
நா.சிபிச்சக்கரவர்த்தி
#அந்தஒருநாள்
போலீஸ் ஆகணும் என்பதுதான் என் கனவு. சின்ன வயசுல இருந்தே அந்தக் கனவோடுதான் வளர்ந்தேன். என் கனவை நனவாக்க என்னை முழுதாகத் தகுதிப்படுத்திக்கிட்டேன். திருநங்கை என்பதால், என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. சட்டரீதியான உதவியோடு எஸ்.ஐ-க்கான எழுத்துத் தேர்வு மற்றும் உடல்தகுதித் தேர்வில் அடுத்தடுத்து வெற்றிபெற்றேன். அப்போதும் நிராகரிக்கப்பட்டேன். 3.11.2015 அன்று ‘அரசுப் பணிகளில் திருநங்கைக்குத் தனி இடம் ஒதுக்க வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நான் எஸ்.ஐ ஆனேன். எனக்கும் ஒடுக்கப்படும் திருநங்கைகளுக்கும் நம்பிக்கை அளித்த அந்த நாள், ஒரு வரலாற்றின் வெளிச்ச நாள்.

#படிப்பினை
வீட்டைவிட்டு வெளியே வந்தேன். தனியா வாழ முடியும்னு கத்துக்கிட்டேன். வேலைக்குச் சேர்ந்தப்ப நம்மாலும் உழைத்து முன்னேற முடியும்னு உணர்ந்தேன். நிர்வாகப் பொறுப்பை அனுபவத்தால் பெற்றேன். இப்போ என் ஆசைப்படி காவல் துறை பணி கிடைச்சிருக்கு. பொதுமக்களுக்கு நேர்மையாகச் சேவை செய்வேன். ஏன்னா, அநீதியினால் ஏற்படும் வலி என்னால் அதிகமாவே உணர முடியும்.


#உணர்ந்தேன்
ப்ளஸ் டூ முடிச்சுட்டு கல்லூரியில் சேர்ந்த புதுசு. லைஃப் ரொம்ப கலர்ஃபுல்லா மாறுச்சு. அப்போதான் என் காலேஜ் சீனியர் பசங்களை எனக்கு முதன்முதல்ல பிடிக்க ஆரம்பிச்சது. என்கூடப் படித்த தோழிகளுடன் பேசும்போதும் பழகும்போதும்தான் எனக்குள் இருந்த பெண்மையை உணர்ந்தேன்.


#புரியாதபுதிர்
திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீட்டை அரசு தர மறுப்பதும், வேலைவாய்ப்பை தனியார் நிறுவனங்கள் தர மறுப்பதும்தான் புதிராகவே உள்ளது.

#ஆச்சர்யம்
என் சமூகத்தில் உள்ளவங்க நிறைய பேரு படிப்பாங்க, உயர் பதவிக்குப் போவாங்கனு நம்பினேன். இந்தச் சமூகம் மாறும்னு எண்ணினேன். அந்தக் கனவை நிறைவேற்றுபவர்களில் ஒருவராக நானே இருப்பதை நினைத்தால், ஆச்சர்யம்தான்!
