
டோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்! - மலையாளம்
2016-ன் க்ளைமாக்ஸில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் `விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்' என கமல் ஓடிவந்து வாழ்த்து சொல்வார். நாமும் பார்ட்டி, சபதம் என கொண்டாட்டமாக வரவேற்போம். அதெல்லாம் இருக்கட்டும். இன்னும் இந்த வருஷம் செய்ய வேண்டியவையே நிறைய பாக்கி இருக்கிறது. அதில் ஒன்று சினிமா. இந்த ஆண்டு வெளியான படங்களில் மிஸ் பண்ணக் கூடாத படங்கள் பற்றிய லிஸ்ட்டை ரகம் வாரியாக பிரித்துக் கொடுத்திருக்கிறோம். மறக்காம பார்த்துடுங்க மக்களே!
இது மலையாளப் படங்களுக்கான லிஸ்ட். கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்!

மகேஷின்டே பிரதிகாரம்
மலையாள உலகின் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசிலின் யதார்த்த நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான படம். பசுமை போர்த்திய இடுக்கியின் ஒரு மூலையில் வாழ்ந்துவருகிறார் ஃபஹத். தன் நண்பனுக்காக ஒரு சண்டையை தடுக்கப்போய் அடி வாங்குகிறார். அதற்குப் பழி வாங்கும்வரை செருப்பு அணிவதில்லை என்ற வீராப்போடு திரியும் அவர், பழி வாங்கினாரா இல்லையா என்பதை காமெடியாய் சொல்லும் படம் இது. ஒளிப்பதிவு, எடிட்டிங், திரைக்கதை என டெக்னிக்கலாகவும் பாராட்டு மழையில் நனைந்த படம் இது!

ஆக்ஷன் ஹீரோ பிஜு
`பிரேமம்' என்ற பம்பர் ஹிட் படத்திற்குப் பின் நிவின் பாலி நடிப்பில் வெளியான படம். ஒரு சப் இன்ஸ்பெக்டர், அவரின் ஸ்டேஷன், அதற்கு வரும் பலதரப்பட்ட ஆட்கள்... இவ்வளவே கதை. போலீஸின் கொடூர முகத்தைக் காட்டும் `விசாரணை' இங்கே ஹிட்டான அதே சமயம், அக்கட தேசத்தில் காக்கிச்சட்டையின் காமெடி பக்கங்களைக் காட்டும் இந்தப் படத்தை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள் ரசிகர்கள். `பிரேமம்' கொடுத்த ஹிட் இமேஜை இந்தப் படத்திலும் தக்கவைத்துக்கொண்டார் நிவின்.

பாவாட
2016-ல் மல்லுவுட்டின் ஹிட் கணக்கைத் தொடங்கிவைத்த படம் இது. பிருத்விராஜுக்கு மற்றுமொரு ஹிட் சினிமா. குடிநோயால் பாதிக்கப்பட்டு மறுவாழ்வு மையத்தில் இருக்கிறார் ஹீரோ. அங்கே பாவாட என்பவரை அவர் சந்திக்க, இருவரும் தங்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க முடிவு செய்கிறார்கள். இதை காமெடி, சென்டிமென்ட் என கலந்துகட்டி கொடுக்க, படம் சூப்பர் ஹிட். நெடுமுடி வேணு, அனுப் மேனன், ஆஷா சரத், மியா ஜார்ஜ், மஞ்சு வாரியர், சித்திக் என எக்கச்சக்க நட்சத்திரப் பட்டாளம் நடித்திருந்த படம் இது.

கம்மட்டிப்பாடம்
மலையாள உலகின் `மெட்ராஸ்'. தலித்களின் வாழ்வியலை முகத்தில் அறையும் நிஜத்தோடு பேசும் க்ளாஸிக். `கம்மாட்டிப்பாடம்' என்ற குடிசைப் பகுதி எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு பளபளக்கும் `மெட்ரோ' கொச்சி உருவாகிறது என்பதே கதை. இதை அங்கே வாழும் இளைஞர்களின் வாழ்க்கை வழியாக உணர்த்தியிருப்பார்கள். `நான் சாக்லேட் பாய் மட்டுமில்லை' என இந்தப் படத்தில் அழுத்தமாய் நிரூபித்தார் துல்கர் சல்மான். `கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்' படத்தில் ரத்தத்தையும் புழுதியையும் தத்ரூபமாய்க் காட்டிய ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவிதான் இந்தப் படத்தின் இயக்குநர்.

ஜேக்கபின்டே ஸ்வர்கராஜ்யம்
மல்லுவுட்டின் சென்ஷேசன் வினீத் ஸ்ரீனிவாசனின் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டடித்த படம். துபாயில் அன்பாய் வாழ்ந்துவரும் ஒரு குடும்பம் எதிர்பாராத சுழலில் சிக்கி சீரழிகிறது. அதிலிருந்து நம்பிக்கையோடு எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதுதான் கதை. நிவின், லஷ்மி ராமகிருஷ்ணன், ரெஞ்சி பணிக்கர், ஸ்ரீநாத் பாசி என ஒவ்வொருவரும் திறமை காட்டி நடித்தார்கள். ஜேக்கப் என்ற தொழிலதிபரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

கிஸ்மத்
இதுவும் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான். கேரளாவின் பொன்னானியில் ஒரு தலித் பெண்ணும், முஸ்லிம் இளைஞனும் காதலில் விழுகிறார்கள். இது ஊருக்குத் தெரியவர, அவர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள். அந்த ஜோடியின் பரிதாபக் கதையை அப்படியே திரையில் கொண்டு வந்திருந்தார் அறிமுக இயக்குநரான பாவக்குட்டி. ஹீரோ - ஹீரோயினான ஷேன் நிகத்தையும் ஸ்ருதி மேனனையும் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியது மீடியா. செலி பிரிட்டிகளும் தங்கள் பங்குக்கு பாராட்டித் தள்ளினார்கள்.

ஒழிவுதிவசத்தே களி
மலையாள எழுத்தாளர் உன்னியின் சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நியூ ஏஜ் சினிமா. தேர்தல் விடுமுறையில் சந்தித்துக்கொள்ளும் ஐந்து நண்பர்கள் பார்ட்டி பண்ணுகிறார்கள். போதையில் ஒரு விளையாட்டைத் தொடங்க அது வினையாகிறது. அடுத்து என்ன என்பதுதான் கதை. இந்தப் படத்தின் இரண்டாவது பாதி முழுக்க ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டதை பாராட்டிக் கொண்டாடினார்கள் விமர்சகர்கள். வசூலிலும் குறை வைக்கவில்லை. இந்த ஆண்டின் பெஸ்ட் படம் என கேரள அரசு தேர்ந்தெடுத்தது இந்தப் படத்தைத்தான்.

ஹேப்பி வெட்டிங்
மலையாள உலகில் திடீர் திடீரென சில சர்ப்ரைஸ்கள் நடக்கும். இந்த ஆண்டின் ஸ்வீட் சர்ப்ரைஸ் `ஹேப்பி வெட்டிங்'. இன்ஜினீயரிங் பட்டதாரியான ஹீரோவுக்கு கல்யாணமாவதுதான் கதை. 35 தியேட்டர்களில் ரிலீஸாகி `படம் நல்லாருக்கே' எனப் பாராட்டு குவிந்தவுடன், நூற்றுக்கணக்கான தியேட்டர்களில் ரிலீஸான படம். படம் வசூலித்ததோ கிட்டதட்ட பத்து மடங்கு லாபம். ஒரு ஃபீல் குட் படம் பார்க்க நினைப்பவர்கள் யோசிக்காமல் பார்க்கவும்!

ஒப்பம்
சூப்பர் சீனியர் மோகன்லால் இறங்கி சிக்ஸ் அடித்த படம். த்ரில்லர் படமான இதில் மாற்றுத் திறனாளியாக நடித்திருந்தார் லாலேட்டன். வில்லனாக மிரட்டியது நம் ஊர் சமுத்திரகனி. டைட்டான திரைக் கதை என்பதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. விளைவு, படம் வசூலை வாரிக் குவித்தது. `நான் இன்னும் புல் ஃபார்ம்லதான் இருக்கேன்' என ஜுனியர் நடிகர்களுக்கு அலெர்ட் மெசேஜ் கொடுத்தார் லாலேட்டன்.

புலிமுருகன்
இந்தப் படத்தில் செஞ்சுரியே அடித்தார் மோகன்லால். புலியூர் என்ற கிராமத்தில் புலிகளின் அட்டகாசம் அதிகமாகிறது. அப்படி ஆட்டம் போடும் ஆட்கொல்லிப் புலிகளைக் கொல்லும் ஹீரோவைப் பற்றிய கதை இது. 2013-ல் தொடங்கி பல காரணங்களால் தடைபட்டு இப்போது ரிலீஸாகியிருந்தாலும் வசூலில் ரெக்கார்ட் பிரேக்கிங் சினிமா இது. மலையாளத்தின் முதல் நூறு கோடி சினிமா, மோகன்லாலின் கேரியரில் உச்ச பட்ச ஹிட் என எக்கச்சக்க சாதனைகளை அசால்ட்டாக செய்திருக்கிறது இந்தப் படம். மிஸ் பண்ணிடாதீங்க... அப்புறம் வருத்தப் படுவீங்க!
- நித்திஷ்