Published:Updated:

உயிர் மெய் - 1

Body and Soul series
News
Body and Soul series ( writer Dr.Sivaraman )

மருத்துவர் கு.சிவராமன்

டைசி நோயாளியைப் பார்த்துவிட்டு இருக்கையைவிட்டு எழும் நேரத்தில், அவர்கள் வந்தார்கள். `எங்களுக்காகப் பத்து நிமிஷம் மட்டும் சார்' என, சன்னமான குரலில் கேட்டுக்கொண்டனர். நான் மிகுந்த களைப்பில் இருந்தேன். `நாளைக்குச் சந்தித்து, நிதானமாகப் பேசலாமே!' எனக் கெஞ்சலாகச் சொன்னேன். சிறிய மௌனத்துக்குப் பிறகு, `கடைசியா உங்களைப் பார்த்துப் பேசிட்டுப் போகலாம்னு காத்திருக்கோம்' எனச் சொல்லி அதிரவைத்தார்கள். அவர்கள், குழந்தையின்மை சிகிச்சைக்காக வந்திருந்தார்கள். அன்று நாங்கள் பேசி முடித்து வெளியே வருகையில், வெறிச்சோடிப்போயிருந்த வானமும் சாலையும் விடியலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தன... அவர்களைப்போலவே!

இன்று, குழந்தையின்மைக்கு எனப் பிரத்யேக மருத்துவமனைகள் வந்துவிட்டன. எங்கும் குழந்தை வரம் கேட்டு ஏங்கும் தம்பதிகள். கோயில்களில்கூட, `குழந்தைப்பேறு ஸ்பெஷல்' என விளம்பரம் செய்யத் தொடங்கிவிட்டனர். ` `இன்றைக்கு 12-B பஸ் சரியான நேரத்துக்கு வருமா?' என்பது மாதிரியான அன்றாட அவசரத்தில், இந்த வாரம் புரலாக்ட்டின் அளவு கணிசமாகக் குறைந்திருக்குமா, என் கருமுட்டை வெடிக்க அது வழிவிடுமா?' என விஞ்ஞானிகள் போல தவிப்புடன் காத்திருக்கின்றனர் தம்பதிகள். அப்படியான உள்ளங்களோடும், `அப்படியான சிக்கலுக்குள் சிக்கிவிடாமல் என்னையும் என் அடுத்த தலைமுறையையும் காத்திட வேண்டும்' எனச் சிந்திக்கும் நட்பு வட்டாரத்தோடும் நடத்தும் சிநேகமான உரையாடல்தான் இந்தத் தொடர்.

உயிர் மெய் - 1

பெண்ணின் சினைமுட்டைகள், பெண்ணாக அவள் தாயின் வயிற்றில் ஜனிக்கையிலேயே உருவாவதும் சரி, பிறகு பூப்படையும் பருவம் வரை ஏற்படும் வளர்ச்சியும், அந்த முட்டையின் இயக்கமும் சரி, உயிரணுவோடு பிணைந்து கருவாகி, சரேலென மூன்றேகால் கிலோ ஐஸ்வர்யாவாகவோ அய்யாசாமியாகவோ உருவாவது முற்றிலும் முழுதாகப் புரிந்திடாத இயற்கையின் விந்தை.

“அம்மா, எனக்கு மீசை வருது பாரேன்” என 14 வயதுப் பையன் அரும்புமீசையை முறுக்கிக் காட்டுகையில், ``மம்மி, இனி அவனை டவுஸர் போடச் சொல்லாதே. பேன்ட் போடச் சொல்லு. கரடி மாதிரி உடம்பெல்லாம் முடி வளருது. இந்த வயசுலேயே இவனுக்கு நெஞ்சு மயிர்” என வீட்டில் உள்ள மூத்த பெண் சொல்லும்போது, கோபத்தைக் காட்டும் பையனின் உடைந்த குரல், ஓர் ஆண்பால் கவிதை. அப்படிக் குரல் உடைகையில், விதைப்பைக்குள் `செர்டோலி' செல்கள் சிலிர்த்தெழுந்து, விந்தணுக்களைச் சேமிக்கத் தொடங்கியிருக்கும்.

ஒவ்வொரு மாதவிடாய்ச் சுழற்சியிலும், பெண்ணின் இரண்டு பக்கங்களிலும் உள்ள சினைப்பையில் சில முட்டைகள் படிப்படியாக வளர வேண்டும். 14-வது அல்லது 15-வது நாளில் அந்தக் கருமுட்டை அதன் புறத்தோலைக் கழற்றி வீசி, வெடித்துச் சினைக்குழலைப் பற்ற வேண்டும். இப்படி சினைக்குழலுக்குள் சிங்காரித்து ஓடிவரும் சினைமுட்டையை, காதலால் கசிந்துருகிக் கருப்பைக்குள் புகுந்த உயிரணுக்களில் ஒருசில ஓடிவந்து, அதில் ஒன்று முட்டையின் மதில் சுவரை உடைத்து உள்நுழைய... அவள் அம்மா!

முந்தைய பாராவின் ஒவ்வொரு நிகழ்வுக்கும், ஏதோ ஒரு துளி ஹார்மோன், சின்னதாக ஒரு கட்டமைப்பு, சிறு கவிதையாக ரசாயனங்களின் சமிக்ஞைகள் இருக்க வேண்டும் என்கிறது நவீன அறிவியல். `வாதமாய்ப் படைத்து' எனும் சித்த மருத்துவமோ,

`வாயுவோடு விந்துசென்று மலர்க்குட் சேர்ந்தால்
மலரினுள்ள இதழ்களெல்லாம் மூடிக்கொள்ளும்.
தேயுவோடு வாயு நின்று திரட்டும் பாரு...
செப்பியதாந் தினமொன்றில் கடுகு போலாம்'


- என இன்றைய அறிவியல் நுணுக்கங்கள் ஏதும் வராதபோது, முதல் நாளில் `கடுகு போலாம்' என ஆரம்பித்து, ஒவ்வொரு மாதத்துக்கும் கருவின் வளர்ச்சியைச் சொல்லியிருக்கும்.

இந்த ஹார்மோன்களின் சுரப்பு எப்படி நிகழ்கிறது? இதற்கான சமிக்ஞையை மூளைக்குள் யார் பிரசவிக்கிறார்கள்? ஏவாள் கடித்துப் போட்ட ஆப்பிளிலிருந்தோ, ஏமி ஜாக்சன் சிரிப்பிலிருந்தோ இந்தச் சுரப்பும் பிறப்பும் நுணுக்கமான பல சூட்சுமங்களுடன் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

உயிர் மெய் - 1

`இனி நீதான்டா எனக்கு!' என ஏதோ ஒரு பார்வையில் புரிந்தபோது, மனசுக்குள் அடித்த மின்னலில் சில துளி ஹார்மோன் சுரக்கும். `இது நட்பு அல்ல; காதல்’ எனப் புரிந்ததும், அவசரமாகப் பரிமாறப்பட்ட முதல் முத்தம் மூளைக்குள் சில ரசாயனச் சமிக்ஞைகளை ஏற்படுத்தும். அந்த நீண்ட கடற்கரையில் அலுவல்விட்டு வந்து காதலியோடு அமர்ந்து, அவசியமே இல்லாமல் அந்தச் சுண்டுவிரலுக்கு 1,500 முறையாவது சுடக்கு எடுக்கும்போது, கருப்பையின் உள்சுவர் கணிசமாக வளரும். அவன் `நீ சூடும் பூவெல்லாம் ஒருபோதும் உதிராதே!' என, தாமரையின் கவிதை வரியில் நெகிழ, கருமுட்டை கணிசமாக உப்பிப் பருத்து வளரும்.

சாமி சப்பரம் பார்க்கத் தேர்வீதியிலும் தோளிலும் சுமந்த தகப்பன் சில ஆண்டுகள் கழித்து `நீ சாயும் தோள் இதுதான்' எனச் சுட்டிக் காட்டியவருடன் மணமேடையைக் கைகோத்த படி சுற்றியபோது, அத்தனை கூட்டத்துக்கு முன்னால், அப்பாஅம்மா முன்னால், அவன் கை சுண்டுவிரலை நசுக்க வழக்கமாக வரும் வலி, கோபத்தைக் கொட்டுவது மாறிப்போய், அன்றைக்கு வெட்கத்தைக் கொப்புளிக்க, அந்த வெட்கம் கொட்டிவிடாது இதழோரம் முறுவலிக்க என அத்தனையிலும் இந்தச் சுரப்புகளும் ரசாயனச் சமிக்ஞைகளும் இத்தனை காலம் இயல்பாகச் சுரந்துகொண்டேதான் இருந்தன. திருமணமாகி பத்து வருடங்கள் ஆன பிறகும் கிடைக்கும் லிஃப்ட் தனிமையில் உரசிக்கொடுக்க முனையும் முத்தத்தில், அப்போதும் சினைப்பைக்குள் வளர்ந்து நிற்கும் சினைமுட்டை உடைந்து கருவாக உருவாகும்.

இப்படியான காதலின்/காமத்தின் நெளிவு சுளிவுகளால் மட்டுமல்ல, ஆணோ பெண்ணோ பருவமடைந்து வளர்ந்துவருகையில் அன்றாடம் சாப்பிடும் பசலைக்கீரைக் கடைசலில் மாப்பிள்ளைச்சம்பா சோற்றை உருட்டி உண்பதும், செவ்வாழைப்பழத்தை முருங்கைப் பூ பாலில் சாப்பிடுவதும், வஞ்சிரம் மீன் வறுத்து நாட்டு்க்கோழிக் குழம்பு ஊற்றிச் சாப்பிடுவதும் சேர்கையில்தான் சினைமுட்டையும் உயிரணுவும் உற்சாகமாக வளர்ந்து நிற்கும்.

காதல் கனிந்து கசிந்துருகும் தருணத்தில், சாப்பிட்ட முருங்கைப் பூ பாலினாலோ, சிலாகித்த உச்சி முத்தத்தாலோ என எத்தனையோவால் அத்தனை சுரப்புகளும் படைப்புகளும் நகர்வுகளும் ஒருமித்து, கருத்தரிப்பைக் கச்சிதமாக நிறைவேற்றும். அன்றைய ஒருசெல் உயிரி க்ளாமிடா மோனஸிலிருந்து ஒவ்வொரு செல்லையும் உருக்கிய கிளியோபாட்ரா வரையிலான அத்தனையிலும் இப்படித்தான் இந்த நிகழ்வு இருந்தது.

ஆனால், இன்றைய நிலை அப்படி அல்ல. இந்த ஊதாக் கலர் மாத்திரையைச் சாப்பிட்டால் தான், `உயிரணு ஓடியாந்து முட்டையோடு பிணைய முடியும். தலைக்குக் குளிச்ச தேதியிலிருந்து ஐந்தாம் நாள் மறக்காம ஆரம்பிச்சுடுங்க' என, காதலை கலர் கலர் கேப்சூலிலும், காமத்தை இரண்டு மி.லி ஊசியிலும் அடைத்துக்கொடுக்கும் வித்தை பலமடங்கு உயர்ந்துகொண்டிருக்கிறது.

`கருத்தரிக்க, இந்த ஊசி உங்களுக்கு இனி அவசியம் வேண்டும். அப்போதுதான் ஐ.யூ.ஐ-க்குச் சரியாக இருக்கும். முட்டை அதுபாட்டுக்கு வளர்ந்துட்டே இருக்கு. இரண்டு செ.மீ-க்கு மேல் உடையணும். அப்படி உடையலைன்னா, அந்தக் கருமுட்டை பிரயோஜனம் இல்லை. இந்த ஊசியைப் போட்டுக்க' என்ற ஆலோசனை நம்மில் பலருக்கும் கிடைக்கிறது.

இரவின் உச்சத்துக்குப் பிந்தைய வாஞ்சையான அரவணைப்பில், வெட்கப்புன்னகையும் களைத்து மகிழ்ந்த காதலும் கொஞ்சநாளாகக் காணவில்லை. `சரியா... டி14. மாதவிடாயிலிருந்து 14-வது நாள். முட்டை வெடிச்சிருக்கணும்.

10-ம் தேதி மாத்திரை மட்டும் மிஸ்ஸாகிடுச்சு. ஓவுலேஷன் ஆகியிருக்குமா? இப்போ போன உயிரணு உரசி முட்டையை அடைச்சிருக்கும்ல? கோ அன்சைம் க்யூவும் முருங்கைப் பூ லேகியமும் நீங்க சாப்பிட ஆரம்பிச்சு, 75 நாள்களுக்கு மேல் இருக்கும்ல?' என, சந்திராயன் ராக்கெட்டை அனுப்பிவிட்டு, கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கும் ஸ்ரீஹரிகோட்டா சயின்ட் டிஸ்ட்டுகள் மாதிரி பின்னிரவில் கவலையோடு பேசிக்கொண்டிருக்கும் தம்பதியர் இங்கு பெருகிவருகின்றனர்.

காமம் சுரக்க... காதல் கிறக்க, இப்போது கூடுதல் கரிசனமும் மெனக்கெடலும் தேவைப்படுகின்றன. `இந்த மாத்திரை, சினைப்பை நீர்க்கட்டிகள் குறைய. இந்த ஊசி, காமம் கொப்புளித்துக் கருமுட்டை வெடிக்க 10-வது நாள் போட்டுக்கணும்பா. இந்த மாத்திரை, டி4-லிருந்து உங்கள் முட்டையை வளர்க்க, சாப்பிட்டே ஆகணும். இந்த மாத்திரை, சோம்பியிருக்கும் உயிரணு வேகமாக ஓடிச்சென்று கருமுட்டையை உடைக்க  அவசியம் உங்களுக்குத் தேவை. இந்த கேப்சூல், குறைந்திருக்கும் உயிரணுக்களைக் கூட்ட (சாப்பாட்டுக்குப் பின்னே). அப்புறம் காதலாகிக் கசிந்துருக எனப் பட்டியல் பல புதுமணத் தம்பதிகளுக்குச் சீர்வரிசையாக நீண்டுகொண்டே இருக்கிறது.

என்ன நடந்துகொண்டிருக்கிறது இங்கே? சினைப்பை நீர்க்கட்டிகள் குறித்த பேச்சு, 20 ஆண்டுகளுக்கு முன்னால் அவ்வளவாக இல்லை. கருத்தரிப்புக்குப் பிறகு அல்ட்ராசவுண்ட் சோதனையில் குழந்தையைப் பார்த்து வரும்போது அந்தப் பக்கம் யதேச்சையாகத் தென்படும் தரவாகவே அப்போது இருந்தது.

இன்று சினைப்பை நீர்க்கட்டிகள் குறித்த பெருங்கூச்சலும், அளவுக்கு அதிகமான பயமும் பயமுறுத்தலும், அதுவே முற்றிலும் அலட்சியப்படுத்துகையில் அதையொட்டி வரும் கருத்தரிப்புத் தாமதமும் ஏராளம். உணவிலும் நடையிலும் உடற்பயிற்சியிலும் செதுக்கிச் சீராக்கவேண்டிய பிழையை, மாத்திரைகளைக் கொட்டிக் குழப்பும் சிகிச்சைகள் பெருகி வருகின்றன. அவசரம், அவமானம், அறமற்ற அறிவியல் எனும் காரணங்கள் சாலையோர சலூன்கள்போல கருத்தரிப்பு உதவி மருத்துவ மனைகளை உருவாக்கிவருகின்றன.

அன்று, `ஆணுக்கு சராசரியாக 40-50 மில்லியன் உயிரணுக்கள் ஒரு மில்லி விந்துவில்' என்ற நிலை இருந்தது. இன்று, `20 மில்லியன் இருந்தால் போதும்' என ஓர் ஆணின் விந்தணுக்கள் தடாலடியாக இறங்கிப்போனது ஏன்? நீர் மாசுபட்டது முதல் `நீட்' தேர்வால் மாசுபட்டுப் போன மூளை வரை நிறைய காரணங்கள்.

உயிர் மெய் - 1

தன் இயல்பான பாலியல் விளைவையும் விசும்பலையும் போலியான சமூக அழுத்தத்தில் மறைத்து, நடுநிசி ஊடக மருந்துக் கொள்ளையர் களிடம் காண்டாமிருகம் - குதிரை மருந்து வாங்கிச் சிக்கி, உளவியல் நோயாளிகளாகும் அப்பாவிக் கூட்டம் ஒருபக்கம்.

`நேரத்தைத் தாமதம் செய்யாதீங்க. அறிவியல் எவ்வளவோ வளர்ந்து நிற்கிறது. `இக்ஸி' பண்ணியாச்சுன்னா குழந்தை உறுதி. வெளியே பொருளாதார விஷயத்தில் உதவிட, தவணைத் திட்ட வசதியை வங்கியே கொடுப்பார்கள். எங்க ஊழியர், உங்களுக்கு உதவிடுவாங்க. பேசுங்க', என நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசி இழுக்கும் கூட்டத்தில் சிக்கும் `கூகுள் பட்டம்' பெற்ற வாலிபர் கூட்டம் இன்னொரு பக்கம்.

`நேத்து கல்யாணம் பண்ணினவ எல்லாம் இன்னிக்கு வாந்தியும் வயிறுமா இருக்காளுங்க. இவன் தம்பிப் பொண்டாட்டிக்கு என்ன குறை வெச்சமோ தெரியலை, நாலு வருஷங்களா இவ வயித்துல ஒரு புழுப் பூச்சி தங்கலை' எனும் ரொட்டியில் ஜாம் தடவுவதுபோல் நாவில் விஷம் தடவும் சில ஓநாய்க் கூட்டங்கள் மறுபக்கம் என, அன்பற்ற, அறமற்ற வணிக வன்முறைக் கூட்டங்களுக்கு நடுவே காதலும் காமமும் சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதுதான் நிதர்சனம்.

சின்னச்சின்ன அக்கறைகள், சற்று விசாலமான புரிதல்கள், பிழைகளை விலக்கி அரவணைக்கும் வாஞ்சை, கனவோடும் காதலோடும் காத்திருக்கும் பொறுமை, மரபின் நீண்ட அனுபவத்தையும் அறிவியலின் நுணுக்கத்தையும் `அறம்' எனும் புள்ளியில் ஒருங்கிணைத்து, வாழ்வியலை நகர்த்தும் மனநிலையை இவை மட்டுமே தரும்.காதலாய்... காமமாய்... கருவாய்... உயிராய்!

- பிறப்போம்...

உயிர் மெய் - 1

காதலின் சின்னம்!

உயிர் மெய் - 1

 மனித இனமும் அவனின் மூத்த தலைமுறையான குரங்கினமும் அதிகம் நேசித்துச் சாப்பிட்ட உணவு வாழைப்பழம். அநேகமாக கவுண்டமணி – செந்தில் நகைச்சுவைக்குப் பிறகு, பழத்தின் வகையிலிருந்து பத்தி ஸ்டாண்டு வகையறாவுக்குக் கொஞ்சம் நகர்ந்துவிட்டது. கூடவே `வாழை வெயிட் போடும்' என்ற சங்கதியில் பல வீடுகளில் புறக்கணிக்கப்பட்ட பழம்.

உயிர் மெய் - 1

வாழைப்பழம், காதலின் சின்னம்; காமத்தின் ஊற்றுக்கண் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ஸ்ட்ராபெர்ரியைக் காதலோடு பாடும் நம் கவிஞர்கள், செவ்வாழையையும் சீக்கிரம் பாடியாக வேண்டும்.

உயிர் மெய் - 1

ஆணின் விந்தணுக்களை உயர்த்திட உதவும் கனி, வாழை. குறிப்பாக செவ்வாழை. அதில் உள்ள  `bromelin' எனும் என்சைம், விந்தணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும். பொட்டாசியம் மக்னீசியம் முதலான பல உப்புகளும் விந்தணுக் களைச் சீராகப் படைக்க உதவிடும்.

உயிர் மெய் - 1

மூளையில் காதல் சுரக்கத் தேவையான செரட்டோனினைக் கட்டமைக்கும் பணிக்குத் தேவையான ட்ரிப்டோஃபேனையும் வாழைப்பழம் கொடுக்குமாம்.

உயிர் மெய் - 1

`விந்தணுக்கள் குறைவுக்கு, உடலின் அதிக சூடான பித்தநிலையும் காரணம். அந்தப் பித்தத்தைச் சமப் படுத்த, கபத்தைத் தரும் கனி வாழை' என்கிறது சித்த மருத்துவம்.

உயிர் மெய் - 1

அதிக நார்ச்சத்துள்ள நெல்லை மதுரைப் பகுதி நாட்டுவாழை, செவ்வாழை, சிறுமலைப்பழம் ஆகியவை, வாழை இனங்களில் தனிச் சிறப்புள்ளவை.

உயிர் மெய் - 1

நீரிழிவுக் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள்,  வாழையை வணங்கி விடைபெறுவது நல்லது.

உயிர் மெய் - 1

காலை உணவில், 30 மணித்துளிகளுக்கு முன்னதாக வாழையைச் சாப்பிடுவது சிறப்பு. மலம் கழிக்க உதவும் என இரவில் உணவுக்குப் பிறகு சாப்பிடுவது ரத்தச் சர்க்கரை அளவைக் கொஞ்சம் உயர்த்தக் கூடும்.

உயிர் மெய் - 1

குளியல்

அதிகம் குளிராத, வெதுவெதுப்பான நீரில் தினமும் இரண்டு முறை குளிப்பது, கருத்தரிப்புக்கு நல்லது. குளித்தல், பித்தத்தைத் தணிக்க உதவும்.

பித்தம் அதிகரித்தால் விந்தணுக்கள் குறையும். பெண்களின் கருப்பை உள்சுவர் எண்டோமெட்ரியம் உலர்ந்து, அதனால் உயிரணு நீந்த முடியாதிருக்கும் சூழலில் ஏற்படும் கருத்தரிப்புத் தாமதத்துக்கு இருமுறை குளியல் உதவும்.

வாரம் ஒருமுறை எண்ணெய்க்குளியல் (நல்லெண்ணெயில்) எடுத்துக்கொண்டால், பித்தத்தைக் குறைத்துக் கருத்தரிப்பை விரைவாக்கும்.

கண்ணகி மதுரை வீதியில் வந்த கோலத்தை, அநேகமாக இன்றைய இளம்பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். ஆதலால், அடிக்கடி ஷாம்பு போட்டு செம்பட்டையான தலைமுடியுடன் முன்நெற்றியில் பறக்கவிட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

அது அழகா எனத் தெரியவில்லை. ஆனால், ஆரோக்கியமில்லை எனச் சொல்லலாம். கொஞ்சம் இயல்பான எண்ணெய்ப்பசை தலைமுடிக்கு அவசியம். வெள்ளாவி போட்டு வெளுத்த நிலையில், அதை வெடவெடவென வைத்திருப்பது பித்தத்தைக் கூட்டி, பின்னாளில் கருவழிப் பாதையில் கஷ்டத்தைக் கொடுக்கக்கூடும்.