Published:Updated:

சொல் அல்ல செயல் - 1

சொல் அல்ல செயல் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
சொல் அல்ல செயல் - 1

அதிஷா, படம்: மஹி தங்கம்

மெரினாவில் பத்து பேர் கூடினாலே ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு, எப்போதும் மெரினா வட்டாரத்தில் அலெர்ட்டாகவே இருக்கிறது காவல் துறை. இளைஞர்கள், மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்து விடுவார்களோ என்ற அச்சம் அது. காரணம், அவர்கள் போராடுவதற்கான காரணங்களும் ஆட்சியாளர்களின் அலட்சியங்களும் அப்படியேதான் இருக்கின்றன.
சென்னையின் மையப்பகுதியில் அது பாரம்பர்யமான ஒரு ஹோட்டல். அஷ்டலட்சுமிகளும் விடுமுறையில் போய்விடுகிற மாதக் கடைசி.

சொல் அல்ல செயல் - 1

மிடில் க்ளாஸ் மக்கள் வந்து குவிகிற அந்த ஹோட்டலில், எனக்கு எதிரே அமர்ந்தவர் அசோகமித்திரன்போல இருந்தார்.

காலர் நைந்து அழுக்கேறிப்போயிருந்தது. அயர்ன் செய்யாத சட்டை, வியர்வை வழிய வந்து அமர்ந்தவரிடமிருந்து பக்தி மணம் கமழ்ந்தது. ஊதுவத்தி விற்கிறவராக இருக்க வேண்டும் என நினைத்தேன். என்சைக்ளோபீடியாக்கள் விற்கிறவர் என்பது தெரிந்தது.

பிரியாணியோடு பிஸியாக இருந்த என்னைப் பார்த்துப்  புன்னகைத்தார். எதிர்பாராமல் எதிர்கொள்ளும் புன்னகைகளை என்ன செய்வது எனத் தெரியாது. வாய் நிறைய பிரியாணியோடு புன்னகைத்தேன். அவர்,
`நீங்க வெளியூரா சார்... நான் மதுரை, இங்கே சின்ன வயசுல வந்திருக்கேன். பிரியாணி பிரமாதமா இருக்குமே' எனப் பேச ஆரம்பித்தார். நான் சாப்பிட்டபடி தலையாட்டிக்கொண்டிருந்தேன். அதிகம் பேசினால், நம்மிடம் என்சைக்ளோபீடியாக்களை விற்க ஆரம்பித்துவிடுவாரோ என்ற அச்சம்.

வெயிட்டரிடம் இரண்டு பரோட்டாக்களை மட்டும் பெரியவர் ஆர்டர் செய்தார்.

சில நிமிடங்களில் இரண்டு பரோட்டாக்கள் மட்டும் வந்தன. அந்த இரட்டையர்களைப் பார்த்தபடியே பெரியவர் எனக்கு எதிரே அமர்ந்திருந்தார். அவர் அந்தப் பரோட்டாக்களை வைத்து மாயாஜாலம் ஒன்றை நிகழ்த்துவாரோ என, எனக்கு ஆர்வமாக இருந்தது. ஆனால், அவர் அப்படி எல்லாம் செய்யவில்லை. பார்த்துக்கொண்டேதான் இருந்தார்.

நாம் சாப்பிடும்போது நமக்கு எதிரில் இருக்கிற நபர், அதுவும் பசியோடிருக்கிற நபர் சாப்பிடாமல் இருந்தால், அது நம்மை எப்படிப்பட்ட உணவையும் விழுங்கவே விடாது. `எப்போதான் இந்தாள் சாப்பிடுவார்?' என நினைத்தபடி அமர்ந்திருந்தேன். பத்து நிமிடங்கள் ஆகியும் அவர் சாப்பிடவில்லை. நானே வாயில் இருந்ததை விழுங்கிவிட்டு, அவரைச் சாப்பிடச் சொன்னேன். அவர் அப்பாவியாக, `இல்லைங்க சால்னா வரட்டும்னு காத்திருக்கேன்' என்றார்.

பத்து நிமிடங்கள் ஆகியும் சால்னா வரவில்லை. மங்கோலிய முகம்கொண்ட வடநாட்டு வெயிட்டரைப் பெரியவர் அழைத்தார். `வேறு எதுவும் வேண்டுமா?' என்றார் வெயிட்டர். `சால்னா... குருமா... ஹை' எனச் சன்னமாக இரந்து கேட்டார் பெரியவர். அவருடைய குரல் போக்குவரத்து நெரிசலில் ஒலிக்கிற சைக்கிள் மணிபோல் ஒலித்தது.

சொல் அல்ல செயல் - 1

வெயிட்டர் பெரியவரை உற்றுப்பார்த்துவிட்டு `சார் எக் மசாலா, சிக்கன் மசாலா, மட்டன் சாப்ஸ்...' என அடுக்க ஆரம்பித்தார். பெரியவர் பதறிப்போய், `இல்லைம்மா அதெல்லாம் வேண்டாம். பரோட்டாவுக்கு சால்னா போதும். அதைக் குடுங்க, ரொம்பப் பசியோட இருக்கேன்' என்றார்.

வெயிட்டர் கொஞ்சமும் தாமதிக்காமல் `அப்படிக் கொடுக்கிறது இல்லைங்க. நீங்க சைட் டிஷ் வாங்கினா வேணா கிரேவி ஃப்ரீயா தருவோம்' என்றார். `ஏங்க... சைட் டிஷ் வாங்க காசிருந்தா, நான் கிரேவியே வாங்கிக்க மாட்டேனா?' - பெரியவருக்கு இப்போது வியர்க்கத் தொடங்கியது.

`ஏங்க... குருமா இல்லாம எப்படிப் பரோட்டா திங்கிறது? எங்க ஊர்ல பரோட்டா வாங்கினா குருமாவும் குடுப்பாங்க. நீங்க என்ன புதுசா சொல்றீங்க?’ என அவர் அதிர்ந்து பேச ஆரம்பித்தார். ஆனால், வெயிட்டர் விடாப் பிடியாகச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். ஹோட்டல் மேனேஜரும், இப்போது அந்த வெயிட்டரோடு இணைந்துகொண்டார். `இல்லை சார்... நீங்க சைட் டிஷ் தனியாத்தான் வாங்கணும்’ என ஒரு போர்டையும் காட்டினார். `பரோட்டாவுக்குத் தனியாக சால்னா கேட்காதீர்கள்' என்றது அந்த போர்டு.

`ஏய்யா... காசுகொடுத்துதானே பரோட்டா வாங்குறோம். அதை எப்படிக் குருமா இல்லாம திங்கிறது... நீ தின்பியா?' - பெரியவர் கோபமாகப் பேச ஆரம்பித்தார். இப்போது அவருடைய குரல் ஆம்புலன்ஸைப்போல ஒலித்தது. ஒட்டுமொத்த ஹோட்டலும் அமைதியானது. எல்லோரும் அவரையே பார்க்க ஆரம்பித்தார்கள். அவர் தன்னிலை மறந்து அங்கே சண்டையிடத் தொடங்கினார். `ஏங்க... பரோட்டாவுக்கு சால்னா குடுக்க மாட்டேங்கிறான். நீங்களாச்சும் கேக்க மாட்டீங்களா?’ எனப் பொதுமக்களைத் துணைக்கு அழைத்தார். ஆனால், யாருமே அங்கு அவருக்காகப் பேச முன்வரவில்லை... என்னையும் சேர்த்துதான்.

ஹோட்டல்காரர்கள் அவரைச் சமாதானப்படுத்தி அமரவைக்க முயன்றனர். அவருக்கு இலவசமாக கிரேவி தருவதாகச் சொன்னார்கள். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை.

`அப்போ... ஒவ்வொருவாட்டியும் ஒவ்வொருத்தனும் இப்படிக் கத்திக் கூப்பாடு போட்டாத்தான் குருமா தருவீங்களாடா?' என அந்தப் பெரியவர் ஹோட்டலிலிருந்து கோபமாக வெளியேறினார்.  அவர் கண்களில் பசியைவிட இப்போது கோபம் நிறைந்திருந்தது. சில அடி தூரத்தில் அவர் தன் கைவசம் இருந்த என்சைக்ளோபீடியாக்களை, புனைந்துகொண்ட ஒரு புன்னகையோடு விற்றுக்கொண்டிருந்தார்.

`என்ன சார் நீங்க... கோவிச்சுக்கிட்டு வந்துட்டீங்க' என்றேன். `அவன் என்ன சார் எனக்கு ஃப்ரீயா குடுக்கிறது. பரோட்டா விற்கிறவன் சால்னாவும் குடுக்கணும். அப்படித்தானே இத்தனை நாளா இருந்துது? யார் மாத்தினது... யாரைக் கேட்டு மாத்தினாங்க? இப்படித்தான் ஃப்ரீயா குடுக்கிறாங்கனு எதையுமே கேட்காம விட்டுட்டோம். கேட்கணும் சார். நீங்களும் சும்மாதானே உட்காந்திருந்தீங்க... ஏன் கேக்கல? ஏன்னா உங்ககிட்ட காசு இருக்கு. வாங்க முடியும். என்கிட்ட இல்லை சார்.''

சொல் அல்ல செயல் - 1

நான் மௌனித்து நின்றேன்.

ஏன் எனக்கு அவரோடு நிற்கத் தோன்றவில்லை? அவருடைய சிறிய குரலுக்கு ஆதரவு கொடுக்கக் கூடத் தோன்றவில்லை? அவருடைய செயல் எனக்கும் மற்றவர்களுக்கும் கேலிக்குரியதாகத் தோன்றியது ஏன்? அவரைப்போல ஒரு சிறிய அநீதியை எதிர்த்துக் கேட்கும் எண்ணம் வரவில்லையே ஏன்? நான் நேரடியாக எதிலும் பாதிக்காத வரை எதைப் பற்றிய அக்கறையுமே இல்லாமல் வேடிக்கை மட்டுமே பார்ப்பேன் என்ற மனோபாவமா இது? விஷம்போல மூளை முழுவதும் கேள்விகள் பரவத் தொடங்கின.

பெரியவர் போராடியது வெறும் சால்னாவுக்காக மட்டும் அல்ல... ஓர் எளிய உரிமைக்காக. அவர் இத்தனை ஆண்டுகளும் அனுபவித்து வந்த ஓர் உரிமை மறுக்கப்படும்போது, எழுந்த எதிர்ப்பு உணர்வு அது.  இப்போது நாம் அதற்கு எதிராகக் கேள்வி எழுப்பவில்லை என்றால், எப்போதுமே எழுப்ப முடியாது என்ற அச்சம். அது ஏன் எங்களுக்கு வரவில்லை. இருந்தும், நாம் ஏன் மௌனித்து அதை ஏற்கிறோம்.
தன் உரிமைக்காக எதிர்த்துக் கேள்விகேட்டு, சண்டைபோடுகிறவனைக்  காட்டுமிராண்டி யாகவும்,  நம் மீது திணிக்கப்படும் அடக்கு முறைகளை அமைதியாக ஏற்றுக்கொள்வதை, நாகரிக மனிதனின் அடையாளமாகவும் கருத ஆரம்பித்துவிட்டோமா?

பெட்ரோல் விலை உயர்ந்தால் முன்பெல்லாம் அடிக்கடி போராட்டங்கள் நடக்கும்; பந்த் நடத்துவார்கள். ஆனால், இப்போதெல்லாம் பெட்ரோல் விலை ஏற்றப்பட்டால் முந்தைய நாள் இரவே க்யூவில் நின்று பெட்ரோல் போட்டுக்கொள்ள பழகிவிட்டோம். பெட்ரோல் விலை எதற்காக உயர்த்தப்படுகிறது என்ற கேள்வி நமக்கு எழுவதே இல்லை. அதற்காகப் போராடவோ எதிர்த்துக் குரல்கொடுக்கவோ யாரும் தயாராக இல்லை. பத்து கம்யூனிஸ்ட் தோழர்கள் சிவப்புக்கொடியோடு கத்திக் கூப்பாடு போட்டுக் கைதாவதோடு சரி. தனியார் பள்ளிகளின் அநியாயக் கல்விக்கட்டணம் பற்றி நமக்கு அநேகக் கோபங்கள் உண்டு. ஆனாலும், பிறக்கவே பிறக்காத குழந்தைக்காகவும்கூட அட்மிஷன்போட அர்த்த ராத்திரியில் படுத்துக்கிடக்கப் பழகிவிட்டோம்.

பள்ளிகளுக்கு அருகில் சிகரெட் விற்கக் கூடாது, மதுபானக் கடைகள் இயங்கக் கூடாது... எனச் சட்டம் இருக்கிறது. தினமும் காலையில் நம் வீட்டுக் குழந்தைகளைக் கொண்டுபோய் பள்ளிகளில் விடும்போது, அருகில் சிகரெட் விற்கிற கடைகளைப் பார்க்கிறோம்; டாஸ்மாக் கடைகளைக் காண்கிறோம். ஆனால், ஏன் அவை பற்றி எங்கும், யாருக்கும் புகார் தெரிவிப்பதில்லை, அந்தக் கடைகளை நீக்கக்கோரி போராட்டத்தில் இறங்குவதில்லை, அங்கெல்லாம் ஏன் நமக்குக் கேள்விகள் எழுவதில்லை?

போராட்டம் என்பது மிகப்பெரிய விஷயங்களுக்கானது எனத் தொடர்ச்சியாக நம்பவைக்கப்படுகிறோம். நம் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற அரசுப் பள்ளிகள் ஒழுங்காக இயங்காது; அடிப்படை வசதிகள் இருக்காது; ஆசிரியர்கள் நேரத்துக்கு வர மாட்டார்கள். அவற்றை எதிர்த்துக் குரல்கொடுக்க வேண்டிய கடமை நம்முடையது. ஆனால், நாம் அரசைக் குறைசொல்லிவிட்டு நம் குழந்தைகளைக் கொண்டுபோய் தனியார் பள்ளிகளில் சேர்ப்போம். அங்கிருந்து வெளியே வந்து அரசுப் பள்ளிகள் சரியில்லை, தனியார் பள்ளிகள் கொள்ளையடிக்கின்றன எனக் கொந்தளிப்போம். ஏன்... நம் பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளி ஒழுங்காக இயங்குகின்றனவா என்பதைப் பார்க்கவேண்டிய பொறுப்பு, நமக்குக் கிடையாதா?

நம் கண் முன்னே சூழல் அழிகிறது. லஞ்சமும் ஊழலும் மலிந்துவிட்டன. வளர்ச்சியின் பெயரால் விவசாய நிலங்களை அழிக்கிறோம். நீர்நிலைகளைக் காணவில்லை. மரங்கள் இல்லை. பதற்றம் வருகிறது. நம்மைச் சுற்றி என்னவோ நடக்கின்றன என அச்சம் வருகிறது. நம் மனசாட்சி எப்போதெல்லாம் நம் அழுக்குப்படாத வெள்ளைக்காலர்களைப் பிடிக்கிறதோ, அப்போதெல்லாம் மரக்கன்றுகள் நடுகிறோம். மெரினாவிலும் நெடுவாசலிலும் போராட்டம் என அறிந்து அங்கே ஓடுகிறோம். அன்னா ஹசாரே ஊழலை ஒழிக்க அழைக்கிறார் என்றதும் அவசரமாகப் புறப்படுகிறோம். ஆனால், நம்மால் அன்றாட வாழ்வில் சின்னச் சின்ன எதிர்ப்பு உணர்வுகளைப் பதிவுசெய்ய முடியாமல் மௌனிக்கிறோம்.

`மரம் தாத்தா' நாகராஜனை சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தேன். அற்புதமான உள்ளம் கொண்டவர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுகிற வள்ளலார் பற்றி படித்திருந்தாலும், அப்படி ஒருவரை நேரில் சந்தித்தது அதுதான் முதன்முறை. பெருந்துறை பக்கத்தில் இருக்கிற காஞ்சிகோவிலைச் சேர்ந்தவர். அந்தப் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மரங்களை ஒற்றை மனிதனாக நட்டு வளர்த்துவந்தார். கைத்தறி நெசவு வேலை பார்க்கிறவராக இருந்தாலும், இதற்காக யாருடைய உதவிக்கும் சென்றது இல்லை.

அவரே தனியாக விதை தேர்வுசெய்து, அதைச் செடியாக்கி, பிறகு நல்ல இடம் பார்த்து நட்டு, அதை ஆடு, மாடுகள் அண்டாமல் காத்து வளர்த்து மரமாக்கியிருக்கிறார். `அவரிடம் எதுக்கு இவ்ளோ சிரமங்கள்?' என விசாரித்தேன்.

`பாவம் ஸ்கூல் புள்ளைங்க செருப்புகூடப் போடாம வெயில்ல நடந்துபோகுதுக. அதைப் பாத்துட்டு எப்படி சாமி சும்மா இருக்க முடியும்?' என்றார். மலைப்பாக இருந்தது. அவருடைய நோக்கம் மிக எளிமையானது; நேரடியானது. எல்லோருக்கும் செருப்பு வாங்கித்தருவதும் ஒரு தீர்வுதான். ஆனால், அவர் அதற்கும் மேலாக சிந்திக்கிறவராக இருந்தார். `மரம் தாத்தா’ நாகராஜன் இந்தப் போராட்டத்தை 40 ஆண்டுகளாகத் தன்னந்தனியாகச் செய்துகொண்டிருக்கிறார். தன் 17-வது வயதில் தொடங்கிய தன்னளவிலான போராட்டம் இது. அவர் இன்றுவரை அதைத் தொடர்கிறார். எல்லாரிடமும் மரம் நட வலியுறுத்துகிறார். அவர் நட்டுவளர்த்த ஆயிரக்கணக்கான மரங்களின் நிழலை  மிதித்துச் செல்கிற யாருமே அவருக்கு நன்றி சொல்லிச் செல்வதில்லை. ஆனால், அவர் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. மெய்யான போராட்டங்கள் தன்னளவில் மகிழ்ச்சியைத் தருவது.

பரோட்டா - சால்னா போலத்தான். இங்கே ஒவ்வொன்றிலும் படிப்படியாக நாம் மாற்றப்பட்டோம்; ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டோம். நம் உணவுப்பழக்கம் மாறியது இப்படித்தான். சூரியகாந்தி எண்ணெய்தான் சிறந்தது என நம்பவைக்கப் பட்டது இப்படித்தான். கல்வி, தனியார் மயமானதும், மணல்கொள்ளையும் கிரானைட் கொள்ளையும் சகஜமானதும் இந்தவிதத்தில்தான்.  ஊழலை ஒழிக்க நம்மால் முடியாது... அதெல்லாம் `இந்தியன்’ தாத்தாவால், `ரமணா’வால்தான் முடியும் என நம்பினோம். பற்பசை விளம்பரங்களில் வருகிற டாக்டர்கள் எல்லோருமே, நிஜ மருத்துவர்கள் கிடையாது. ஆனால், அவர்கள் பரிந்துரைக்கும் `நம்பகமான?’ பேஸ்ட்டைத்தான் நாம் நம்பி ஏற்கிறோம். அவர்கள் சொல்வதை எல்லாம் உண்மை என்று நம்புகிறோம். நம்மை ஆள்பவர்களின் பலம் அதுதான். யார், எதைச் சொன்னாலும் நாம் நம்புவோம்.

சொல் அல்ல செயல் - 1

எதிர்த்துக் கேள்விகேட்க மாட்டோம். நம் மீது எதைத் திணித்தாலும் கேள்விகள் இன்றி ஏற்றுக்கொள்வோம். அந்த நம்பிக்கைதான் எத்தனை முறை ஊழல் செய்தாலும், அது ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டு தண்டனை கிடைத்தாலும், திரும்பத் திரும்பத் தேர்தலில் வாக்குக் கேட்டு நம் வீட்டு வாசல்களில் வந்து நிற்க வைக்கிறது.

எதையுமே எதிர்த்துக் கேள்விகேட்காத, எதற்குமே கோபப்படாத ஒரு சமூகம் நிச்சயம் பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கித்தான் பயணிக்கும். நிமிர்ந்த முதுகெலும்புகள் மீண்டும் வளைந்து குனியத் தொடங்கும். விழிப்புடன் இருப்பவரால்தான் தனக்கு நிகழும் அநீதியை அறிந்துகொள்ள முடியும். தனக்கு நிகழ்வது அநீதி என்பதை அறிந்தவரால்தான், அதை எதிர்த்து கேள்விகேட்க முடியும். அதை அறிந்து கொண்டால்... மீண்டும் ஆரம்பிக்கலாம்.

- கேள்வி கேட்கலாம்...