
ஆர்.வைதேகி
டிவி-யில் மீண்டும் டிடி. இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் `அன்புடன் டிடி' நிகழ்ச்சிக்கு லைக்ஸ் குவிந்ததில் ஸ்வீட்டிக்கு செம சந்தோஷம்!
``சின்னத்திரைக்குள் டிடி வந்து 20 வருஷங்கள் ஆகப்போகுதாமே?''
``ஆமாம். 13 வயசுல நான் டிவி-க்குள்ள வந்தேன். அப்ப பெரிய ஆளா வரணும்கிற எண்ணமெல்லாம் இல்லை. `சொல்லிக்கொடுத்ததைத் தப்பு இல்லாம சொல்லிட்டா, வீட்டுக்குப் போயிடலாம்... ஜாலி!'ங்கிற எண்ணம் மட்டும்தான் இருந்தது. அப்புறம் ஒருகட்டத்துல வேலை பார்க்கணும், சம்பாதிச்சு வீட்டுக்குக் காசு கொடுக்கணும்னு தீவிரமா இருந்தேன். முழு அர்ப்பணிப்போடு உழைச்சேன்.
இப்பவும் ஷூட்டிங் ஆரம்பிச்சா, எத்தனை மணிக்கு முடியும்னு தெரியாது. ஆனா, பத்து நிமிஷம்கூட ஷூட்டிங்குக்கு என்னால் லேட்டா போக முடியாது. `இப்பவுமா நீ சீக்கிரம் கிளம்பணும்?'னு என் கணவரும் அக்காவும் கேட்பாங்க. எல்லாருக்கும் முன்னாடி முதல் ஆளா நான்தான் ஸ்பாட்ல இருப்பேன்.
என் வேலைதான் என் முதல் காதல்!''

``உங்கள் ரோல்மாடல் யார்... ஒரு தொகுப்பாளினியா நீங்க இன்னும் மிஸ் பண்றதா நினைக்கிறது எதை?''
``என் அக்கா டைம்ல இருந்த எல்லா தொகுப்பாளர்களையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் அக்கா, ஜேம்ஸ் வசந்தன் சார், உமா பத்மநாபன் இவங்க எல்லாரும் என்னோட ஃபேவரிட்ஸ். அவங்க பேச்சுல உள்ள அந்த அழகுத் தமிழ் என்கிட்ட இல்லையேன்னு அடிக்கடி நினைப்பேன்.''
`` `நளதமயந்தி' படத்துக்குப் பிறகு, மீண்டும் சினிமா. `பவர் பாண்டி' அனுபவம் எப்படியிருந்தது?''
``ஒரே ஒரு சீன்தான். ஆனா, அதுல நான்தான் எல்லாம்; என் ஷோ மாதிரி. அதுவும் தனுஷ் சார் மாதிரி ஒருத்தர்கிட்டயிருந்து இப்படியொரு வாய்ப்பு வரும்போது `வேணாம்'னு சொல்ல யாருக்குத்தான் மனசு வரும்? படத்துல நான் மிகவும் முக்கியமான ஒரு கருத்து சொல்வேன். அந்தக் கருத்து எனக்கும் தனிப்பட்டமுறையில் ரொம்பவே பிடிக்கும். படத்துல நான் சொல்லியிருக்கும் அந்தக் கருத்து, குழந்தைங்க, பெற்றோர்னு எல்லாருக்குமானது.''
`` `பவர் பாண்டி'க்குப் பிறகு, டிடி-யை முழுநேர நடிகையாகப் பார்க்கலாமா?''
``நல்ல வாய்ப்பு வந்தா நான் ரெடி. யார்கூட வேலை பண்றோம், என்ன மாதிரியான கதைங்கிறதைப் பொறுத்து முடிவு பண்ண வேண்டியதுதான்.''
``டிடி என்றால் கலாய்... கலகலப்பு. இதுதான் எல்லோருக்கும் தெரிந்தது. உண்மையிலேயே, டிடி வீட்டில் எப்படி?''
``நான் ரொம்ப ரிசர்வ்டு. எதையும் வெளியே சொல்லாமல் மனசுக்குள்ளேயே வெச்சுக்குவேன். அம்மா, கணவர்னு எல்லாரும் என்னைப் பற்றிச் சொல்ற ஒரு விஷயம், `அவளுக்கு அழுத்தம் அதிகம்'கிறதுதான். மனசுல உள்ளதைச் சொல்லிடுறது நல்லதுதான். ஆனா, நான் சொல்ல மாட்டேன். அது என் வழக்கம்.
103 டிகிரி காய்ச்சல் அடிச்சாக்கூட டேக் முடியுற வரைக்கும் வெளியே அதைக் காட்டிக்க மாட்டேன்.
`நீ இப்படி எல்லாத்தையும் மனசுக்குள்ளேயே வெச்சுக்கிறது சரியில்லை'னு நிறையப் பேர் சொல்வாங்க. எனக்கு நண்பர்கள் மிகவும் குறைவுனு சொன்னா நம்புவீங்களா? ஆனா, அதுதான் உண்மை.''
``உங்களைப் பற்றி வரும் விமர்சனங்களை, கிசுகிசுக்களை எப்படி எடுத்துப்பீங்க?''
``நான் யாரையுமே காயப்படுத்துற மாதிரி பேச மாட்டேன். ஆனா, என்னைப் பற்றி வரும் ஒவ்வொரு விமர்சனமும் என்னைக் காயப்படுத்தும். ஆனால் என்ன செய்ய... இந்த உலகம் முழுக்க முழுக்க விமர்சகர்களால்தானே நிறைஞ்சிருக்கு?''