Published:Updated:

சொல் அல்ல செயல் - 3

சொல் அல்ல செயல் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
சொல் அல்ல செயல் - 3

அதிஷா, ஓவியங்கள்: ஹாசிப்கான்

லகின் எல்லாவிதமான சாதிமதப் பாகுபாடுகளையும், பாலின பேதங்களையும், ஊழல்களையும், அடக்குமுறைகளையும் சிறந்த முறையில் கற்றுத்தரக்கூடிய ஓர் இடம் உண்டு. அங்கிருந்துதான் நம் இளைஞர்கள் ஒவ்வொரு வரும் உருவாகி வருகிறார்கள். அவர்கள் அனைத்தையும் கற்கிற முதல் இடம் அதுதான். அந்த இடம்... வீடு. அங்கிருந்துதான் மகாத்மாக்களும், சாமான்யர்களும், சமூக விரோதிகளும், திருடர்களும், தீவிரவாதிகளும், போராளிகளும், போர்வீரர்களும், நயவஞ்சகர்களும், நல்லவர்களும் உருவாகிறார்கள்.

இரண்டு ஆண்டுகளாக ராகுல் எனக்குப் பழக்கம். 18 வயசு, துடிப்பான இளைஞன். தாட்டியாக நெடுநெடுவென எல்.ஐ.சி கட்டடம் போல் இருப்பான். செல்போன் முதலான எலெக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்தாத, நிறையவே நூல்கள் வாசிக்கிற அரிய பிறவி!

சொல் அல்ல செயல் - 3

நேர்மையான காவல் துறை அதிகாரியாக ஆகிவிட வேண்டும் என்பது அவனுடைய விருப்பம். அதற்காகவே தன் உடலையும் உள்ளத்தையும் தயார் செய்துகொண்டே இருந்தான். தினமும் மைதானத்தில் என்னோடு ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தவனைச் சில மாதங்களாகக் காணவில்லை. பூங்காக்களில், மைதானங்களில் சந்திக்கும் நண்பர்களுடைய வீடுகளைப் பற்றி நாம் ஏனோ தெரிந்துகொள்வது இல்லையே! 

சில வாரங்களுக்குப் பிறகு... ஒருநாள் அவன் பூங்காவுக்கு வந்தான். எப்போதும் நம்பிக்கையின் வெளிச்சத்தில் ஒளிரும் அவனுடைய சிவந்த முகம், சோர்வு பூசியிருந்தது. அருகில் அமர்ந்தவன் அமைதியாகவே இருந்தான்.

அவன் தனக்குள் ஆழ்ந்து இருந்தான்.

கண் இமைக்காமல் இரண்டு கைகளாலும் பார்க் பெஞ்ச்சை இறுகப் பற்றியபடி சோம்பல் முறிப்பதுபோல் உடலை வளைத்து தலைகுனிந்து அமர்ந்திருந்தான். வந்ததிலிருந்தே அவன்
இமை முடிகளில், சில கண்ணீர்த்துளிகள் எந்நேரமும் விழக் காத்திருந்தன.

``சரி, வா... கொஞ்சம் நடப்போம்'' எனக் கையைப் பிடித்து இழுக்க, தயங்கிப் பின் என்னோடு நடக்க ஆரம்பித்தான். ஒருவரோடு இணைந்து நடக்கும்போது ஆன்மாக்களுக்கு மத்தியில் அமானுஷ்யமான இணைப்பு உருவாகத் தொடங்கிவிடுகிறது. இருவருக்குமான நடையில் உண்டாகும் இயல்பான ஒத்திசைவு மனதிலும் படர்ந்துவிடும். சில அடிகளிலேயே அவன் மௌனமாக அழத்தொடங்கினான். என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான்.

``என்னால முடியலண்ணா'' என்று ஆரம்பித்தவன் அடுத்த சொல் கிடைக்காமல் தடுமாறினான். பாட்டிலில் தண்ணீர் கொடுத்தேன். ``அப்பாவுக்கு நான் மெடிக்கல் படிக்கணும்னு ஆசைண்ணே. நான் முடியாதுனு சொன்னேன். கேட்கவே இல்லைண்ணா...'' ராகுலின் உதடுகள் தன்னிச்சையாகத் துடிப்பதைக் கண்டேன். இது சகஜமான ஒன்றுதானே... எந்த அப்பாதான் பிள்ளைகள் விரும்புகிற படிப்பில் சேர்த்து விடுகிறார் என நினைத்தபடி அமர்ந்திருந்தேன்.

``அப்பா செய்றது எனக்குச் சுத்தமா பிடிக்கலைண்ணே... அதான் வீட்டைவிட்டு ஓடிப் போயிட்டேன்'' என்று சொல்லிவிட்டு அவன் அமைதியாகிவிட்டான். ``அடப்பாவி, எங்கடா போனே...'' என்றேன். ``கெளகாத்தியில என் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் இருக்கான்னு அவன் வீட்டுக்குப் போய்ட்டேன்'' என்றான். ஓடிப்போனவனை எப்படியோ தேடிக் கண்டுபிடித்து அழைத்து வந்திருக்கிறார்கள்.

``ஏண்டா, உலகத்துல எந்த அப்பாதான் நாம விரும்புற படிப்பை படிக்கவிட்ருக்காங்க? அவருக்கு மெடிசன்தான் புடிக்குதுனா படிச்சுத் தொலைக்க வேண்டியதுதானே... அப்புறம்கூட ஐ.பி.எஸ் பண்ணிக்கலாம்ல? இன்னைக்கு மீடியாவுல, சினிமாவுல இருக்குற பல பேர் இன்ஜினீயரிங் முடிச்சவங்க'' என்றேன். ``எனக்கும் அதே ப்ளான்தாண்ணா'' என்றான்.

``அப்பா மெடிசன் சொன்னதும் ஏத்துக்கிட்டேன். அதுகூட அம்மாவுக்காகத்தான். ஆனா, அவர் எனக்கு வாங்கித்தந்த மெடிக்கல் சீட்தாண்ணா பிடிக்கல'' என்றதும், எனக்குக் குழப்பமானது. அவனே தொடர்ந்தான்... 

``ப்ளஸ் டூல நான் கம்மி மார்க்தான் எடுத்தேன்... (90 சதவிகிதம்தான்!) இருந்தாலும், அவர் தாம்பரம் பக்கத்துல இருக்குற ஒரு மெடிக்கல் காலேஜ்ல சேர்க்கணும்னு அடமா இருந்தாரு.

அதுக்காக ஒரு ஏஜென்ட்டைப் பிடிச்சாரு. அவன், இவர்கிட்ட 45 லட்சம் ரூபாய் ஆகும்னு சொன்னான். அப்பா அவன்கிட்ட பேரம் பேசி 40 லட்சம் ரூபாய்லனு முடிச்சாரு... இந்த டீலிங்ல சாட்சியா நான் நின்னேன். என்னால இதையெல்லாம் தாங்கிக்கவே முடியல... அந்த இடத்துலயே ஏன்ப்பா இப்படிக் காசு குடுத்துதான் நான் படிக்கணுமா? நான் விரும்பினதையே படிச்சுக்கறேனு சொன்னேன். அங்கேயே வெச்சு சுள்ளுனு நாலு அப்பு அப்பிட்டார்'' என்றான்.

சொல் அல்ல செயல் - 3

``ஓ... புரியுது'' என்றேன். அவனுடைய அப்பா நல்ல செல்வாக்குள்ள பணக்கார மனிதர்.

``சின்ன அட்ஜஸ்ட்மென்ட்தானடானு சொன்னார்ண்ணா... ஆனா, அது தப்பில்லை யாண்ணே... லஞ்சம் கொடுத்துப் படிச்சா எப்படி நான் நேர்மையா வாழ முடியும்? போலீஸ் ஆகாட்டியும் பரவால்ல. நான் திருடனா ஆகிடக் கூடாது'' என்றான். அவனுடைய சொற்கள் தடுமாறினாலும், தமிழ் சினிமாவின் தாக்கத்தால் உருவானதாகவே இருந்தாலும், அழுத்தமாக வெளிவந்தன.

அடுத்து வந்த சிலநாள்களில், தன் அப்பாவின் ஆணைக்கிணங்க மெடிக்கல் சீட்டை ஏற்றுக் கொண்டு கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்திருந்தான் ராகுல். லஞ்சம் கொடுத்து சீட் பெற்றோம் என்கிற குற்றவுணர்வோடு அவன் இனி வாழ்க்கை முழுக்க வாழ்பவனாக இருக்கலாம்; அல்லது பெரிய மருத்துவமனை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து அங்கே நோயாளிகளிடம் பணம் கறக்கிற காரியங்களைக் குற்றவுணர்வின்றிச் செய்யக் கூடியவனாகவும் மாறலாம்... `போட்ட காசை எடுக்கணுமே!'

இத்தகைய தருணங்களை வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் நாமும் கடந்திருப்போம். நமக்குள் எப்போதும் இருக்கிற நியாயப்பிசாசு வெளியே வரும்போதெல்லாம் ராகுலின் அப்பாவைப்போல யாரோ ஒருவர் அடித்து விரட்டுவார். ராகுல் காலையில் பூங்காவில் ஓடுவதை நிறுத்திவிட்டான். அதிகாலை நேரத்தில் கையில் வெண்ணிறக் கோட்டோடு கல்லூரிப் பேருந்துக்குக் காத்திருக்கிறான்.

``உன் எதிர்காலத்துக்காகத்தான்'' என்று நம் பிள்ளைகளுக்காக நாம் எல்லா அட்ஜஸ்ட் மென்ட்களையும் முன்னெடுக்கிறோம்; நியாயத்தின் எல்லைகளை யாரும் காணாத போதெல்லாம் தாண்டுகிறோம், அல்லது நீட்டித்துக்கொள்கிறோம். ஆனால், நாம் வளர்க்கிற குழந்தைகளின் எதிர்கால உலகம் அன்பாலும், வாய்மையாலும், உண்மையாலும் கட்டமைக்கப் பட்டிருக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், அத்தகைய இடத்துக்கு நம் பிள்ளைகளை எவ்விதம் அழைத்துச் செல்கிறோம்?

சின்னச் சின்ன அட்ஜஸ்ட்மென்ட்களை அறிமுகம் செய்வது, அவற்றைப் பழக்கப் படுத்துவது, அதைச்செய்வதில் எந்தத் தவறுமே இல்லை என்று ஒரு ப்ராக்ரஸிங் அட்ஜஸ்ட் மென்ட்டுகளின் எதிர்காலத்துக்கு நம்மைத் தயாரித்தது நம் பெற்றோர்கள்தான் இல்லையா? பிறப்புச் சான்றிதழ் தொடங்கி சாதிச் சான்றிதழ் வரை காசு கொடுத்து வாங்குவது, பள்ளியில் சீட் வாங்க காசு, ஆட்டோக்காரர் நம் குழந்தையை மட்டும் கூடுதலாகக் கவனித்துக்கொள்ள காசு, பள்ளியில் ஆசிரியர் அதிக கவனம் கொடுக்கச் சின்னச் சின்ன பரிசுகள் என எங்கெல்லாம் நம் பிள்ளை களுக்குக் கூடுதல் சலுகைகள் தேவையோ, அங்கெல்லாம் காசு கொடுத்துச் சலுகைகளைப் பெறுகிறோம்.

இந்தச் சின்னச் சின்ன அட்ஜஸ்மென்ட் களை மறுக்கிற இளைஞர்கள் வெவ்வேறு வழிகளில் வளைக்கப்படுவார்கள்; அல்லது அதை ஏற்கிறவர்களாக மாற்றப்படுவார்கள். இப்படி வைக்கிற வேலைகளை வீடு செய்யவில்லை என்றால், நம் கல்விச்சாலைகள் முன்னெடுக்கும். 

பத்தாம் வகுப்பு முடித்த எத்தனை லட்சம் மாணவர்களிடம்... ``ப்ளஸ் ஒன் மார்க் எல்லாம் அவசியமில்ல. நீ நேரா ப்ளஸ் டூ பாடத்தைப் படி'' என்று பள்ளிகள் போதிக் கின்றன. அதை எத்தனை பெற்றோர்கள் எதிர்த்துக் கேட்கிறோம்? இது, ஊழலில் சேராதா? நாம் ஜெயிப்பதற்காக இதுமாதிரியான சின்னச் சின்ன மீறல்களைச் செய்து கொள்ளலாமா? அப்படிச் செய்வது தவறே இல்லை என்றால், நாம் உற்பத்தி செய்வது ஊழலின் பிள்ளைகளைத்தான் இல்லையா?

ஆட்டோ ஓட்டுநர் தோழர் ராஜேந்திரனின் உலகம் இரு பாகங்களால் ஆனது. அதன் ஒருபகுதி மார்க்ஸாலும், மற்றொரு பகுதி அவரின் மகனாலும் உருவாக்கப்பட்டது. மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டும் நேர்மையான கம்யூனிஸ்ட். அது வெளியே. வீட்டின் உள்ளே மகன் எதைக் கேட்டாலும் கடன் வாங்கியாவது நிறைவேற்றுகிற பாசக்கார அப்பா. அவன் எதையாவது கேட்டு, முடியாது என்று சொல்லவே மாட்டார். அவன் விரும்பியதைப் படிக்க வைத்தார். கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தார்.

எந்நேரமும் மகனைப்பற்றியே பேசுவார். ``தோழர், அவன் பாடி நீங்க கேக்கணுமே... அன்னைக்கு `மனிதா மனிதா' பாடலைப் பாடுறான் வீட்ல... `சில ஆறுகள் மாறுதடா வரலாறுகள் மீறுதடா... பசியால் பல ஏழைகள் சாவது என்பது தேசியமானதடா...' னு பாடப் பாட அப்படியே உடம்பு சிலிர்த்துக் கண்கலங்கிட்டேன் தோழர்'' என்று எப்போதும் மகனைப்பற்றிப் பேசும்போதெல்லாம் அவருடைய கருவிழிகள் இருமடங்காகி ஒளிர்வதைக் கண்டிருக்கிறேன்.

ஒருநாள், செய்தித்தாள் பார்த்துததான் தெரிந்து கொண்டேன். அவருடைய மகன் தன் பிறந்த நாளில் இறந்துபோனதை... ப்ளஸ் டூ முடித்துக் கல்லூரிக்குச் செல்லும் பிள்ளைக்குப் பிறந்தநாள் பரிசாக ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து பைக் ஒன்றை வாங்கித்தந்திருக்கிறார். பைக்கில் நண்பர்களோடு ஊர்சுற்றச் சென்றவன் திரும்பவே இல்லை. அவனுடைய மரணத்துக்குக் காரணம் தான்தான் என அடிக்கடி இப்போதும் தற்கொலைக்கு முயல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் தோழர் ராஜேந்திரன்.

``அவன் சின்ன பையன் தோழர். அப்படித்தான் கேட்பான். எனக்குப் புத்தி எங்க போச்சு'' என்று ஒவ்வொருமுறை நேரில் சந்திக்கும்போதும் திரும்பத்திரும்பச் சொல்கிறார்.

எதைக் கேட்டாலும் வாங்கித்தருவது, கொஞ்சம் அடம்பிடித்தாலும், தாங்கிக்கொள்ள முடியாமல் எதையாவது பொருளைக் கையில் தருவது என்பதெல்லாம்தான் மாடர்ன் குழந்தை வளர்ப்பாக மாறி இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எதையாவது காட்டிக்காட்டித்தான் குழந்தைகளுக்குச் சோறு ஊட்டுவோம். அழுதால் அடம்பிடித்தால் பூச்சாண்டி வர்றான்... காக்கா பார் என்றுதான் ஆறுதலடையச் செய்வோம். ஆனால், இப்போதெல்லாம்... சாப்பிடலையா ரிமோட்டைக் குடு... அழுதால் ஆங்கிரி பேர்ட்ஸைக் குடு... ஸ்கூலுக்குப் போக மறுத்தால் ஐபேடைக் கொடு... என எதையாவது எப்போதும் லஞ்சமாகக் கொடுத்தால்தான் பிள்ளைகள் வளர்கிறார்கள்.

குழந்தைகளிடம் எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் என்பதாக முன்பு இருந்த குழந்தை வளர்ப்பு, இன்று எப்படி மாறிவிட்டது? குழந்தைக்கு  யார் அதிகமாகச் செலவழிக்கிறார் களோ அவர்களே சிறந்த பெற்றோர்... அதுவே சிறந்த பிள்ளை வளர்ப்பு.

 இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் கார் விளம்பரமாக இருந்தாலும், கமர்கட் விளம்பரமாக இருந்தாலும் அதைக் குழந்தைகளைக் கவர்கிற வகையில் செய்வதன் பின்னணி இதுதான். நீங்கள் `சிறந்த அம்மா'வாக இருந்தால் இந்தப் பொருளை வாங்குங்கள் என திரும்பத்திரும்ப வலியுறுத்துகிறார்கள். சிறந்த அம்மாவின் அடையாளம் என்பது அதிகமாகப் பணம் செலவழிப்பது. நுகர்வுக் கலாசாரத்தின் புதிய முகம் இந்த நவீனமுறை குழந்தை வளர்ப்பு.

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும், ஒரு நல்ல இளம் தலைமை வேண்டும். புதிய சரித்திரம் படைக்க வேண்டும் என்றெல்லாம் யாராவது பேசினால், உடனே கைதட்டி ஆரவாரம் செய்வோம். யாராவது நேர்மையான அதிகாரியோ தலைவரோ அரசியலுக்கு வந்தால் அவர் பின்னால் இளைஞர்கள் செல்ல வேண்டும் எனக் கொந்தளிப்போம். ஆனால், யாரும் தன் வீட்டு இளைஞர்களை ``போ, நீ போய் போராடு... நீ அரசியலில் ஈடுபடு'' என அனுப்பிவைப்பது இல்லை. ஏன்?

சொல் அல்ல செயல் - 3

நம் இளைஞர்கள் ஈடுபடுகிற போராட்டம்கூட ஆபத்தில்லாமல் இருக்க வேண்டும். காவல் துறையும் நம்மோடு சேர்ந்து கம்பு சுற்றி டான்ஸ் ஆடினால்தான், பிள்ளைகளைக்கூட போராட அனுப்புவோம். கொஞ்சம் கலவர நிலை என்றாலும், ``அங்கெல்லாம் உனக்கென்ன வேலை? ஒழுங்கா படி'' எனக் கழுத்தெலும்பை உடைத்து மடக்குவோம். மெரினாவில் களத்தில் இறங்கிப் போராடிய லட்சக்கணக்கான இளைஞர்கள் இப்போது எங்கே? டெல்லியில் நிர்வாணமாகப் போராடுகிற தமிழனின் மானம் காக்க ஏன் அவன் வீதிக்கு வரவில்லை? நாட்டு மாடுகளைவிட எவ்வகையில் நம் விவசாயி குறைந்துபோய்விட்டான்?

வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் தொடர்ந்து ஊழலின் கறைகளைச் சுமந்தபடி வளர்கிற ஒரு தலைமுறையால் எப்படி அறமுள்ள மனிதனாக வாழ முடியும்? எப்படித் தன் உரிமை களுக்காகப் போராட முடியும்? பணமதிப்பு நீக்கம் செய்தால் ஏ.டி.எம் க்யூவில்தான் போய் நிற்பான். எதிர்த்துக் கேட்க மாட்டான்.

நம்முடைய குழந்தை எப்படியும் உயரலாம். எப்படியும் வெற்றிகளை எட்டலாம். அங்கே அறமோ, நேர்மையோ, நீதியோ அவசியமற்றுப் போய்விடுகிறது. ஆனால், அவன் வாழ்கிற சமூகத்தில் மட்டும் அழுக்குகள் அனைத்தும் அழிந்து சுத்தமாகிவிட வேண்டும். அதற்காக யாரோ தியாகி பெற்ற மகளோ மகனோ வந்து நேர்மையாகப் போராடி, அடிவாங்கி, உதைபட்டு அரசியல் செய்து ஊழலை எல்லாம் ஒழிக்க வேண்டும். அப்படித்தானே?

- கேள்வி கேட்கலாம்...