மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 31

male-female-relationship
பிரீமியம் ஸ்டோரி
News
male-female-relationship ( விகடன் டீம் )

#MakeNewBondsபாரதி தம்பி, படங்கள்: அருண் டைட்டன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 31

ருவர் தீண்டத்தகுந்த சாதியில் பிறப்பது, அவருடைய தேர்வு அல்ல. ஆனால், இந்து சாதி அமைப்பு, தீண்டத் தகுந்த சாதியில் பிறப்பதனாலேயே அவருக்கு சில மரபுரிமைகளை வழங்குகிறது. அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த மரபுரிமைகளின் பலன்களை அனுபவிக்கிறார். இதைப்போலவே, ஆண் என்பதாலேயே பல்வேறு மரபுரிமைகளை ஆண்கள் பெறுகின்றனர். தங்கைக்குச் சோறும், தம்பிக்கு மட்டும் ஒரு முட்டையும் சேர்த்து வைப்பதிலிருந்தே பெற்றோர்கள் இதைத் தொடங்கிவைக்கின்றனர். உணவில் தொடங்கி உடை வரைக்கும் இந்த மரபுரிமையைத் துய்த்து வளரும் ஓர் ஆணின் மனம், மேலாதிக்கப் பண்புகளுடன் இருப்பதை இயல்பு எனக் கருதுகிறது.

இப்படிச் சொல்வதன் பொருள், ‘ஆணாதிக்கத்தை, ஆண்கள் விரும்பி... மனம் ஒன்றிச் செய்யவில்லை. தங்களுக்கு  வழங்கப்படும் சலுகைகளைத் தன்னை அறியாமல் அனுபவிக்கின்றனர்’ என்பதல்ல. அடிப்படை மனிதப் பண்புகள்கொண்ட எந்த ஓர் ஆணாலும் இந்தச் சிறப்புச் சலுகையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியும். இதற்குக் கொள்கையும் கோட்பாடும் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஆணுக்கு வழங்கப்படும் இந்தச் சலுகைகள் அனைத்தும் அவனுடைய பாலினப் பெருமிதமாக இங்கே நிலைநிறுத்தப் பட்டுள்ளன. ‘ஆம்பளைப் புள்ள எப்படி வீடு கூட்டுறது?’, ‘ஆம்பளைப்புள்ள எப்படித் துணி துவைக்கிறது?’ என்றால், `பொம்பளைப் புள்ள’ எப்படி இவற்றை எல்லாம் செய்கிறாளோ, அதைப்போலத்தான் செய்ய வேண்டும். துணி துவைக்க என்ன காளியின் கைகளா வேண்டியிருக்கிறது?

ஆனால், ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவுநிலை சம ஜனநாயகம் இருப்பதற்கான வாய்ப்பு, நமது குடும்ப அமைப்பில் சாத்தியமே இல்லை. நமது குடும்ப அமைப்பு, இயல்பிலேயே ஜனநாயக மறுப்பும் பாலினச் சமத்துவ மறுப்பும் கொண்டது. இங்கு ஆண் என்பவர் அதிகாரத்தின் திருவுரு; பெண் என்பவர் சேவகம் செய்வதன் மறுவடிவம். சந்தேகம் இருந்தால், கணவனை வேலைக்கு அனுப்பிவிட்டு கைக்குழந்தையுடன் வீட்டில் காத்துக்கிடக்கும் பெண்களைக் கேளுங்கள். அவர்களின் உலகம் அப்படியே உறைந்துகிடக்கிறது.

வீட்டு வாசலில் நூறு வண்டிகள் வந்து சென்றாலும், கணவனின் வண்டிச் சத்தத்தைத் தனித்து இனம் பிரித்து உள்ளுணரும் திறன் பெண்களுக்கு இருப்பது திறமை அல்ல. மாறாக, கூண்டில் இருக்கும் ஒரு பறவையின் தத்தளிப்பு; வெறுமையிலிருந்து ஆசுவாசத்தைத் தேடும் பரிதவிப்பு. சில ஆண்டுகள் இந்த வாழ்வுக்குப் பழக்கப்படும் ஒரு பெண், குடும்பம் என்ற பல்லாயிரம் ஆண்டுகாலப் பலிபீடத்தில் தானும் ஒரு கைப்பிடி மண்ணாக இறுகிவிடுகிறாள்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 31

இதிலிருந்து பெண்ணுக்கு விடுதலை வேண்டுமானால், நமது குடும்ப அமைப்பு என்கிற குட்டிச்சுவர் அடியோடு இடிய வேண்டும். விரும்பினால் இணைந்து வாழ்வதும்; இல்லையெனில் பிரிந்து செல்வதும் மிக இயல்பான ஒரு நடவடிக்கையாக இருக்க வேண்டும். `விவாகரத்து குறைவாக நடக்கும் நாடு இந்தியா’ என்பதும், ‘இந்தியக் குடும்ப அமைப்புபோல புனிதமான ஒன்று உலகிலேயே இல்லை’ என்பதும் வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளுக்கு உதவலாம். நடைமுறை வேறு. நமது குடும்ப அமைப்பு, வெளியேறவே முடியாத ஒருவழிப்பாதையாக இருக்கிறது. இங்கே உள்ளே வரலாம். வெளியே போவது சுலபம் அல்ல. விருப்பமற்ற மணவாழ்வைச் சகித்துக்கொண்டு ஆண்டுக்கணக்கில் இணைந்து வாழும் துன்பத்தைவிடக் கொடியது எதுவும் இருக்க முடியுமா? `ஒவ்வொரு நாளும் இருவரும் இணைந்தே படுக்கைக்குச் செல்கிறோம். யாரேனும் ஒருவர் கொலையாகும் சாத்தியத்துடன்' என்ற சல்மாவின் கவிதை, இந்தியக் குடும்பங்களின் குறுக்குவெட்டுத் தோற்றம்.

வீனகால வாழ்க்கைமுறை கோரும் அபரிமிதமான உழைப்பு, ஆண்பெண் உறவில் செலுத்தும் தாக்கத்தை நாம் கவனத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது. திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளில் `சுமங்கலித் திட்டம்' என்ற பெயரில் ஏழைப் பெண்களின் உழைப்பை உதிரம் சுண்ட உறிஞ்சிக்கொள்வதற்கு, பாலின அடையாளம் ஒரு கருவியாகிறது. சுமங்கலித் திட்டத்தில் ஆண்கள் இல்லை.

திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம், ஆலங்குளம், தென்காசி போன்ற பகுதிகளில் உள்ள எந்தக் கிராமத்தில் நுழைந்தாலும் தெரு நெடுக நூற்றுக்கணக்கான பெண்கள் பீடி சுற்றியபடி அமர்ந்திருப்பார்கள். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பீடிகள் வீதம் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பீடி சுற்றியபடியே இருக்கும் பெண்கள் லட்சக்கணக்கானோர் இந்தப் பகுதியில் உண்டு. அவர்கள் பீடி சுற்றும் வேகமும், அது அனிச்சை நடவடிக்கையாக மாறியிருப்பதையும் காணும்போது ஒரு கணம் அவர்களின் விரல்களும் பீடிகளாக மாறிவிட்டதைப்போலவே தோன்றும். திருமணத்துக்கு முன்பு சில ஆண்டுகள் ஒரு பெண் பீடி சுற்றினால், அவரது கணக்கில் வரவுவைக்கப்படும் `பிடிப்பணம்' அந்தப் பெண்ணின் வரதட்சணையாகக் கணக்கிடப் படுவதும் நடக்கிறது. கறிக்காகவே வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளைப்போல, திருமணத் துக்காகவே பெண்களை வளர்க்கிறார்கள் நம் குடும்பங்களில். பிறந்த நாள் முதலாக திருமணம் மட்டுமே ஒற்றை இலக்காக நிர்ணயிக்கப்பட்டு அந்தப் பெண்ணின் அகமும் புறமும் அதற்கு இசைவாகவே மாற்றப்படுகின்றன.

நவீனகால ஆண்கள் சுமக்கும் பொருளாதாரச் சுமையின் கணமும் மிகக் கொடியதே. நாள் ஒன்றுக்கு 100 கிலோமீட்டர் டூ வீலர் ஓட்டி டெலிவரி மேன்களாக வேலைசெய்யும் இளைஞர்கள் எல்லாம் யார்? காலை 10 மணிக்கு அலுவலகத்தில் நுழைந்தால், இரவு 8 மணி வரை கணினித் திரை முன் கண்களை அகற்றாமல் அமர்ந்திருக்கும் இளைஞர்கள் யார்? தங்கள் இளமையை அடகுவைத்து வெளிநாடுகளில் உழைத்துக்கொட்டும் இளைஞர் கூட்டம் யார்? எதற்காக இவர்கள் உழைக்கும் இயந்திரங்களாக மாறிப் போயுள்ளனர்? ஏனெனில், குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் சுமை அவர்களின் முதுகில் இருக்கிறது. அவர்கள், அழாமல் இருக்கலாம்; வலிக்காததுபோல நடிக்கலாம். ஆனால், அது அவர்களின் பெருந்தன்மை.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 31

உண்மையில் 30 வயதையொட்டியுள்ள ஓர் ஆண், தன் சக்திக்கு மீறிய பொருளாதாரச் சுமையைச் சுமக்கிறான். ஊதாரித்தனமாகத் திரிபவர்களுக்குச் சிக்கல் இல்லை. பொறுப்புடன் ஓர் ஆண் இருந்தால், இந்தச் சுமைகளிலிருந்து தப்பவே முடியாது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ‘வேலைதான் கன்ஃபர்ம் ஆகிடுச்சே’ என்ற நம்பிக்கையில் வாங்கிய டூ-வீலருக்கு இன்னும் தவணை முடிந்திருக்காது. தங்கையின் திருமணக்கடன் ஓரிரு லட்சங்கள் மீதம் இருக்கும். `மாதச் சம்பளக்காரன். வாழ்க்கையை ஓட்டிவிடலாம்’ என்ற நம்பிக்கையில் தன்னைத் திருமணம் செய்துகொண்ட மனைவியின் விருப்பங்களை ஓரளவுக்கேனும் நிறைவேற்றியாக வேண்டும். ஒவ்வொரு குடும்ப நிகழ்ச்சிக்கும் புதுத்துணி என்று இல்லாவிட்டாலும், விழா நாள்களில் புத்தாடை என்பதுப் பேராசை அல்ல.

குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, அமர்வதற்கு சோபா, கொடுங் கோடையைச் சமாளிக்க ஏ.சி... என ஒரு நகர்ப்புற நடுத்தரவர்க்கத்தின் தேவைகள் ஒருபோதும் முடிவடைவதில்லை. குழந்தைகள் தவழும் வீட்டில் இந்தச் செலவுகள் இரட்டிப்பாகும். எதையும் தவிர்ப்பதற்கில்லை. `வளர்ற குழந்தைக்கு எதைப் போட்டாலும் ரெண்டு மாசத்துல பத்தாமப்போயிடும். அப்புறம் என்ன... பாண்டிபஜார்ல 100 ரூபாய்க்கு வாங்கிப் போட்டா பத்தாதா?’ என்பது தர்க்கத்துக்கு சரி. நடைமுறையில் இந்தக் கருத்து, ‘குழந்தைக்கும் கணக்குப் பார்க்கும்’ குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும். உண்மையில் யார் குற்றவாளி? `வளர்ற பிள்ளை’ என முட்டி வரைக்கும் டெய்லரை அளவெடுக்கச் சொல்லி அப்பாஅம்மா தைத்துக் கொடுத்த மேல்சட்டையை முழங்கால் வரைக்கும் போட்டுக்கொண்டு அலைந்த இளம் பிராயத்தை நாம் கடந்து வரவில்லையா?

‘உங்க பழங்கதை எல்லாம் உங்களோடு வெச்சுக்கங்க. இதென்ன நம்ம ஊரா? சுத்தி இருக்கிற புள்ளைங்களோடு சேர்ந்து நம்ம புள்ளையும் வளரும்போது அதுக்கு ஏத்த மாதிரி ட்ரெஸ் பண்ண வேண்டாமா?’ என்ற கேள்வியில் உள்ள யதார்த்தத்தன்மையை நிராகரிக்க முடியுமா? பற்றிக்கொள்ள ஒரு கொம்பு கிடைக்குமா எனக் காற்றில் அசைந்தாடும் கொடியைப் போல, இந்தப் பொருளாதார ஏணியில் ஒரு படியேனும் மேல் எழும்பத் துடிக்கும் எளிய மக்கள், ஒரு வேட்டை மிருகத்தின் வேட்கையோடு இந்த வாழ்வைத் துரத்திச் செல்கின்றனர்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 31

குடும்பம் என்பது, எவ்வளவு தின்றாலும் செரித்துக்கொண்டே இருக்கும் விநோதமான மிருகம். அதன் வயிற்றில் எப்போதும் பூர்த்தி யடையாத பெரும்பசியின் தீ, கனன்று எரிகிறது. இதற்கு உணவிடுவதற்காக ஆண்கள் ஆயுள் முழுவதும் ஓடி ஓடிக் களைத்துப்போகின்றனர். வேலையின் களைப்பில் இன்னதென்று விவரிக்க இயலாத எரிச்சலும் கடுப்பும் அவ்வப்போது சூழும். ‘நாங்கள் நண்பர்களோடு குன்னூர் போனோம், குலுமணாலி போனோம்’ என எவனாவது ஃபேஸ்புக்கில் ரெண்டு போட்டோக்கள் போட்டால், அந்தக் கடுப்பும் எரிச்சலும் ரெண்டு ஸ்பூன் அதிகரிக்கும். ‘நாலு நாள் லீவு போட்டுட்டு எங்கேயாவது போகணும்’ என்று நான்கு நாள்களுக்கு ஒருமுறை தோன்றத்தான் செய்யும். ஆனால், பணத்துக்கு எங்கே போவது?

அகால விபத்துகளில் நண்பர்கள் உயிரிழக்கும்போது, ஓரிரு நாள்கள் மனம் அலைபாயும். பார்க்கும் வேலை மீதான அவநம்பிக்கையும் பற்றற்ற மனநிலையும் வந்து வந்து போகும். ‘எதற்காக இந்த வேலை? யாருக்காக இப்படி பொழுதெல்லாம் இங்கே கிடந்து சாகுறோம்? நமக்குச் சொந்தமானது என ஒருநாளும் இல்லையா? நினைத்ததைச் செய்து வாழவே முடியாதா?’ என்றெல்லாம் சிந்திப்போம். ஆனால், அந்த வேலை தரும் வருமானம் இல்லையென்றால், அடுத்த மாதத்தை ஓட்ட முடியாது என்பது கண் முன்னால் இருக்கும் நிஜம்.

பொருளாதாரம்தான் ஆண்பெண் உறவின் நெகிழ்ச்சியை, அதன் விகிதத்தைத் தீர்மானிக்கிறது. பொருளாதாரம் அதிகரிக்க அதிகரிக்க, ஆண்பெண் உறவின் நெகிழ்ச்சித்தன்மை குறைகிறது. அங்கு தனிமனித உணர்வு நிலை மேலோங்கி, விட்டுக்கொடுத்தல் பின்னுக்குப் போகிறது. மாறாக, பொருளாதார ஏணியின் கீழ் வரிசையில் இருப்போரிடம் விட்டுக்கொடுத்தல் இருப்பினும், அங்கு பொருளாதாரத்தை முன்னிட்டே சிக்கல்கள் ஏற்படு கின்றன. பாலினச் சமத்துவத்தின் முழுமை என்பது, பொருளாதாரச் சமத்துவத்தில்தான் சாத்தியம். நமது இதர பாகுபாடுகளை அப்படியே வைத்துக்கொண்டு பாலினச் சமத்துவத்தை எட்ட முடியாது!

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

நாம் அந்த அலுவலகத்தில்
ஒன்றாகப் பணியாற்றினோம்
உனக்கு உள்ளிருந்து தட்டச்சிடும் பணி
எனக்குப் பணி ஊர் வீதி அலைதல்
காலையில்
அனைவரும் அலுவலகத்தில் கூடுவோம்
நான் என் பையைத் தோள் மாட்டுவேன்
நீ உன் தாள்களை இயந்திரமேற்றுவாய்
என் கால்கள்
வீதியை அளந்து நகர
உன் விரல்கள்
எழுத்துருக்களை மிதிக்கும்
அச்சானவற்றைக் கொண்டுபோவேன்
அச்சாகவேண்டியவற்றைக் கொணர்ந்து தருவேன்
யாருமில்லாத தனிமையில்
நாம் அங்கே இருக்கும் தினங்களும் வந்தன
நீ என்னைக் கேட்டாய்
நான் தலைகவிழ்ந்து
என் பிய்ந்த செருப்பையே பார்த்துக்கொண்டிருந்தேன்
பிறகு
நான் ஐஸ் விற்பவனாகி
என் பனிப்பெட்டியை
மிதிவண்டியில் கட்டிச் செல்பவன் ஆனேன்
என் பணிக்கூடத்தில்
ஐஸ் வார்க்கும் பெண்ணை
நான் தனிமையில் சந்திப்பதே இல்லை.

- மகுடேசுவரன்

ன்னெய அடீங்கொ...
கொல்லுங்கொ...
கண்டதுண்டமா வெட்டிப்போடுங்கொ...
காவலுக்கு ஆள் போடுங்கொ...

நீங்கொ பார்த்து வெச்சிருக்கிற
மாப்புள்ளைக்கே என்னெக் கட்டிவெய்யுங்கொ...
கட்டிக்கெறென்.

அவனுக்குப் புள்ளெ பெத்துத்தரச் சொல்லுங்கொ
பெத்துக்கெறென்.

ஆனா
என்னிக்காவது ஒரு நா
எங்கெய்யாவது ஒரு வாட்டி
அவரு வந்து `வா போயர்றலாம்'னு
கூப்புட்டுப்போட்டார்னு வெய்ங்கொ...

என்ற அப்பன் மேலச் சத்தியமாச் சொல்றென்
போட்டது போட்டபடி கெடக்கெ
அப்பிடியே அவருகூடப் போயிர்ருவேன்... ஆமா!

- மகுடேசுவரன்


எதிர் உறவு

கிழக்கிலிருந்து
மேற்காகச் செல்கிறது
கதிர்
அதன்
அடியொற்றி வாழும்
நிழல்
என்றும் சென்றுகொண்டிருக்கிறது
மேற்கிலிருந்து கிழக்காக.

- மகுடேசுவரன்