரிபுதிரி ஹிட். சீக்கிரமே அடுத்த பாகமும் வர இருக்கிறது. அவெஞ்சர்ஸிலும் கலக்கக் காத்திருக்கிறார் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்.
Hacksaw Ridge

இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க ராணுவத்தில் மருத்துவராக டெஸ்மாண்ட் தாஸ் என்பவர் பணியாற்றினார். `எந்தச் சூழ்நிலையிலும் ஆயுதம் ஏந்த மாட்டேன்!' எனக் கடைசிவரை உறுதியாக நின்றவரைப் பாராட்டி மெடல் ஆஃப் ஹானர் விருது கொடுத்து கெளரவித்தார்கள். அவரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் இது. இயக்குநர் மெல் கிப்சன். போர்க்களத்தைத் தத்ரூபமாகக் கொண்டுவர கிப்சனுக்குச் சொல்லியா தர வேண்டும்? படம் பாய்ந்து பாய்ந்து வசூல் செய்து வருகிறது.
ஆண்டின் இறுதியில் ரிலீஸாகும் `Assassin's Creed', `Passengers' போன்ற படங்களும் இந்தப் பட்டியலில் இணைய வாய்ப்பிருக்கிறது.
- நித்திஷ்