
அதிஷா, படங்கள்: கே.ஜெரோம்
முதலில் சில கேள்விகள்...
1. சாலையில் காவல் துறை அதிகாரிகள் இல்லாத நேரங்களில் எல்லோரும் போக்குவரத்து விதிகளை மீறும்போது, நீங்களும் கொஞ்சமாக மீறியது உண்டா?
2. புத்தம் புதுப் படத்தைத் திருட்டு டிவிடி-களில் பார்த்தது உண்டா அல்லது ஆன்லைனில் டவுன்லோடு செய்யும் வழக்கம் உண்டா?
3. சாலையோரங்களில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டா?
4. உங்களுக்கோ உங்கள் உறவினருக்கோ லைசென்ஸ் வாங்க, லஞ்சம் கொடுத்திருக் கிறீர்களா?
5. ரயில் பயணங்களில் டி.டி.ஆ-ரைக் கவனித்து அட்ஜஸ்ட் செய்து சீட் பெற்றது உண்டா?
6. பொது இடங்களில் க்யூவில் நிற்காமல் நடுவில் புகுந்து கோல்மால் செய்தது உண்டா?
7. நம் வீட்டுக் குப்பைகளைப் போகிறபோக்கில் தெருவில் வீசி எறிந்தது உண்டா?
இப்படி, இன்னும் ஏழெட்டு டஜன் கேள்விகள் கேட்கலாம். இவை எல்லாமே தினம் தினம் எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் சகஜமாக நாம் செய்து கொண்டிருக்கும் அன்றாடச் செயல்கள். இவற்றில் மூன்றையாவது செய்யாதவர் (நான் உள்பட) எவரும் இருக்க முடியாது. இவை எல்லாம் தவறு என நமக்குத் தெளிவாகத் தெரியும். இருந்தாலும், இதைச் செய்வதில் அச்சமோ கூச்சமோ நம்மில் பலருக்குக் கிடையாது.

ஒரு நாடு வல்லரசாகிவிட்டதா என்பதை, அந்த நாட்டு மக்களுக்கு `அவசரத்துக்கு ஒதுங்க' நூறு சதவிகிதம் சுத்தமான கழிவறை வசதி கிடைக்கிறதா என்பதைக்கொண்டு தாராளமாக அளவிடலாம். காரணம், உலகின் ஆகச்சிறந்த மகிழ்ச்சி என்பது பல மணி நேரம் கடுமையாகக் கட்டுப்படுத்தி, கடைசியில் கண்டடையும் கழிவறைகளில் தான் இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு, தோழி லதாவோடு கோவையிலிருந்து சென்னைக்குக் கிளம்பினேன். லதா, நிறையவே பயணிப்பவர்; வடகிழக்கு மாநிலங்களில் தனியாகவே பல மாதங்கள் அலைந்து திரிந்தவர். ஆனால், பேருந்துப் பயணங்கள் என்றால் மட்டும் அவருக்கு எப்போதும் வெறுப்புதான். காரணம், கழிவறை வசதிகள். பேருந்துப் பயணம் என்றால், எட்டு மணி நேரத்துக்கு முன்பே தண்ணீர், பழச்சாறு முதலானவற்றை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவது அவருடைய வழக்கம். அதை அன்றைக்குத்தான் அறிந்து கொண்டேன். வருத்தமாக இருந்தது.
லதாவுக்கு இவை எல்லாம் பழக்கமாகி விட்டதாகச் சொன்னார். அவரால் ஒன்றரை நாள்கள் வரைகூட சிறுநீர் கழிக்காமல் இருக்க முடியும் என்றார். ``ஆபத்துப்பா'' என்றேன். ``வேறு வழியில்லை'' என்றார். பேருந்துப் பயணங்களின்போது அவருடைய தோழிகள் வயதானவர்கள் பயன்படுத்தும் டயாப்பர்கள் பயன்படுத்துவதைப் பற்றிக் குறிப்பிட்டார்.
காலை 5:30 மணிவாக்கில், பேருந்து கோயம்பேடு பேருந்துநிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. வெயிலின் தாக்கமும், அளவுக்கு அதிகமாகக் குடித்த தண்ணீரும் என் சிறுநீர்ப் பையைத் திரி கிள்ளிய கிரானைட்போல மாற்றியிருந்தன. எந்த நேரத்திலும் அது வெடித்துவிடுமோ என்ற அச்சத்துடன் அமர்ந்திருந்தேன். நான் மட்டும் அல்ல, இறங்குவதற்காகப் பேருந்தின் சீட் நுனியில் காத்திருந்த எல்லோருமே மனிதவெடிகுண்டுகளைப் போலத்தான் இருந்தனர்.
கோயம்பேட்டின் நீண்ட சுவரையொட்டி அப்போது மெட்ரோ ரயில் பாதைக்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அதற்கான கட்டுமானப்பொருள்கள் குவித்துவைக்கப்பட்டிருந்தன. எல்லோரும் பேருந்தைவிட்டு இறங்கியதும் முதலில் ஓடியது அங்குதான். எல்லாம் சுபமாக முடிந்த பிறகுதான், சென்னையின் காற்று என் நுரையீரலை நிரப்பியது.
கோயம்பேடு பேருந்துநிலையத்தை ஒட்டி இருக்கும் இந்த வெளிச்சுவரை `தி கிரேட் இந்தியன் வால் ஆஃப் யூரின்' என்று தாராளமாக அழைக்கலாம். கோயம்பேட்டில் மட்டும் அல்ல, இந்தியாவின் எந்தப் பேருந்துநிலையத்துக்குச் சென்றாலும், எந்த ரயில்நிலையத்துக்குச் சென்றாலும் அதன் அருகில் இத்தகைய நீண்ட சுவர் ஒன்றை நீங்கள் காண முடியும். அது பன்னெடுங்காலமாகச் சிறுநீர் கழிப்பதற்கு என்றே நேந்துவிடப்பட்ட சுவராக இருக்கும். அந்தச் சுவரில் `இது, நாய்கள் சிறுநீர் கழிக்கும் இடம்', `சிறுநீர் கழித்தால், நாசமாகப்போவீர்கள்' என்பது மாதிரியான நிறைய எச்சரிக்கைகளை எழுதிவைப்பார்கள். முருகர், இயேசு, மசூதி படங்கள் எல்லாம் போட்டுவைத்திருப்பார்கள். ஆனால், எதுவுமே நம்மை முடக்காது. சாதியோ, மதமோ, தேசப்பற்றோ எதுவுமே நம்மைத் தோற்கடிக்க முடியாத புரட்சிகர ஸ்தலமாக இந்தச் சிறுநீர்ச் சுவர்கள் திகழ்கின்றன. அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் என் இயற்கை அழைப்பை முடித்துவிட்டு வெற்றியோடு திரும்பிய பிறகு, ஒரு ஆட்டோ பிடித்து லதாவுடன் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன்.
``தினமும் இந்த நேரத்துக்கு, வெளியூர்லருந்து கோயம்பேடுக்கு ஒரு நாளைக்கு எத்தனை பேர் வருவாங்க?''
``சுமாரா... அஞ்சாயிரம் பேர்.''
``இல்லை, ஜாஸ்தி இருக்கும். தினமும் 500 பஸ்களாவது சென்னைக்கு வருதுனு வெச்சுப்போம். ஒரு பஸ்ஸுக்கு 50 பேர்னா, 25 ஆயிரம் பேர்.''
``அவ்ளோலாம் இருக்காதுப்பா.''
``சரி, அதுல பாதின்னு வெச்சுக்குவோம்.
12 ஆயிரம் பேர். அத்தனை பேர்ல ஆறாயிரம் பேர் ஆண்கள் இருப்பாங்களா? அத்தனை பேரும் எங்கே யூரின் போறாங்க?''
``பாதிப் பேர் வீட்ல போவாங்க. மீதிப் பேர் என்னாட்டாம்... அந்தச் சுவர் பக்கமா.''
``ஒரு நாளைக்கு ஆறாயிரம் பேர்னா, ஒரு மாசத்துக்கு ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேர். ஆனா, ஏன் யாருக்குமே பஸ் ஸ்டாண்டு உள்ளே இருக்கிற டாய்லெட்டைப் பயன்படுத்தணும்னு தோணுறதில்லை?''
``அது தூரமா இருக்குல்ல. இப்போ என்ன... அதுக்குப் போராட்டமா? அரசாங்கம் ஒழுங்கா, சுத்தமா கழிவறைகளைத் திறந்துவெச்சா நான் ஏன் பாஸ் அங்கே போகப்போறேன்?'' - நக்கலான புன்னகையுடன் கேட்டேன்.
லதாவும் புன்னகைத்தார்.
``நீ யூரின்போன இடத்துல நிறைய கன்ஸ்ட்ரக்ஷன் மெட்டீரியல்ஸ் இருந்ததைப் பார்த்தியா? ஒவ்வொரு நாளும் நம்மைப்போல ஆறாயிரம் பேர் யூரின் போற அந்த மெட்டீரியல்ஸைத்தான் அந்த வொர்க்கர்ஸ் கைகளால் எடுத்து தினமும் வேலைசெய்வாங்க. யோசிச்சுப்பாரு... அப்படிப்பட்டப் பொருளை எடுத்து உன்னால் வேலைசெய்ய முடியுமா? அதை உன்னால் ஏத்துக்கத்தான் முடியுமா? இருந்தும் ஏன் அங்கே யூரின் போற? ஏன்னா, அலட்சியம். அங்கே யூரின் போனா, யாரும் உன்னைக் கேள்வி கேட்க மாட்டாங்கங்கிற தைரியம். அதானே?'' - தீர்க்கமாக விழுந்தன லதாவின் சொற்கள்.
அடுத்த சில நாள்களுக்கு லதாவின் கேள்வியைக் கங்காருபோல மனதில் சுமந்தபடிதான் திரிந்தேன். நான் இதுவரை பல நூறு முறை சாலையோரங்களில் சிறுநீர் கழித்திருக்கிறேன். தமிழ்நாட்டின் பல இடங்களில், இந்தியாவின் பல இடங்களில், பேருந்துநிலையச் சுவர்களில் எங்கெல்லாம் கட்டட வேலைகள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் சிறுநீர் கழித்திருக்கிறேன். எங்கெல்லாம் டிரான்ஸ் ஃபார்மர்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம்... குழாய், செங்கற்கள், ஜல்லி, மணல் இருக்கும் சில இடங்களில் பொருத்தப்படவேண்டிய டிரான்ஸ்ஃபார்மர்கள்கூட இருந்திருக்கின்றன, அதன் மீதெல்லாம் என் சிறுநீர் பாய்ந்திருக்கிறது. நான் மட்டுமல்ல, நம் சமூகத்துக்கே இந்தக் குணம் எப்போதும் உண்டு. நாம் என்னதான் உலக அநீதிகளுக்கு எதிராகப் போராடும் போராளிகளாகவே இருந்தாலும், சிறுநீர் விஷயத்தில் ஒரே ரகம்தான்.
ஆனால், நாம் சிறுநீர் கழிக்கும் இந்த இடம், இந்தப் பொருள் இன்னொரு மனிதனால் கையாளக்கூடிய ஒன்று என்ற சுரணையே ஏன் நமக்கு இல்லை? மனிதனின் ஆதாரமான குணங்களில் முக்கியமானது இந்த அலட்சியம். சக உயிர் குறித்த அலட்சியம். தனக்குக் கீழ் இருக்கிறவர்களைப் பற்றிய அலட்சியம். அதுதான் நம்மைத் தொடர்ச்சியாக இத்தகைய செயல்களில் ஈடுபடுத்துகிறது. இன்னொரு மனிதன் நம்முடைய மலத்தையும் சிறுநீரையும் கைகளால் அகற்றுவதையும், அதே மனிதன் நம் மலம் நிறைந்த மலக்குழிகளில் விழுந்து மடிவதையும்கூட `விதிப்பயன்' என்று கடந்துபோகும் மனநிலை உருவாவது அங்கிருந்துதான்.
சென்னை முழுவதும் சில வருடங்களுக்கு முன்பு, `நம்ம டாய்லெட்' என்ற பெயரில் ஸ்மார்ட் கழிவறைகளை ஊர் முழுக்கத் திறந்துவைத்தார்கள். உள்ளேயே ஓர் ஆள் குடும்பத்தோடு குடியிருக்கக்கூடிய அளவுக்கு சகல வசதிகளும் பொருந்திய அற்புதமான சுத்தமான சுகாதாரமான கழிவறைகள். ஃபுல்லி ஆட்டோமேட்டிக். ஆனால், அதை நாம் என்ன செய்தோம்? அவற்றை எப்படியெல்லாம் அசுத்தப்படுத்தி நாசம் பண்ண முடியுமோ, அத்தனையும் செய்து அவற்றையும் இன்னுமோர் பொதுக்கழிவறையாக மாற்றிவிட்டோம். இப்போது ஸ்மார்ட் கழிவறைகள் எல்லாம் அவை இருக்கும் வழியைக் கடக்கவும்கூட முடியாத அளவுக்கு அத்தனை `சிறப்பாக'ச் செயல்படுகின்றன.
ஊரெல்லாம் `பொதுக் கழிவறைகள் இல்லை' என்று போராடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு, இருக்கும் பொதுக் கழிவறை களைத் தூய்மையாகப் பயன்படுத்துவது முக்கியம். ஆனால், அதைச் செய்ய மாட்டோம். தூய்மையற்றக் கழிவறையின் வாசலிலேயே கண்களையும் மூக்கையும் பொத்திக்கொண்டு, அவசரமாக நம்முடைய வேலையை முடித்து விட்டுத் திரும்புவதுதான் நம்முடைய வழக்கம்.
வெஸ்டர்ன் டாய்லெட்டிலேயே டிஷ்யூ பேப்பரைப் போடுவது, யூரினிலிலேயே பபுள்கமைத் துப்புவது, மாதவிடாய் பேடுகளை அப்படியே போட்டுவிட்டு வருவது எனக் கழிவறைகளின் மீதான நம் அலட்சியம் மிகப்பெரியது. ஏன் இந்த அலட்சியம்? அப்படிச் செய்வதால், நம்மை யாரும் தண்டிக்க மாட்டார்கள் என்பது ஒரு பக்கம் என்றால், கழிவறையைச் சுத்தப்படுத்தும் மனிதர்கள்குறித்து நமக்கு எந்தவித அக்கறையும் இல்லை என்பது மற்றொரு பக்கம். அவற்றை எல்லாம் அவர்கள் தங்களுடைய கைகளால் கையாள வேண்டி யிருக்கும் என்ற சித்திரம் நம் கண்முன்னே வருவதில்லை. அந்த மக்கள் அதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்கிற மனோபாவம்.
சமூக விழிப்பு உணர்வு தொடங்கவேண்டிய புள்ளி இதுதான். முதலில் நம்மை நாமே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டியுள்ளது. சகமனிதன் குறித்து நமக்கு எந்த அளவுக்கு அக்கறை இருக்கிறது என்பதுதான், அதன் அளவீட்டு முறை. அந்த ஸ்கேலில் உயர்த்தப் படவேண்டியது மனிதாபிமானமும் கருணையும். குறைக்கப்படவேண்டியது அலட்சியம்.
இப்போதெல்லாம் போக்குவரத்துக் காவல் துறையினர் லஞ்சம் வாங்கும் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகின்றன. அவர்கள் லஞ்சம் வாங்குவதை வைத்து, குறும்படம் தொடங்கி பல படைப்புகள் வந்துவிட்டன. செய்தி சேனல்களில்கூட ஒளிபரப்புகிறார்கள். ஆனால், யோசித்துப்பார்த்தால் அவர்கள் லஞ்சம் வாங்கவில்லை என்றால் நாம் என்ன செய்வோம்? காவல் துறை அதிகாரி இல்லாத டிராஃபிக் சிக்னல்கள் மீது நமக்கு மரியாதை இருந்திருக்கிறதா? ஹெல்மெட் அணிவதும், காரில் சீட் பெல்ட் அணிவதும் நம்முடைய நலனுக்குத்தான் எனச் சொன்னாலும், அதைக் காவல் துறை அதிகாரிகளிடம் பிடிபடும் வரை செய்ய மாட்டோம். காவல் துறை அதிகாரி இல்லை என்ற தைரியத்தில் ஒருவழிப் பாதையில் எத்தனை முறை சென்றிருப்போம்! சாலைகளில் அரசு விதிகளைவிட காவல் துறையினரின் லஞ்சம்தான் நம்மை ஒழுங்காக வைத்திருக்கிறதா? அப்படி ஓர் ஊழல்தான் நம்மைக் கட்டுப்படுத்துகிறது என்றால், ஊழல் ஒழிப்புக்கான முதல் புள்ளி எது?
பழநி தொடங்கி திருப்பதி வரை நம்முடைய கோயில்களில் இந்தக் காட்சியை எப்போதும் காணலாம். வேட்டி கட்டிய ஒரு பணக்காரர் எப்பாடுபட்டாவது கோயில் ஆள்களைக் `கவனித்து' சிறப்புத் தரிசனம் செய்வார் அல்லது க்யூவின் நடுவில் புகுந்துவிட முயன்று கொண்டிருப்பார். கோயில்களிலும்கூட இப்படிச் சிறப்பாகக் கவனிப்பவர்களைக் கருவறைக் குள்ளேயே அழைத்துச்சென்று உட்காரவைத்து சிறப்பு செய்வார்கள். பொதுஜனமோ விக்கிரகத்தைக்கூடப் பார்க்க முடியாமல், மைக்ரோ விநாடிகளில் தரிசனம் முடிக்கப்பட்டு விரட்டப்படுவார்கள். கடவுளின் இருப்பிடம் எனக் கருதப்படும் ஓர் இடத்தில்கூட நம்மால் எப்படி செல்வாக்கை, அந்தஸ்தைப் பயன்படுத்த முடிகிறது? லஞ்சம் கொடுக்க முடிகிறது?
திருப்பூர் நண்பர் ரமேஷ், முழு நேரமும் தியேட்டர்களின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் பேசக்கூடியவர். `பத்து ரூபா பாப்கார்ன் நூறு ரூபாய்க்கு விக்குறான் சார். பார்க்கிங் ஒரு மணி நேரத்துக்கு முப்பது ரூபா. எவன் அப்பன் வீட்டு சொத்து சார் இது? இதுபோக டிக்கெட்டுக்கு 150 ரூபா நொட்டணும்' என்று கொந்தளிப்பார். தியேட்டர் கொள்ளைகளைத் தட்டிக்கேட்க, எல்லோரிடமும் தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால், அவருக்கு ஒரு பழக்கம் உண்டு. அது படங்களைத் திருட்டுத்தனமாக டிவிடி-யிலும் டாரன்டிலும் பார்ப்பது. `இது ஒண்ணும் கொலைக் குற்றமில்லையே. அவங்க டிக்கெட் விலை ஏத்திட்டாங்க. அதனால்தான் நான் இதைச் செய்றேன்' என்பதுதான் ரமேஷின் லாஜிக். சரிதானே!

ஒரு திரைப்படம் ஒற்றை மனிதனின் உழைப்பா? அது பல ஆயிரம் பேருடைய உழைப்பு அல்லவா? தியேட்டர்காரர்கள் அடிக்கும் கொள்ளைக்கு இதுதான் தீர்வா? இப்படிப்பட்ட மலினமான தீர்வுகள்தான் ஆபத்தானது. ஒரு திருட்டுக்கு எதிராக, இன்னொரு திருட்டை முன்வைப்பது. உங்கள் வீட்டில் திருட்டு டிவிடி கைப்பற்றப்பட்டால், குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒரு வருடம் உங்களை உள்ளே வைக்க முடியும் தெரியுமா?
தமிழ்நாட்டில் கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருக்கும் எத்தனை பேருக்கு சரியாக கார் ஓட்டத் தெரியும் என ஒரு பட்டியல் எடுத்தால், அதில் லட்சக்கணக்கானவர்கள் சிக்குவார்கள். காரணம், நம்முடைய லைசென்ஸ் வழங்கும் முறை அப்படிப்பட்டது. ஒழுங்காக கார் ஓட்டக் கற்றுக்கொண்டு லைசென்ஸ் வாங்குவதில், நமக்கு என்ன தயக்கம்? `லஞ்சம் கொடுத்தால் வேலை முடியும் என்றால், ஏன் மெனக்கெட வேண்டும்?' என்ற அலட்சியம். ஆனால், கார் லைசென்ஸுக்கு லஞ்சம் வாங்குகிறார்கள் எனத் துடிப்போம்.
நம்முடைய சின்னச் சின்ன விதிமீறல்கள் பெரிய பாதிப்பை உண்டாக்குவது, நம்மிலும் எளியோர் மீதுதான். அது எப்போதும் அப்படித்தான். குடித்துவிட்டு கார் ஓட்டக் கூடாது என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால், படித்தவர்கள் பல கோடி ரூபாய் சொகுசு கார் வைத்திருப்பவர்கள்தான் தொடர்ந்து அதைச் செய்கிறார்கள். அதனால் பாதிக்கப்பட்டு மடிந்துபோவது பிளாட்பாரவாசிகள்தானே. ஆனால், இப்படி கார் ஏற்றிக் கொன்ற எத்தனை பேருக்கு உரிய தண்டனை கிடைத்திருக்கிறது? கோயிலில் தன் செல்வாக்கை, பணபலத்தைப் பயன்படுத்தும் ஒருவனால், அப்பாவி பக்தர்கள் காத்திருப்புக்கு உள்ளாகிறார்கள். திருட்டு டிவிடி-யில் படம் பார்ப்பதால், பல கோடி ரூபாயைச் சம்பளமாகப் பெறும் எந்த சூப்பர் ஸ்டாருக்கும் பாதிப்புகள் வருவதில்லை. பாதிப்புகள் எல்லாமே சினிமாவை நம்பிப் பிழைக்கும் எளிய தொழிலாளர்களுக்கே.
இங்கே நாம் செய்யும் எல்லா தவறுகளுக்குப் பின்னாலும் அறச்சீற்றம் நிறைந்த ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. `அரசு, கக்கூஸ் கட்டவில்லை. அதனால் சாலையில் சிறுநீர் கழிக்கிறேன். தியேட்டரில் டிக்கெட் விலை ஏத்திட்டாங்க. அதனால் திருட்டு டிவிடி-யில் படம் பார்க்கிறேன். கார் லைசென்ஸ் வாங்க லஞ்சம் கேட்கிறார்கள். அதனால் நான் கொடுக்கிறேன்' என்பது மாதிரி நம்முடைய அறமற்றச் செயல்கள் அனைத்துக்கும் பின்னால் ஒரு காரணம் வைத்திருக்கிறோம். நமக்கு எது தேவையோ, அதுவே அறம் என்றாகிவிட்டது.

சக மனிதனின் இன்னல்கள்குறித்து கவலையே இல்லாத சமூகத்துக்குத் தன்னுடைய உரிமைகளுக் காகப் போராட எந்தத் தகுதியும் கிடையாது. தன்னளவில்கூட அறமுள்ளவனாக இருக்க முடியாத ஒருவரால், எப்படி சமூகத்துக்காகப் போராட முடியும்? எங்கெல்லாம் அதிகாரத்தின் கண்கள் நம்மைக் கண்காணிப்பதில்லையோ, அங்கெல்லாம் நாம் விதிகளை மீறுகிறோம். எங்கெல்லாம் விதிகளை மீறுகிறோமோ, அங்கெல்லாம் நாமும் குற்றவாளியாகிறோம். நம்மால் இன்னொரு சகமனிதன் எப்போதும் துன்பத்துக்கு ஆளாகிறான்.
அறமற்ற செயல் என்பது ஏதோ கிரானைட் கொள்ளையும், 2ஜி ஊழலும் மட்டும் அல்ல... சக மனிதனைப் பாதிக்கும் எந்தச் செயலும் அத்தகையதுதான்!
- கேள்வி கேட்கலாம்...