
மருத்துவர் கு.சிவராமன் படம்: எம்.விஜயகுமார் - மாடல்: எஸ்.பிரனஜே

எட்டாம் வகுப்பு ஆண்டு விடுமுறையில் ஊருக்குப் போய்விட்டு, ஒன்பதாம் வகுப்பின் முதல் நாள் பள்ளிக்கு வரும் அனுபவம், கடைசி வரை நினைவில் நிற்கும் அழகான ஒரு கவிதை. இணையம், அலைபேசி, தொலைபேசி எதுவும் இல்லாத அன்றைய நாளில், இரண்டு மாதங்கள் கழித்து நண்பர் கூட்டத்தைப் பார்க்கும் வைபவம் என்பது, அநேகமாக தேர் பார்ப்பதுபோல... சக்கர ராட்டினத்தின் உச்சியில் இருந்து ஊர் பார்ப்பதுபோல!
`ஏல... அங்கே பாரு, அருணாசலம், பத்மநாபன் எல்லாரும் எம்புட்டு வளர்ந்துட்டானுங்க. உன் ஹைட்டைவிட அதிகமா இருப்பானுவல்ல? ஆறுமுக அண்ணாச்சிக் கடையிலதானே அரிசி வாங்கி சோறு திங்குறானுவ. இல்லை, லீவுல ஆச்சி வீட்டுக்குப் போயி சிவப்பரிசி தின்னானுவுளானு தெரியலை’ என்ற பேச்சு இல்லாத வகுப்பறைகளே இராது.

கூடவே, `எந்த வாத்தி நமக்கு வாறாரோ தெரியலை!’ என்பதற்கு இணையான பரபரப்பு, `யாருக்கெல்லாம் மீசை வந்திருக்கிறது?’ என்பதுதான். அருகம்புல்போல லேசாகக் குருத்துவிட்டிருக்கும் இளமீசையை, உதடு வலிப்பதை வெளிக்காட்டாமல், ஓரமாகச் சுருட்டி, ‘அருவா மீசையாக்கும்’ என வெறுப்பேற்றுவர் அந்த மாப்பிள்ளை பெஞ்ச்சினர்.
`மீசை, தாடி வளர்ச்சியும் பேணலும்' என்பது இன்று நேற்று அல்ல... பல ஆயிரம் ஆண்டுகளோடு மனிதனின் மத நம்பிக்கை, கலாசார நம்பிக்கை, பண்பாட்டுப் பழக்கம், பருவகால மாறுபாடு எனப் பல காரணங்களால் பரிணமித்த ஒன்று. `மிலிட்டரியில் மீசை வெச்சே ஆகணும்’ என 1450-களிலும் `சிரைச்சே ஆகணும்’ என 1900-களிலும் ஐரோப்பாவில் பல அரசியல் சட்டங்கள் வந்து போன வரலாறு உண்டு.
மீசை, காலகாலமாக ஆணின் அடையாளம்; கொஞ்சம் ஆணாதிக்கத்தின் ஊற்றுக்கண் என்றும் கொள்ளலாம். `நான் பாலகன் அல்ல, இளைஞன்’ என அறிவிக்கும் உடலின் வளர்ச்சியே `மீசை'. ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான் விதைப்பையில் கணிசமாகச் சுரக்க ஆரம்பித்தவுடன் மீசையும் கிருதாவும் வளர ஆரம்பிக் கின்றன. சாதாரணமாக, 11 வயதில் மேல் உதட்டின் ஓரமாக விளிம்பில் விளைச்சலைக் காட்டும் இந்த மீசை மயிர், உண்மையில் தலைமயிரைவிட வேகமாக வளரக்கூடியது. வருடத்துக்கு ஆறு, ஏழு இன்ச் சராசரியாக வளரக்கூடிய இயல்பு மீசைக்கு உண்டு.
`அடிக்கடி ஷேவிங் பண்ணினால், முடி வளராது; ஏற்கெனவே பல பில்லியன் டாலரில் பணம் கொழிக்கும் ரேஸர் கம்பெனிகளின் வணிகம்தான் வளரும்’ என்கிறது மீசை ஆராய்ச்சி.
``மீசையும் கிருதாவும் ஏன் இப்படித் திடீரென வளர்கின்றன? நேற்று வரை அழகாக அக்காவின் குரலைப்போலவே மெல்லியதாகயிருந்தது. இன்று ஏன் என் குரல் பெரியப்பா மாதிரி இருக்கிறது?’’ எனத் தொடங்கி, தன் உடம்பில் நடக்கும் எந்த மாற்றத்தையும் கணிச மாகக் கலவரப்படுத்தும் உணர்வு களையும் யாரிடமும் விவாதிக்க முடியாமல் நிற்கும் `திடீர் ஆண்மகன்கள்’தாம் நம் ஊரில் அநேகம்.
ஒரு பெண் பூப்பெய்தும் பருவத்தில் அவர்களுக்காகக் கொடுக்கப்படும் அக்கறையில் சிறு சதவிகிதம்கூட ஆண் பிள்ளைகளுக்கு அவர்களது Male puberty நேரத்தில் நம் ஊரில் கொடுக்கப்படுவதில்லை. வயதுக்குவந்த பெண்ணை, அவள் பயத்தை, கலவரக் கண்ணீரை, அன்னை வாரி அரவணைத்துப் பல்வேறு நுணுக்கங் களைப் படிப்படியாகப் பேச ஆரம்பிப்பதுபோல், ஆண்மகனிடமும் பேச பல வீடுகளில் நண்பனாக அப்பா இல்லை. நண்பனோ, அப்பாவியாக இல்லை.
விளைவு? காம்பவுண்ட் சுவரிலும் டீக்கடை பெஞ்சிலும் அவர்கள் நடத்திய க்ளினிக்கில் மாத்ரூபூதத்தில் இருந்து பாத்ரூம் தம் வரை அறிமுகமாகின. தப்பும் தவறுமாக ஆண் உறுப்பின் அளவு முதல் அவன் இயல்பான உணர்வுகளும் அதன் விளைவுகளும் வரை அங்கே போதிக்கப்பட்ட விஷயங்கள்தாம், இன்று கொடிகட்டிப் பறக்கும் ஆண்மைப் பெருக்கி வியாபாரத்துக்கான வித்து.
``என்ன மாப்ளை... விளைச்சல் சரியில்லை போல?’’ என மீசை இல்லாத தோழனை நக்கலாக நகைக்கும் நண்பர் கூட்டம் இப்போதும் உண்டு. அந்த நகைப்பில் மிரண்ட பிள்ளை, நடு இரவில் கண்ணாடி முன் மைக்ராஸ்கோப் வைத்து மீசையைத் தேடும். ``பரு வருது. ஆனா, மீசையைக் காணோமே! ஐ திங்க் சம் பிராப்ளம் மாப்ளை. ஆக்ச்சுவலி இன்டர்நெட்ல என்ன போட்டிருக்கான் தெரியுமா..?’’ என வாட்ஸ் அப்பில் அவன் நண்பனின் அரைவேக்காட்டு மூளை தப்பும் தவறுமாகத் தின்று, அதை அரைகுறையாக எடுத்து அனுப்பும் வாந்தியைப் படித்து, பீதியோடு கிளம்பித் திரிவான் அந்தப் பூனைமீசை பாலகன். தவறாகப் புரிந்து கொண்டதை யாரிடமும் பகிராததன் நீட்சியாக, வீட்டிலும் விட்டத்தைப் பார்த்துக்கொண்டு யாரிடமும் பேசப் பிடிக்காமல், அம்மாவிடம் சண்டை கட்டுவதும், அப்பாவிடம் முனகி முனகிப் பேசி வாங்கும் திட்டுகளில்தான் முதல் உளவியல் சிக்கல்கள் ஊற்றெடுக்கின்றன. அன்றே மீசையின் பிரச்னைகளைப் பேச முடியாத அந்தப் பாலகன், பின்னாளில் தன் ஆசைகளின் எந்தப் பிரச்னையையும் பேசாமல் கற்பனைக்குள்ளும் கலவரத்துக்குள்ளும் புதைக்க ஆரம்பிக்கிறான்.
பன்னிரண்டுகளில் இப்படியான மீசைப் பிரச்னையைப்போலவே காதல் ஹார்மோன் களோடு தொடர்புபடுத்தி இருபதுகளின் இளைஞன் கலவரப்படும் இன்னொரு விஷயம், முன்வழுக்கையும் முடி உதிர்தலும். தேதிவாரியாகப் போட்டு, ``நேற்று மட்டும் விழுந்தது மொத்தம் 43 முடி சார்’’ என ஆரம்பித்து, எண்ணிய முடிகளைத் தனித்தனியே பிளாஸ்டிக் கவரில் தேதி போட்டு வைத்துக்கொண்டு,
அதை எக்ஸல் ஷீட்டில் மெயில் அனுப்பிய `முன்வழுக்கை முத்தண்ணா’க்களை எனக்குப் பரிச்சயம் உண்டு.
வெளியே அழகுப் பிரச்னையாக இதை அவன் சொன்னாலும், அவன் அடிமனதில் இந்த `மயிர் உதிர்தலுக்கும் உயிரணுக் குறைவுக்கும் தொடர்பு உண்டோ?’ என காம்பவுண்ட் சுவரில் குத்தவைத்து அவன் குழாம் நடத்திய க்ளினிக்கில் உருவான அன்றைய அச்சம்தான் அதற்குக் காரணம். நானோகிராம் அளவில் டெஸ்டோஸ்டீரான் கொஞ்சம் கூடுவதில்கூட இந்த மயிர் உதிர்தல் (Androgenetic alopecia) ஏற்படும் என்பது புரியாமல் மனஅழுத்தம் பெறும் அவர்கள், அதற்காக சந்தையில் கிடைக்கும் பெட்ரோல், டீசல் தவிர அத்தனை எண்ணெய்களிலும் தலையைக் காட்டுவர். சில வெளிநாட்டு எண்ணெயில் நேரடியாக டைஹைட்ரோ-டெஸ்ட்ரோஸ்டீரோன் (Dihydrotestosterone) மாதிரி, ஆண் ஹார்மோன்களின் அண்ணன், தம்பிகள் ரசாயனங்களைச் சேர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். இப்படியான இன்டர்நெட் தைலங்கள் ஒருவேளை முடியை வளர்த்தாலும், அடியை ஆட்டம் காண வைக்கும் (கருத்தரிப்புக்கான உயிரணுக்களை ஓரங்கட்டிவிட வாய்ப்பு உண்டு).
ஆண்களாலும் ஆன்லைனிலும் அதிகம் பேசப்படும் இந்த டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன், மிகமிக முக்கியமானது. அதே சமயம், இயற்கையின் மிக சூட்சுமமான படைப்பு. ஆண்களுக்குக் குறைச்சல் என்பதால் உடனடியாக நோயையும், பெண்களுக்குக் கூடுதல் என்பதால் தடாலடியான பிரச்னையையும் தரக்கூடிய சுரப்பு அல்ல அது. அதன் ரேஞ்ச் நீளமானது. நபருக்கு நபர், மரபுக்கு மரபு, பருவத்துக்குப் பருவம், வாழும் இடத்துக்கு இடம் மாறுபடும். `இந்தக் காதல் ஹார்மோன் சற்றே குறைவாக இருப்பவர்கள், அதிகம் காதலிக்கிறார்கள்; காதலிக்கப்படவும் செய்கிறார்கள். கூடுதலாகக் கொட்டிக்கிடப்பவர்கள், பெரும்பாலும் விவாகரத்துக்கு ஓடுகிறார்கள்' எனும் ஆச்சர்யமான புதிய மருத்துவ ஆய்வுக் கணிப்பு, சத்தமாகச் சொல்கிறது.
மீசையோ தாடியோ, முன் நெற்றி மயிரோ ஆண் ஹார்மோனின் அடையாளங்களே தவிர, அதன் அளவைச் சொல்லும் அளவுகோல் அல்ல. அதன் குறைநிறைக்கு என எடுக்கும் மெனக்கெடல்களில் நிறையப் பரிச்சயமும் பாதுகாப்பும் மருந்தாக இருக்க வேண்டும். தடாலடியான சிகிச்சை, பின்னாளில் கருத்தரிப்பில் சிக்கல் தர வாய்ப்பு உண்டு. மீசை துளியூண்டா இருக்கிறது என்பதற்காக, `அடடா... ஆண்மைக் குறைவோ?’ என நடுநிசி டாக்டருக்கு முக்காடு போட்டுக்கொண்டு முந்த வேண்டாம். டெஸ்டோஸ்டீரானின் படைப்பு, விந்தணுக்களை உயர்த்தப் படைக்கப்பட்டது; அதன் பக்க விளைச்சல்தான் மீசை.
அடர்ந்து, சுருண்டு நிற்கும் மீசை உள்ளோரில் சிலர் விந்தணுக்கள் குறைவோடும், ஷாரூக் கான், சல்மான் கான் மாதிரி ஆரம்பத்திலிருந்தே இருக்கும் மொழு மொழு கன்னத்தினர், மூன்று நான்கு குழந்தைகளோடும் இருப்பது உண்டு. `மீசையும் வளரவில்லை; அக்குள் மற்றும் ஆண் உறுப்பில் முடி வளரவில்லை' என்றால் மட்டுமே மருத்துவரை அணுகி ஆலோசிப்பது அவசியம். மற்றவை `எல்லாமே’ நன்றாக இருந்து, மீசையின் வளர்ச்சி மட்டும் தற்கால நன்செய் நில வறட்சி மாதிரி இருந்தால், `அமேசான் தைலம்’, `குலேபகாவலி லேகியம்’ எனத் தேடித் தேடி அலைவது, கொஞ்ச நாளில் அவர்களை உளவியல் நோயாளியாக்கி, உளவியல் சிக்கலால் வரும் ஆண்மைக் குறைவை அழைத்துவரும். மீசையின் உற்பத்தி, அடர்த்தி, நீளம் எல்லாமே நம்மைத் தேரடிக்குக் கூட்டிச்சென்ற, தாத்தா-பாட்டியிலிருந்து சமீபத்தில் கண்டறியப்பட்ட கீழடியில் புதைந்திருக்கும் நம் முன்னோர் வரை உள்ள மரபின் நீட்சியில்தான் இருக்கும். ரன்பீர் கபூர் குடும்ப மரபில் இருந்துகொண்டு, பித்துக்குளி முருகதாஸ் மீசையை எப்போதும் எதிர்பார்க்கக் கூடாது.
`அட, மீசை வளர்ந்திருக்குபோல! பெரிய மனுஷன் ஆகிட்டு வார. இன்னும் பொறுப்பு நிறைய இருக்குடா உனக்கு. கொஞ்சம் தொப்பை விழுது; சூரியநமஸ்காரம் பண்ணப்போறியா... ஜிம்ல சேரப்போறியா? என்னைப் பொறுத்தவரைக்கும் ரெண்டும் வேணும்டா’ எனப் பேச வேண்டும்.
பள்ளியில், பாடத்தில் மனப் பாடமாகப் படித்த டெஸ்டோ ஸ்டீரானுக்கும், நீங்கள் மொட்டை மாடியில் அவனோடு பேசும் டெஸ்டோஸ்டீரானுக்கும் வித்தியாசமான புரிதல் அவனுக்கு வரும். `பாலகனிலிருந்து இளைஞனாக மாறிவருகிறாய். பாலியல்ரீதியாக இப்படியான கிளர்ச்சியான மாற்றங்களை உன்னுள் விளைவிக்கும். இட்லியைச் சாப்பிட வயிறு சுரக்கும் `அமைலேஸ்' (Amylase) மாதிரி, அடுத்த தலைமுறையை உருவாக்க உன்னுள் சுரக்கும் திரவம்தான் விந்து’ என உடற்சுரப்புகள் குறித்தும், அதனால் வரும் மனமாற்றங்கள் குறித்தும் வெளிப்படையான ஏற்ற இறக்கங்கள் இல்லாத உரையாடல் அவனுக்கு அப்பாவிடமிருந்து அவசியம் தேவை. அநேக ஏற்ற இறக்கத்துடனும், சன்னி லியோன் உதாரணங்களுடன் நண்பன் அவற்றைச் சொல்வதற்கு முன், பாலியல் புரிதலை சிறுவயதில் அவனுக்குப் பல் துலக்கக் கற்றுக் கொடுத்ததுபோல், இரண்டு வயது வரை இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்தவனை அவனது இரண்டே கால் வயதில் படுக்கும் முன்னர் சிறுநீர் கழிக்கக் கற்றுக்கொடுத்தது மாதிரி நிதர்சனங்களைச் சொல்லி பாலியல் புரிதல்களை அவனுக்குள் உருவாக்கவேண்டியது பெற்றோரின் கடமை.
`கற்றுக்கொள்கிறோம்’ என்ற பிரக்ஞை இல்லாமல், கற்றுக்கொள்வது என்பது சரியான வாழ்வியல் நகர்வுகளில், நேர்த்தியான உரையாடல்களில் மட்டுமே நடக்கும். அத்தகைய வாழ்வியல் உரையாடல்கள், பள்ளிப் பாடமாக நடத்தும் பாலியல் கல்வியைவிட ஒரு துளி மேலிருந்து அதைப் புரிந்திட உதவிடும்.
- பிறப்போம்...
என்ன சாப்பிடலாம்?

பெண் குழந்தைகளுக்கு உளுந்து எப்படி முக்கியமோ, அந்த அளவுக்கு 10-12 வயதை எட்டும் ஓர் ஆணுக்கு, நிறைய புரதங்கள் அடங்கிய நிலக்கடலை, மீன், முட்டை, பாசிப் பயறு, ராஜ்மா பயறு, சிவப்புக் கொண்டைக்கடலை ஆகியவை முக்கியம். பால் பற்றி பல மாறுபட்ட கருத்துகள் உள்ளன. மருத்துவர் பரிந்துரைத்தால் இன்றி, பாலை போணி போணியாகக் குடிக்கச் சொல்லி குழந்தைகளைக் கட்டாயப்படுத்த வேண்டாம்.
எல்லா கீரைகளும் ஃபோலேட் சத்துகள், கனிமச் சத்துகளுடன், விந்தணுக்களை உற்பத்திசெய்யும் செர்டோலி செல்களையும் சீராக வைத்திருக்க உதவுபவை. மீசை வளரவில்லை என்பதற்காக, தனக்குத் தெரிந்த ஆண்மைப்பெருக்கி மருந்துகளை வாங்கித் தருவது பதின்பருவத்தில் வேண்டாம். இயல்பான உடல் வளர்ச்சிக்கு, ஹார்மோன் வளர்ச்சிக்கு உதவிடும் புரதக்கூட்டான சத்து மாவு, கம்பு-கேழ்வரகு உருண்டை எனக் கொடுத்தாலே போதுமானது.
ஜீன்ஸ், பாலகனுக்குப் பாதுகாப்பு அல்ல!

10 வயதுடைய சிறுவர்கள் பலரின் வீடுகளில் ஸ்கூல் யூனிஃபார்மைத் தவிர்த்து மற்ற ஆடைகளை அவர்களின் அலமாரியில் பார்த்தால், 90 சதவிகிதம் ஜீன்ஸ்களாகத்தான் இருக்கும். ஒருகாலத்தில் `Mining' எனும் சுரங்கத் தொழிலாளிகளின் ஆடையாக இருந்துவந்த ஜீன்ஸ், தற்போது இளம்பிராயத்துப் பிள்ளைகளின் கனவு ஆடை. `உடலை இறுக்கிப் பிடிக்கும் அந்த ஜீன்ஸ், விந்தணுக்களின் வளர்ச்சியைக் கணிசமாகப் பாதிக்கிறது’ எனப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. நிறைய இளைஞர்களுக்கு இன்று விந்தணுக்கள் குறைவுக்கு ஜீன்ஸ் ஆடையும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். வரும்முன் காப்பது சிறப்பு. வீட்டில் காற்றோட்டமான பருத்தி இழையிலான உள்ளாடை மற்றும் டவுஸர்தான் சிறப்பு.