Published:Updated:

ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ்! - 1

ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ்! - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ்! - 1

கார்க்கிபவா

நீங்கள் வேலைக்குப் போகிறவரா? அலுவலகத்தில் உங்களுக்குப் பிடித்த ஒருவரை நினைத்துக்கொள்ளுங்கள். அவர் செய்யும் வேலைகளில் ஏதேனும் தவறு இருந்தால், அதை எடுத்துச்

ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ்! - 1

சொல்வீர்களா? அவரின் பெர்சனல் வாழ்க்கைக்குப் போதுமான நேரம் கொடுக்காமல் இருந்தால், அட்வைஸ் செய்வதுண்டா? ஆபத்து நேரங்களில் உதவுவது, கடன் கேட்டால் தருவது… இவையெல்லாம் நடக்குமா? இதில் பல சூழ்நிலைகளை நீங்கள் கடந்து வராமல் இருந்திருக்கலாம். ஒருவேளை நடந்தால் என்ன செய்வீர்கள்? வெயிட்.

இன்னும் சில கேள்விகள். அவரின் வாயிலிருந்து துர்நாற்றம் வீசினால்? அவரது சட்டையில் எப்போதும் வியர்வை வாடை யடித்தால்? முக்கியமான க்ளையன்ட் மீட்டிங்கில் அவர் மூக்கை நோண்டிக்கொண்டிருந்தால்?

முதல் பத்தியில் கேட்ட கேள்விகளில் பெரும்பான்மையானவற்றுக்கு `ஆம்' எனச் சொல்லியிருப்போம். இரண்டாவது பத்தியில் இருப்பனவற்றுக்கு அப்படிச் சொல்ல முடிகிறதா? நமக்குப் பிடித்தவர்கள் என்றாலும், அவருக்கு நல்லதுதான் செய்கிறோம் என்றாலும் இந்த விஷயங்களைப் பேசாமல் ஏதோ ஒன்று நம்மைத் தடுக்கிறது.

பெர்சனல் ஹைஜின். `அந்தரங்கத் தூய்மை' என ஒருவாறு தமிழ்ப்படுத்தலாம். செக்ஸ் கல்வி, அடிப்படை சட்டங்கள், குட் டச்... பேட் டச் எனப் பல முக்கிய விஷயங்களைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டோம். ஆனால், இன்னமும் ஒருவரின் ஹைஜின் தொடர்பான பிரச்னைகளை இப்படிக் கூச்சம் பார்க்காமல் நாம் பேசுவதில்லை. ஏன்? `அவர்கிட்ட சொல்லிட்டா, இனிமேல் அவர் எப்படி என்கூடப் பேசுவார்?' என்ற கேள்விதான் பலரின் பதிலாக இருக்கிறது.

கரீனா கபூர், பாலிவுட்டைத் தாண்டி இந்தியா முழுவதுமே ரசிகர்கள்கொண்ட ஒருவர். ஆஸ்கர் விழாவுக்கே சென்றாலும் கரீனாவால் நகம் கடிக்காமல் இருக்க முடியாது. பல பிரபலங்கள் கரீனாவை வாயும் விரலுமாகப் பார்த்துவிட்டு `நமஸ்தே'வோடு முடித்த கதைகள் எல்லாம் மும்பையில் பிரபலம்.

கரீனாவுக்கு நகம் பிரச்னை என்றால், ஜான் ஆபிரஹாமுக்குக் கால்கள். இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஜானால் கால்களை ஆட்டாமல் இருக்க முடியாது. அருகில் அமர்ந்திருக்கும் பலர் மேல் கால்கள் பட்டாலும், ஜானுக்கு அது தெரியாது. `ஓவர் ஆட்டமா இருக்கே' என வெளிப்படையாகவே அவரை விமர்சித்தது பாலிவுட்.

ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ்! - 1

பிராட் பிட், ஹாலிவுட்டின் மோஸ்ட் வான்ட்டட் ஹீரோ; கோடிக்கணக்கான பெண்களின் கனவு நாயகன். `இங்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்' படத்தில் நடித்த எலி ரோத்துக்கு, பிராடுடன் நடிப்பது பிடிக்கவில்லை. காரணம், அவர் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறைதான் குளிப்பாராம். ஒருவழியாக பிராடிடம் “உங்க ஸ்மெல் சரியில்லை” என ரோத் சொல்லிவிட்டார். அதற்கு பிராட் சொன்னாராம், “ஆமாம். சோப்புல அவ்ளோ விஷம் இருக்கு. அதான் குளிக்க மாட்றேன்.”

ஷாரூக் கான் தூங்கப் போகும்போது மட்டும்தான் ஷூக்களைக் கழட்டுவாராம். ஹாலிவுட் நடிகை மீகன் ஃபாக்ஸுக்கு நண்பர்கள் மத்தியில் எப்போதும் கெட்டபெயர்தான். டாய்லெட்டைப் பயன்படுத்தினால், ஃப்ளெஷ் செய்ய மறந்துவிடுவாராம். இதுபோன்ற மோசமான பழக்கங்களுக்கு யாரும் விதிவிலக்கு அல்ல. ஆனால், அவை எதுவுமே யாருக்கும் நல்லது செய்வதுமில்லை.

நம் மூச்சிலிருக்கும் புத்துணர்ச்சிதான் நாம் பேசும் வார்த்தைகளுக்கு பிராண்ட் அம்பாசிடர். காதுகள் நாம் சொல்வதைக் கேட்கும் முன்னரே, மூக்குகள் உணரத் தொடங்கிவிடும். நாம் சொல்வதற்குக் கேட்பவர் கொடுக்கப்போகும் அட்டென்ஷனை நம் சுவாசம்தான் பெரும்பாலும் முடிவுசெய்யும். நம்மிடம் ஒருவர் நெருங்கி வருவதற்கு, நம் டியோ வாசனை காரணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், விலகிச் செல்வதற்கு வியர்வை துர்நாற்றம் காரணமாக இருக்கக் கூடாதுதானே?

பெர்சனல் ஹைஜின் என்றால், மேலே சொன்ன வியர்வை, வாய் துர்நாற்றம் மட்டுமல்ல; அதற்கும் மேலே நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அது நம் கால் நகங்களின் நீளத்தில் தொடங்கி தலைமுடியில் ஒளிந்திருக்கும் பொடுகு வரை நீளும். சொல்லப்போனால், நம் உடலின் எல்லையைத் தாண்டி நம் சுற்றுப்புறம் வரை போகும். உங்கள் கைகளில் எப்போதும் தவழும் மொபைலை எப்படி வைத்திருக்கிறீர்கள்? உங்கள் பைக்கைச் சுத்தப்படுத்தும் துணியை கடைசியாக எப்போது துவைத்தீர்கள்?

ஒரு வருடமாக நீங்கள் அணியும் ஜட்டி கிழியும் வரை பொறுக்க வேண்டுமா? இன்னும் நிறைய பேச வேண்டும்.

நமக்கு ஷேவிங் செய்ய யார் கற்றுக்கொடுத்தது என நினைவு இருக்கிறதா? வேலைகள் அற்ற ஒரு ஞாயிறு மதியப்பொழுதில் அப்பாதான் நம்மை இழுத்து நிறுத்திக் கற்றுத்தந்திருப்பார். அதன் பிறகு, நம் நண்பர்கள் அவர்களது கன்னங்களில் விழுந்த கீறல்களை விளக்கி நம்மைக் காப்பாற்றியிருப்பார்கள்; நம் சிராய்ப்பைச் சிறப்பாக்கியிருப்பார்கள். அதைத்தான் நானும் செய்யப்போகிறேன். ஓர் அப்பாவின் அக்கறையோடும், நண்பனின் உரிமையோடும் சில பேசாப் பொருள்களைப் பேசப்போகிறேன். இது,  அழகாக்கும் முயற்சி அல்ல; முழுமையாக்கும் முயற்சி!

- பெர்சனல் பேசுவோம்...