
மக்களுக்கு அடையாளம் காட்டுவோம்!

``தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக மாற்றுவோம். ஆர்.கே நகர் தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக மாற்றுவோம்’' என்று சொல்லித்தான் கடந்த காலங்களில் ஆளும் கட்சி இங்கே இடைத்தேர்தலையும் பொதுத்தேர்தலையும் சந்தித்தது. தொடர்ந்து இரண்டு முறை `முதலமைச்சர் தொகுதி' என்ற பெருமையைத்தான் ஆர்.கே நகர் தொகுதியால் பெற முடிந்ததே தவிர, குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, சாலை வசதி, சுகாதார வசதி... போன்ற அடிப்படை வசதிகள் பலவற்றிலும் தொடர்ந்து அது பரிதாபமாகவே இருக்கிறது. இந்தச் சூழலில் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அங்கே மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, இப்போது ரத்தும் செய்யப்பட்டிருக்கிறது.
சரித்திரம் காணாத அளவுக்கு அங்கே ஓர் ஓட்டுக்கு நான்காயிரம் ரூபாய் வரை விநியோகிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை வருமானவரித் துறை கைப்பற்றியுள்ளதுதான் தேர்தல் ரத்து ஆனதற்கான காரணம்.
இந்தச் சோதனையில், சுமார் ஐந்து கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கப் பணம் சிக்கியிருப்பதோடு, இந்த இடைத்தேர்தலுக்காக 86 கோடி ரூபாய் அளவில் பண விநியோகம் நடந்ததற்கான ஆதாரங்களும் அம்பலமாகியிருக்கின்றன. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட யார் யார் மூலம் எவ்வளவு ரொக்கம் கைமாறியுள்ளது என்ற கணக்குவழக்குகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுவது இன்னும் அதிர்ச்சி. திருடனுக்குத் தேள் கொட்டியதைப்போல ‘இவையெல்லாம் பொய்யான ஆவணங்கள்’ எனச் சொல்வதைத் தாண்டி, சம்பந்தப்பட்டவர்களால் எந்த நிரூபணத்தையும் காட்ட முடியவில்லை.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அரசு மருத்துவர் ஒருவரே, ‘அந்த ஆவணங்களில் என் பெயரிட்டு ஐந்து லட்சம் ரூபாய் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது ஜெயலலிதாவுக்கு மருத்துவம் பார்க்க வெளிநாட்டு மருத்துவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் நட்சத்திர ஹோட்டலில் தங்கியதற்காகக் கொடுக்கப்பட்ட பணம்தானே ஒழிய, எனக்காகக் கொடுக்கப்பட்ட பணம் அல்ல' என்று சொல்லி, இந்த ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
`இங்கே வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பது ஜனம் அல்ல, பணம்தான்’ என்பது திருமங்கலம் தொடங்கி அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் வரை பல தேர்தல்களில் நிரூபணமாகிவிட்டது. இப்போது ஆர்.கே நகர் இடைத்தேர்தலிலோ இன்னும் பயங்கரம்.
அரசு கஜானாவுக்கு வரவேண்டிய பணத்தை எல்லாம் தங்களின் சொந்த கஜானாவுக்கு மடை மாற்றிக்கொண்ட இவர்களால்தான், இன்று தமிழ்நாடு அரசு 2.7 லட்சம் கோடி ரூபாய்க்குக் கடனாளியாகித் தவிக்கிறது. வருடாவருடம் 25 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்டவேண்டிய அவலநிலையில் தமிழ்நாடு அரசு இருப்பதும் இவர்களால்தான்.
`மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!', `மக்களால்தான் நாங்கள்!', `மக்களுக்காகத்தான் நாங்கள்!' என்று அரசியல்வாதிகள் வாய்ப்பந்தல் போட்டாலும், தேர்தல் சமயத்தில் சில எலும்புத் துண்டுகளை வீசுவதற்கான பிராணிகளாகவே மக்களை மதிக்கிறார்கள். வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் நடத்தப்படும் தேர்தலில், மக்களையே வாக்களிப்பதற்கான இயந்திரங்களாக நினைப்பதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல. இத்தகைய கேடுகெட்ட அரசியல்வாதிகளின் நடத்தையினால் தமிழகத்தில் மூன்றாவது தொகுதியாக இப்போது ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்றால், அது நம் முகத்தில் மூன்று முறை பூசப்பட்ட கரி என்று அர்த்தம்.