Published:Updated:

"உன் குரல்லயே வரும்னு நினைக்காதே!" - '2.0' ரெக்கார்டிங் சுவாரஸ்யம் சொல்லும் பாடகர் நிவாஸ்

"உன் குரல்லயே வரும்னு நினைக்காதே!" - '2.0' ரெக்கார்டிங் சுவாரஸ்யம் சொல்லும் பாடகர் நிவாஸ்

2.0 பட அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார், பாடகர் நிவாஸ்.

Published:Updated:

"உன் குரல்லயே வரும்னு நினைக்காதே!" - '2.0' ரெக்கார்டிங் சுவாரஸ்யம் சொல்லும் பாடகர் நிவாஸ்

2.0 பட அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார், பாடகர் நிவாஸ்.

"உன் குரல்லயே வரும்னு நினைக்காதே!" - '2.0' ரெக்கார்டிங் சுவாரஸ்யம் சொல்லும் பாடகர் நிவாஸ்

"நான் பொறந்தது தஞ்சாவூர், வளர்ந்தது சென்னை. காலையில எழுந்தவுடன் இரண்டு மணிநேரம் வொர்க் அவுட் முடிஞ்சதும் பாடுறதுக்காக பயிற்சிகள் எடுக்கத் தொடங்கிடுவேன். ஒருநாள் பயிற்சி எடுக்கலைனாலும், அதோட விளைவுகள் மோசமா இருக்கும்!" என்று பேசத் தொடங்கும் பாடகர் நிவாஸ். இவருடைய லேட்டஸ்ட் ஹிட் ஆல்பம், ரஜினியின் '2.0'. அவருடனான சந்திப்பிலிருந்து...

"இசை ஆர்வம் ஏற்பட்டது எப்படி?"

"என் குடும்பத்துல எல்லோரும் நல்லா பாடுவாங்க. குறிப்பா, எங்க பாட்டி. நான் சின்ன வயசுல கர்நாடக சங்கீதம் கத்துக்கிட்டேன். அப்புறம் சில காரணங்களால தொடர முடியலை. சினிமாவுல பாட்டு பாடணும்ங்கிற கனவு அப்பவே எனக்கு இருந்தது. 'சப்தஸ்வரங்கள்', 'ராகமாலிகா' மாதிரியான டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள்ல கலந்துக்க ஆரம்பிச்சேன். இதுதான் சினிமாவுக்குள்ள நுழையிறதுக்கான ஒரே வழியா இருந்துச்சு. இப்போ மாதிரி வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள்ல பிரபலங்களை தொடர்பு கொள்ளும் வசதி அப்போ இல்லை.  ஒரு பெரிய இடைவேளைக்கு அப்புறம் விஜய் டிவி 'சூப்பர் சிங்கர் சீனியர்' நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதுக்குப் பிறகுதான் ஃபேமஸ் ஆனேன். 

அதுக்கு முன்னாடி ஒரு போட்டியில பாடும்போது ஜேம்ஸ் வசந்தன் சாரோட அறிமுகம் கிடைச்சது. அவர்தான் ஸ்டுடியோவுல பாடுற வாய்ப்பை முதன்முதல்ல ஏற்படுத்திக் கொடுத்தவர். 'சுப்ரமணியபுரம்', 'பசங்க' படங்களுக்காக ஜேம்ஸ் சார் வேலை பார்த்துகிட்டு இருந்தப்போ, எனக்கும் சில வேலைகள் கொடுத்தார். கோரஸ் போடுறது, டியூன் கம்போஸிங் பண்றப்போ பாடுறதுனு சில வேலைகளைப் பார்த்தேன். இதை 'ஸ்க்ராட்ச் வொர்க்'னு சொல்வாங்க. சினிமாவுல முதல் பாடல் ஜேம்ஸ் வசந்தன் சாரோட இசையில 'காவலர் குடியிருப்பு' படத்துல அமைஞ்சது. இந்தப் பாடல் தமிழ் மற்றும் கன்னட மொழிகள்ல வெளிவந்துச்சு." 

"இப்போ இருக்கிற ஏகப்பட்ட இசையமைப்பாளர்கள்கூட சேர்ந்து வேலை பார்த்திருக்கீங்களே..."

"மலையாளத்துல முதல் பாடல் வித்யாசாகர் சாரோட அமைஞ்சது. 'டைமண்ட் நெக்லஸ்' படத்துல அமைஞ்ச இந்தப் பாட்டு அந்த ஊர்ல சூப்பர் ஹிட்! அந்த வருடத்தோட 'சிறந்த பின்னணிப் பாடகர் விருது' எனக்கு கிடைச்சது. விஜய் ஆண்டனி சாரை சினிமாவுல வர்றதுக்கு முன்னாடியிருந்தே எனக்குத் தெரியும். அவர் படங்களுக்கும் நிறைய 'ஸ்க்ராட்ச் வொர்க்ஸ்' பண்ணியிருக்கேன். அப்போ அதிக அனுபவம் இல்லாததுனால, டிராக்ல பாடுன பாடல்கள் எதுவும் வெளிவரலை. அதுக்கப்புறம், 'சலீம்' படத்துல 'உன்னைக் கண்ட நாள் முதல்' பாடலும், 'காளி' படத்துல 'அரும்பே குறும்பே' பாடலும் பாடியிருக்கேன். அனிருத் இசையில் 'டார்லிங் டம்பக்கு', யுவன் இசையில் 'செம மாஸ்', ஜிப்ரான் இசையில் 'ரோ ரோ ரோ ரோஷினி' ஆகிய பாடல்கள் பாடியிருக்கேன்."

"குடும்பம் பற்றி?" 

"ஒரு பாடகருக்கு குரல் ரொம்ப முக்கியம். அதனால வெளிய எங்கேயும் சாப்பாடு, தண்ணி எடுத்துக்க மாட்டேன். நடுராத்திரி 12 மணிக்கு வந்தாலும் வீட்ல உள்ளவங்க பொறுமையா நடந்துப்பாங்க. ஒருசில படங்கள்ல கமிட்டாகி சில காரணங்களால நம்ம பெயரைத் தூக்கியிருப்பாங்க. இந்த மாதிரியான மன உளைச்சல்கள்ல இருந்து வெளியே வர்றதுக்குக் காரணமாயிருக்குறது, என் குடும்பம்தான். 

'சூப்பர் சிங்கர்'ல பாடிக்கிட்டு இருந்த சமயத்துலதான் எனக்குக் கல்யாணம் ஆச்சு. என் மனைவி வினு, சாஃப்ட்வேர் இன்ஜினியர். அவங்களோட துணை இல்லாம எந்தவொரு முடிவையும் நான் எடுக்கமாட்டேன். எங்களுக்கு 'சாய்னா'ங்கிற பெண் குழந்தை இருக்கா. இப்போதான் எல்.கே.ஜி படிச்சுக்கிட்டு இருக்காங்க." 

"ரஹ்மான் சாரோட லைவ் ரெக்கார்டிங்ல பாடுறது தொடங்கி, 2.0 வரையிலான அந்த அனுபவம் எப்படி இருந்துச்சு?" 

'சூப்பர் சிங்கர்' எபிசோட்ல ரஹ்மான் சாரோட பாடல்கள் பாடுற ரவுண்ட்ல நான் 'ஆரோமலே' பாட்டு பாடினேன். இப்போ நடக்கிற சீசன்ல பாட்டு பாடிக்கிட்டு இருக்கிற சக்திங்கிற ஒரு போட்டியாளரும் நானும் சேர்ந்து அந்தப் பாட்டை மேடையில பாடினோம். அதுக்கு ரஹ்மான் சார்தான் லைவ் மியூசிக் பண்ணார். 

ராஜா சார் & ரஹ்மான் சாரோட வேலை பார்க்கணும்ங்கிறது எல்லா பாடகர்களோட விருப்பம். 'சூப்பர் சிங்கர் சீசன்' முடியிற சமயத்துல, ரஹ்மான் சார் ஆடிஷன் நடத்தினார். அப்போ அவர் இசையமைத்த 'ஹீரோ' பைக் தமிழ் விளம்பரத்துல ரஹ்மான் சார் பாடியிருப்பார். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகள்ல அந்த விளம்பரத்துக்கு நான் பாடியிருந்தேன். 'வரலாறு' படத்தோட கன்னட வெர்ஷன் பாடல்களையும் பாடியிருந்தேன். ஏ.ஆர்.ரஹ்மான் சாரோட இசையில் அமைந்த முதல் பாடல் இதுதான். ரொம்ப வருடத்துக்கு அப்புறம் ரஜினியோட '2.0' படத்துல 'ராஜாளி' படத்தோட தெலுங்கு வெர்ஷனைப் பாடுறதுக்கான வாய்ப்பு கிடைச்சது. உண்மையிலேயே, என்னை பாடக் கூப்பிட்டப்போ, 'இது ஃபைனலாகி உன் குரல்ல வெளிவரும்னு நெனைக்காதே'னு சொல்லிதான் ரெக்கார்டிங் பண்ணாங்க. கடைசிநாள் ஆடியோ வெளியாகும்போதுதான் நான் என் பெயர் இருக்கானு பார்த்தேன். ரஜினி - ஷங்கர் - ரஹ்மான் கூட்டணியில் ஒரு பாட்டு பாடுற சான்ஸ் கிடைக்காதானு ஏங்கிக்கிட்டு இருந்தேன். அந்தக் கனவு நனவான தருணத்தை என்னால மறக்கவே முடியாது!"

ஒரு ரவுண்ட் வர வாழ்த்துகள் ப்ரோ!